சனி, 14 ஜனவரி, 2012

சுசீலாம்மாவின் வாழ்த்துரை.. சாதனை அரசிகள் புத்தகத்தில்.


என் தாய் தமிழ் பேச கற்றுக் கொடுத்தார். அது என் தாய் மொழி என்பதால் இலகுவாகக் கற்றுக் கொண்டேன். கல்லூரியில் தமிழின் மேல் என் காதலைக் கண்டுபிடித்தார் சுசீலாம்மா. என் தமிழன்னை. பெண்கள் பற்றிய அவரது ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக நிரம்பி வழியும் அவரது அலமாரியில் இருந்து தினம் எங்களுக்கு ஒரு நூல் வரும். ( எனக்கும் உமா மகேஸ்வரிக்கும்) . தினம் ஒரு கவிதை எழுதுவோம். தினம் எங்களுக்கு அதற்கான ஒரு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். தினம் தினம் தாயவளின் சன்னதியில் ஒரு தீப தரிசனம் போல எங்கள் தமிழ் தரிசனம் நிகழ்ந்து கொண்டிருந்தது.



ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்தில் வலைப்பதிவர் திரு பால பாரதி ஒரு கதை சொன்னார். அதில் ஒரு குழந்தை அவரின் டீச்சர் ஒவ்வொரு எழுத்தைச் சொல்லும் போதும் , ம் , ம் எனச் சொல்ல குழந்தை அடுத்தடுத்த எழுத்துக்களைச் சொல்லும் ஒரு கதை.. மிக அருமை.. எங்க சுசீலாம்மாவும் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் அவரின் பணிக்கிடையிலும் எங்கள் டைரிகளை வாசிப்பார். கருத்துக்கள் இடுவார். இன்னும் என்னிடம் பத்திரமாய் இருக்கும் பொக்கிஷங்கள் அவை. அந்த ம் கொட்டுதல் நின்றபின் நான் எழுதுவதையே மறந்தேன்..

மதுரையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இருந்தபோது டாப் 10 பெஸ்ட் செல்லர் என குற்றமும் தண்டனையும் என்ற நாவலை குமுதத்தில் போட்டிருந்தார்கள். அப்போது என் தமிழன்னையை காணும் ஆவலில் இருந்த நான் அந்தப் புத்தகத்தையே மொழி பெயர்த்தது அவர்தான் என்னும் செய்தியறிந்து காணத்துடித்தேன்.. இன்னும் கூட காணவில்லை.. ஏனெனில் அவர்கள் டெல்லியில்.

இந்த இடைப்பட்ட வருடங்களில் என் அம்மா வலைத்தளம் வைத்திருப்பது அறிந்து கணினி என்றாலே அச்சமுற்றிருந்த நான் எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு இன்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்றால் அது அவர்களின் தொடர்ந்த ம் கொட்டுதலில்தான்.. அதாவது ஊக்கமூட்டுவதில்தான்.. நன்றி அம்மா.. இன்னும் உங்கள் அங்கீகாரத்துக்காக ஏங்கும் குழந்தைதான் நான்.

என் அம்மா இடியட் என்னும் அடுத்த நாவலை மொழிபெயர்த்து அசடன் என்ற பெயரில் ( பாரதி பதிப்பகம்) சக்கைப் போடு ( நடுவில் வடக்கு வாசலில் தேவந்தியும் வெளியிட்டிருக்கிறார்கள். ) போட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் ஒரு புத்தகம் வெளியிடக் காரணமாய் இருந்த என் அன்பு அம்மாவுக்கு நன்றிகள்..

அவர்கள் என் சாதனை அரசிக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துரை பெரிது. அதில் சில வரிகள் இதோ..

///மதுரை பாத்திமாக் கல்லூரி வளாகத்தில் ’80களில் தேன்சிட்டாகப் பறந்து திரிந்த தேனம்மை இரசாயனம் படிக்(ரு)க வந்து தமிழ்த் தேன் மீது காதல் கொண்டவர்.சுறுசுறுப்பும்,புதியன தேடும் நாட்டமும்,படைப்புத் திறனும் கல்லூரிப் பருவத்திலேயே அவரிடம் நிரம்பித் தளும்பியதைக் கண்கூடாகக் கண்டிருக்கும் சாட்சி நான். அந்த உயிர்த்தீயை, எழுத்தாற்றலைப் பல்லாண்டுக் காலமாய் அணைந்து விடாமல் அடை காத்துக் கொண்டிருந்து,உரிய வேளை வந்தபோது வலையுலகிலும்,இதழியல் துறையிலும்,கவிதைப் படைப்பிலும் அவர் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பதைக் காணும்போது நான் பெருமகிழ்வும்,பெருமிதமும் கொள்கிறேன்.///

மிக்க நன்றியும் நெகிழ்வும் அம்மா. உங்கள் குரலை தொலைபேசியில் கேட்டாலும் உங்கள் எழுத்துக்களைப் படித்தாலும் உங்களை நேரில் காணும் ஆவலில் இருக்கிறேன். அன்பின் அம்மா ..!!வாழ்க வளமுடன், நலமுடன் எங்களுக்காய் பல்லாண்டுகாலம்..:)



8 கருத்துகள்:

  1. ஏதோ கொஞ்சம் கிறுக்குமளவுக்கு எனக்குத் தமிழறிவு ஊட்டிய முத்ல ஆசிரியராகிய என் சித்தியை (ஆசிரியையும் கூட) நான் நினைக்காத, நெகிழாத நாளில்லை. என்னிலும் ‌சிறந்த அழகுத் தமிழுக்கு சொந்தக்காரியான நீங்கள் உங்கள் தமிழன்னையை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து எழுதியிருப்பதைக் கண்டு மிக மகிழ்ந்தேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தினம் தினம் தாயவளின் சன்னதியில் ஒரு தீப தரிசனம் போல எங்கள் தமிழ் தரிசனம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

    அழ்கான தரிசன்ம் ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நன்றி கணேஷ்

    நன்றி சரவணன்

    நன்றி கருணாகரசு

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  6. அன்பின் தேனம்மை - ஆசிரியையும் மாணவியும் 30 ஆண்டுகள் கழித்து அலை பேசியில் மகிழ்வுடன் பேசி - அந்நிக்ழ்வினைப் பற்றி இருவரும் ஒரு பதிவிட்டமை நன்று - இரண்டினையும் படித்தேன் - இரசித்தேன் - மகிழ்ந்து மறு மொழி இட்டேன். நல்வாழ்த்துகள் தேனம்மை - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)