வியாழன், 28 ஏப்ரல், 2011

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு... போராடி ஜெயித்த பெண்கள் (7.,8 )







சாருமதி.. தமிழரசி.. வெங்கடேசன்.. இவை வெறும் பெயர்களாக உங்களுக்குத் தெரியலாம். இந்தப் பெயர் கொண்ட மூவரும் பலருக்குக் கடவுள்கள்..


சாலையோரம் எங்காவது புழுதியில் குப்பைத்தொட்டியில் புரண்டு கொண்டிருப்பவர்களைக் கண்டால் நாம் மூக்கைப் பொத்தி திரும்பிச் செல்வோம்..இவர்கள் அவர்களை அரவணைத்து உரிய புகலிடங்களில் சேர்ப்பிக்கிறார்கள்..இது ஒன்றும் சாதாரணமாக செய்து விடக் கூடிய விஷயமல்ல..

சாருமதி .. இவர் தென்னக ரயில்வேயில் ரிஷர்வேஷன் சூப்பர்வைசர். பண்ருட்டியை பூர்வீகமாககொண்ட இவர் வசிப்பது தாம்பரத்தில். சேலம் சாரதா கல்லூரியில் கணிதம் படிக்கும் போதே பகவத் கீதை மற்றும் விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். இவரைப் பார்த்தால் சாரதாதேவியைப் போலவே இருக்கிறார்.

முதன் முதலில் இவர் வேலை செய்த சென்ட்ரல் மின் ரயில் நிலையத்தில் ஒருவர் உடையில்லாமல் விழுந்து கிடந்திருக்கிறார். மறுநாளும் அதே இடத்தில் மோஷன்., யூரின் போய்., சுற்றிலும் ஈ மொய்க்க கிடக்க தன் சக ஊழியர் வில்சனுடைய உதவியுடன் அன்பகத்தில் சேர்த்து இருக்கிறார். இவ்வாறு அநாதரவாக., மனநிலை சரியில்லாமல் வடநாட்டிலிருந்து தென்னகத்து ரயிலில் வந்து சேரும் பெண்கள்., முதியவர்கள்., ஆண்கள்., குழந்தைகள் என பலரை தானே முன்னின்றும்., வில்சன்., தமிழரசி , மற்றும் வெங்கடேசன் உதவியோடும் அன்பகம்., பானியன்., லிட்டில் ட்ராப்ஸ் ஆகிய காப்பகங்களில் கொண்டு சேர்க்கிறார். .

தமிழரசி ..இவர் சென்னைவாசி. கணவர் சிறைத்துறை கண்காளிப்பாளர்... இவரும் கணிதம் இளங்கலைப் பட்டதாரி.. RRB எக்ஸாம் எழுதி இருவரும் ரயில்வே பணியில் அமர்ந்திருக்கிறார்கள். இவர் ரிஷர்வேஷன் சூப்பர்வைசர் மற்றும் விஐபி இன்சார்ஜ் . புன்னகை தவழும் முகம் . விஐபிக்களை நன்கு தெரிந்ததால் அவசிய தருணங்களில் போன் மூலமாகவே ஆதரவற்ற சிலரை சென்னையில் இருந்துகொண்டே பாதுகாப்பு இல்லங்களில் சேர வழி செய்திருக்கிறார். தனக்கு சாருமதிதான் வாழும் எடுத்துக்காட்டு என சொல்கிறார்.

வெங்கடேசன் ...இவர் இப்படி அநாதரவாய் ரோட்டில் கிடப்பவர்களை எந்த அருவெறுப்புமின்றி எடுத்து உடல் துடைத்து , சமயங்களில் முடி வெட்டி., குளிக்க செய்து .,உணவூட்டி., உரிய மருத்துவ செக்கப் செய்து., தேவைப்பட்டால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து., அதன்பின் அவர்களை புகலிடங்களில் (தொண்டு நி்றுவனங்களில்) சேர்ப்பித்து., பின் அவர்களை பற்றிய தகவல்கள் அறிந்து ., உறவினர்களை அழைத்து கவுன்சிலிங் செய்து ஒப்படைப்பது வரை இவரின் பணி தொடர்கிறது.. அதன் பின்னும் அவ்வப்போது அவர்கள் குடும்பத்தாரால் சரிவர கவனிக்கப் படுகிறார்களா என்பதையும்., மருந்து தொடர்ந்து எடுத்துக் கொள்கிறார்களா என்பதையும் ., அவர்களின் உடல் நலத்தையும் தொண்டு நிறுவனங்கள் பின் தொடர்கின்றன.

சிலர் டெமென்ஷியாவாலும் சிலர் காக்ரீன் எனப்படும் நோயாலும் பாதிக்கப்பட்டுஇருப்பார்கள்.. குப்பைத் தொட்டியின் பக்கமாய் எலிகள்., காக்கைகள்., குருவிகள் இவர்கள் கால்களை கொத்தித் தின்னும். இதே போல் ஒருவர் தான் இறந்து விட்டதாகக் கருதி அவுட் அவுட் என்று சொல்லிக் கொண்டே விரிந்த கண்களோடு அப்படியே
கிடந்திருக்கிறார். இவர்களை எல்லாம் வெங்கடேசனும் சாருமதியும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

மனநிலை சரியில்லாமல் ரயில்வே பாதைகளில் சுற்றும் பெண்களில் 65 சதவிகிதம் பேர் சமூக விரோதிகளால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பிணிகளாய் இருப்பது கொடுமை.. அதனால் அத்தகைய பெண்களை இனம் கண்டவுடன் தொண்டு நிறுவனங்களில் கொண்டு சேர்ப்பது கடினமான பணி..

யாரோ நம்மை ஏதோ செய்ய வருகிறார்கள் என்ற கோபத்தில் அடிக்கவும் ., திட்டவும்., கடிக்கவும் செய்வார்கள்.. அதை மீறி அவர்களை உரிய இடத்தில் சேர்ப்பது கடும் பணி. மேல்மருவத்தூரில் ஒரு பெண் மேல் உடம்பு எரிந்த நிலையில் பிடிக்க செல்லும் போது எல்லாம் ஓடிச் செல்வதுமாக கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் கஷ்டப்பட்டுப் பிடித்து கொண்டு வந்து சேர்த்திருகிறார்கள். , ., குஜராத்திலிருந்து வந்த அழகிய இளம்பெண் வெறி பிடித்தது போல் ரயில் நிலையத்தை சுற்றி சுற்றி வந்ததும் அவரை ஒரு கால் டாக்ஸியில் பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது கத்தி ஹிந்தியிலேயே திட்டியதும் செல்லும் வழியில் வாந்தி எடுத்ததும். பின் வில்சனும்., சாருமதியும் இரண்டு கைகளைப் பிடித்து அமர்ந்து கொண்டு சேர்த்ததாக கூறினார்கள்.

மனநிலை சரியில்லாதவர்கள் குப்பைத்தொட்டியில் இருந்து எடுத்து உணவு எடுத்து உண்பதும்.. உடை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதும்., ரயில்வேயின் பாத்ரூம்., நடைபாதை., வண்டிகள் நிறுத்துமிடம் என சுற்றித் திரிந்து படுத்திருப்பதும் கண்டு சாருமதி., வில்சன்., தமிழரசி மற்றும் சிலர் சேர்ந்து ரயில்வே டீம் என ஒன்றை உருவாக்கி உதவி வருகிறார்கள்.

இது வரை 45 பேர்களை இவ்வாறு பாதுகாப்பு இல்லங்களில் கொண்டு சேர்த்ததாக சாருமதி சொன்னார்.. அதில் 6 ., 7 நபர்களை வேறு யாருடைய உதவியும் இன்றி சாருமதியே சேர்ப்பித்ததாக வெங்கடேசன் கூறினார்.

உயர்மட்ட அளவில் உதவி தேவைப்பட்டால் அதை வி ஐ பி இன்சார்ஜாக இருக்கும் தமிழரசி உதவியுடன் பெற்று செயலாற்றுகிறார்கள். ஒரு மனநிலை சரியில்லாத பெண் திருச்சியில் ரோடில் குழந்தை பெற்ற போது சென்னையில் இருந்து தமிழரசி துணை முதல்வர் ஸ்டாலினின் முதல் நிலை உதவியாளர் இளங்கோவின் உதவியை நாடி அவர் போன் மூலமாக சொன்னதன் பொருட்டு அந்த தாயை மனநல காப்பகத்திலும்., குழந்தையை குழந்தைகள் காப்பகத்திலும் சேர்ப்பித்திருக்கிறார்கள்.

செகரட்டேரியேட்டில் வேலை செய்யும் வெங்கடேசன் கிட்டத்தட்ட 600 பேர்களை இவ்வாறு காப்பகங்களில் சேர்ப்பித்திருக்கிறார். பென்ஷன் வாங்கும் நாள் மட்டும் அம்மாவை அழைத்துச் சென்று கையெழுத்து வாங்கி பின் அங்கேயே விட்டுச் செல்லும் மகன்கள் கூட இருக்கிறார்கள்.. அந்த அம்மாவை வெங்கடேசன் அன்பகத்தில் சேர்ப்பித்திருக்கிறார். மேலும் முன்னாள் நடிகரின் மனைவி., நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு முதிய தாய் ., என பலரையும் அன்பகம், லிட்டில் ட்ராப்ஸ்., பானியனில் சேர்ப்பித்து இருக்கிறார்.

இவர்களைப் போல பலரும் இணைந்து மனநிலை சரியில்லாதோருக்காக., மெரினா பீச்சில் ஒரு ராலி கண்டெக்ட் செய்து., கல்லூரி கல்லூரியாக சென்று சுமார் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி., அதை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியனிடம் அனுப்பி அனுமதி வாங்கி., தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கொடுத்து 2008 இல் ஒரு ஆர்கனைசேஷன் ஃபார்ம் செய்து இருக்கிறார்கள். பெயர் ..WOMAN...--- WELL -WISHERS OF MENTALLY ABNORMAL NATIONALS.

கூடுமானவரை சட்ட ரீதியாக செய்கிறார்கள். வேலை நேரம் முடிந்தபின்பே தங்கள் சேவையை தொடருகிறார்கள். 18 வயது வரை உள்ள குழந்தைகளை டான் பாஸ்கோ இல்லத்திலும்., முதியோர்களை லிட்டில் ட்ராப்ஸிலும்., எல்லா வயது பெண்களையும் பானியன்., அன்பகத்திலும் சேர்ப்பிக்கிறார்கள்.

இதற்கென்று முறையான செயல்பாடு இருக்கிறது.. ஒருவர் மனநிலை சரியில்லாமல் சுற்றித் திரிகிறார் அல்லது அநாதரவாக உயிர்போகும் நிலையில் ரோட்டில் கிடக்கிறார் என்றால் உடனே 108 க்கு ஃபோன் செய்கிறார்கள். முதியோர்கள் என்றால் ஹெல்ப் ஏஜுக்கும்., குழந்தைகள் என்றால் சில்ரன் ஹெல்ப் லைனுக்கும்., பெண்கள் என்றால் உமன் ஹெல்ப் லைனுக்கும் போன் செய்கிறார்கள்.. அவசர தேவை என்றால் முதலுதவி அளிக்கிறார்கள். 108 க்கு போன் செய்ததும் ஒரு குழு வந்து அவர்களின் பல்ஸ்., பி பி எல்லாம் சோதிப்பார்கள். பின் ஒரு அட்டண்டர் உடனிருக்க அந்த கேஸை ஜி ஹெச்சில் சேர்ப்பார்கள். இந்த மாதிரி அநாதரவானவரை பற்றி தகவல் கொடுப்பவரே அட்டண்டராக இருக்க வேண்டி வரும். அவர்களை சேர்க்குமுன்பு.அவர்கள் உடல் நிலை பற்றி ஒரு டாக்டரிடம் சர்டிஃபிகேட் வாங்கி ., பின் அந்த ஜூரிஸ்டிக்‌ஷனில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

முதியோரை எடுத்தால் அந்த போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டரிடம் ஜெனரல் மெமோ .( பொது நமூனா) வாங்கினால் போதும் . மனநிலை சரியில்லாதோரை சேர்க்க எஃப் ஐ ஆர் ஃபைல் செய்து., மாஜிஸ்ட்ரேட்டிடம் பர்மிஷன் வாங்கி., போலீஸ் ஸ்டேஷனில் ரிஷப்ஷன் ஆர்டர் போடுவார்கள். அதை ஆஸ்பத்ரியில் காண்பித்து சேர்த்து பின் அவர்கள் தரும் அட்மிஷன் தகவல்களை போலீஸ் ஸ்டேஷனிலும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஒரு நாளாகும்.

அவர்கள் குணமாகும் வரை ஆஸ்பத்ரிக்கு தினமும் சென்று அவருக்கு தேவையான உணவு வாங்கித் தருவது., உடை மாற்றுவது., மருந்துகள் கொடுப்பது., அவரிடம் தன்மையாக பேசி அவர் பற்றிய தகவல்கள் அறிந்து குடும்பத்தினருக்கு தெரிவிப்பது., பின் மனநோயாளியாக இருந்தால் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்ளச் செய்வது., குடும்பத்தினருக்கு கவுன்சிலிங்க் செய்வது., பின்னும் ஒவ்வொரு மாதமும் அவரை பரிசோதிப்பது என இவர்கள் பணி தொடர்கிறது.

இவ்வாறு மனநிலை சரியில்லாத நபர்களை குடும்பத்தினர் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை.. சிலர் வீட்டுக்கு சென்றாலும் கவனிப்பு சரியில்லாத காரணத்தால் தெருவிலேயே திரும்ப விடப்படுகிறார்கள்,, இவ்வாறு ஆதரவற்றவர்களை அன்பகம்., பானியன்., லிட்டில் ட்ராப்ஸிலேயே திரும்ப சேர்ப்பிக்கப்படுகிறார்கள். முடிந்தால் அவர்களும் அங்கு உள் நோயாளிகளாக இருந்து கொண்டே தம்மாலான உதவிகளை செய்து வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். கை வினைப் பொருட்கள் தயாரிகிறார்கள். சிலர் பக்கத்தில் உள்ள கடைகளிலும் வேலை செய்கிறார்கள்.

ICCW -- INDIAN COUNCIL FOR CHILD WELFARE , மற்றும் டான் பாஸ்கோ அன்பு இல்லம் இவற்றில் சிறுவர்., குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். லிட்டில் ட்ராப்ஸில் முதியோர்களும்.,பானியனில் ஆதரவற்ற பெண்களும்., எல்லாரும் அன்பகத்திலும் சேர்க்கப்படுகிறார்கள்.


HELP AGE., காக்கும் கரங்கள்., உதவும் கரங்கள்., சேவாலயா போன்ற பலவும் இந்த நற்பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறினார் வெங்கடேசன். தமிழ்நாடு ஊர்க்காவல் படையும் இந்த மாதிரி மக்களை காப்பகங்களில்சேர்க்க உதவுவதாக கூறினார்.

108 இன் சர்வீஸ் மூலம் GEDATRIC கேர் என்ற ஒன்று இப்போது ஆரம்பிக்கப் பட்டிருகிறது.. இது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மருத்துவ உதவி. இதன் மூலம் ELDERS LEGAL ASSISTANCE., MOBILE MEDICAL CAMPAIGNE., COUNCELLING எல்லாம் செய்யப்படுகிறது.

இப்போது முதிய பெற்றோரை பாதுகாக்காமல் தெருவில் விடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டத்திலும் இடம் உள்ளதாக வெங்கடேசன் கூறினார்.

சென்னை மாநகர மேயர் மா. சுப்ரமணியன் அவர்களும் கார்ப்பரேஷன் மூலமாக உதவுவதாக வெங்கடேசன் கூறினார்.

தான்., தன் குடும்பம்., தன் நலம் என்றதெல்லாம் மீறி தன்னுடைய சம்பளப் பணத்தில் பெரும்பகுதி சாருலதா செழவழிக்கிறார் இந்த சேவையில்.

பலவருடங்களாக இந்த சமூக சேவையில் ஈடுபட்டிருந்த வெங்கடேசன் இப்போது இரண்டு வருடங்களாகத்தான் செகரட்டேரியேட்டில் பணிபுரிகிறார். மிச்ச நேரங்களில் சமூக சேவை தொடர்கிறது.

மிக உயர் பொறுப்பில் இருந்தாலும் தன் புன்னகை முகத்தாலும் அன்பான தன்மையான அணுகுமுறையாலும் மேலிடத்தினரின் உதவி பெற்று இம்மாதிரி பாதிக்கப்படும் மக்களை காப்பதில் உதவுகிறார் தமிழரசி..

கடவுளை கும்பிட நான் கோயிலுக்கு செல்வதில்லை.. தேவைப் படும் மக்கள் மூலமாக கடவுளே எங்களிடம் வருகிறார் .. இந்த சேவையிலேயே கடவுளின் ஆசீர்வாதங்களை (குணமானோர் சொல்லும் வாழ்த்துக்களை ) ருசிக்கிறேன் என்கிறார் வெங்கடேசன்..

இன்றைக்கு 8 பெண்கள் இவ்வாறு (மனநிலை சரியில்லாமல் இருந்து குணமகி வீட்டு அட்ரஸ் கேட்டு சேர்ப்பிக்கப்படப் போகிறார்கள் அவர்கள் குடும்பத்தோடு. இதை ரயில்வேயின் ஒரு உயர் அதிகாரி மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அனுப்புகிறார்கள்.. இதற்கு மூலகாரணம் தமிழரசி.. தன்னுடைய வி ஐ பி சர்வீஸ் தொடர்புகள் மூலம் இந்த நல்ல காரியத்தை சாதித்திருக்கிறார்.

வாழும் தெய்வங்கள் இவர்கள். வாழ்த்துவோம் இவர்களை..

இதுபோல் இன்னும் சில உதவும் டீம்கள் அமைய வேண்டும் என்பது இவர்கள் எண்ணம்.

வாசகர்களும் எங்காவது இது போல் அநாதரவாக அல்லது மனநிலை சரியில்லாத நபர்களை கண்டால் இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.. எளியோருக்கு உதவுதல் நன்று.. இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.. தங்கள் நேரத்தில் சிறிதை பிறருக்காகவும் வாழ்வோம்.






வாசகர்களுக்காக..
ELDERS HELP LINE --- 1253
CHILDREN HELP LINE --- 1098
WOMEN HELP LINE --- 1091
CORPORATION --- 191.






16 கருத்துகள்:

  1. இவர்கள் தொண்டு வாழ்க! நிச்சயம் கடவுளர் தாம்!

    பதிலளிநீக்கு
  2. சுயநலம் என்ற பேய் மனிதர்களை ஆட்கொண்ட போதிலும் இவர்களை போன்று சேவை செய்பவர்களை பார்க்கும் போது தான் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அனைவருக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக நல்லதொரு அறிமுகக் கட்டுரை தேனம்மை. அவசியமானதும். சாருமதி, தமிழரசி, வெங்கடேசன் ஆகியோருக்கும் தங்களுக்கும் என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சாருமதி, தமிழரசி, வெங்கடேசன் ஆகியோருக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தெய்வத்திற்கு நிகராய் மதிக்கவேண்டிய தொண்டுள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. மதுரையில் ஒரு நாராயன் கிருஷ்ணன் போல , சாருலதா, தமிழரசி, வெங்கடேசனின் சேவை சாதாரணமானதல்ல போற்றப்படக் கூடியது.. அவர்களைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. சாருமதி, தமிழரசி, வெங்கடேசன் ஆகியோருக்கு என் பாராட்டுக்கள்

    அக்கா..

    உங்களின் எழுத்துகளில்...இந்த அருமையான பதிவு..

    நமக்காக இல்லாமல் பிறர்க்காகவும்..வாழவேண்டும்...

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  11. வாழ்க,வளர்க இவர்களின் நற்பணி.

    பதிலளிநீக்கு
  12. தொண்டுள்ளம் கொண்ட அவர்களுக்கும், பகிர்ந்துக்கிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. முத்தான இந்த மூவரின் தொண்டு பாராட்ட,பின்பற்ற பட வேண்டியதே!

    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அவர்களை அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அவர்களுக்கும், பகிர்ந்துக்கிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.இந்த கட்டுரையை பெண்ணே நீ மாத இதழுக்கு அனுப்பவும்

    பதிலளிநீக்கு
  15. நன்றி மாதவி

    நன்றி சசி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி மாலதி

    நன்றீ ஆயிஷா

    நன்றி ராஜி

    நன்றி அவர்கள் உண்மைகள்

    நன்றி சிவா

    நன்றி முனியப்பன் சார்

    நன்றி செந்தில்.. ஆம்..:)

    நன்றீ சிநேகிதி

    நன்றி ஸாதிகா

    நன்றி சாந்தி

    நன்றி கோமதி

    நன்றி செந்தில்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)