சனி, 19 பிப்ரவரி, 2011

வாளோர் ஆடும் அமலை.. ட்ராட்ஸ்கி மருதுவின் புத்தக வெளியீடு..

முகப்புத்தகத்தில் நண்பர்கள் ஐயப்ப மாதவன் மற்றும் கா முகுந்த் தேவநேயப்பாவாணர் அரங்கில் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள்.. அதற்கு அமுதரசன் கீற்றுவில் போட்டிருந்த அழைப்பிதழும் காணவே அருமையாய் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்தோடு இருந்தது..
ஜெயராஜ்., மாருதி., ம.செ., வர்ணம்., கோபுலு., ராமு., இந்த வரிசையில் நம் மனம் கவர்ந்தவர் ட்ராட்ஸ்கி மருது.. இன்னும் வித்யாசம் என்னவென்றால் ஒரே ஓவியத்துள் இரண்டு படிமானங்களை காணலாம்.. கதைக்காக ஓவியமா., ஓவியத்துக்காக கதையா என ரசித்தது அநேகம் இருக்கும். ஒரு நாற்காலியும் மனிதனும் பின்னிப் பிணைந்து ஒரு கதைக்கு பார்த்த ஓவியம் இன்னும் மறக்க இயலாதது.. சிலர்தான் இப்படி தங்கள் ஸ்டைலால்., பாணியால் ஈர்க்கிறார்கள்.. அதில் இவர் பாணி இன்னும் வித்யாசமானது. கோட்டோவியங்களில் இவ்வளவு உணர்வுபூர்வமான., எழுச்சியான படங்களை காண்பது அரிது..

ச. விசயலெட்சுமி தொகுத்து வழங்க விழா ஆரம்பித்தது. நமக்கு பிடித்த எழுத்தாளர் பிரபஞ்சன் ( இவரின் எழுத்துக்களை மிக விரும்பி வாசித்திருக்கிறேன்)., நண்பர்., டைரக்டர் மிஷ்கின்., மற்றும் டைரக்டர் ஜனநாதன்., அறிவுமதி., நாசர்., அனைவரும் பங்கு கொள்ள மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் நாகநாதன் வெளியிட்டார். இது தடாகத்தின் முதல் வெளியீடு. ட்ராட்ஸ்கி மருது பேசும் போது தன் தந்தை சிறுவயதில் படங்களோடு கூடிய புத்தகங்களை அறிமுகப்படுத்தியதுதான் இன்று தான் வரையக் காரணம் என்றும்., தந்தை தற்போது முதல் புத்தகம் வெளியிடும் இந்த சூழலில் இல்லாவிட்டாலும் வந்திருந்த அனைவரையும் தன் தந்தையின் பிரதிகளாக பார்ப்பதாக சொன்னார். மன்னர்கள் குறித்து தன்னை ஈழத்தமிழ் நண்பர்கள் வரைய சொன்னதாக கூறினார். ஜெர்மனியின் ஒருங்கிணைப்பாளர் வரதராசன் தான் இவ்வாறு வரைய பெரும் ஊக்கமூட்டியதாக சொன்னார்..

பிரபஞ்சனின் பேச்சு மிக அற்புதமாக இருந்தது. அவர் இது மருதுவின் 20 ஆண்டுகால உழைப்பின் பயன் என்று சொன்னார். வெறும் படங்களாக மட்டுமில்லாது இது 45 தமிழ் மன்னர்கள் பற்றிய ஆவணம் போல வருங்காலதலைமுறைக்கு பயன்படும் என சொன்னார்.பழங்கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் பற்றிக் கூறும் போது மன்னர்கள் மக்களோடு கலந்து அவர்களும் மக்களைப்போலவே இருந்ததாக யுவான்சுவாங்க் என்ற சீன யாத்ரிகர் தன் பயண நூலில் பதிந்துள்ளதாக சொன்னார். மூன்று தலைநகரங்கள் சோழர்களுக்கு இருந்ததாகவும் அவை திருவாரூர்., பூம்புகார்., உறையூர் எனவும் கூறினார். மனுநீதி சோழனின் பெயர் மன்பதை சோழன் எனவும் மன்பதை என்றால் உலகம் ., அதைக் காத்து நீதி வழங்கியதால் மனுநீதி சோழன் எனவும் கூறினார். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு பற்றி கூறினார். களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல எனவும் சொன்னார். இந்த இரு மன்னர்கள் மட்டுமில்லாது மற்ற மன்னர்கள் அனைவரையும் மண்ணின் மரபும் பண்பாடும் கெடாது மக்களோடு மக்களாக வாழ்ந்த மாண்பும் அதை ட்ராட்ஸ்கி மருது ஓவியமாக பதிந்தது குறித்தும் சொன்னார். இதை மருது புத்தகங்கள்., கோயில் ஓவியங்கள் மற்றும் பல இடங்களுக்கு சென்று நன்கு தெரிந்து பின் உருவாக்கியதாக சொன்னார்.
புத்தகத்தில் மன்னர்களின் ஓவியங்களோடு கூட அவர்களைப்பற்றிய சரித்திரமும் சுவாரசியமாக பகிரப்பட்டிருப்பதாக கூறினார். புத்தங்கங்களை திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன் வெளியிட அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.
நண்பர் மிஷ்கினும்., ஜனநாதனும் பேசுமுன்பே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. முகப்புத்தக நண்பர் ஜீவாவை பார்த்தேன். அவர் ட்ராட்ஸ்கி மருதுவின் தோழர் என்பதால் வந்திருந்தார். எனக்கு அவரை பார்ப்போம் என்று தெரியாததால் சர்ப்ரைசாக இருந்தது. இவரும் நன்கு வரையக்கூடியவர். இவர் ஜீவாஆர்டிஸ்ட் என்ற வலைத்தளம் வைத்திருக்கிறார். இவரின் திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலையை நான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். இந்த புத்தகம் விலை ரூ 300/- . பார்க்கவே சிறப்பாய் இருக்கிறது. வாளோர் ஆடும் அமலை என்றால் வாகை மாலை சூடி வென்ற அரசர்கள் பின் அமலை மாலை சூடி கொண்டாடுவார்களாம் என மிஷ்கின் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். !! வாழ்த்துக்கள் ட்ராட்ஸ்கி மருது., மற்றும் தடாகம். !!!

9 கருத்துகள்:

  1. அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு பிள்ளையின் வளர்ப்புக்கு தந்தையின் வழிக்காட்டல் மிக முக்கியமாக அமைகிறது... சாரல் விருது நிகழ்விலும் அசோகமித்தரனின் பேச்சும் அப்படியாக தான் இருந்தது...

    பகிர்வுக்கு thanks ji

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு புத்தகத்தை பற்றியும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்கு மிக்க நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  5. சந்திப்பு அருமை.அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நன்றி மனோ., குமார்., அஷோக்., ஆயிஷா., கருன்., சசி., ஸாதிகா

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)