வெள்ளி, 20 டிசம்பர், 2024

தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்

 தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர்


அன்புள்ள மான்விழியே, இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால், நான் மலரோடு தனியாக, குயிலாக நானிருந்தென்ன, பார்வை ஒன்றே போதுமா, நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன ஆகியன அமைதியான காதலைச் சொல்லும் பாடல்கள் என்றால் பளிங்கினால் ஒரு மாளிகை எனக் குபீரெனப் பாயும் இசை வெள்ளமும் ஆங்கில நடிகைகள் போன்ற உடையலங்காரத்தில் சுழலும் விஜயலலிதாவின் நடனமும் இன்ப லாகிரியில் ஆழ்த்தும். மெர்மெய்ட் போன்று அவர் ஆடும் ஆட்டத்தில் தூண்டிலில் சிக்கிய மீனின் நிலைதான் ரசிகர்களின் நிலையும். ஜெய்சங்கரின் ஸ்மார்ட்டான ஸ்டைலும் கூட அசத்தல்தான்.

ஜூலை 12, 1938 இல் சுப்ரமணியன், யோகாம்பா இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் சங்கர்.  இவர் புதுக்கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்தவர். தந்தை வக்கீல். மகன்கள் இருவரையும் டாக்டர் ஆக்கியுள்ளார். ஆனால் இவர் தேர்ந்தெடுத்ததோ நடிப்புத்துறை. முதலில் சோவின் நாடகக்குழுவிலும் அதன்பின் கூத்தபிரானின் நாடகக் குழுவிலும் நடித்து வந்தார். ஜோஸப் தளியன் என்ற இயக்குநர் இரவும் பகலும் என்ற சினிமாவுக்காக இவர் பெயருடன் ஜெய் சேர்த்து ஜெய்சங்கர் என்று அறிமுகப்படுத்தினாராம்.

200 படங்களுக்குமேல் நடித்தவர். 100 படங்களில் ஹீரோவாகவே நடித்தாலும் இன்னும் 100 படங்களில் வில்லன் ரோலும் செய்தவர். ஆணழகன், மக்கள் கலைஞர், ஆக்‌ஷன் ஹீரோ, அதிரடி நாயகன், நகைச்சுவை நாயகன், குணசித்திர நடிகர் ஏன் வில்லன் ரோல் கூட ஏற்றுச் சிறப்பாகச் செய்துள்ளார். கௌபாய், ஜேம்ஸ்பாண்ட், சிஐடி, சிபிஐ அதிகாரி போன்ற வித்யாசமான கேரக்டர்களிலும் நடித்தவர். காவல்துறையைச் சேர்ந்தவராகவும் நடித்துள்ளார்.

1962 களில் ஷான் கானரியில் ஆரம்பித்து ஜார்ஜ் லேஸன்பை, ரோஜர் மூர், திமோத்தி டால்டன், பியர்ஸ் ப்ரோஸ்னன், டேனியல் க்ரேக் என்று 2024 வரை தொடரும் ஜேம்ஸ்பாண்ட் பாரம்பரியத்தில் த்ரில்லர் கதைகளில் நடித்ததால் தென்னக ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்களால் பிரியமாக அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். ஷான் கானரி காலத்தில் அறிமுகம் என்றாலும் ரோஜர் மூர் போன்ற தோற்றம் கொண்டவர்.

மெலிதான புன்னகை, பென்சில் மீசை மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு, அதற்குப் பொருந்தும் ஃபிட்டான உடைகள், கழுத்தை மூடியிருக்கும் முழுக்கை ஸ்வெட்டர் அவரது பெரும்பாலான படங்களில் இடம்பெற்றிருக்கும். அந்தச் சின்னஞ்சிறு கண்களில் வெளிப்படும் கீற்று வெளிச்சமும் நெற்றியில் சுருண்டு விழும் கற்றை முடியும் வெகு அழகு. ஆனால் பிற்பாதி படங்களில் அடர்த்தியான டோப்பா கொண்டு முரட்டுத் தோற்றம். கைலி, பட்டை பெல்ட் என்று அது வில்லன் ரோலுக்கேற்ப மாறிவிட்டது.

சிஐடி சங்கர் படம் அன்றைய ஜேம்ஸ்பாண்ட் பட பின்னணி கொண்டது. இசையும் காட்சியமைப்பும் திகில். ஒரு மூலிகையை உற்பத்தி செய்து அதிலிருந்து போதைப் பொருள் தயாரித்து மனித உடம்பில் செலுத்தி அவர்களைச் சட்டவிரோதக் காரியங்களுக்குப் பயன்படுத்தும் கும்பலைக் கண்டுபிடிக்கும் கதை. சிஐடி ஆனந்தாக துணிவே துணையில் அண்டர்கிரவுண்ட் தாதாக்களைக் காட்சிப்படுத்திய முதல் திரில் படம். ஹெலிகாப்டர் சண்டையும் ராஜசுலோச்சனா பெண் வில்லியாக நடித்ததும் இதன் வித்யாச அம்சங்கள்.

அப்போதைய ஹீரோக்கள் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சண்டை மூலம் மிரட்டியவர் இவர். காலம் வெல்லும் படத்தில் ஜூடோ ஃபைட் சீனில் நம் கண்ணெல்லாம் கலங்கும். 007 ஹீரோக்கள் போல் கழுத்தும் கையும் முழுக்க மூடிய பனியன் அணிந்து இவர் அந்தப் பிரம்மாண்டமான வில்லனை ஸ்டெப் பை ஸ்டெப்பாக ரவுண்ட் கட்டுவது அன்றைய சண்டைப் பிரிய ரசிகர்களுக்கு இன்றும் மறக்க முடியாத விருந்து. இன்று பார்க்கும் போதும் வில்லனிடமிருந்து அவர் எப்படித் தப்பிப்பாரோவெனத் திக் திக் என்று இருக்கும்.

இவரது பல படங்கள் மினிமம் பட்ஜெட் படங்கள் என்பதால் அநேகம் கறுப்பு வெள்ளைப் படங்களே. மினிமம் கேரண்டி இயக்குநர் மாதிரி இவர் மினிமம் கேரண்டி ஹீரோ. அடுத்தடுத்து இவரது படங்கள் வாராவாரம் வெளிவந்ததால் ஃப்ரைடே ஹீரோ என்று கூட ஒரு காலத்தில் அழைக்கப்பட்டார். சில சமயம் இவரது இரு படங்கள் ஒரே வெள்ளிக்கிழமையில் வெளியாகி சக்ஸஸ் ஆனது சரித்திரம். வசூல் சக்கரவர்த்தி என்று கூட இவருக்கு ஒரு பெயர் உண்டு.  குறைந்த சம்பளத்திலும் லோ பட்ஜெட் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டு நிறைய இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் வாழ வைத்தவர்.


அநேகப் படங்களில் இவர் கதாநாயகன் அல்லது வில்லன் ஆகிய ரோல் மட்டுமே செய்திருக்கிறார். சிவாஜியைத் தவிர யாருடனும் செகண்ட் ஹீரோவாக நடிக்கவில்லை என்பது ஆச்சர்யத்தகவல். ஸ்டார் டிவி வாங்குமுன்பு இவர் படங்களை அதிகம் வெளியிட்டதால் ஒரு காலத்தில் விஜய் டிவியே ஜெய்சங்கர் டிவி என்று பட்டி தொட்டியெல்லாம் கூறப்பட்டதாம்.

எம்ஜியார், சிவாஜி, ஜெமினி போன்றோரின் ஆக்‌ஷன், குணச்சித்திரம், ரொமான்ஸ் ஆகியவற்றைக் கலந்த அதிசய மிக்ஸ் இவர். முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடன் இணைந்து நடித்தாலும் இவர் தனித்துவமான நடிகர். கலைமாமணி விருது பெற்றவர். குணச்சித்திரப் பாத்திரத்தில் மிகவும் தன்மையாகத் தோன்றுவார்.

வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், அன்பு சகோதரர்கள், பூவா தலையா, நூற்றுக்கு நூறு, கருந்தேள் கண்ணாயிரம், ஆசீர்வாதம், டில்லி டு மெட்ராஸ், அத்தையா மாமியா, கல்யாணமாம் கல்யாணம், அக்கரைப் பச்சை, மேயர் மீனாட்சி, பணக்காரப் பெண், ஜஸ்டிஸ் கோபிநாத், காயத்ரி, வண்டிக்காரன் மகன், ரத்தத்தின் ரத்தம், அதிசய பிறவிகள், தனிக்காட்டு ராஜா, வாழ்வே மாயம் அபூர்வ சகோதரிகள், அடுத்த வாரிசு, பாயும்புலி, தங்க மகன், துடிக்கும் கரங்கள், பிள்ளை நிலா, பூவே பூச்சூடவா, கண்ணே கனியமுதே, காதல் பரிசு, மாப்பிள்ளை, மௌனம் சம்மதம், தளபதி, சிங்கார வேலன், பிரியங்கா, சின்ன ராஜா, பூ வாசம் ஆகியன 1999 வரை இவர் நடித்த சில படங்கள்.  

வல்லவன் ஒருவன், நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற த்ரில்லர் மட்டுமல்ல சொந்தங்கள் வாழ்க போன்ற குடும்பப் படங்கள் அநேகம் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் படம் மூலம் குழந்தைகளின் உள்ளத்தையும் கவர்ந்தவர். அடுத்து வந்த எங்க பாட்டன் சொத்து என் தம்பிகளுக்குப் பிடித்த ஆக்‌ஷன் படம். கௌபாயாக நடித்த படம் கங்கா. வில்லனாக நடித்த படங்கள் முரட்டுக் காளை, விதி, படிக்காதவன், அபூர்வ சகோதரர்கள் மேலும் பல. அதிலும் முரட்டுக் காளையில் முதன்முதலாக வில்லத்தனத்திலும் மெருகேற்றினார். அருணாச்சலம், தளபதியில் குணச்சித்திரப் பாத்திரப்படைப்பு. ஆபாவாணனின் ஊமை விழிகள் இவர் நடித்ததில் அற்புதமான படம்.

கீழ்வானம் சிவக்கும் படத்தில் தனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமானவனைப் பழிவாங்கத் துடிக்கும் கண்பார்வையற்ற சகோதரன் வேடம். ஆனால் அவன் தனக்குக் கண் தானமளித்த டாக்டர் சிவாஜியின்  மருமகளான சரிதாவின் கணவனான சரத்பாபுதான் என்பதை,” இந்தக் கண்களைக் கொண்டு நீ அந்தக் கொலைகாரனைப் பார்ப்பதை என் மருமகள் மஞ்சு விரும்பமாட்டாள்” எனக் கூறுவதைப் புரிந்து கொண்டு சரத்பாபுவை மன்னித்து வெளியேறுவது சிறப்பு.

ஜெய்சித்ராவுடன் சொந்தங்கள் வாழ்க, கலியுகக் கண்ணன், சினிமாப் பைத்தியம், ஜெயாம்மாவுடன் முத்துச்சிப்பி, பொம்மலாட்டம், யார் நீ, வைரம், கௌரி கல்யாணம், சுஜாதாவுடன் கண்ணே கனியமுதே, கே ஆர் விஜயாவுடன் பட்டணத்தில் பூதம். இதில் ஜாடி பூதம் ஜாவர் சீதாராமனுடன் செய்யும் ரகளைகள் அதகளம்.

ஜெண்டில்மேன் ஆக்டர். கடவுள் நம்பிக்கை உள்ளவர். தன் வீட்டில் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏதோ ஒரு இல்லத்தில் அன்னதானம் உதவிகள் செய்வார் அதுவும் பிரபலங்களை அழைத்து அவர்கள் மூலம் வழங்கச் செய்வாராம். ஏனெனில் அதுபோல் அவர்களும் பின்னர் உதவிகள் செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தும் என்பாராம். 007 ஆகக் கம்பீரமாக நடித்தாலும் வில்லனாக முத்திரை பதித்தாலும் ரசிகர்களின் பார்வையில் மக்கள் நாயகனாகவே வலம் வந்தவர். தனது 62 வது வயதில் 2000 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இருபத்திநான்கு வருடங்கள் கழித்து இன்றும் தென்னக ஜேம்ஸ்பாண்ட் என மக்களால் நினைவுகூரப்படும் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஆத்மார்த்த அஞ்சலிகள்.



டிஸ்கி:-  தமிழ்த் திரையிசைப் பாடகர்கள் ஒரு ஜூகல் பந்தி என்ற என்னுடைய சென்ற மாதக் கட்டுரையைப் பாராட்டி மணிமடல்கள் எழுதிய தூத்துக்குடி நகரத்தார் சங்கத்தின் செயலாளர் திரு. மு. நாராயணன் அவர்களுக்கு நன்றிகள். மணி மடல்களில் இவரது கடிதத்தை வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)