நற்கதி அடைந்த நாககுமாரன்
விரதம் நோற்பதால் ஒருவன் மறுஜென்மத்தில் அளவிடற்கரிய
ஆற்றலையும் பெறற்கரிய பேறையும் அடைய முடியுமா. நாகபஞ்சமி என்றொரு விரத்தத்தை
முற்பிறவியில் மேற்கொண்ட நாகதத்தன், நாகவசு இருவரும் தம் மறுபிறப்பிலும்
இணைந்தனர். அதிலும் நாகதத்தன் எண்ணியது எல்லாம் அவனுக்கு வாய்த்தது. அப்படிப்பட்ட
நாகதத்தன் நாககுமாரன் ஆன வரலாற்றைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
நாவலந்தீவில் பரதக்கண்டம் உள்ளது. அதில் மிகச் சிறப்பு வாய்ந்தது மகத தேசம். அங்கே கனகபுரம் என்றொரு நகரம் இருக்கிறது. அதில் குயில்கள் கூவும் சோலைகளில் தேன் சிந்தும் மலர்கள் பூத்துச் சிரிக்கும். இவ்வளவு அழகுபொலிந்த கனகபுரத்தைச் சயந்திரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். இவனுடைய மனைவியின் பெயர் விசால நேத்திரை. இவர்கள் இருவருக்கும் பிறந்த இளவரசன் பெயர் சீதரன். தன் ஆட்சியை நல்லபடி நடத்திச் செல்லச் சயந்தரனுக்கு வாய்த்த நல் அமைச்சனின் பெயர் நயந்திரன்.
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
என்று வாழ்ந்து வந்த சயந்திரனுக்கு விசாலநேத்திரை தவிர எட்டாயிரம் மனைவியர் இருந்தார்கள்.
அவனது அரசவைக்கு ஒருநாள் வந்த வணிகன் ஒரு அரிய ஓவியத்தைப் பரிசாகக் கொடுத்தான். அதில்
இருந்த அழகிய மாது ”சுராட்டிர தேசத்தைச் சேர்ந்த பரங்கியா நகரில் வாழ்ந்து வரும் சிரீவர்மன்,
சிரீமதி ஆகியோர்களின் புதல்வி பிரிதிதேவி” என்றான்.
மன்னன் அவளை மணக்க விரும்பவே
அம்மென்பாவை பிரிதிதேவி தன்னைப் பெற்றவர்களுடன் கனகபுரம் வந்தாள். தெய்வத் தன்மை பொருந்திய
வேள்வித் தீ எழுப்பி அதன் சாட்சியாகத் தன் மனம் கவர் பாவையான பிரிதிதேவியைத் திருமணம்
புரிந்து கொண்டான் மன்னன்.
ஒருநாள் மன்னனின் மனதுக்கு
இனியவளான பிரிதி தேவி பரமனின் திருக்கோவிலுக்குள் சென்றாள். ஆகம நூல்களில் சொன்ன முறைப்படி
இறைவனின் திருப்பாதங்களை வணங்கி வேண்டி நின்றாள். அங்கே பிரஹிதாஸ்வரர் என்னும் முனிவர்
அமர்ந்திருந்தார். அவர் அருகே சென்று தொழுதாள்.
மாபெரும் தவசியான அவர் “ அளவற்ற
நற்குணம் கொண்ட புதல்வனைப் பெற்று நீ புகழடையப் போகும் தருணம் நெருங்குகிறது. அதுவே
நீ செய்த நல்தவம் ” என்று ஒளிவீசும் மணிவிளக்குப் போலப் பிரகாசமாகக் கூறினார்.
அரண்மனைக்குத் திரும்பிய பின் இறைவன் ஆலயத்துக்குச் சென்று தரிசித்ததையும்
அங்கிருந்த முனிவர் ஒருவர் தனக்கு நல்வாக்குத் தந்ததையும் மகிழ்வுடன் சொன்னாள் பிரிதிதேவி.
இந்த நற்செய்தியைக் கேட்டதும் சயந்திரனும் உள்ளம் பூரித்தான்.
மறுநாள் மன்னன் மனைவியுடன் சென்று வணங்கியபோது அம்முனிவர் “அவன்
இந்தப் பாருலகை வென்று தன் செங்கொற்றக் குடையின் கீழ் ஆள்வான். குடிகள் எல்லாம் அச்சமின்றியும்
நடுக்கமின்றியும் வாழ்வார்கள். நாட்டில் நல்லமைதி நிலவும். அதன்பின் தவக்கோலம் பூண்டு
வாட்டும் இருவினைகளையும் அறுத்து வீடுபேறு அடைவான். ” என்று நல்வாக்கு அருளினார்.
”மூத்த பட்டத்து அரசி விசாலநேத்திரையின் புத்திரன் சீதரன் இருக்கும்போது
இளைய பட்டத்து அரசியான இவள் புதல்வன் எப்படிப் பட்டத்துக்கு வரமுடியும்’ என்ற ஐயம்
மன்னனுக்குத் தோன்றியது.
“சத்புத்திரன் பிறப்பான் என்றீர்கள் சரி ஐயனே, ஆனால் அண்ணன்
இருக்கத் தம்பி அரசாள்வான் என்கின்றீர்கள். அப்படிப்பட்ட சிறப்புத் தகுதிகளை உடையவன்
என்பதற்கு ஏதேனும் அறிகுறிகள் உண்டா என்று சொல்லுங்கள்” என்று பூமாலை அணிந்த மார்பனான
மன்னன் கேட்டான்.
அச்சமணமுனிவர் மன்னனின் கேள்விக்கு ”ஆம் மன்னா. அறிகுறிகள் உண்டு.
கூறுகிறேன். அக்குறிகளைக் கண்டபின் நான் சொன்னது உண்மை என்று தெளிவீர்கள் “.பதில் அளிக்கிறார்.
”சமவசரண மண்டலம் என்னும் பொற்கோட்டையில் வீற்றிருக்கும் ஜிநனுடைய
ஆலயம் உன்னுடைய நந்தவனத்தில் உள்ளது. அப்புனிதக் கோவிலின் கதவம் மாபெரும் தேவர்களாலும் தவசிகளாலும் கூடத் திறக்க
இயலாதது. அந்த ஆலயத்தில் உங்கள் மகனின் பாதம் பட்டவுடனேயே அக்கதவு திறந்து கொள்ளும்.
அங்கே நீங்கள் வழிபடச் செல்லும்போது அங்கிருக்கும் நாகவாவி என்னும் தடாகத்துள் உங்கள்
மகன் வழுக்கி விழுவான். ஆனால் தீமை ஒன்றும் நேராமல் அதிசயமாகத் தப்பித்து வருவான்.
அதன் பின் மத யானையையும், ஒரு முரட்டுக் குதிரையையும் மதமடக்கி ஆரோகணித்துச் சவாரி
செய்வான். ” எனத் தொடர்ந்து சொல்கிறார்.
அவரின் நன்மொழிகளைக் கேட்ட மன்னனும் அரசியும் அவரைத் திரும்பவும்
பணிந்து தொழுது தங்கள் எழில்மிகு அரண்மனையை அடைகின்றனர். திருமகளுக்கு ஒப்பான பிரிதிதேவியும்
மாமன்னன் சயந்திரனும் இனிது மகிழ்ந்திருக்கும் ஒரு நாளில் பிரிதிதேவி கர்ப்பம் தரிக்கிறாள்.
ஒன்பது மாதங்கள் கழிந்தபின் ஒரு நன்னாளில் மாமன்னன் சயந்திரனுக்கும் பெருந்தேவி பிரிதிதேவிக்கும்
உத்தம புத்திரன் அவதரித்தான். முழுமதியைக் கண்ட கடல் போல் மன்னனின் உள்ளம் உவகையால்
பூரித்து மகிழ்ந்தது.
சிங்கம் நிகர் செல்வனுக்குப் பிரதாபந்தன் என்று பெயரிட்டுச்
சீராட்டினான். அவன் பிறந்ததைக் கொண்டாடத் தன் செல்வக் கருவூலத்தைத் திறந்தான். கனகபுரத்தில்
புத்திர உற்சவமாமே ! கேள்விப்பட்டு இளவரசனைக் காணத் தரணியெங்கிலுமிருந்து மக்கள் வந்தார்கள்.
வந்தோருக்கெல்லாம் பொன்னும் மணியும் தானம் வழங்கித் தன் புத்திரனுக்குப் பெயர்சூட்டும்
உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாடினான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான் பிரதாபந்தன்.
ஒரு நாள் பிரிதிதேவியின் சக தேவிமார்கள் அரிய நற்பரமன் கோயிலுக்குச் சென்று வணங்கி
வரக் கிளம்பினார்கள். பிரிதிதேவியும் பக்தியுடனும் மேலான அன்புடனும் தன் மகனையும் அழைத்துக் கொண்டு அழகிய மலர்மாலைகளும்,
வாசனைக் குழம்புகளையும் இன்னும் பூசைக்கு வேண்டிய பலவற்றையும் பொன் தட்டுகளில் ஏந்தி
இறைவனைத் தரிசிக்கச் சென்றாள்.
அதுவரை பிரதாபந்தன் அக்கோயில் பக்கம் வந்ததில்லை. அன்றுதான்
முதன் முதலாகத் தன் தாயுடனும் பெரிய தாயார்களுடனும் அக்கோயிலுக்கு வந்திருந்தான். அவன்
அந்தச் சினாலயம் நோக்கி நடந்து வர வரவே பூட்டியிருந்த அக்கோயிலின் பூங்கதவங்கள் தாழ்
திறந்தன. ஹா.. என்ற இரைச்சல் எங்கும் கேட்டது. இதென்ன அதிசயம் பூட்டியிருந்த இரும்புக்
கதவு பூப்போலத் திறந்து கொண்டதே. இதுவே அவனது பெரிய தாயார்களின் பேச்சாயிருந்தது.
பிரிதிதேவியும் அதிசயித்துத்தான் போனாள். அனைவரும் அது பற்றியே
பேசிக் கொண்டிருக்க பிரிதிதேவி தன் தாதியிடம் பிள்ளையை விட்டு விட்டுக் கோயிலுக்குள்
பூசை செய்யச் சென்றாள். அந்தத் தாதியோ மற்ற தேவியரின் பேச்சின் சுவாரசியத்தில் பிரதாபந்தனைக்
கோவிலுக்கு வெளியிலேயே விட்டுவிட்டு அவர்களுடன் கோயிலுக்குள் சென்று விட்டாள்.
பூசை முடிந்து வெளியே வந்த பிரிதிதேவி தாதியையும் தனயனையும்
தேடுகிறாள். இதென்ன தாதி மட்டும் தனியாகக் கோவிலிலிருந்து வருகிறாளே. தனயன் எங்கே?
அங்கேயும் இங்கேயும் ஓடித் தேடுகிறாள் பிரிதிதேவி. தாதியும் குற்ற உணர்ச்சியோடு கூட
ஓடித் தேடுகிறாள்.
ஐயகோ! வாராது வந்த மாமணியாய் உதித்த அந்தப் பச்சிளம் பாலகன்
எங்கே? ஆ! அதோ அந்த வாவியின் அருகில் சிரித்துக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவர்ந்து
நிற்கின்றானே அவளது அருமாந்திர புத்திரன். ஓடுகிறாள் வேகமாக. ஆனால் என்ன இது ?
அவன் தாயைப்
பார்த்ததும் விளையாட்டுக் காட்டும் முகமாக வேகமாக அந்த நாகவாவியின் அருகில் ஓடுகிறானே.
அச்சோ! வழுக்கியும் விழுந்து விட்டானே. ஒரு கணம் ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது பிரிதிதேவிக்கு.
பெற்ற மனம் பேதலிக்க அவளும் ஓடிச் சென்று அதே நாக வாவியில் மகனைப் பிடிக்கும் பொருட்டு
வீழ்கிறாள். பிரிதிதேவி தான் செய்த நல்வினைகள் தாங்க நீரில் மூழ்காமல் அதன் மேலேயே
நின்றாள். அந்த நாக வாவியில் குடியிருந்த பாம்பினாலும் அவளுக்குத் தீங்கு நேரவில்லை.
பிறைச் சந்திரன் போன்ற நச்சுப் பற்கள் படைத்த அந்நாகம் பிரதாபந்தனைத்
தன் பணா முடிமேல் தாங்கி வாவியின் மேல் உயர்ந்து வந்து நின்றது. காண்போரெல்லாம் அதிசயத்தால்
வாய் பிளந்தார்கள். ஐயோ நாகம் என்று ஓடியவர்கள் எல்லாம் இந்த அதிசயக் காட்சியைக் கண்டு
பிரமித்து மன்னனிடம் போய்ச் சொன்னார்கள்.
அரசனுக்கும் அந்தத் திகம்பர முனிவர் சொன்னது ஞாபகம் வர வியந்து
போனான். பறையும் முரசும் அடித்து ஆனந்த பேரிகை
முழங்க நாக வாவியிலிருந்து தப்பி மேலெழும்பி வந்த தன் சிறப்பான மகனையும் மனையாட்டியையும்
பெருமிதத்தோடு கூட்டி வந்து இறைவனை வணங்கி வாழ்த்தித் துதித்துத் தன் அரண்மனையை அடைந்தான்.
நாகம் எந்தத் துன்பமும் செய்யாமல் தன் சிரசின் மீது இளவரசனை
ஏந்தி வந்தமையால் விளைந்த நன்மையைக் கருதி நாகத்தின் புதல்வன் என்னும் அர்த்தத்தில் மாமன்னன் சயந்திரன் தன் நற்புத்திரனுக்கு நாககுமாரன்
என்று பெயரிட்டான்.
மலைபோல் அகன்ற மார்பை உடைய நாககுமாரனுக்குத் தக்க பருவத்தில்
கல்வியையும் பல்வேறு கலைகளையும் கற்பிக்கச் செய்து கலைமகளின் அருள் கிட்டச் செய்தான்.
எல்லாக் கலைகளிலும் தேர்ந்து எல்லாச் செல்வங்களும் பெற்று நாகேந்திரனைப் போல சிறப்பாக
வாழ்ந்து வந்தான் நாககுமாரன். அதன் பின் அரசனின் பட்டத்து யானைக்கு மதம் பிடிக்க மதமடக்கி
அதன் மேல் சவாரி செய்தான் ஒரு முரட்டுக் குதிரையையும் அடக்கி ஆரோகணித்துச் சவாரி செய்தான்.
எனவே மன்னன் அவற்றை அவனுக்கே பரிசாக வழங்கினான்.
நாககுமாரனின் ஊழ்வினைப் பயனால் அவனுக்கு வியாளன், மாவியாளன்,
அசேத்தியர், அபேத்தியர் ஆகிய மன்னர்குலத்தில் பிறந்த இளவரசர்கள் அத்யந்தத் தோழரகள்
ஆகிறார்கள். அவன் பெரிய தாயும் சகோதரன் சீதரனும் அவனுக்குப் பல்வேறு படர்களையும் அனுப்பி
இடர் கொடுத்தார்கள்.
இவ்வாறு வந்த அனைத்துப் படர்களையும்
எதிர்த்து அவர்களை எல்லாம் தோற்றோடச் செய்கிறான் நாககுமாரன். பல்வேறு தேசங்களுக்குச்
சென்று கின்னரி, மனோகரி, திரிபுவனாரதி, கணைவிழி, குணவதி, சுயம்பிரபை, சுப்பிரபை, சுநந்தை,
கனகமாலை, நங்கை, பதுமை, நாகதத்தை, சந்திரபிரபை, அனுஜை, உருக்குமணி, மேனகி, சிரீமதி,
ஐநூறு பெண்கள் ( தரணிசுந்தரி), மதனமஞ்சிகை, இலக்கணை ஆகியோரை மணந்தாலும் இலக்கணை மேல்
தனித்த காதல் கொண்டு இலங்குகிறான் நாககுமாரன்.
அவள் மேல் மட்டும் தனக்கு
அதீத அன்பு தோன்றுவது ஏன் என ஒரு முனிவரிடம் கேட்கும்போது அவர் அவனது முற்பிறவிக் கதையைக்
கூறுகிறார். ”நாவலந்தீவில் ஐராவத நகரில் வீதசோகப்புரம் என்றொரு நகரை ஆண்ட மன்னன் விக்கிரம
ராசன். அவன் நாட்டில் வாழ்ந்த வணிகனின் பெயர் தனதத்தன், அவன் மனைவி பெயர் தனதத்தை,
இவர்களின் புத்திரனின் பெயர் நாகதத்தன். அதே நகரத்தில் வசித்து வந்த வசுதத்தன், வசுத்தத்தை
என்பாரின் புதல்வி நாகவசு.
நற்பண்புமிக்க நாகதத்தனுக்கும் நல்குணமிக்க நாகவசுவுக்கும் வேள்வித்தீ
சாட்சியாகத் திருமணம் நடந்தது. இருவரும் இன்பமாக இல்லறத்தில் ஈடுபட்டு அன்பு கொண்டு
இனிது வாழ்ந்து வரலானார்கள்.
நற்தவத்தின் மூலம் பண்புநலங்கள் கூடிய மாமுனிவர் முனிகுப்த ஆசாரியார்
என்பவர் அந்த நகரின் உய்யான வனத்தில் இருந்த ஜினாலயத்துக்கு இறைத்தரிசனம் செய்ய எழுந்தருளினார்.
நாகதத்தன் அவரின் வருகையைப் பற்றிக் கேள்வியுற்று உடனே சென்று
அவரின் அடி தொழுது வணங்கினான். இல்வாழ்க்கைக்குத் தேவையான நல் தருமங்களை உபதேசிக்க
வேண்டினான். அவர் கூறிய முறைப்படி நாகபஞ்சமியில் முழுநாளும் உண்ணாநோன்பு கைக்கொண்டு
விரதம் மேற்கொண்டான்.
போகங்களையும் புண்ணியங்களையும் உண்டாக்கும் பூரணமான சுக்லபட்ச
பஞ்சமி திதியில் முழு நாளும் உண்ணாநோன்பை நோற்கத் தொடங்கினான். பதிக்குத் தப்பாத பத்தினியும்
அவனோடு சேர்ந்து விரதம் தொடங்கினாள்.
முழு நாளும் எப்படியோ உண்ணாநோன்பை மேற்கொண்டு விட்டான் நாகதத்தன்.
ஆனால் நள்ளிரவில் அவனைப் பேய்ப் பசி பிய்த்துத் தின்றது. இடர்ப்படுத்திய அதை என்ன செய்து
நிறுத்துவதென்றே தெரியவில்லை அவனுக்கு.
பெற்றோர் வந்து விரதத்தைக் கைவிட்டு விட்டு உண்ணும்படிக் கெஞ்சத்
தொடங்கினார்கள். ஆனால் நாகதத்தனோ விடாப்பிடியாக விரதத்தை மேற்கொண்டு வடக்கு நோக்கி
அமர்ந்து தருமத்தோடு கூடிய நற்தியானம் செய்து தன்னுடைய உடலைவிட்டு சௌதருமகல்பத்தின்
தேவனாகத் தோன்றி விண்ணை எய்தினான்.
கயல் மீன் போன்ற கண்களை உடைய அவன் மனைவி நாகவசுவும் பதியைப்
பின்பற்றி அவ்வாறே கடும் விரதமும் தியானமும் இருந்து பதியோடு சேர்ந்து பத்தினியாகி
விண்ணை எய்தினாள். அங்கேயும் இருவரும் இணைபிரியாது ஒருவரை ஒருவர் மருவி இன்புற்று வாழ்ந்தார்கள்.
அந்த தேவலோகத்தில் ஐந்து பல்லமும் தேவவாழ்வை அனுபவித்து விட்டு
நீ இங்கு வந்து சயந்திரனுக்கு மகனாய்ப் பிறந்து கனகபுர அரசன் ஆனாய். உன்னுடன் தேவலோகம்
எய்திய நாகவசுவே இங்கே கங்காள நாட்டு விசயேந்திரனின் மகள் இலக்கணை ஆனாள்.
முற்பிறவியில் பத்தினிக்கு இலக்கணமாய்த் திகழந்தவள் இப்பிறவியிலும்
உன்னுடைய பத்தினியாகக் காத்து இருந்தாள். எனவே அவளை மணந்ததும் உன் உள்ளத்தில் அமைதியும்
இன்பமும் உண்டாயிற்று. காதல் பெருகிற்று. பிணைப்பு இறுகிற்று. முற்பிறப்பிலும் தேவவாழ்விலும்
அவள் உன்னைப் பின் தொடர்ந்து வந்து இப்பிறப்பிலும் உன்னையே மணாளனாகப் பெற்றதாலேயே உனக்கு
அவள் மேல் தீராத அன்பு உண்டாயிற்று. இதுவே காரணம்” என்றார்.
”ஐயனே!
என் ஐயம் தீர்ந்தது. முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் எம்மை இணைத்து வைத்தது அந்த நாகபஞ்சமி
விரதமே.” என மகிழ்ந்தான். அதன் பின் அவன் தன் மனைவியோடு பஞ்சமி நோன்பை நோற்கிறான்.
இவ்வாறு இவர்கள் இருவரும் நோன்பிலும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு நாள் நாககுமாரன் மாளிகைக்கு அவனது தந்தை சயந்திரனின் அமைச்சனான
நயந்தரன் வந்து சேர்ந்தான். வந்த அமைச்சன் நாககுமாரனைப் பணிந்து வணங்கி “ நாககுமாரா!
உன்னுடைய தந்தையாகிய சயந்திரன் உன்னை உடனே அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பி உள்ளார்.
எனவே நீ உடனே புறப்படு. “ என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
தன் தந்தைக்கு வாய்த்த நல் அமைச்சனின் நற்சொல் கேட்டு மார்பில்
அரிய ரத்தினங்களைக் கொண்ட ஆபரணத்தை அணிந்த நாககுமாரனும் தனது சிறந்த துணையாகிய இலக்கணையோடு,
தனது நால்வகைப் படைகள் சூழ, இமயமலை போன்ற தனது பட்டத்து யானை நீலகிரியின் மேல் ஏறி,
தனது சகாக்களும் அரசர்களுமான நண்பர்கள் பின் தொடர தேவர்களின் அரசனைப் போலப் பொலிவுடன்
சென்று தன் தந்தையின் கனகபுர நகரை அடைந்தான்.
தான் சென்ற தேசத்தில் எல்லாம் சிறப்பாக வேள்வி முறைப்படித் திருமணம்
செய்து கொண்ட வேல்போன்ற விழிகள் கொண்ட அழகு அணங்கையரை எல்லாம் கனகபுரத்துக்கு உடனே
வருக என்று நாககுமாரன் அழைப்பு விடுத்ததும் அவர்களும் உடனே புறப்பட்டு கனகபுரம் வந்து
சேர்ந்தார்கள்.
மைந்தன்
நாககுமாரன் வந்ததும் நாககுமாரனுக்கு நன்மணிமகுடஞ் சூட்டி அரசபாரத்தை அளித்தான். தாயும்
தந்தையும் துறவறம் மேற்கொண்டபின் நாககுமாரனுக்கு அரசபாரம் அதிகமாகியது. தன்னையே நம்பி
இருக்கும் நண்பர்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்துத் தன் நண்பனான
வியாளனுக்குப் பாதி ராஜ்ஜியத்தைப் பகிர்ந்து அளித்தான்.
மற்றும் தன்னையே புகலாக நாடி வந்து தன் இன்பத்திலும் துன்பத்திலும்
பங்கேற்றுப் பல்வேறு சமயங்களில் தனக்கு உதவிய நண்பர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்பத்
தேசங்களைப் பிரித்துக் கொடுத்தான்.
அவனுக்குப் பிடித்த மனைவியர் பலர் இருந்தும் அவன் தன் மனங்கவர்ந்த
இலக்கணையை மாதேவியாக்கித் தலைமைப்பட்டம் கொடுத்தான்.
இலக்கணையின் திருவயிற்றில் ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அந்த
இளவலின் பெயர் தேவகுமாரன் என்பதாகும். அரசர்கள் கற்கவேண்டிய ஆய கலைகள் அனைத்தும் அவன்
கற்றுத் தேர்ந்தான். விற்பயிற்சி, வாள் பயிற்சி, குதிரை ஏற்றம், யானை ஏற்றம், தேரில்
விரைந்து செல்லுதல் என அனைத்துக் கலைகளிலும் தேர்ந்து இனிமையாக வளர்ந்து எழில் மிக்க
கட்டிளங்காளையாகி நின்றான்.
உயர்ந்து நிற்கும் எழுமதில்கள் கொண்ட நன்னாட்டில் அழகாய்த் திகழும்
அரிய சிம்மாசனத்தில் நாககுமாரன் மகாமண்டலேசுவரனாய் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றி
ஒளிவீசும் பொன்முடி அணிந்த எட்டாயிரம் மன்னர்கள் புடைசூழ்ந்து அமர்ந்து அவைக்கு அணிசெய்து
கொண்டிருந்தார்கள். இருமருங்கும் அழகுப் பணிப்பெண்கள் எந்நேரமும் இருகவரி வீச எழிலாக
108 ஆண்டுகள் இனிது அரசோச்சினான்.
இவ்வாறு அரசர்களுக்கெல்லாம் அரசனாகிய நாககுமாரன் மகாமண்டலேசுவரனாய்
ஆட்சி செலுத்திவரும் காலத்தில் ஒருநாள் மேல்மாடத்தில் இலக்கணையுடன் அமர்ந்திருந்தான்.
அப்போது ஆகாயத்தில் உருண்டு திரண்டு வந்த மேகக் கூட்டம் ஒன்று நகர நகரவே உருமாற்றம்
பெற்றுப் பரந்து மாய்ந்து கலைந்து ஒன்றுமில்லாமல் போனதைப் பார்த்து சிந்தனை வயப்பட்டான்.
சிந்தனை
துளிர்த்து கொண்டே போக அரச வாழ்வும் அநித்தியம் என உணர்ந்து விரக்தி அடைந்தான். விரக்தி
வளர்ந்துகொண்டே போக வைராக்கியம் பெற்று இலக்கணையிடம் தோன்றிய தன் புத்திரனான தேவகுமாரனுக்கு
மணிமகுடஞ் சூட்டினான். அரசருக்குரிய பல்வேறு நுணுக்கங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்து
செயற்கரிய தவம் மேற்கொள்ள அவன் உறுதியுடன் தன் நாட்டை விட்டுக் கிளம்பினான்.
நாககுமாரன் கிளம்புகிறான் என்றவுடன் அவனுடைய சகாக்களும் படர்களுமான
தோழமை அரசர்களும் கிளம்பி உடன் வந்தார்கள். அமலமதி என்னும் கேவலஞானியிடம் துறவறம் பெற்று
நிர்வாணக் கோலம்கொண்டு தவம் புரியலானான்.
செந்தாமரை மலரை ஒத்த மாதேவி இலக்கணையும் அவளோடு சேர்ந்து இன்னும்
பல மாதேவிகளும் பதுமஸ்ரீ என்னும் பெண் துறவியை வணங்கித் துறவு நோற்றார்கள்.
இலக்கணையும் அவளுடன் துறவறம் சென்ற நங்கைமார்களும் மிகக் கடுமையாக
நோன்பு நோற்றுத் தவம் மேற்கொண்டார்கள். இவ்வாறு நாககுமாரனும் இலக்கணையும் தனித்தனியாகத்
துறவு எய்தித் துறவு வாழ்வு வாழ்ந்து வரும் நாளில் குற்றமற்ற சிறப்புடைய முனிவனாகிய
நாககுமாரனும் தன்னை பற்றிய கொடிய வினைகளை வென்று இனிய சித்தி பதமடைந்தான். இவ்வாறு
விரதம் நோற்று நல்வழியில் வாழ்ந்த நாககுமாரன் தான் எண்ணியதை எல்லாம் அடைந்து சித்திபதம்
பெற்றது சிறப்புத்தானே குழந்தைகளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)