புதன், 8 நவம்பர், 2023

சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்

 சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்


சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.

அதற்கு உத்தவர்” கிருஷ்ணா, நான் கேட்பது தப்பாயிருக்கலாம். ஆனால் என் மனதில் பல்லாண்டுகளாய் ஓடிய விஷயம் இது. இதற்குத் தெளிவுகாணவே உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் முக்காலமும் அறிந்தவர். சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்க்குக் கேடு நேரலாம் என்பதை உணர்ந்தும் அவர்களை ஏன் தடுக்கவில்லை?”

இதைக்கேட்டதும் புன்முறுவல் பூத்தார் கிருஷ்ணர். “ உத்தவரே உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் கௌரவர்களும்  பஞ்சபாண்டவர்களும் சூதாடும் போது  துரியோதனன் விவேகத்துடன் பகடைகளைத் தன் தாய் மாமா சகுனி உருட்டுவார் எனக் கூறிவிட்டுத் தள்ளி அமர்ந்து வேடிக்கைமட்டும் பார்த்தான். ஆனால் தர்மனும் மற்ற பாண்டவர்களும் சூதாடுவது எனக்குத் தெரிந்து விடுமோ என பயப்பட்டு அங்கே நான் வரக்கூடாது என நினைத்தனர். “

“ஒரு மன்னன் சூதாட்டத்துக்கு அழைத்தால் இன்னொரு மன்னன் ஒப்புக்கொண்டு ஆடவேண்டியது மரபு. இதனால் துரியோதனன் அழைத்தபோது தட்டமுடியாமல் பாண்டவர்கள் சூதாடினர். ஆனால் துரியோதனன் சகுனிமேல் வைத்த நம்பிக்கையைப் பாண்டவர்கள் என்மேல் வைக்கவில்லை. மேலும் நான் வரக் கூடாது எனப் ப்ரார்த்தித்தனர். அப்படி இருக்கும்போது நான் அங்கே எப்படிச் செல்வது? நான் பகடையை உருட்டினால் யார் வெல்வார்கள் என்று உலகே அறியுமே”

”’எல்லாம் சரி கிருஷ்ணரே. அவர்கள் தம் தேசம் படை பட்டாளம், ஏன் தம்மையும் தம்மை நம்பி வந்த பாஞ்சாலியையும் பிணை வைத்தனர். அப்போதும் வரவில்லை நீங்கள். ஆனால் பாஞ்சாலிக்கு மான பங்கம் நேரும்போது மட்டும் வந்து காப்பாற்றினீர்கள். ஆண்கள் நிறைந்த சபையில் தனியொரு பெண்ணாகத் தன் மானத்தைக் காக்க அவள் போராடினாள். அப்படிப் பலர் முன்னிலையில் அவள் அவமானப்பட்ட பிறகு வந்து காப்பாற்றி என்ன புண்ணியம்.?”


“உத்தவரே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். பாண்டவர்கள் நான் வரக்கூடாது என்றே நினைத்தனர். அதேபோல் பாஞ்சாலியும் முதலில் தன்னால் தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என எண்ணினாள். அது முடியாமல் போன பிறகே என்னை அழைத்தாள். அதனால்தான் அங்கே நான் வந்து காப்பாற்றினேன்”

“அப்படியென்றால் யாரும் அழைத்தால்தான் நீ அங்கே வருவாயா? உனக்கே கஷ்டப்படுபவர்களைக் காக்கவேண்டுமென்ற இச்சை இல்லையா? ” எனக் கேட்டார் உத்தவர்.

“ அவரவர் செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றபடியே அவரவர்களின் கர்மா அமைகிறது. அதன்படியே அனைத்தும் அவர்களுக்கு நிகழ்கிறது. நான் சாட்சிபூதமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் கிருஷ்ணர்.  

இதைக்கேட்டதும் உத்தவர், “ என்னது, சாட்சி பூதமா? அப்படியானால் நாங்கள் தவறு செய்யும்போது தடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கும் சாட்சி பூதமா?” என்று கேட்டார்.

”இல்லை உத்தவரே. நான் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறேன். நல்லது நடந்தாலும் அல்லது நடந்தாலும் நான் அதைப் பார்க்கும் சாட்சிபூதமாக இருக்கிறேன். நான் அங்கே மட்டுமல்ல எங்கும் இருக்கிறேன் என்பதை உணர்ந்தால் ஒருவன் தவறே இழைக்க மாட்டானே. அப்படிப் பாண்டவர்களும் எங்கும் நிறைந்திருக்கும் நான் அங்கேயும் நிறைந்திருப்பேன் என்பதை உணர்ந்திருந்தால் என்னைத் தடுத்திருக்க மாட்டார்கள். அந்த சூதாட்டம் நிகழ்ந்திருக்காது. அல்லது நான் பகடை உருட்டியிருந்தால் வென்றிருப்பார்கள். “ என்றார் கிருஷ்ணர்.

இதைக் கேட்டதும் மேனி சிலிர்த்துக் கண்கள் கசிந்தன உத்தவருக்கு. உண்மைதான் கிருஷ்ணரே நீங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தாலே போதும். எந்த இக்கட்டும் நிகழாது “ என்று அன்பில் கரைந்தார்.

இதன்மூலம் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தால் மறைமுகப் பாவங்கள் செய்யத் துணிய மாட்டோம். இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அல்லவை களைந்து நல்லவைகளையே செய்யத் தலைப்படுவோம் என்பது உண்மைதானே குழந்தைகளே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)