திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிர் ஒன்று உடல் இரண்டு. தினமலர் சிறுவர்மலர் - 14.

உயிர் ஒன்று உடல் இரண்டு.
அதென்ன உயிர் ஒன்று உடல் இரண்டு. அப்படி யாரும் இருக்க முடியுமா. இருந்தாலும் எப்படி வாழ முடியும். எப்படி இரு உடலில் ஒரு உயிர் இருக்கும், கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. அது எப்படி எனச் சொல்கிறேன் கேளுங்கள்.
மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை ஈசன் உண்டு கண்டத்தில் நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.
அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், லெக்ஷ்மி, சந்திரன், ஐராவதம், உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை வெளிப்பட்டன. இதில் அமிர்தம் கொண்ட கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி வெளிவந்தார். இந்த அமிர்தம் சாகாவரம் கொடுக்கக் கூடியது. இதை வேண்டித்தானே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதனால் அமிர்தம் கிடைத்தவுடன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அதை அடையப் போட்டி ஏற்பட்டது. ஒரே களேபரம். பார்த்தார் விஷ்ணு . உடனே மோகினி அவதாரம் எடுத்து தன்வந்திரியின் கையில் இருந்த அமிர்த கலசத்தைத் தன் கையில் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறினார்.

மிகவும் அழகாயிருந்த மோகினியின் சொல்லை தேவர்களும் அசுரர்களும் கேட்டு இரு வரிசையில் அமர்ந்தார்கள். ஏற்கனவே உடல் வலிமையோடு அட்டகாசம் செய்து வரும் அசுரர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தால் சாகாவரம் பெற்று அவர்கள் இன்னும் துஷ்டத்தனம் செய்வார்கள் என்று நினைத்த மோகினி முதலில் தேவர்களுக்கும் பின்னர் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பகிர்ந்தளிப்பதாக வாக்குக் கொடுத்தாள்.
இதைக்கேட்டு இருவரிசையில் அசுரர்களும் தேவர்களும் அமர்ந்தார்கள். முதலில் தேவர்களுக்கு வழங்கியபடி வந்தாள் மோகினி. ஆனால் நேரம் ஆக ஆக அது தீரும் நிலை வந்து கொண்டிருக்க அசுரர்கள் பக்கம் அந்தக்கலசம் வருமா என்பதே சந்தேகமாயிருந்தது.
இதை சுவர்பானு என்ற அசுரன் பார்த்துக்  கொண்டிருந்தான். அவன் விப்ரசித்தி என்ற முனிவருக்கும் சிம்ஹிகா என்ற அசுரகுலப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன். தனக்கு அமிர்தம் கிடைக்காதோ என்று சந்தேகப்பட்ட அவன் தேவர்போல உருமாற்றம் அடைந்து தேவர்கள் வரிசையில் நடுவில் சென்று அமர்ந்தான்.
தேவர்களுக்கு வரிசையாக அமிர்தம் வழங்கி வந்த மோகினி சுவர்பானுவையும் தேவர்களுள் ஒருவன் என நினைத்து அமிர்தத்தை வழங்கி விட்டாள். ஆனால் அவன் யாரெனக் கண்டுபிடித்த சூரியனும் சந்திரனும் மோகினியை எச்சரிக்கும் முன்பு சுவர்பானு அமிர்தத்தை அருந்தி விட்டான்.
பதட்டமடைந்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் கண் சாடை காட்டி அவன் அசுரன் என்று எச்சரித்தனர். கோபமடைந்த மோகினி உடனே தன் கையில் இருந்த அகப்பையால் சுவர்பானு மண்டையில் ஓங்கி அடித்தாள்.
“ஐயோ அம்மா.”. என்று வீழ்ந்தான் சுவர்பானு. சும்மா விழவில்லை. தலை தனியாகவும் உடல் தனியாகவும் விழுந்தான். அமிர்தம் உண்டதால் அவனுக்கு மரணம் நிகழவில்லை , உடல்தான் இரு துண்டாகி விட்டது.
என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே அங்கே மோகினி விஷ்ணுவாக மாற அவரிடம் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் வழங்கும்படிக் கேட்டான். மனமிரங்கிய விஷ்ணு ஐந்து தலை நாகத்தை இரண்டாக்கி அப்பாம்பின் உடலை அவனது தலையோடு பொருத்தினார். அவன் ராகு எனப் பெயர் பெற்றான். அவனது துண்டான உடலோடு ஐந்து தலை நாகத்தின் தலையைப் பொருத்தினார். அவன் கேது எனப் பெயர் பெற்றான்.
இருவருக்கும் உடல்தான் இரு கூறாகிப் பிரிந்துவிட்டதே தவிர உயிர் சுவர்பானுவின் உயிர்தான் இரு உடம்பிலும் உறைந்திருந்தது. அமிர்தமுண்டதால் சாகாவரம் பெற்றார்கள் ராகுவும் கேதுவும். ஆச்சர்யமாயிருக்கிறதுதானே குழந்தைகளே.
சுவர்பானு இரண்டு கூறாகி ராகு கேதுவானதும் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியன் சந்திரன் மேல் கோபம் பொங்கி வந்தது. உயிர்களைப் படைக்கும் பிரம்மாவிடம் ஓடினார்கள். தங்கள் அவல நிலையைச் சொல்லி காட்டிக்கொடுத்த சூரியனையும் சந்திரனையும் பழிவாங்கத் துடித்தார்கள்.
பிரம்மா “ நீங்கள் நவக்ரகங்களில் இடம்பெறுவீர்கள். எல்லாக் கிரகங்களும் வலமாகச் சுற்றும்போது நீங்கள் இடது புறமாகச் சுற்றுவீர்கள் உங்களை நிழல் கிரகம் என்று அழைப்பார்கள். சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியை அடக்கி கிரகணம் ஏற்படுத்தும் சக்தி ஏற்படும். “ என்ற வரங்களை வழங்கினார்.
விஷ்ணுவும் மனம் இளகி ” அசுரர்களாகிய உங்களுக்கு இந்த பலம் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. உங்களுக்கு உடனே அந்த வரத்தை எல்லாம் கொடுத்தால் இன்னும் அசுரகுணம் மேலோங்கும். எனவே கேது ரிக், யஜுர், சாமம் ஆகிய வேதங்களைக் கற்று உணரட்டும். ராகு அதர்வண வேதத்தைக் கற்றுணரட்டும். எல்லா அசுரர்களும் அழியும்போது ராகு ஞானகாரனாக ஆவான். கேது மோட்சகாரனாக ஆவான் . பூமியில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் நீங்கள் ஞானமும் மோட்சமும் வழங்கும் தகுதி ஏற்படும். “ என்று வரம் கொடுத்தார்.
ராகுவும் கேதுவும் ஓருயிர் ஈருடலாக இருந்தாலும் நவக்ரகத்தில் எதிர் எதிர் திசையில் அமர்ந்து பின்பிறமாகச் சுற்றி வருகிறார்கள். எல்லாருக்கும் ஞானமும் மோட்சமும் வழங்கி வருகிறார்கள். ஓருடலாக இருந்த அசுரன் சுவர்பானு, ராகு கேது என்னும் ஈருடல் ஓருயிராக இருந்து உலக மக்களை நன்னெறிப்படுத்தி வருகிறார்கள். இதெல்லாம் வியத்தகு நிகழ்வுதானே குழந்தைகளே.


டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 19. 4. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2:- அரும்புகள் கடிதத்தில் சிபி மன்னரின் கதையைப் பாராட்டிய வாசகர் வாழைப்பந்தல் ஏ. கருணாகரன் அவர்களுக்கு நன்றி. 




டிஸ்கி 3:- அரும்புகள் கடிதத்தில் அர்ஜுனன் கிருஷ்ணன் பிங்கலை கதையைப் பாராட்டிய வாசகி ஸ்ரீரங்கம் எஸ். கவிதா அவர்களுக்கு நன்றி. 





டிஸ்கி 4:- அரும்புகள் கடிதத்தில் புராண இதிகாச கதைகளைப் பாராட்டிய வாசகர் நாலாநல்லூர் ஏ. பிரசன்னா அவர்களுக்கு நன்றி. 





2 கருத்துகள்:

  1. கற்பித்தல் அணுகுமுறையில் சிறப்பாக அமைந்திருக்கிறது
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)