வியாழன், 30 அக்டோபர், 2014

அக்னியின் ரேணுகை:-

அக்னியின் ரேணுகை:-
****************************

பொறாமை சுமந்தவனின்
புதல்வனைப் பெற்றவள்
துண்டான ரேணுகை.

கோடரி எடுத்துத்
தீட்டிய மரம்
தாயின் தலை.

சாணை பார்த்த
பரசுராமன்
திரும்ப ஒட்ட வைக்கிறான்.

நழுவி நழுவி
விழும் தலை
பொருந்த மறுக்கிறது.

விரிந்த இமைகளொட்டி
உறைந்த கண்ணீரோடு
ஏமாற்றப் பார்வை.



******************************

மணலில் வனைகிறாள்
யுகம் தோறும் பானையை
தலையிழந்த அன்புக்காரியாய்.

அவள் சேமித்த நீரை
தினம் குடித்து உடைக்கிறார்கள்
கற்பை சோதிக்க.

நிழலைப் பிடித்து
நிஜத்தை உதிர்க்கிறாள்
காந்தர்வ மணலாய்.

எப்போது தவறுவாள்
எனக் காத்துக் கிடக்கிறது
ஜடாமுடிச் சமூகம்.

உரோமம்  பெருக்கியவர்கள்
தீர்மானிக்கிறார்கள்
அவளின் இருப்பையும் இறப்பையும்.

குளிர்ந்து கிடக்கிறாள்
அக்னியின் ரேணுகை
மணலைப் பூசி.

டிஸ்கி :- அவள் பக்கத்தில் என் கவிதை..


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)