ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தங்க மகளும் , அந்த வீடும்.

தங்க மகள்.:-


பொன் மகளைப் பூ நிலவைப்
பூமியிலே தந்தோம்
பூத்து விதை காய்த்துக் க(ன்)னியாய்
கனிந்து அவள் நின்றாள்.
கல்வியிலும் கணினியிலும்
சகலகலா வல்லி
கலைகளிலும் கனிவினிலும்
நிகரற்ற தேவி.
தன்னைக்காக்கத் தனக்குத்தானே
எல்லையிட்ட சீதை.
எந்த எல்லை தன்னின் எல்லை
என்றறிந்த சுயம்பு 
எல்லையற்ற அன்பைக் கொண்ட
எல்லைக்காளி அவளே
இருப்பதெல்லாம் மறுக்காத
காமதேனு அவளே.

என்றும் மகிழ்வையே பூத்துச் சொரியும்
கற்பகத்தருவும் அவளே.
உலகம் உய்ய நலமே பெருக
உபகாரத் தெய்வமாக
ஊர் மெச்ச பேரு மெச்ச
உயர்ந்தவளே வாழ்க
தீந்தமிழாய் இனிப்பவளே
தீப ஒளியாய் ஒளிர்க.


அந்த வீடு :-


அந்த வீட்டில்
ஒரு வரவேற்பறை ஒரு படுக்கையறை
ஒரு சமையலறை ஒரு கழிவறை இருக்கிறது.


நலியாது நல்லதுபோல்
அல்லது சொல்லிப்படுத்த
குடித்துவிட்டுக் கொடுமையடிக்க
போகத்துக்கும் புழக்கத்துக்குமான
அவ்வீட்டின் சுவர்களும் தரைகளும்
சுரணையுடன் இருப்பதில்லை.

உயிருள்ளவை உயிரற்றவை எல்லாம்
ஆதிக்க மனிதர்களின் கேலிச்சித்திரங்கள்.


தனக்கான உருவத்தை வெட்டவும்
சிதைக்கவும் வடிக்கவும் வர்ணம் கொடுக்கவும்
அம்மனிதர்கள் முனையும்போது
அங்கே வாழ்ந்திருந்த பல்லிகள் பூரான்கள்
கரப்புகள்போல தன்னை ஒளித்துக்கொள்வதுமில்லை
இடம்பெயர்ந்து செல்வதுமில்லை.

கழிவுகளைக்கொட்டிவிட்டு
சுத்தப்படுத்துவதாய் அமிலம் ஊற்றுபவர்களைக்
கொண்டிருக்கும் அவ்வீடு.
தங்கள் நோக்கத்திற்கு எல்லைவடித்து
தன்னைக் கட்டிக்காப்பதாய்
அலுப்பவர்களின் வாசனையைக்
காலகாலமாய் சுமந்துகொண்டிருக்கிறது.

டிஸ்கி:- தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)