சனி, 22 மார்ச், 2014

சாட்டர்டே போஸ்ட். மணிமேகலையும் தன்னம்பிக்கைத் தாத்தாவும்.

என் அன்புத் தங்கைகளில் ஒருவர் மணிமேகலை.  பட்டிமன்ற நடுவராக அவரின் உரை பற்றி , அவரின் தலைப் பொங்கல் அனுபவங்கள் பற்றி எல்லாம் பத்ரிக்கைகளிலும் என் வலைத்தளத்திலும் பகிர்ந்து இருக்கிறேன்.

அவரிடம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டேன். அவரின் பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.

//// உங்க அலுவலகம் சம்பந்தமா மறக்க முடியாத நிகழ்வு எது.. அது உங்க வாழ்க்கையை மாத்துனுச்சா..///


 தினந்தோறும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது வாழ்க்கையை வாழ்வதே கடினமாக நம்மில் பலருக்குத் தோன்றும் . ஆனால் இறைவன் நமக்கு அளித்த வாழ்க்கையை நல்லவிதமாக அனுபவித்து சவால்களைச் சமாளித்து வாழ நம்மில் எத்தனை பேர் தயாராக உள்ளோம் .. 

இதோ எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கேளுங்களேன் 99 வயதான அனந்தராமன் தாத்தா எனது அலுவலகத்துக்கு வந்திருந்தார் ..இந்த வயதிலும் யார் துணையும் இன்றி தனியே வாழ்ந்து வருகிறார் ... 

கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பணிபுரிந்து அதன் பின்னர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் தனது உழைப்பின் சேமிப்பில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் . தனக்கான சமையல் கூட அவரே செய்துகொள்கிறார் . தந்து வரவு செலவுகளை அவரே செய்து கொள்கிறார் . 

அவரது வைப்புதொகையை மீண்டும் கால நீட்டிப்பு செய்ய வைப்புதொகைக்கான காலம் எவ்வளவு எனக் கேட்டபோது 2 ஆண்டுகள் எனச் சொல்லி வியக்கவைத்தார். 

அவரது பிறந்த தேதி 19.01.1915. என்பதைப்பார்த்த நான் அடடா போன மாதம் உங்கள் பிறந்த நாளன்று தெரிந்திருந்தால் கொண்டாடி இருக்கலாமே என்று அவரிடம் சொன்னேன் . 

அதற்கு அவர் சொன்னார் அதனால் என்ன அடுத்த வருடம் நானே இங்கு வருகிறேன் இங்கே உங்கள் அலுவலகத்திலேயே கொண்டாடுவோம்  என்று !!!..... 

அவரைப்பார்த்த பின்னர் இனி நாமும் வாழ்க்கை முழுதும் இறைவன் நமக்களித்த கொடை. அதை ஒவ்வொருநிமிடமும் பயனுள்ளதாகவும் பிறருக்கு எதாவது உதவும் குணமோடும் வாழவேண்டும் எனத் தோன்றியது 

. என்ன ஒரு நம்பிக்கை ....வாழும் வாழ்க்கை மீது சலிப்பில்லை என்றால் அந்த தாத்தா போல நூறாண்டு நாமும் வாழலாமே ...

--- உண்மைதான் மணி. மிக அருமையான தன்னம்பிக்கை மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு. எங்களது வணக்கங்களும் வாழ்த்துக்களும் கூட அனந்தராமன் தாத்தா அவர்களுக்கு.


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)