எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜூன், 2022

நாதத்தால் வென்றிட்ட சீர்காழி கோவிந்தராஜன்

 நாதத்தால் வென்றிட்ட சீர்காழி கோவிந்தராஜன்


மணியனின் தொடர்கதை ஒன்றில் ”என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. நாம் இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா” என்று ஹீரோ ஹீரோயினுக்காக ரேடியோப் பாடல் ஒன்றைப் போடுவார். அதன்பின் சிலோன் ரேடியோவில் கேட்ட ஸ்ட்ராங்கான வாய்ஸ் திரு. சீர்காழி கோவிந்தராஜனுடையது. டேப்ரெக்கார்டரில் சங்கே முழங்கு என்று கேட்ட கம்பீரக் குரல்.

எங்களுக்கெல்லாம் மார்கழி என்றாலே சீர்காழிதான். அரைப்பரிட்சை நடக்கும் சமயம் மார்கழி திருப்பள்ளி எழுச்சி ஆரம்பித்து விடும். அப்போது கோயில்களில் லௌட் ஸ்பீக்கர்களில் திருவிளையாடலும், சீர்காழியில் தெய்வீகக் குரலும் கைகோர்த்து நமை எழுப்பும். குளிரும் பனியும் சூழ்ந்து நின்றாலும் விடியற்காலையில் குளித்துக் கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்தபின், சீர்காழியின் முழங்கும் குரலோடு சுடச் சுட வெண்பொங்கல் சாப்பிடுவது இதம்.

“தமிழிசையைப் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தவர்’ எனத் திரு எம். ஏ. எம் அவர்களால் பாராட்டப்பட்டவர். சென்ற நூற்றாண்டில் தமிழிசைச் சங்கங்கள் தோன்றி தமிழை வளர்த்ததுபோல் சீர்காழி போன்றோர்கள் திரையிலும் கூட இனிய, இலக்கண சுத்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடி வெகுஜனத்தின் மனம் கவர்ந்தனர்.

சினிமாவில் பாடல்களைப் பார்க்கும்போது அதை இயற்றியவர்கள் இசையமைத்தவர்கள், பாடியவர்கள், இயக்குநர் யாரும் நம்முன் தோன்றமாட்டார்கள், அதில் நடித்த நடிகர் நடியரைப் பார்த்து மயங்கி அது எல்லாம் அவர்கள் பாடிய பாடல்கள் என நினைப்போம். ஆனால் ஒருசில  குரல்கள் நம்மைப் பாடியவர்களின்பால் ஈர்க்கும். அதில் பாலமுரளி கிருஷ்ணா, உன்னி கிருஷ்ணன் இவர்களுக்கெல்லாம் மென்குரல். சந்தனக் குரலுக்குச் சொந்தக்காரர் பி பி ஸ்ரீனிவாஸ் என்றால் வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி அவர்கள்.

திருஞானசம்பந்தரைத் தந்த அதே சீர்காழிதான் கோவிந்தராஜன் அவர்களையும் தந்திருக்கிறது. ஜனவரி 19 1933 – மார்ச் 24 1988 வரை வாழ்ந்த கர்நாடக இசைப்பாடகர். இசைத்துறையில் பாபநாசம் சிவன், செம்மங்குடி சீனிவாசய்யர், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோருக்கு ஈடாகப் போற்றப்பட்டவர்.

பெற்றோர் சிவசிதம்பரம், அவையாம்பாள். தன் தந்தையின் பெயரையே தனது மைந்தனுக்கும் வைத்துள்ளார். திரைப்படப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள், சோகப் பாடல்கள், காதல் பாடல்கள் தேசபக்திப் பாடல்கள் என 8000 பாடல்களுக்கும் மேல் பாடி உள்ளார்.  

ஆரம்பத்தில் தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, எல் ஜி கிட்டப்பா போன்றோர் பாடிய பாடல்களை விரும்பிப் பாடி இருக்கிறார். 16 வயதிலேயே சென்னைத் தமிழிசைச் சங்கத்தில் இருந்து ”இசைமணி” விருது வாங்கினார். அடுத்த வருடமே கர்நாடக இசைக்கல்லூரியின் ”சங்கீத வித்வான்” என்ற பட்டம்  பெற்றுள்ளார். சங்கீத நாடக அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது. பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

19 வயதில் திரையில் பாட ஆரம்பித்தார். தொடர்ந்து 36 வருடங்கள் இசைமழை. அன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல் நாடக நடிகர்கள் பாடி நடிப்பதைப் போலச் சினிமாவிலும் பாடத்தெரிந்தவர்களே அநேகம் நடிகர் நடிகைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேபி சுந்தராம்பாள், பானுமதி, கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், சின்னப்பா போல் இவருக்கும் ஓங்குதாங்கான குரல்.

முதலில் நாடகங்களிலும் நடித்துள்ளார். பல்வேறு நாடகக் குழுக்களுடன் சேர்ந்தும் பங்களித்துள்ளார். சினிமா உலகம் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த பக்கிரிசாமி செட்டியார் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படங்களுக்குப் பாடும் வாய்ப்பை சீர்காழிக்கு வாங்கித் தந்தாராம். அதன் பின் சீர்காழி திரைப்பட நடிகரானார்.

1967 இல் இவர் நடித்து வெளிவந்த நக்கீரர்தான் முதல் படம். நடராஜர் தரிசனம் என்ற படத்தில் நந்தனாராக நடித்துள்ளாராம். அது வெளியாகவில்லை. ஆனால் கந்தன் கருணையில் நக்கீரராக நடித்துள்ளார். இருந்தும் அகத்தியரே நம்மை ஆட்கொள்கிறார். ராவணனுடன் போட்டிபோடும் ”வென்றிடுவேன்” பாடல் இவருக்கான முத்திரையை அழுத்தமாகப் பதித்தது. மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜா தேசிங்கு, கர்ணன், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் ஆகியன சிறந்த படங்கள்.

ஆதி பராசக்தி, சம்பூர்ண ராமாயணம், கந்தன் கருணை, திருவருட் செல்வர், அகத்தியர், தெய்வம், திருவருள், தசாவதாரம், தெய்வத் திருமணங்கள், தாய் மூகாம்பிகை, நம்பினோர் கெடுவதில்லை, மீனாக்ஷி திருவிளையாடல், திருமலைத் தென்குமரி ஆகிய பக்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் பாடினால் கர்நாடக இசைப்பாடகர்கள் குரல் வளம் கெட்டுவிடும் என்பார்கள் ஆனால் பக்தி & சினிமா பாடல்களில் கோலோச்சியவர். இவர் ஒரு இசை விருந்து. சிம்மக் குரலோன் என்று புகழப்பட்டவர். காலத்தால் அழியாத குரல் இவருடையது. ஆயிரம் கரங்கள் நீட்டி & உள்ளத்தில் நல்ல உள்ளம் 40 வருடங்களாக இசை நிகழ்ச்சிகளில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள். மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கீதோபதேசத்தின் சாரமாம் ! கண்ணனே பாடும் இப்பாடலை இயற்றியவர் வேறு யார், நம்ம கண்ணதாசன் அவர்களேதான்.


சோகத்தில் வாடும்போது நம்மோடு சேர்ந்து அழும், சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும், தத்துவத்தில் நம்மைப் புடம் போடும், பக்தியில் நம்மைத் தோய்த்தெடுக்கும் குரல் சீர்காழியினுடையது.

சிவாஜி எம்ஜியார் இருவருக்கும் பொருந்தும் குரல்வளம், நாகேஷுக்கும் முத்துராமனுக்கும் இன்னும் பலருக்கும் கூடப் பொருந்திப் போனது அதிசயம். காதலிக்க நேரமில்லை, கண்களும் கவி பாடுதே, இன்பம் எங்கே, அமுதும் தேனும் எதற்கு, ஆசைக்கிளியே கோபமா, நிலவோடு வான்முகில், கண்ணான கண்மணிக்கு அவசரமா என்ற காதல் பாடல்கள்.

காசிக்குப் போகும் சன்யாசி, மாட்டுக்கார வேலா, கல்லிலே கலைவண்ணம் கண்டான், நல்ல மனைவி நல்ல பிள்ளை, மாமியாளுக்கு ஒரு சேதி எனப் பல்வேறு பாடுபொருட்களை மையமாகக் கொண்ட பாடல்கள்.

தேவன் கோவில் மணியோசை, ஓடம் நதியினிலே, ஆடி அடங்கும் வாழ்க்கையடா, பட்டணந்தான் போகலாமடி, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, சமரசம் உலாவுமிடமே, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்று தத்துவப் பாடல்களால் சிந்திக்க வைத்தவர்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம், நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி & ஓடி விளையாடு பாப்பா & பாருக்குள்ளே நல்ல நாடு , வந்தே மாதரம் என்போம். –கப்பலோட்டிய தமிழனில் பாரதியின் மனசாட்சியைப் போன்று உரத்து ஒலிக்கும் தேசபக்திப் பாடல்கள். பாடல்களில் அவரே அகத்தியர் என்னும் குறுமுனி, அவரே வள்ளல் கர்ணன், அவரே எழுச்சிமிக்க பாரதி.

தெய்வத்தைத் துணைக்கோளும் போதெல்லாம் இவர் பாடல்கள் எதிர்வந்திருக்கின்றன. சிறுவயதில் விநாயகர் அகவலான “கீதக் களபச் செந்தாமரைப்பூம்” எளிதாக  மனப்பாடம் ஆனதே இதே தொனியாலும் இசையாலும்தான். கணபதியே வருவாய் அருள்வாய், காக்கும் கடவுள் கணேசனை நினை, பிள்ளையார் சுழி போட்டு செயலெதுவும் தொடங்கு, பழநி மலை முருகா பழநித் திருக்குமரா பழம் ஒன்று என்றனுக்குத் தா, ஆத்தாடி மாரியம்மா, சின்னஞ்சிறு பெண்போலே, காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி, அறுபடை வீடு கொண்ட திருமுருகா, அபிராமி அந்தாதி, கண்ணன் வந்தான் (நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு) , இறைவன் படைத்த, நீயல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா, மதுரை அரசாளும் மீனாட்சி, திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம், ஆண்டவன் ஒருவன், எங்கிருந்தோ வந்தான் இவற்றைஎல்லாம் மறக்க முடியுமா?

”தஞ்சைப் பெரியகோவில் பல்லாண்டு புகழ் வாழ்கவே”  கோயில்கள் கோபுரங்கள் என்றால் இறைவடிவமாகவே கருதும் நமக்கு இவை எல்லாம் பெருமிதம் ஏற்படுத்தும் பாடல்கள். மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள். சீர்காழி அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களுமே அமிர்தம்தான்.

இவருடைய குழந்தைகள் சிவசிதம்பரம், ஞானவல்லி ஆகியோரை மருத்துவர் ஆக்கியுள்ளார் சீர்காழி. சிவசிதம்பரம் சிறந்த கர்நாடக இசைப் பாடகராவும், வெற்றி பெற்ற பின்னணிப் பாடகராகவும் தன்னை வெளிப்படுத்தியும் தன் மகன் இசைத்துறைக்கு வருவதை சீர்காழி அவ்வளவாக ஆதரிக்கவில்லை என்பது ஆச்சர்யமே.

மரபு வழுவாமல் எளிமையாகவும் இனிமையாகவும் கேட்பவருக்குப் புரியும்படியும் மகக்ளின் மனம் கவரும் வகையில் சென்று சேர்க்கும் வித்தை தெரிந்தால் வெற்றி கிடைக்கும் என மகனுக்கு அறிவுறுத்துவாராம். குன்றக்குடி ஆதீனத்தின் இசையரசாக இருந்தவர் சீர்காழி கோவிந்தராஜன்.

ஆதீனங்களின் குருபூஜை விழாக்கள் மட்டுமல்ல, அயல்நாடுகளின் திருக்கோயில்களிலும் ஓங்கி ஒலித்த குரல் இவருடையது.  உள்ளூர்களில் திருவிழாக்களிலோ, திருமணங்களிலோ இவரது வெள்ளை அம்பாசிடரைக் கண்டதுமே மக்கள் கூட்டம் தொடர்ந்து மேடை இருக்கும் திசை நோக்கிப் படையெடுக்கக் கச்சேரி களை கட்டி விடுமாம். பக்திப் பாடலிலும், திரையிசைப் பாடலிலும் டி,எம்.எஸ், எல்,ஆர்.ஈஸ்வரி போன்றோரும் மனதை ஈர்த்திருக்கிறார்கள். இருந்தும் இவர் இன்னும் ஸ்பெஷல்.

யோகன் பாரிஸ் என்ற ரசிகர் யாழ்ப்பாணத்துக்கு சீர்காழி வந்திருந்து பாடியதை நினைவுகூரும் போது “ கச்சேரியையே கல்யாணவிருந்து போலப் படைப்பார் சீர்காழி. சகலதும் இருக்கும். மோர்சிங், கஞ்சிரா என்று இன்று அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் வாத்தியங்கள் புடைசூழ அவர் ரசிகர்களைக் கட்டிப் போடுவதே தனிக்கலை” எனப் புகழ்ந்திருக்கிறார்.

தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் மாரடைப்பால் காலமான சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு அரசாங்கம் 2020 இல் இசைமணி ஃபவுண்டேஷன் சார்பாக சீர்காழியின் புகைப்படத்தைத் தாங்கிய சிறப்பு அஞ்சல் அட்டையை வெளியிட்டுக் கௌரவப்படுத்தி உள்ளது. சீர்காழியின் மைந்தர் சிவசிதம்பரம் எழுதிய ”சீர்காழியின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது சிறப்பு.

” நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம். அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கே ஆயுள் முழுவதும் சுபதினம்” என்று வாழ்த்தியவர். ”வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்” என நாகேஷுக்குக் குரல் கொடுத்தும் ஊக்கப்படுத்தியவர். ஏன் நமக்கும்தான் !.

டிஸ்கி :- 



1.நகரத்தார் செய்திகளில் எனது நூல் வெளியீடு பற்றி வெளியிட்டுள்ளமைக்கு நன்றிகள்.



2. மணிமடல்களில் தேவயானியைப் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பாராட்டிய திருச்சி வாசகி கலைச்செல்வி ராமநாதன் அவர்களுக்கு நன்றி. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...