எனது பதிநான்கு நூல்கள்

புதன், 10 மார்ச், 2021

பிள்ளையார் நோன்புப் பலகாரங்கள்.

பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதுபற்றி இரண்டு மூன்று செவிவழிக் கதைகள் உண்டு. மார்கழி மாதம் சஷ்டியும் சதயமும் கூடும் நாள் பிள்ளையார் நோன்பு. இது பெரிய கார்த்திகையில் இருந்து 21 ஆம் நாள் வரும்.

வணிக நிமித்தம் கடல் கடந்து சென்ற சாத்து குழுவினர்/நானா தேசிகர் ஒருமுறை புயலில்சிக்கி இருபத்தி ஒரு நாட்கள் கழித்துச் சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். அந்த இருபத்தி ஒரு நாட்களும் தேசிகநாதரை வழிபட்டனர்.அப்போது   தம்மிடம் இருந்த கோடித்துணியில் ஒவ்வொரு  இழையாக எடுத்து வைத்து விநாயகரை வணங்கி வந்தனர். தம்மைக் காத்த  விநாயகரை நினைத்துத் அந்த இருபத்தி ஒரு இழைகளையும் சேர்த்து மாவில் விளக்குப் போல் செய்து விநாயகருக்கு தீபம் காட்டி வழிபட்டனர். அப்போது ஏழுவிதப் பொரிகள் பொறித்து, பதினாறு வகைப் பலகாரம் செய்து ஆவாரம்பூ வைத்து வழிபாடு செய்தனர். 

அதே போல் இப்போது கிடைப்பவற்றைக் கொண்டு வழிபாடு செய்து முன்னோரையும் நம்மையும் காத்த விநாயகரை வழிபாடு செய்வதுண்டு. இதற்குப் பிள்ளையார் நோன்பு என்று பெயர். 21 நாட்கள் விரதமிருந்து நோன்பு நோற்று அதன்பின் கொண்டாடுவதால் இதற்குப் பிள்ளையார் நோன்பு என்று பெயர். 
பிள்ளையார் நோன்பின் போது கருப்பட்டிப் பணியாரம், வெள்ளைப் பணியாரம், வடை , திரட்டுப் பால், இட்லி , வரமிளகாய்த்துவையல், சாம்பார் ஆகியன வைத்து மாக்கோலமிட்டு நெல், சோளம், எள், அவல், கம்பு ஆகியவற்றைப் பொரித்து வைத்து விநாயகர் அகவல், போற்றி அனைத்தும் பாடித் துதித்து வழிபடுவதுண்டு. 
இப்போதெல்லாம் மெய்யம்மை ஸ்டோர் என்ற கடையிலேயே (காரைக்குடியில் ) 150 /- ரூபாய்க்குக் கருப்பட்டிப் பணியார மாவு, மேலே இருக்கும் பொரிவகைகள் ( அதோடு எள்ளு, கடலை, பொட்டுக்கடலை உருண்டைகள் ) , கோலக்கூட்டு, இழை அனைத்தும் கிடைக்கின்றன. 
முன்பெல்லாம் முதல்நாளே பச்சரிசி ஊறவைத்து இடித்துச் சலித்து வெல்லம் + கருப்பட்டிப் பாகு ஊற்றி மாவு சேர்ப்பார்கள். பிள்ளையார் நோன்பு அன்று காலையிலேயே திரட்டுப் பால் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள். 
மாலையில்வடை பணியாரத்துக்கு ஊறவைத்து ஆட்டிச் சுடுவார்கள். முதலில் எண்ணெய்ச் சட்டி வைத்ததும் சிறிது நெய் சேர்த்து கருப்பட்டிப் பணியாரத்தைச் சுட்டு அதன் பின் வெள்ளைப் பணியாரம், அதன் பின் வடை சுடுவார்கள்.
கிரைண்டர் போடும்போது காஃபி வேலைகளொடு நடுவில் சாம்பார், துவையல் தயாரிப்பு நடக்கும். காலையிலேயே நடுவீட்டுக் கோலத்தைப் போட்டு வைப்போம். அதில் மூன்று முக்காலிகள் போட்டு ( முக்காலிக்கோலம் ) ஒன்றில் ஆவாரம் பூ, இன்னொன்றில் விளக்கு, இன்னொன்றில் முக்காலியில் விநாயகரை ஆவாகனம் செய்வோம். பூ வைத்து நெய் விளக்கேற்றி தீப தூபம் காட்டுவோம்.  கருப்பட்டிப் பணியார மாவில் இழையை வைத்து நெய்யால் பிள்ளையார் போல கூம்பாகப் பிடித்து நெய் விளக்கில் இதை ஏற்றி விநாயகருக்குத் தீபம் காட்டுவோம். முதலில் வீட்டில் பெரியவர்கள் தலைப்பாகை கட்டித் தடுக்கில் அமர்ந்து விநாயகர் அகவல், பாடல், போற்றி அனைத்தும் படிக்க அதைத் திருப்பிச் சொல்வோம். அதன்பின் இழையை எடுத்து நெய்விளக்கில் தீபம் காட்டியவுடன் முதலில் விநாயகரை வணங்கி அதன் பின் பெரியவர்களை வணங்குவோம். அதன்பின் இழை தீபத்தைப் பெரியவர்கள் பிடித்து விநாயகருக்குத் தீபம் காட்டி வழங்க ஒவ்வொருவரும் அவர்களிடம் வாங்கி அதை தீபத்தோடு வாயில் போட்டு உண்பார்கள். ( ஆண்கள் செய்யும்போது இது ஒரு சாகசமான செயல் போல் இருக்கும். :)  )

பிள்ளையார் நோன்பு ஸ்பெஷலே இந்தத் திரட்டுப் பால்தான். எப்போ தருவார்கள் எனக் காத்திருக்க வைக்கும். கருப்பட்டிப் பணியாரமும், திரட்டுப் பாலும் தீபம் காட்டியபின்னர்தான் கிடைக்கும். காரைக்குடிப் பக்கம் கருப்பட்டிப் பணியார மாவில் இழை எடுப்பதைப் போல சில நகரத்தார் ஊர்களில் திரட்டுப் பாலில் இழை எடுப்பார்கள். 

கெட்டிப் பாலைக் காய்ச்சி அது கொதிக்கும்போது சில சொட்டு எலுமிச்சை விட்டு அதன்பின் கருப்பட்டியைப் போட்டால் அது திரைந்து விடும். அப்படியே சிம்மில் போட்டு அரைமணிநேரம் அவ்வப்போது லேசாகக் கிளறிக் கொதிக்க விட்டால் சுண்டியபின் லேசாக பாகுடன் இறக்கி வைக்கலாம். இதுவே திரட்டுப் பால். ருசியான இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவார்கள். ஏனெனில் ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு வயிறுப் பிரச்சனைகள் வரலாம் என. இப்போ அரை லிட்டர் பாலில் சாஸ்திரத்துக்காகச் செய்து  எல்லாரும் அரை ஸ்பூன் பிரசாதமாக எடுத்துக் கொண்டபின் நான் மட்டுமே சாப்பிடுகின்றேன். :) 

என்ன நீங்களும் இந்தத் திரட்டுப் பால் செய்யக் கிளம்பிட்டீங்களா. 

2 கருத்துகள்:

 1. சுவையான குறிப்புகள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...