வியாழன், 6 செப்டம்பர், 2018

வாழ்விக்க வந்த இலை.

வழிவழியாய் வந்த வாழை இலை.


வாழ்விக்க வந்த இலை

  ரம்பரை பரம்பரையாய், வழி வழியாய் வருவதை வாழையடி வாழை என்று கூறுவார்கள். தமிழ்நாட்டின் பண்பாட்டிலும் கலாச்சார நிகழ்வுகளிலும் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள், குடி புகுதல், பூப்பெய்துதல், விசேஷங்கள், நல்லது கெட்டது அனைத்திலும் வாழைக்கு முக்கியப் பங்குண்டு. அதேபோல் வாழை இலைக்கும் நமது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் உண்டு.

  வாழைமரத்து ஜவுளிக்கடை என்றொரு கடையே இருந்தது திருச்சியில். தனி வீடுகள் இருந்த பொழுதில் வாழையும் முருங்கையும் இல்லாத வீடில்லை எனலாம். வீட்டுக்கு வீடு வாழை வாழவைத்துக் கொண்டிருந்தது. குடி புகுந்த வீட்டில் முதல் சமையலே பருப்பு மசித்து வாழைக்காய் கத்திரிக்காய் கூட்டுக் குழம்பு வைத்து வாழையிலையில் படைத்துத்தான் உண்பார்கள்.

  விசேஷங்களில் குலைதள்ளிய வாழைமரம் கட்டுதல், ஆயுத பூஜையன்று வாகனங்களில் பூமாலையோடு இருபுறமும் வாழைக்கன்றைக் கட்டுதல் தமிழர் பழக்கம். ”தலைவாழை இலைபோட்டு விருந்து வைத்தேன், என் தலைவா உன் வருகைக்குத் தவமிருந்தேன்.” என்ற சினிமாப்பாடல் தலைவாழை இலை விருந்தின் மகிமை உணர்த்தும்.

  பல்வேறு வகைக் காய்கறி வெஞ்சனங்கள் பாயாசம் பச்சடியோடும் வடை பாயாசத்தோடும் காரைக்குடிப் பக்கங்களில் தஞ்சாவூர் தாட்டிலை போட்டு விருந்தளிப்பது வெகு பிரசித்தம். சைவ விருந்தில் மட்டுமல்ல அசைவ விருந்திலும் வாழை இலை முழுக்க அசைவத்தின் பல்வேறு வகைகளைப் பரிமாறும் ஹோட்டல்கள் பிரசித்தியாகி வருகின்றன.  

  இலையின் அதிகப் பயன்பாடு கருதி இப்போது சில இடங்களில் இலைக்கு மட்டுமே வாழைமரங்கள் வளர்க்கப்படுகின்றன. சராசரியாக ஒவ்வொரு திருமணத்திற்கும் தஞ்சாவூரிலிருந்து தாட்டிலைக் கட்டுகள் மூன்றாவது வந்து இறங்கும். 300 நீண்ட இலைகள்.

  வாழை இலைகள் மட்டுமல்ல, தேக்கு, புரசை இலைகளும், அவற்றிலிருந்து தயாராகும் தையிலை தொன்னை போன்றவையும் இயற்கை நலம் பயப்பவை. மந்தார இலை, தாமரை இலைகள் பூ வைத்துக் கொடுக்கப் பயன்படுகின்றன. மாவிலைகள் தோரணம் கட்டப் பயன்படுகின்றன.

  வாழை இலையின் நுனி அமர்ந்திருப்பவரின் இடது பக்கம் இருக்க அதில் உப்பிலிருந்து ஆரம்பித்து கூட்டு, பொரியல் , பச்சடி , பிரட்டல், வறுவல், மண்டி, அவியல், கட்லெட், ஊறுகாய் ஆகிய மேற்புறமும், கீழ்ப்புறம் கலவை சாதங்கள், வர்க்கானங்கள், புலவு, தயிர்ப்பச்சடி, அப்பளம், சாதம் பருப்பு, நெய், கெட்டிக்குழம்பு தண்ணீர்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம் ,தயிர், முக்கனிகள் ஆகியன கீழ்ப்புறமும் பரிமாறப்படுகின்றன. சூப், பாயாசம் போன்றவை கப்புகளில் பரிமாறப்படுகின்றன. இதுவே தென்னிந்திய மதிய விருந்தின் முழுமையான பரிமாணம்.

 திருமணம் முடிந்ததும் கட்டுச்சோற்றுப் பொட்டலம் ஒன்று கூடையில் கட்டிக் கொடுப்பார்கள் பெண் வீட்டார்கள். ஊர்விட்டு ஊர் சென்று திருமணம் செய்த மணமகன் தன் ஊருக்குத் திரும்பி வரும்போது ஊரின் எல்லையில் இருக்கும் கோயிலுடன் கூடிய ஊரணிக்கரையில் மணமகளுடன் அமர்ந்து இந்த கட்டுச்சோற்றை வாழை இலையில் வைத்து உண்டு கோவிலில் வணங்கி அதன் பின் வீடு வந்து சேருவார்கள்.

இந்த இலைகளுக்குப் பதிலாக இரவு விருந்துகள், சிறு விருந்துகள் மற்றும் பஃபேக்களில் இன்று கம்ப்யூட்டர் இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், உலோகத்தட்டுகள், பேப்பர் தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

  பொதுவாக முன்காலங்களில் பள்ளிச் சுற்றுலா செல்லும் பிள்ளைகளுக்கு வாழையிலையில் புளிசாதம் எலுமிச்சை சாதம் கட்டிக் கொடுப்பார்கள். அதே போல் பிரயாண உணவுகளும் வாழை இலைகளிலேயே கட்டப்படு வந்தன. இன்றோ அவை ப்ளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு வருகின்றன. வடை, பஜ்ஜி, போளி, சுண்டல் போன்றவை கடைகளில் செய்தித்தாள்களில் தரப்படுகின்றன.

 கோயில்களில் விசேஷ பூஜைகள் யாகங்கள் நடக்கும்போது பூஜைக்கான பொருட்களையும் கூட கொட்டான் போன்ற தொன்னைகளில்வைத்துப் பயன்படுத்துவார்கள் ஹோமத்தில் அர்ப்பிக்கும் நெய் போன்றவற்றையும் தொன்னையில் வைத்திருப்பார்கள். அதுபோல் கோயில் பிரசாதங்கள் தொன்னைகளில் தரப்படுகின்றன. மார்கழி திருப்பள்ளி எழுச்சியின்போதும் மண்டகப்படியின்போதும் பொங்கல் சுண்டல் போன்றவை முன்பு தொன்னையில் வழங்கப்பட்டன இப்போது பேப்பர் கப்புகளில்.

  இந்தத் தொன்னைகள் வாழை இலைச்சருகுகளில் இருந்து தயாராகின்றன. பதமாய்க் காயவைத்துப் பதப்படுத்திய சருகுகளை அளவாய் வெட்டி மடித்து ஈர்க்குச்சிகள் செருகித் தொன்னைகள் செய்கிறார்கள். தஞ்சை மகாராஜபுரம் பகுதியிலும் ஆடுதுறையிலும் கிட்டத்தட்ட 140 குடும்பங்கள் இக்குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

  திருவிழா தேரோட்டம் என்று விருந்தினர்கள் வந்தால் அமாவாசை, விரதம் பௌர்ணமி, திருமண விருந்து, குடிபுகுதலில் வாழை இலை விருந்து நிச்சயம், தைமாதம் பொங்கலன்று புத்தரிசியில் பொங்கல் சமைத்து பல்வகைக் காய்கனிகளோடு வாழை இலையில் அடுப்புக்கெதிரே படைத்து சூரியனை வணங்குவது நம் மரபு.

  இதுபோல் குடும்பப் படைப்பு, சோமவார பூசை போன்றவற்றில் வாழை இலையில்தான் பள்ளயம் போடுவார்கள். ”பள்ளயம் போடுதல்என்றால் பாற்சோறு, வெள்ளைச் சோறு, நாற்புறமும் வாழைப்பழம், மேல்வரிசையில் சைவ அல்லது அசைவ உணவுகள் ஆகியவற்றை வாழை இலையில் படைத்து முன்னோரையும் குலதெய்வத்தையும் வணங்குவது.

  படையல் சாப்பாடு என்றாலே இலையில்தான். விரதம், திவசம் எல்லாவற்றுக்கும் வெற்றிலையிலிருந்து வாழை இலை வரை முக்கியம். வாழை இலையில் அட்சதை போட்டு கும்பம் வைத்து ஆயுஸ் ஹோமம், கணபதி ஹோமம் முதலியன நடத்தப்படுகின்றன. கோவில்களில் வேண்டுதலுக்காய் வயிற்றில் அல்லது உடலில் மாவிளக்குப் போடுபவர்கள் உடலில் வாழை இலையை வைத்து அதன் மேல் மாவிளக்குப் பாத்திரத்தை வைத்துப் போடுவார்கள்.

  ஹோட்டலில் வாழை இலையை வட்டமாக வெட்டி தட்டில் போட்டுப் பரிமாறுகிறார்கள். நம்மூர் உணவான இலைக்கொழுக்கட்டையும்,. கேரளக்காரர்களின் உணவான இலை அடை, மீன் பொளிச்சது ஆகியனவும், இந்தோனேஷியன் மக்களின் பேபேஸ் இக்கன் எனப்படும் கிரில்டு ஃபிஷ்ஷும், வியட்நாமீஸ் மக்களின் பான் சுங் எனப்படும் ரைஸ் கேக்கும் வாழை இலையில் சுருட்டியே சமைக்கப்படுகிறது. மெக்ஸிகோவின் பார்பா தாக்கோ என்ற ஆட்டுக்கறி சமையல் வாழையிலையில் சுருட்டிவைத்து சமைக்கப்படுகிறது. ஹவாய்க்காரர்களும் வாழை இலையுடன் சமையல் செய்கிறார்கள்.

  எறால் தேங்காய் சாதம், சுடச்சுட நெய் அல்வா, அசோகா அல்வா ஆகியவற்றை வாழை இலையில் சாப்பிட்டால் அதன் ருசியே தனி. சூடான உணவை வைத்தாலும் ஒன்றும் ஆகாது. தொன்னை இட்லி என்றொரு உணவும் வாழை இலைத் தொன்னையில் தாளிதம் செய்த இட்லி மாவு வைத்துச் செய்யப்படுகிறது.

  விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்றும், முதலாம் நாள் வாழை இலை, இரண்டாம் நாள் தையிலை, மூன்றாம் நாள் கையில என்று சில பழமொழிகளும் விருந்து சம்பந்தமாக கூறப்படுகிறன.

  பாக்கு மட்டைத் தட்டுகள் போல இப்போது பனானா லீஃப் ப்ளேட்ஸ் வந்துள்ளன. பனானா லீஃப் ரெஸ்டாரெண்ட்ஸ். என்று வாழை இலை உணவின் சிறப்பைப் பறைசாற்ற நம் கலாச்சார உணவுகளைச் சமைத்துப் பரிமாறுகிறார்கள் கலாச்சாரத் திருவிழாக்களில்.  

  இனி அறிவியல் காரணம் :- உணவுப் பொருளைப் பாலிதீன் பை மற்றும் ப்ளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கும்போது  கேன்சர் போன்றவை ஏற்படுகின்றன. மேலும் செய்தித்தாளில் கட்டும்போது  பேப்பரில் இருக்கும் காரீயம் உணவில் சேர்ந்து  ரத்த சோகை மற்றும் செரிமானக் குறைபாடு உண்டாகிறது. வாழை இலையில்தான் உணவுப் பொருளைக் கட்டிக்  கொடுக்க வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. அதை யாரும் கடைப்பிடிப்பதில்லை.

 வாழை இலை ஒரு கிருமி நாசினி, நச்சுக்கிருமிகளை அழிக்கும், இளநரைதடுக்கும். தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையில் படுக்க வைப்பார்கள். வாழை இலை குளுமை தரும். உடல் சூட்டை சமன்படுத்தும் என்கிறது சித்த மருத்துவம்.

  சமையல் மட்டுமல்ல இயற்கை வைத்தியத்தில் வாழை இலைக்குளியல் என்றொரு முறையும் பின்பற்றப்படுது. இயற்கைச் சாறுகள் அருந்தியபின் நான்கைந்து முழு வாழை இலைகள் கொண்டு கட்டப்பட்டு சில மணித்துளிகள் வெய்யிலில் படுக்க வைக்கிறார்கள் ஒரு சிகிச்சை முறையில்.

  வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நோய் நொடி அண்டாது. தோல் பளபளப்பாகும். மந்தம், இளைப்பு நீங்கும், பித்தம் தணியும். உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதோடு குடல் புண்ணையும் ஆற்றும்.

  இலைகள்தான் எல்லாமே என்றார் ஜெர்மானிய அறிஞர் யோகன் உல்ஃப்காங்க் வான்கோதே.  நீண்ட ஆரோக்கியம் தரும் வாழை இலைக்கு ஈடு இணை இல்லை. ரியல் இலையை விட ரீல் இலையில் சாப்பிடுவது தேவையா என்று யோசிங்க

2 கருத்துகள்:

  1. இன்றைய இளைய சமூகம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)