எனது புது நாவல்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

காதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.

காதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.

ன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா இன்று வந்ததும் அதே நிலா “ என்று பாடிக்கொண்டிருந்தார் எம்ஜியார் சரோஜாதேவியுடன். பாவாடை குடை போல் விரிய கண்கள் குடை போல் மலர அழகுப் பூங்கொத்தாய் சரோஜாதேவி மலர்ந்துகொண்டிருந்தார். கைபிடித்துக் கைமாற்றி பூமாலையைப் போல அடுத்த அடுத்த ட்விஸ்ட்களிலும் காந்தமாய்க் கவர்ந்துகொண்டிருந்தார்கள் இருவரும் ஒருவரை ஒருவர்.

நடனம் என்றதும் டிவியிலிருந்து சுவாமிநாதனின் கவனம் முத்தழகிக்குப் பயணித்தது. அடுத்தடுத்த சேனல்கள் மாற்றும்போது மாஸ்க் ஆஃப் ஸாரோவில் ஆண்டானியோ பாந்தரஸ் கேதரின் ஸீடா ஜோன்ஸுடன் வளைத்து வளைத்து டாங்கோ ஆடிக்கொண்டிருந்தார். என்ன ரிதம் என்ன ரிதம். ஒரு கணம் மெய்மறந்து ஸாம் அவர் செல்லமாக அழைக்கும் அழகி என்ற முத்தழகியின் கைபற்றி மைனஸ் ஒன் பப்புக்குச் சென்றார். ஜோடியாகச் சென்றால்தான் அந்த பப்புக்குள்ளே அனுமதி. காதல் ஜோடிகளின் தீப்பிடிக்கவைக்கும் நடனம் நிகழ்ந்துகொண்டிருந்தது அவர் மனக்கண்ணில்.


மிகப் பரந்துவிரிந்த டிஸ்கோ ஹாலில் செண்ட் ஆஃப் வுமனில் இருந்து ஒரு டாங்கோ ஒலிக்க மென்மையாகக கைபிடித்து அல்பசினோ போல் அழகியைக் கையாண்டார். ’வாழ்க்கை மாதிரி கடினமானது இல்ல. டாங்கோ எளிதானது. தப்பு செய்தாலும் பரவாயில்லை , திருத்திக்கலாம்’ என்று அல்பசினோ சொல்வது போலவே சொல்லி அழகியை நடனமாட சம்மதிக்க வைத்திருந்தார் ஸாம்.

அன்றைக்கு டாங்கோ ஸ்பெஷல் நைட். ஸ்லீவ்லெஸ் கறுப்பு வெல்வெட் டாப்ஸ் அணிந்து த்ரீ ஃபோர்த் ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள் முத்தழகி, அதனாலேயே அவளது நிறம் கண்ணைப் பறித்தது. துலிப் பூக்கள் போன்ற வாசனையுடன் இருந்தாள். ஷாம்பூ போட்டு சீராக வெட்டியிருந்த தலைமுடி காற்றில் அலைபோல் அலைந்தது. ஔதா, பாய்சனா, சேனலா தெரியவில்லை மூன்றும் கலந்த கலவையான வாசனையடித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து அடுத்து என டேக் த லீட் டாங்கோ. அதே ஆண்டானியோ பாந்தரஸ். ஆனால் என்ன ஒரு கச்சிதமான ஸ்டெப்ஸ். ஆண்டானியோ ஒரு நடனப் பள்ளியின் ஆசிரியனாகக் கற்பிக்கும் விதம் அவர் மனக்கண்ணில் ஓட அதே பளிச்சுடனும் நறுவிசுடனும் ஆடினார். வியந்துகொண்டே இருந்தாள் அழகி. எல்லாம் தெரிந்த அழகன். ஸும்பா, ஃபுட் லூஸ்,  எம்ஸ்டெப் என்று ஏதேனும் டான்ஸ் ஸ்கூல் போய் கற்றுக் கொள்கிறாரோ என்று கூட அவள் எண்ணியதுண்டு.

கைகள் மெல்லிசாகப் பற்றி இருந்தாலும் தோளில் கைபோட்டு லேசாக அணைத்தபடி இருவரும் ஆடினர். காற்று கூட காதலோடு கூடவே சுற்றிச் சுழன்றது. காதலின் மணம் மனத்தை மயக்கியது. அவள் அவரானாள். அவர் அவளானார். இருவரும் சுற்றிச் சுழன்றார்கள். ஒருவர் கண்வழி ஒருவர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள்.

அவரது சைட்பர்னும் மீசையும் கிட்டே கிட்டே வர தலையிலிருந்து வாசலினும் உடையிலிருந்து ப்ளேபாய் செண்டும் மணத்தது. லேசான ஷாம்பெயின் வாடை அவரை ஒரு ஸ்டைலிஷான ரௌடி போலக் காட்டியது. கண்களில் இருந்து அதிகமான காதலும் மெலிதான காமமும் கூட எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

அவளது வலது கை அவரது தோளையும் அவரது இடது கை அவளது இடுப்பையும் பற்ற, தன் வலது கையால் அவளது இடது கையை பூப்போலப் பற்றியவாறு ஆடத் துவங்கினார். அவளைத் தன் கட்டுப்பாட்டில் ஆடவைத்தார். நிஜமாகவே த்ரில்லாக இருந்தது அவளுக்கு. அரை இருட்டில் வண்ண வண்ண ஒளிகள் அவர்கள் மேல் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தன. மின்மினிப் பூச்சிகள்போல ஒளி அவர்கள் மேல் தத்தித் தத்திப் பறந்தது.

அடுத்து ட்ரூ லைஸ் டாங்கோ. ஆர்னால்டாய் மாறி கைகளை மென்மையாகப் பற்றி இழுத்து வளைத்து சின்னச் சின்னச் சிணுங்கல்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆட்டம். எதிர்பாராத விருந்தை மிகப் பசியோடு உண்பவன் போல மேலும் மேலும் ஆடிக்கொண்டேயிருந்தார் சாம்.

டாங்கோவின் ஸ்பெஷலே எதிர்பாராத மூவ்மெண்ட்ஸ்தான்.  மிஷன் இம்பாஸிபிள் டாங்கோ வந்ததும் கூட்டம் ஆர்ப்பரித்தது. இதில் ஷீக்களின் மென்மையான சப்தம் மட்டுமே. மெல்ல மெல்ல ஷூக்கால்களைத் தட்டியவாறு அவர் ஆடத்துவங்க ஆச்சர்யமாகத் தள்ளி நின்று பார்த்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

குதிகால்களைத் தூக்கி முன்னங்கால்களில் நின்றும் பின் குதிகால்களாலும் ஷூக்களால் அவர் போட்ட தாளம் அட்சரம் பிசகாது ஒலித்த இசையைப் பின்பற்றியது. அவர் அணிந்திருந்த அந்த சந்தன நிற சஃபாரி லேசாக காற்றில் பறந்து இறங்கியது கவர்ச்சியை அதிகமாக்கியது. அவரது கிராப் தலைமுடி அட்டகாசமாகப் பறந்து நெற்றியில் விழுந்தது .

சொக்கிக் கொண்டிருந்தாள் அழகி. அதிரடியான அவரது ஆட்டத்தைக் கூட்டமே நின்று ரசிக்க ஆரம்பித்தது. ஆட்டம் முடிந்ததும் மெல்ல ஆரம்பித்த கைதட்டல் பலத்து ஒலிக்க ஓரிருவர் ஆச்சர்யத்துடன் விசில் கூட அடித்தார்கள். சிலர் வந்து கை  கொடுத்தார்கள். சிலர் தோளைக் கட்டியணைத்தார்கள். ’பாப்ரே. படி மஸ்த் ஹை’ என்று தழுவிக் கொண்டான் ஒரு நார்த் இந்தியன். கொஞ்சம் பொறாமையோடு அவரை ஒட்டியபடி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் அழகி. 
ன்னங்க என்னங்க என்ற தேவியின் குரல் அவரை யதார்த்தத்துக்குக் கொண்டு வந்தது. ”என்னம்மா” என்று பதறியபடி சோஃபாவிலிருந்து எழுந்த அவர் முன் நம்ம டாமி.. நம்ம டாமி.. என்று சீரற்ற மூச்சோடு அழுதபடி வாசலைக் கைகாட்டினாள் தேவி.

தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தடுக்க வீட்டில் இருந்த போர்வெல்லை ஆழப்படுத்த ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ட்ர்ர்ர்ர் ட்ர்ர்ர்ர் என்ற சத்தம் அப்போது இல்லாததைக் கவனித்தார். வேகமாகப் படிகளில் இறங்கி ஓடினார். என்னாச்சு டாமிக்கு ?

போர்வெல்லிலிருந்து இறைக்கப்படும் தண்ணீரை ஊற்றப் பத்தடி ஆழத்தில் ஒரு குழிதோண்டி இருந்தார்கள். அதில் விழுந்து கிடந்தது டாமி. விளையாட்டு வேகத்தில் தோட்டத்தைச் சுற்றி ஓடும்போது தவறி விழுந்திருக்கிறது. இத்தனைக்கும் தடுப்பாக டார்பாலின்களைச் சுற்றி இருந்தார்கள். தேவி வீசிய பந்தை எடுக்க ஆர்வத்தோடு தவ்விய அது அந்த சேற்றுக் குழியில் விழுந்திருந்தது. தடுமாறி நீச்சலடித்துக் கொண்டிருந்தது. ஐந்தடி ஆழம்வரை நீர் இருக்கும். கழியை விட்டாலே கதறி ஒதுங்கியது. எப்படி எடுப்பது.. ? அவருக்கும் பரிதவிப்பானது.

வேலை செய்தவர்கள் குதித்தும் எடுக்க இயலாத சூழல். வேகமாக ஓடி செல்ஃபோனை எடுத்தார். இதுபோல் விலங்குகளைக் காக்க என்று நிறுவப்பட்டிருக்கும் ஒரு ரெஸ்க்யூ அமைப்பின் ஃபோன் நம்பரைத் தட்டினார். சிறிது நேரம் ரிங் போய்க்கொண்டே இருந்தது.

டாமியை நினைத்து அவருக்கு நெஞ்சு பதறிக்கொண்டிருந்தது. அவரது செல்ல நாய்க்குட்டி. எந்த மனநிலையில் வந்தாலும் அது அவரை இலகுவாக்கிவிடும். கண்ணின் வழியே பொங்கிவழியும் பாசம். காலைச் சுற்றிக் கொண்டே எங்கும் போகாது. சில நாட்கள் வெளியூர் சென்று வந்தால் ஓடி வந்து காலைச் சுற்றிப் பிராண்டி சோஃபாவில் தவ்வி ஏறி அவரது கன்னங்களை நக்கி ஈரமாக்கிவிடும். டாமிக்கு ஏதும் ஆகிவிடுமோ. ஷிட் ஃபோனை எடுங்கடா.. ஒரு குளிர்ஜுரம் பரவினாற்போலிருந்தது அவருக்கு.

யாரோ ஃபோனை அட்டெண்ட் செய்தார்கள். மளமளவென்று தகவல் சொன்னார். பத்து நிமிடத்தில் ரெஸ்க்யூ ஆட்கள் வந்தார்கள். தண்ணீரில் டக்கென்று ஒருவர் குதித்து பதறிச் சுற்றிய நாயை வாயோடு சேர்த்து அலேக்காகப் பிடித்தார். நூலேணியை விட்டார்கள். அதைப் பிடித்து மேலேறி வந்தார் அந்த ஊழியர். சேறு நிரம்ப வழிந்தாலும் தேவியும் ஸாமும் இரு கரங்களாலும் டாமியை வாங்கி அணைத்துக் கொண்டார்கள். புஸுபுஸுவென்றிருந்த அதன் முடியெல்லாம் செங்காவியாகி ஒட்டி இருந்தது.

அந்த ஊழியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள் தேவியும் ஸாமும். இருவர் கண்ணிலும் அன்பும் நன்றியும் பொங்கிவழிந்துகொண்டே இருந்தது. டாமியைக் குளிப்பாட்ட தேவி வேலை செய்யும் அஞ்சலையோடு சென்றுவிட ஸாம் அவர்களோடு தனித்திருந்தார்.

அப்போது ஒருவர் சொன்னார் நல்ல வேளை சார் டார்ட்டிங் செய்யணுமோ இல்லாட்டி ப்ளோ பைப் வேணுமோன்னு நினைச்சேன். ஈஸியா எடுத்தாச்சு என்றார்.

அப்பிடின்னா. என்றார் சாம்

டார்ட்டிங்னா விலங்கை எடுக்க முடியாட்டி தூரத்தில் இருந்து மயக்கமருந்தை ஊசியால் துப்பாக்கி கொண்டு போடுவோம். இல்லாட்டி ப்ளோ பைப் நு இருக்கு இது ரெண்டும் மயக்க மருந்து கொடுக்கப் பயன்படுறது. இதப் பயன்படுத்தி சுயநினைவை இழக்கச் செய்து அதன் பின் மிருகங்களைப் பிடிச்சு மேலே கொண்டுவருவோம். மயக்கமருந்தோட எஃபக்ட் முடிச்சது அவை கண் முழிச்சுக்கும் என்றார்.

நல்லவேளை. பத்ரமா மீட்டுக் கொடுத்தீங்க . நன்றி என்று கைகொடுத்தார் ஸாம் அந்த மீட்பு ஊழியர்களுக்கு. அவர்கள் கேட்டைக் கடந்துகொண்டிருந்தபோது அவரது இடதுகையில் வைத்திருந்த ஃபோன் உயிர்பெற்றது. ஒளிர்ந்த எண்ணையும் பேரையும் பார்த்து அவரது கண்கள் விரிந்தன.

அந்த எண் அழகியின் தந்தை செந்தில்நாதனுடையது. அவர் ஏன் இப்போது அழைக்கிறார் ?  கோமாவில் அழகி ஆழ்ந்து பதினாறு நீண்ட வருடங்களாகி விட்டதே.. அழகியை கவனிக்க அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் தற்போது மாறி இருக்கிறாள். இப்போதுதான் நர்ஸிங் முடித்தவள். நடனக்காரிபோலிருக்கும் அவளது நடை. சில மாதங்களுக்கு முன்பு ஒருமுறை சென்று வந்திருந்தார். அதுவரை தெரியும்.  அதன் பின் என்னாச்சு.. அழகிக்கு ஏதும் ஆகிவிட்டதா. என்ன இது மாற்றி மாற்றி பதட்டமான செய்திகள்.

துடிக்கும் நெஞ்சைப் பிடித்தபடி ஃபோனை ஸ்வைப் செய்தார். ”என்ன ஆச்சு அங்கிள். அழகிக்கு ஏதும்..? நலம்தானே..” என்று கேட்கும்போதே அவர் குரல் நடுங்கியது.

உற்சாகமான செந்தில்நாதனின் குரல் அவர் செவிப்பறையில் மோதியது. ”சாம்,, சாம்.. நல்ல செய்திதான்..  அழகி அழகி கண்விழிச்சிட்டா..”

”என்னது கண்விழிச்சிட்டாளா. !!!” அவரது அங்கத்தில் ஒவ்வொரு செல்லும் துடிதுடித்தது பரபரப்பில். உடனே உடனே அவளை காணவேண்டும்போல் தவிப்பு .

”ஆனால் அதோடு ஒரு வருத்தமான செய்தியும் சாம்.. அவளுக்கு எங்க யாரையும் யார்னே தெரில..”

”என்னது யார்னு தெரியலையா.. இருங்க நான் பார்க்கவரேன். “ கார் கேட்டைக் கீறியபடி சீறிப் பாய்ந்தது.

டாமியைக் குளிப்பாட்டித் துடைத்து ஸ்பிரே அடித்துக் கொண்டுவந்தாள் தேவி. வாசலிலும் ஹாலிலும் காணவில்லை. கார்ச்சத்தம் கேட்டதே.

“ஏதோ ஃபோன் வந்துச்சும்மா. அதான் ஐயா என்னைக்கூட கூப்பிடாம அவசரமா கார்ல ஏறிப்போயிட்டார்” என்றார் கண்ணாயிரம். 

பிழைச்சு வந்த டாமியைக் கூடக் கவனிக்காமல் அப்படி அவசரமாக அவர் எங்கேதான் செல்கிறாரோ ஒருவேளை ராணியைப் பார்க்கப் போகிறாரோ என்ற சந்தேகம் தேவியின் மனதில் ஆசனமிட்டு அமர்ந்தது. 

டாமியின் கழுத்தைக் கட்டியபடி அங்கே இருந்த கூடை நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்தாள். அவள் கண்கள் தளும்பிக் கொண்டிருந்தன.

3 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன்
நன்றி சகோதரியாரே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக நன்றாக நகர்கிறது கதை. ஹப்பா எத்தனை தகவல்கள் கதையினூடே..டாங்கோ டான்ஸ் பற்றி ஸ்டெப்புகள் என்று பல இன்ஃபொ....சூப்பர்! அதுவும் விலங்கு மீட்பு எல்லாமே அழகாகச் சொல்லியிருக்கீங்க...ம்ம்ம் முத்தழகி, ராணி...தேவி...பார்ப்போம் எப்படி அடுத்து நகரப் போகிறது என்று...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி துளசி சகோ.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...