செவ்வாய், 20 ஜூன், 2017

ஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.

வெகு வருடங்களாக ரங்ஸ் என்னைத் திருச்செங்கோடு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஏனோ அது அமையவேயில்லை. அக்கம் பக்கம் ஊருக்குப் போவோம்.ஆனால் திருச்செங்கோடு போக வாய்க்காது.

பொதுவாக ரங்கஸுக்கு மலையேறுவதில் விருப்பம் அதிகம். இந்த மலை ஏறுவது கடினமான ஒன்று என்றும் அதனாலேயே போகவேண்டும் என்றும் சொல்வார். பேருந்து வசதியும் உண்டு.

ஒரு சுபயோக சுபநாளில் ஒரு வழியாக பெருந்துறையில் இருந்து செங்கோட்டு வேலவனைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

இந்தக் கோயில் புராணம் சுருக்கமாக. - இங்கே சிவனை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வந்து வணங்க வருந்திய உமை தவம் செய்து சிவனின் உடலில் பாதி இடம்பெற உமையொரு பாகன் ஆனார் சிவன்.
இங்கே இருக்கும் நாகர் பள்ளத்தில் நாக சதுர்த்தி அன்று 1008 பால் குடம் கொண்டு வந்து அபிஷேகம் செய்கிறார்கள் பக்தர்கள்.


இங்கே உள்ள அபிஷேகக் கடையில் ரங்க்ஸ் சும்மா இருக்காமல் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கினார். இறங்க நேரமாயிட்டா சாப்பிட என்ன பண்றது அதான். . ஏனெனில் தண்ணீர் பாட்டில் கைவசம் இருந்தது. ஆனா தின்பண்டத்தை மலைமேல் கொண்டுபோவதின் அவதி பத்தி சொல்லியே ஆகணும். பின்னாடிச் சொல்றேன்.
பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் கோயிலுக்குப் படியில் ஏறிடலாமாவென்று பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே கடை போட்டிருந்த ஒரு அம்மா “யம்மா உன்னால எல்லாம் ஏற முடியாது பேசாம பஸ்லேயே போய்கினு வா” என்றார்.

நடுவுல ஏறமுடியலைன்னா பழனி மாதிரி யானையடிப் பாதையோ, மருதமலை மாதிரி வேன் சர்வீஸோ கிடையாது. மீதியை ஏறியே தீரணும். எப்பவும் நாந்தான் தங்கமணி சபதம் போடுவேன். ஆனா இந்த முறை ரங்க்ஸ் கொடுத்த தீரத்தால ஏற ஆரம்பிச்சேன். நூறு இல்ல இருநூறு இல்ல 1250 படியாச்சே.

ஏற ஆரம்பிச்சதும்தான் திக்குன்னுச்சு. 30 படி  50 படியா ஏறி ஏறி உக்கார்ந்து உக்கார்ந்து போனோம். நச நசன்னு தூறல் வேற.. காத்தும் அடிச்சுது. நல்ல வேளை வெய்யில் கொளுத்துனதுக்கு இதமா இருந்துச்சு.


மேலே நாகபடத்தின் உள்புறம் ஒரு சிவலிங்கம் இருக்கு.
இங்கே விதம் விதமான அபிஷேகங்களும் பரிகாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இந்த மலை ஒரு செந்நிறத்தில் காட்சி அளிக்கிறது. ஒரு புறம் ஆணாகவும் மறுபுறம் பெண்ணாகவும் காட்சி அளிக்குதாம்,

நாகங்களே எங்கெங்கும். ஏனெனில் இது ஆதிசேஷன் துண்டாகி விழுந்ததால் உருவான செந்நிற மலை. மூன்றில் ஒரு துண்டு இங்கே விழுந்து மலையானதாம். இது திருமணத்தடை நீக்கும் தலமாகவும் வணங்கப்படுது.
மண்டபம் கட்டிப் போட்ட புண்ணியவான்கள் எல்லாம் புண்ணியம் அடையணும்னு ஒவ்வொரு மண்டபத்துலயும் பத்து நிமிஷம் ஹால்ட். :) திருவிழா சமயத்துல ஒவ்வொரு சாதியாரும் கட்டின மண்டபத்துல அன்னதானம் செய்வாங்க போல தெரியுது.


படியெங்கும் விளக்கு வைக்க தனித்தனி தீபக்குழிகள். மழைநீர் தேங்கி ரொம்ப அழகா இருந்துச்சு. குளுகுளுன்னும் இருந்துச்சு.
நிறைய விநாயகர்களைப் பார்த்தோம். அத தனி இடுகையாப் போட்டிருக்கேன்.
செங்கோட்டு வேலவன் மனைவியருடன்.
மேலேருந்து ஊரைப்பார்த்தா புள்ளி புள்ளியா இருக்கு.

ஓரிரு இடங்களில் படி க்ரிப் இல்லாம இருக்கு. தடுமாறுனோமோ கிடுகிடுன்னு அதல பாதாளம்.

அப்புறம் நம்மகிட்ட வாழைப்பழம் இருந்துச்சுல்ல அதை மறந்துட்டேனே. ஆனா கூடவே தவ்வித் தாவி வந்த வானரங்கள் மறக்கல. அங்கே அங்கே ஒரே பாய்ச்சல்.

புள்ள குட்டிக அம்புட்டுக் கையிலயும் இருந்தத பறிச்சுச்சுங்க. அதுக கத்திக்கிட்டே ஓட அங்கங்கே பொரி, பிஸ்கட், பழம், வாட்டர் பாட்டில் எல்லாம் சிதறிக் கிடக்க இவய்ங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வர்றாய்ங்க.

எங்கேருந்து வர்றாய்ங்க எங்க தாவுறாய்ங்க எங்க போறாய்ங்கன்னே புரில. ரங்க்ஸ்கிட்ட ஒரு வானரம் வந்ததும் அவர் ஒரு பழத்தைத் தூக்கிப் போட்டுட்டு இன்னொன்னை எனக்கும் அவருக்குமா பாதியாப் பிச்சார் . விறுவிறுன்னு சாப்பிட்டுட்டுத் தண்ணியக் குடிச்சோம். மணி ஒன்றரை ஆயிடுச்சு.

ஒரு வழியா கோயிலுக்கு தத்தித் தத்தி வந்து சேர்ந்தோம். அப்பாடா திறந்திருக்கு.

இங்கே விதம் விதமான மண்டபங்களும் பிள்ளையார்களும் அணிவகுத்தாங்க. மேலே மரகத லிங்கமும் நாகமாணிக்கமும் இருக்கதா சொன்னாங்க. கோபுரம் கொள்ளை அழகு.


சுத்துப் பிரகாரமெல்லாம் அழகுச் சிற்பங்கள். அர்த்தநாரீஸ்வரர் மண்டபமாம். தேர் எல்லாம் இருக்கு. ஆனா இங்கேயும் வானரம் தொல்லை.

இங்க மாபெரும் அளவுல பரிகாரங்கள் நடக்குது. கோபுரம் , மணி, பிள்ளையார், சிவ சிவ எழுத்து எல்லாமே பிரம்மாண்டம்.
ரொம்ப போஷா(க்கா)ன கோயில். ஒரே பணக்காரக் கூட்டம். பணக்காரச் சாமி. பணக்காரப் பரிகாரங்கள்.
சிவன் அர்த்த நாரீஸ்வரரா இருக்கதால முகம் முழுக்க வெண்பாஷாணம் போட்டுப் பூசி இருக்கு.

ஒரு பக்கம் சிவன் அர்த்த நாரீசராக் காட்சி அளிக்கிறாரு. எதிர்த்தாப்புல ஒன்பது துவாரம் கொண்ட சாளரம். ஆமை மண்டபம் முன்னால இருக்காம். வெளியேவே ஆதிகேசவப் பெருமாள் பிரம்மாண்டமா மஞ்சள் சிவப்பு நிறத்துல ஐந்துமுக நாகத்தோட காட்சி தரார். செங்கோட்டு வேலவனும் அழகுத்திருவுருவத்தோட எளிமையாக் காட்சி தராரு. அவரவிட அவர் கைல வைச்சிருக்க வேல் உயரமா இருக்குமாம்.
ஒரு வழியா கும்பிட்டு வந்தாச்சு. பஸ்ஸுக்கு வெயிட்டிங்க். ஆனா பாருங்க இறங்க கால் வலிக்கும்னு பயம் இருந்துச்சு. ஆனா பஸ்ஸுல வரும்போது ரொம்ப ஸ்ட்ரீக்கா பஸ் இறங்க உசிர கைல பிடிச்சிட்டு வரமாதிரி இருந்துச்சு. ஏன்னா அது என்னவோ எனக்கு அல்மகினோட்ராமோவை ஞாபகப்படுத்திச்சு.

எறங்கிட்டோம் எறங்கிட்டோம். சைட்ல பார்த்தா இன்னும் பயமாத்தானிருக்கு.
எப்பிடித்தான் எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போய்க் கோயில் கட்டுனாங்களோ. யப்பா உங்களுக்கு ஒரு பெரிய கும்புடு.

என்னதான் இருந்தாலும் மலையேறி சாமி கும்புடுறது அற்புதமான அனுபவம். மிஸ் பண்ணிடாதீங்க. வாய்ப்புக் கிடைச்சால் மூவரையும் தரிசிச்சிட்டு வாங்க. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாம். 

5 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அழகியப் படங்கள்
அருமையான அனுபவம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நான் வெகுநாளாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை இன்று தங்கள் பதிவு மூலமாகப் பார்த்துவிட்டேன். அருமை. நேரில் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

இந்த இடத்துக்குச் சென்றதில்லை பெருமாள் முருகன் எழுதிய கதைகளமல்லவா

விஸ்வநாத் சொன்னது…

எவ்ளோ படி ? ஆயிரத்து ....... பஸ்ஸு காரவங்க பொழைக்க வேணாங்களா, போனா ... பஸ்ஸுலேயே போவோம்.

Thenammai Lakshmanan சொன்னது…

THANKS JAYAKUMAR SAGO

WELCOME JAMBU SIR. SEEKIRAM POITU VANGKA. :)

AAMAM BALA SIR

AHAA ATHUVUM SARITHAN VISU SIR :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...