திங்கள், 12 ஜூன், 2017

சூரியன் மணல் கடற்கரை. சுகமாக ஓய்வெடுக்க கோவா.

சூரியன் மணல் கடற்கரை. சுகமாக ஓய்வெடுக்க கோவா.

ஒரு வாரம் விடுமுறையில் நண்பர்களோடோ குடும்பத்தோடோ தங்கக் கடற்கரை, பச்சைப்பாசிகள் படிந்த பாறைகள் உள்ள கடற்கரை, பெரு மணற் கடற்கரை, பாறைக்கற்களை அலைகள் உடைக்கும் கடற்கரை, கற்களால் அலைகள் தடுக்கப்பட்ட கடற்கரை என விதம் விதமான கடற்கரைகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்த்த வேண்டுமா. மஹாராஷ்ட்ராவின் கொங்கண் கடற்கரையோரம் இருக்கும் கோவாவுக்குப் போயிட்டு வாங்க. சர்வதேச ஃபிலிம் ஃபெஸ்டிவல் என்றாலே நமக்கு கோவாதான் ஞாபகம் வரும்.  

வாஸ்கோவிலிருக்கும் மர்மகோவா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவுடன் மோட்டார் பைக்கை வைத்துக்கொண்டு பைலட்டுகள் எனப்படும் அங்கிள்ஜிக்கள் காத்திருப்பார்கள். ஆட்டோ ரிக்‌ஷா டாக்ஸி பயணம் மாதிரி இங்கே பைக் பயணம். அந்த பைக்கில் வாடகை பேசி நாம் அமர்ந்து கொள்ள பைலட் கொண்டு போய் நாம் இறங்க வேண்டிய ஹோட்டலில் விட்டுவிடுவார். நாங்கள் இருவராகச் சென்றதால் டாக்ஸியே எடுத்துவிட்டோம். கடற்கரை ஊர் என்பதால் மீன் வாசம் பிச்சு வாங்குது. மெயின் உணவு கடற்சார் உணவுகள்தான். ஹோட்டல்களில் அநேக பொருட்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்கின்றன. போர்த்துக்கீசியர் கலைப்பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அநேகம். ரிட்ஸ் உணவகத்தில் மதியம் ரூபாய் 200க்குள் அசைவ சாப்பாட்டை ஃபுல் கட்டுகட்டலாம். ஒரு தட்டு நிறைய சோறு, பெரிய சைஸ் வறுத்த மீன் துண்டு, ப்ரான் க்ரேவி, நண்டு குருமா, நெத்திலிப் பொடி மசாலா சிப்ஸ், இன்னும் சிலமீன் வகைகள் க்ரேவி என தேங்காய் சேர்த்துச் சமைத்த இனிப்பும் காரமுமான உணவு வகைகள் அருமையாக இருந்தன. 

காலையும் மாலையும் ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த ஃபிடால்கோவில் தோசை, நார்த் இந்தியன் ஃபுட் ( பனீர் பரோட்டா, தால் மாக்னி , ஆலுகோபி சப்ஜி)  சாப்பிட்டோம். 


கோவாவில் எங்கெங்கு நோக்கினும் ஒரே சர்ச்சுகள்தான். கேத்தலிக், பெந்தகொஸ்தே, சிரியன், சிஎஸ் ஐ சர்ச்சுகள் அனைத்துமே போர்த்துக்கீசிய பாணியில் விதம் விதமாகக் கட்டப்பட்டுள்ளன. சிலர் தங்கள் வீட்டையோ கெஸ்ட் ஹவுஸாக மாற்றி வாடகைக்கு விடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் முன்புறத்தில் துளசிமாடம் அல்லது சிலுவை இருக்கிறது. இந்துக்கள் வீட்டில் துளசி மாடமும், கிறிஸ்தவர்கள் வீட்டில் சிலுவைக்குறிகளும் இருக்கின்றன. கோவா என்பதன் அர்த்தமே கோமாதாக்கள் ( பசுக்கள் ) அந்தக் காலத்தில் அதிகமாக இருந்ததால் ஏற்பட்டதுதானாம்.  

ஃபெனி எனப்படும் முந்திரி ஒயினும், ஹெனின்கனும் கிங்ஃபிஷனும் கணக்கு வழக்கில்லாமல் கிடைக்கும். இரவு நேர வாழ்க்கைக்கான கேசினோ ராயல் என்ற கப்பல்கள் இரண்டு அங்கே நிற்கின்றன. 


அவற்றில் மதியத்திலிருந்து அதிகாலை வரை காசு கலகலக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். சூதாட்ட அரங்குக்குக் கைக்குழந்தைகளுடன் கூட வருகிறார்கள் வட இந்தியர்கள். ஒரு எண்ட்ரன்ஸ் டிக்கட் இரண்டாயிரம் ரூபாய். பணம் தண்ணீர் மாதிரி ஓடுகிறது. அந்த டிக்கெட்டுக்கு நைட் பஃபே & சோம பானம் சுரா பானங்கள் இலவசம். 


சூதாடுபவர்கள் ஒரு பக்கம் ஆட உணவருந்துபவர்கள் முன் பிரபல ஹிந்திப் பாடல்கள் ஒலிக்க இளம்பெண்களின் நடனம் மேல் தளத்தில் இடம்பெறுகிறது. டிசைன் டிசைனாக சூதாடலாம் காசும் கார்டும் இருக்கும் வரை. பெட்டி நிறையப் பணத்தோடு அநேக பணக்காரர்கள் மட்டுமல்ல, கல்லூரி இளைஞர்களும் சூதாட்ட அரங்கங்களுக்கு வருகிறார்கள். கரையிலிருந்து போட் மூலம் கப்பலுக்கும் கப்பலிலில் இருந்து கரைக்குத் திரும்ப போட் மூலமும் கொண்டு விடுகிறார்கள். 

வடக்கு கோவா தெற்கு கோவா என கிட்டத்தட்ட பத்துப் பன்னிரெண்டு கடற்கரைகள் இருக்கின்றன. தெற்கு கோவாவில், மர்கோவாவில் பலோலம், அகோண்டா, கோலா கடற்கரைகள் உள்ளன. வடக்கு கோவாவில் கலாங்குட், கண்டோலிம், பாகா , பணாஜி, மிராமர், டோனா பவுலா கடற்கரைகள் உள்ளன. இங்கே உள்ள சிறப்பம்சம் கடற்கரையோட ஹட் எனப்படும் குடில்கள், இல்லங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. பாரா செய்லிங், சர்ஃபிங், ஜெட் ஸ்கீயிங் செய்யலாம். மீன் உணவுகள் எப்போதும் சுடச் சுடக் கிடைக்கின்றன. உற்சாக பானங்களும் கிடைக்கின்றன. சில இடங்களில் நடனம் பாடல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. பொதுமக்கள் உபயோகிக்கும் கடற்கரை போக ஹோட்டல்கள் ஆக்கிரமித்து இருக்கும் தனிப்பட்ட கடற்கரைகள் அநேகம். வெளிநாட்டினர் வெய்யில் குளியலுக்காக அவற்றைத் தேர்ந்தெடுக்கின்றனர். தனிப்பட்ட முறையில் ஊர் சுற்ற கார்களும், பைக்குகளும் சைக்கிள்களும் கூட வாடகைக்குக் கிடைக்கின்றன.  
 
மங்கேஷி டெம்பிள், நாகேஷி டெம்பிள், மஹாலெக்ஷ்மி டெம்பிள், சாந்த துர்க்கா டெம்பிள், தம்தி சுர்லா மஹாதேவ் டெம்பிள், பிரம்மன் டெம்பிள், அர்வேலம் குகைகள், பாம் ஜீசஸ் பசிலிக்கா, புனித பிரான்சிஸ் சேவியரின் புனித உடல் வைக்கப்பட்டுள்ள சர்ச், சே கதீட்ரல்,  கடற்படைத் தள அருங்காட்சியகம், கோவா மாநில அருங்காட்சியகம், பிக் ஃபூட் மியூசியம், காணத்தக்கன. 

இந்தக் கோயில்கள் அனைத்துமே போர்ச்சுக்கீஸ், இஸ்லாமிக், ஹிந்து, நாகரி பாணியில் கட்டப்பட்டவை. இதில் தம்தி சுர்லா மஹாதேவ் கோயில் மட்டும் கடம்பா ஸ்டைலில் கட்டப்பட்டது. கோயில்களிலும் சர்ச்சுகளிலும் கூட்டம் அள்ளுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம். அங்கே கோயில்களில் விற்கும் பூக்கள் வித்யாசமாக இருக்கின்றன. தட்டுகளில் உதிரிப் பூக்களைத் தருகிறார்கள். ரெட் ஜாஸ்மின் என்னும் பூவை வாழை இலைகளில் பொதித்து ஹைவேஸ்களில் மாலை நேரத்தில் விற்கிறார்கள். கொள்ளை வாசம் அள்ளுகிறது. 

பாண்டவர் வணங்கிய லிங்கங்கள் அமைந்துள்ள இடம் அர்வேலம் குகைகள் அர்வேலம் குகைகள் ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவையாம். புத்த விஹாரங்களில் இருப்பது போன்று செம்புராங்கற்களால் கட்டி இருக்கும் பாணியை வைத்து புத்தமதத்தைச் சார்ந்தவை என்று நம்பப்படுகின்றன. ஆனால் லிங்கங்கள் இங்கே அமைக்கப் பட்டிருப்பதால் அவை புத்தமதத்தை சாரவில்லை எனவும் சொல்லப்படுகிறது. செம்புராங்கற்களைக் ( சிவப்பு மண் + பாறை ) கொண்டு அமைந்திருக்கும் இக்குகைகளில் பாண்டவர் தங்கள் வனவாச காலத்தில் 12 ஆண்டுகள் மறைந்திருந்து வாழ்ந்த வாழ்விடம் என்றும் இவை அவர்கள் வணங்கிய திருமூர்த்தங்கள் என்றும் நம்பப்படுகின்றது. 

கோயிலுக்கு உண்டான அமைப்பும் இல்லாமல், எந்தவித வண்ணப் பூச்சுகளோ அலங்காரங்களோ இல்லாமல், வெறும் பாறைகளின் மேல் விதம் விதமான லிங்கங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஐவர் வழிபட்டதால் ஐந்து லிங்கங்கள் இருக்கின்றன என்று ஆர்க்கியாலஜிகல் போர்டு சொல்லியது. இந்த லிங்கங்களின் தண்டும் பீடமும் அமைக்கப்பட்ட முறை எல்லோரா, எலிஃபேண்டா குகைகளை நினைவு படுத்துகிறதாம்.லவ்டோலிம் என்னும் இடத்தில் தொன்மையான கோவாவின் வாழ்வு பற்றிய மெழுகுச் சிலை ம்யூசியம் உள்ளது.  கோவாவின் புராதன வாழ்க்கை, போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னான வாழ்க்கை, அதன் பின் உடைகள் மாற்றம், மதமாற்றம், வீடுகள், உணவு எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டது, புராண குடிகள் பற்றி எல்லாம் பிக் ஃபூட் மியூசியம் என்ற இடத்தில் காக்கப்படுகின்றன. இயற்கைச் சூழலில் மெழுகுச் சிலை உருவங்களைத் தத்ரூபமாகச் செதுக்கிக் காட்டி இருக்கிறார்கள். மீராபாயும் சிற்பமாகச் சமைக்கப்பட்டிருக்கிறார். அவரது வீணை பெரிய தோட்டம் முழுமைக்கும் அமைந்து பிரமிப்பு ஊட்டுகிறது. ஏரியல் வியூவில்தான் முழுமையாகத் தெரியும். 

குகை மாதிரி ஒரு இடத்தின் உள்ளே பிக் ஃபூட் எனப்படும் கடவுளின் குகைக் கோயிலும் குட்டிப் பாறையில் அமைந்திருக்கிறது. ஆனால் அங்கே இருக்கும் பிக் பூட்டின் காலடித் தடங்கள் மிகப் பெரியவை. மிக அருமையான மியூசியம் இது. குழந்தைகளோடு சென்றால் கட்டாயம் ரசிப்பார்கள். குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் இங்கே கிடைக்கும்.

கிட்டத்தட்ட பத்துப் பதினோரு ஃபோர்ட்டுகள் இருந்தாலும் நாங்கள் பார்த்தது பனாஜியில் இருந்து பதினெட்டுக் கிலோமீட்டரில் மாண்டோவி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் அகோடா ஃபோர்ட் மட்டுமே. இது 1612 இல் கட்டப்பட்டதாம். இரட்டைச்சுவர்களும் மெயின் கதவுக்கு முன் இரட்டைக் கதவுகளும்  கொண்ட இது ஒரே நேரத்தில் துறைமுகத்தையும் கடலோர கிராமங்களையும் கண்காணிக்கவசதி கொண்டதால் போர்த்துக்கீசியர்களின் முக்கிய படைத்தளமாக இருந்திருக்கிறது. இங்கே 1864 இல் கட்டப்பட்ட ஆசியாவிலேயே பழமையான 4 மாடி கொண்ட லைட் ஹவுஸ் ஒன்றும் இருக்கிறது. 

கோவா சட்டை, ஷார்ட்ஸ், தொப்பி, ஹவாய் செப்பல் ஆகியன பிரபலம். முந்திரிப் பருப்புகள் செம ருசியாகவும் அளவில் பெரிதாகவும் இருக்கின்றன. அதே போல் நார்த் இந்தியன் இனிப்பு வகைகள் அகர்வால் ஸ்வீட்ஸ் அற்புதமாக இருக்கின்றன. 


அப்புறம் முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல விட்டுட்டேன். நாம் காரில் சென்றால் பீச்சுகளுக்குச் செல்ல பாலங்கள் வழியாகச் செல்லலாம். ஆனால் அங்கே நதியைக் கடக்க ஒரு மாபெரும் படகு செல்கிறது. அதில் துறைமுகம் ஒட்டிப் படகின் சுவர் ஒட்டிக் கொள்ள நம் காரோடு இன்னும் பல கார்களும் வண்டிகளும் ஏறிக் கொள்ள கயிறை லேசாகத் தூக்கிக் கட்டுகிறார்கள். நாம் காரில் உட்கார்ந்தபடியே நதியைக் கண்டுகளித்துக் கடக்கலாம். மிக அற்புதமான பயணம். 

ரயில்வே ஸ்டேஷனில் தமிழ் புத்தகம் விற்கும் கடை ஒன்றும் இருக்கிறது என்பதும் ஏசி ட்ரெயினில் கோவா உணவு வகைகளும் புரோட்டாவும் ருசியான கோழி குருமாவும் 120 ரூபாய்க்குக் கிடைக்கின்றன என்பதும்  கொசுறு தகவல்.


3 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஒரு முறையேனும் கோவா சென்று வரவேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு ஏற்படுத்தி விட்டது நன்றி சகோதரியாரே

G.M Balasubramaniam சொன்னது…

உங்கள் இந்தப்பதிவு நா ந் கோவா சென்றதை எழுதியதை நினைவூட்டிற்று உங்கள் பதிவில் நிறையவே செய்திகள் கோவா நினைவுகள் என்று எழுதி இருந்தேன் சுட்டி இதோ
http://gmbat1649.blogspot.com/2012/06/blog-post_09.html

Thenammai Lakshmanan சொன்னது…

KATAYAM POI VANGKA JAYAKUMAR SAGO

AHAA THANKS BALA SIR

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...