செவ்வாய், 28 மார்ச், 2017

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.

**பப்பு மம்மு பிசைந்து
புஜ்ஜுவுக்கு ஊட்டும்
பாட்டியின் கன்னமெங்கும்
பப்பு மம்மு.

**பாண்டவர்களுக்குப் பன்னிரெண்டு
ராமனுக்குப் பதினான்கு
எனக்கு நானே
விதித்துக் கொள்ளும் ஆரண்யவாசம்
ஆயுள் வரை.

**பண்பாடு வேண்டாம்
கலாச்சாரம் வேண்டாம்
சுதந்திரமாய் இருக்கிறது வாழ்வு.
அதிரப் பறக்கும் விமானத்திலிருந்து
பூர்வகுடிகளின் நிலத்தில்
ஞாபகம் பிறழ விழுந்தது.

**மையலுக்கும்
சமையலுக்கும்
ஒரு ஒற்றுமை
இரண்டும் பக்குவப்பட்டபின்தான்
ருசிக்கும்.


**கீச்சுக் கீச்சென்று
காலையும் மாலையும் இரையும்
ஆலமரம் கடந்தோம்
கடந்தபின்னும்
ரீங்கரித்துக் கொண்டே இருந்தது
காதுகளில் ஆலத்தின் மூச்சு

**எவ்வி எவ்வி
அடி பம்ப்பில்
தண்ணீர் அடிக்கும்
சின்னுவின் சிண்டும்
தண்ணீரைப் போல
எவ்வி எவ்வி விழுகிறது.

**மீளச் செய்கிறது
ஒவ்வொரு விடியலும்
நீளும் யதார்த்தத்துக்கு.

**ஒவ்வொரு ரோஜாவிடமும்
உன்னை மட்டும் பிடிக்குமென்கிறாய்
தோட்டம் முழுமையும்
உன் குரல் எதிரொலிக்க
தம்மைத்தாமே முட்களால்
கீறிக்கொள்கின்றன ரோஜாக்கள்.

**தமிழ்த்தாய் வாழ்த்தும்
தேசியகீதமும் மட்டுமே
ஒன்றாய் இசைக்கிறோம்
மற்றைய பொழுதுகளில்
அவரவர் கீதம் அவரவருக்கு

**கண்ணிலொன்று
இதழிலொன்று
கழுத்திலொன்று
சாரல் துளியாய்
மெல்ல இட்ட முத்தங்களை
மொத்தமாக என்மேல் கொட்டுகிறது
திடீரென வந்த மழை.

டிஸ்கி :- இதையும் பாருங்க.


சில மொக்கைக் குறிப்புகள். - 1

சில மொக்கைக் குறிப்புகள் - 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3. 

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.

 

 

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...