செவ்வாய், 28 மார்ச், 2017

சில மொக்கைக் குறிப்புகள். - 1

**கவிதை மயிலாட
காதல் மேகம் பொழிய
மனமெங்கும் மழை.

**நூறு மணி நேரத்துக்குப் பிறகு
முகமனுப்பி இருக்கிறாய்.
போட்ட நூறு நொடிகளுக்குள்
நூறாயிரம் தரம் நான் இரசித்ததறியாமல்.
நன்றி இப்பவாவது நினைவில் வந்தேனே.

**சாரல் மழை சாய்ந்தாடும் பூ
சுடச் சுட சாயா, சுற்றிவரும் உன் வாசனை
என்னன்னமோ சொல்ல நினைக்கிறேன்
உன்னைப் பார்த்ததும் விழிக்கிறேன்
ஒரு புன்னகை மட்டுமே வீசி
எப்படி ஞாபகமறதி நோயை உண்டாக்குகிறாய்.**மழைத் துளியைப் போல்
சொட்டுச் சொட்டாய்ச் சிதறும்
உன் நினைவில்
நனைந்து கொண்டிருக்கிறேன்.

**சடை பிடித்திழுக்கும் தம்பியும்
சண்டை போடும் தங்கையும்
தொலைதூரம் போய்விட்டார்கள்
பால்யத்திலிருந்து இளமைக்கு.
விட்டுக் கொடுத்துவிடுவதால்
சப்பென்றாகிவிடுகிறது எதுவுமே.

**நனையும் நிலவில்
நாம் கைகோர்த்து
அலைந்ததெல்லாம் உண்மைதானா
கை விரித்துப் பார்க்கிறேன்
உள்ளங்கையில் களங்க நிலவாய்க்
கலைந்து கிடக்கின்றன ரேகைகள்.

**தென்னதோப்பில்
நடந்துகொண்டிருந்தோம்
குறுக்கே விழுந்த கீற்று
நம்மைப் பிரித்தது
பதற்றத்தோடு கீற்றை விலக்கி
பயந்திருந்த முகம் பிடித்து
இரவு வானின் நிலவு இதென்றாய்
இரண்டிலும் கலங்கல்கள் என
பாளைகள் சலசலத்துச் சிரித்தன

**யார் நீ யார் நீ என்கிறாய்
முகமற்றவள் என்கிறேன்
நிலவைப் பொருத்துகிறாய்
நெருப்பைப் பூசுகிறேன்
நீரைத் தெளிக்கிறாய்
தாரையாய் ஓடுகிறேன்
மிதிக்க வேண்டுமெனவே
கல்லாய் ஆக்குகிறாய்
பிறன்மனை நயக்கிறாய்
பொறுத்துப் போகிறேன்
பாண்டவர் துணை என்கிறாய்
பஞ்சமா பாதகத்தாய்
பழிக்காமல் என்னைப் பார்
பால்குடிப் புன்னகை மாறா
நான் பஞ்ச கன்னிகை

**காடு பார்க்க
அழைத்துப் போனான்.
சீறும் சிங்கங்கள்
சிலிர்க்கும் சிறுத்தைகள்
கோப ஓநாய்கள்
கொடி தாவும் குரங்குகள்
பயப்படுத்தும் பாம்புகள்
சே இவைதானா..
வீட்டைவிட ஒன்றும்
பயமாயில்லை காடு

**டாட்டூப் பட்டாம்பூச்சி வரைந்து
அழகுபடுத்துகிறாய்.
வெட்கித் தலைசாய்ந்து
தோளசைக்கும்போதெல்லாம்
சிறகசைக்கின்றன பட்டாம்பூச்சிகள்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

சில மொக்கைக் குறிப்புகள். - 1 

சில மொக்கைக் குறிப்புகள் - 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3.

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...