வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மழலை கிருஷ்ணர் (குலம் வாழும் பிள்ளை தவழும் ) தவழ்ந்த மதுராபுரி. ( ஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில். )

குலம் வாழும் பிள்ளை தவழும் மதுராபுரி. 


குலம் வாழும் பிள்ளை என்று - தவழும் கிருஷ்ணர் விக்ரகம் கொட்டிக் கிடக்கும் ஊர், கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்தி அளிக்கும் –ஸப்தபுரி என்ற ஏழு வைணவத் தலங்களில் ( அயோத்தி, காசி, மாயாபூர், காஞ்சிபுரம், அவந்திகா, துவாரகா, மதுரா )  ஒன்றான ஊர், எந்தச் சப்தமுமில்லாமல் சமரசத்தோடு மசூதியும் மந்திரும் பக்கம் பக்கமாக அமைந்த ஊர், சூரசேன வம்சத்தில் வந்த கம்சன் என்னும் மாமனிடம் இருந்து ( பிறந்தவுடன் சிறையிலிருந்து ) கிருஷ்ணர் தப்பிப் பிழைத்த ஊர், சாலையில் எங்கு சென்றாலும் பசுக்கள் நிறைந்து ஆயர்பாடியோ என்று எண்ணவைக்கும் ஊர், விரஜபூமி என்றழைக்கப்படும் ஊர் , யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் உத்தரப் ப்ரதேசத்தில் இருக்கும் மதுரா.

இஷ்வாகு வம்சத்தில் வந்த சத்ருக்னன், லவணாசுரன் என்னு அரக்கனை அழித்து யமுனை நதிக்கரையில் அர்த்த சந்திர வடிவத்தில் மாடமாளிகைகள் கூட கோபுரங்களோடு இந்நகரை நிர்மாணித்ததாக இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதாம். அதன் பின் யாதவ வம்சத்தில் வந்த வசுதேவர் ஆட்சிசெய்திருக்கிறார். புரூரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த ஆயுவினால் உருவாக்கப்பட்டது இந்நகரம் என்றும் சொல்லப்படுது.

மூன்றாம் நூற்றாண்டில் இது மெதோரான்னு சொல்லப்பட்டதா இங்கே பயணம் செய்த மெகஸ்தனீஸ் குறிப்பிடுகிறார். பாஹியானும் யுவான் சுவாங்கும் இங்க ஒரு காலத்துல – ஆறாம் நூற்றாண்டுல - புத்தமதம் வேரூன்றி விளங்கியதா சொல்றாங்க. பத்தாம் நூற்றாண்டுலயும் பதினாலாம் நூற்றாண்டுலயும் முகமது கஜனியின் படையெடுப்பாலயும் சிக்கர்ந்தர் லோதியின் படையெடுப்பாலயும் இந்நகரத்தோட கோயில்கள் சிதைக்கப்பட்டதா சொல்றாங்க. முகலாயச் சக்கரவர்த்தி ஜாமி ( ஜும்மா ) மஸ்ஜித்ன்னு ஒன்றை கிருஷ்ணர் பிறந்த இடத்துல கட்டி இருக்காரு. அதுக்கு பக்கத்துல கட்டப்பட்ட மந்திர்  துவாரகீஷ் மந்திர்னு சொல்லப்படுது. மிகப்பெரும் கிருஷ்ணர் சிலை கொண்ட இக்கோயிலை பதினெட்டாம் நூற்றாண்டுல சேத் கோகுல்தாஸ் பரீக் அப்பிடீங்கிற குவாலியரைச் சேர்ந்த பணக்காரர் கட்டி இருக்கார்.   புது தில்லியிலிருந்து 145 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள – உத்தர்ப்ரதேசத்தில் அமைந்துள்ள - மதுராவைப் பார்க்க பணிக்கர் ட்ராவல்ஸில் கிளம்பினோம். ஒரே நாளில் சென்று திரும்பும் உத்தேசம் என்பதால் குட்டிப் பிள்ளை குட்டிகளுக்கு ரொட்டியும் சப்ஜியும் மட்டுமே பத்தாது என்று கட்டுசாதமும் கட்டிக் கொண்டோம்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.

என்று கூடப் பயணித்தவர்களுடன் க்ருஷ்ண ஜபம் செய்துகொண்டு வர  எதிர்வந்த குளிரும் வெப்பமுமான காற்றை அனுபவித்துக் கொண்டு எங்கள் காலைப் பயணம் துவங்கியது. யாதவ குலத்தோன்றல் குட்டிக்கிருஷ்ணரைப் பார்க்கும் ஆவல் பெருகியது.


மதுரா, கோகுலம், பிருந்தாவன், கோவர்த்தன், நந்த்காவ், பர்ஸானா  போன்ற விரஜ ( ப்ரிஜ் ) பூமியை வலம் வருவதால் முக்தி கிடைக்குமென்று கருதப்படுவதால் ஏகாதசி, பௌர்ணமி போன்ற விரத தினங்களிலும், தினமுமே கூட ”விரஜ பரிக்ரமா” செய்யும் பக்தர் கூட்டம் பெருகி வருகிறது. சிலர் எல்லா ஸ்தலத்தையும் மாதக்கணக்கில் தங்கி வலம் வருகிறார்கள், அது ”சௌராஸி கோஸ் யாத்ரா ” என்றழைக்கப்படுகிறது.

இது வைணவர்களுக்கு முக்கிய தலங்களில் ஒன்று மட்டுமல்ல. ஐந்து ஆழ்வார்களால் ( பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால் ) மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்கள் கொண்ட ஊரும் கூட. மங்களாசாசனம் செய்யப்பட்ட ஊரை திவ்யக்ஷேத்திரம் என்பார்கள். மரங்கள் நிறைந்திருந்ததால் மதுவனம் என்று அழைக்கப்பட்ட ஊர் அதுவே மதுரா என்றும் வழங்கப்படுகிறது

அயோத்தி ராமஜென்ம பூமி என்றால் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி. அதிலும் புண்ணிய பூமியின் மையப் பகுதி என்பதாலும் வ்ரஜ பூமி என்றழைக்கப்படுகிறது. இங்கே இருக்கும் கேசவ்தேவ் மந்திர்தான் நாம் தரிசிக்க வந்த புண்ணியஸ்தலம்.. ஆனால் இங்கே அநேக ராணுவ வீரர்கள் பாதுகாப்புக் கருதி இருக்கின்றார்கள். இப்போதெல்லாம் கோயில்களில் கூட பாதுகாப்புத் தேவைப்படுகிறது. ! காமிராக்கள் செல்ஃபோன்கள் எல்லாவற்றையும் வெளியிலேயே பாதுகாப்பு லாக்கரில் வைத்துவிடவேண்டும். எங்கும் புகைப்படம் எடுக்கக் கூடாது. முடியவும் முடியாது.

என்ன பசு மாடுகளும் காளைக்ளும் எருதுகளும் அக்கம்பக்கம் அச்சமில்லாமல் சுற்றுவதும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு அங்கங்கே காட்சி தருவதும் சிறிது பயமாகத்தான் இருக்கு. சிறையில் பிறந்த சின்னக் குழந்தையைப் பார்க்க சில சில கட்டுப்பாடுகளைத் தாண்டித்தான் போக வேண்டும் போலிருக்கு !

இரு தளங்களாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான இக்கோயில் கீழ்த்தளத்தில் , அதாவது பாதாளத்தில் சிறையில் கிருஷ்ணர் பிறந்த இடமும், மேலே இன்னொரு பெரிய மந்திருமாக இருக்கிறது. வாயிலில் ஈட்டி தாங்கிய பிரம்மாண்டமான இரு வாயிற்காவலர்கள் சிலைகள் இருக்கின்றன. பின்பு துப்பாக்கி தாங்கிய ஆண் பெண் காவலர்கள் நம்மை முழு உடல் பரிசோதனை செய்த பின் பிரம்மாண்டமான கோயில் வளாகத்துக்குச் செல்லலாம்.

மிக நீண்ட நெடிய பாதைகள். ஒரு செயற்கைக் குன்று, வெட்டவெளியில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துழாய் மார்பனுக்காக எல்லா இடங்களிலும் துளசிச் செடிகள் இருக்கின்றன. தேவகி வசுதேவர் , வாளோடு கம்சன் நிற்கும் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. செந்நிற மார்பிள் கற்களால் சிற்பம் போல செதுக்கப்பட்ட அழகழகான கோபுரமும் குட்டிக் கோபுரங்களும் கண்ணைக் கவர்கின்றன.

அதன் பின் பிரம்மாண்டமான வாயில்கதவுகளைத் தாண்டிச் சென்றால் கீழே இறங்கும் படிகள் அதன் பின் பாதாளத்தில் ஒரு அறை . அவ்வளவு கீழே அல்ல என்றாலும் அண்டர்கிரவுண்ட் போல இருந்தது. மிக சாந்தமாக இரும்பு ஜன்னல் கிராதிகளைக் கொண்ட சிறிய அறை அதில் ஒரு மேடை. அந்த மேடையில்தான் வசுதேவர் தேவகி தம்பதிக்கு எட்டாவது மகவாக ரோஹிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்திருக்கிறார். அங்கே பேரமைதி நிலவியது. அனைவரும் மௌனமாக அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்கள்.

நாமும் மௌனமாக அமர்ந்து கிருஷ்ணர் பிறந்த அந்தக் கணத்துக்குப் போனோம். தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகள் மாமனான கம்சனைக் கொன்று விடுவார்கள் என்று அசரீரி கூற அன்பு மாமனான கம்சன் அக்கிரமக்காரனாகி தேவகியையும் வசுதேவரையும் சிறையில் அடைக்கிறான். அவர்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் தேவகி வசுதேவன் கண்முன் உடனேயே கொன்றுவிடுகிறான்.  எட்டாவதாக மாயக்கண்ணன் பிறக்கும் தருணம்.  வெளியே வாளுடன் கம்சன். கிருஷ்ணர் பிறந்ததும் கம்சன், தேவகி உட்பட அனைவரும் மாய உறக்கத்துக்குப் போக வசுதேவர் மட்டும் கூடையில் வைத்து அவரை யமுனையைக் கடந்து கோகுலத்தில் சேர்ப்பித்து அங்கே பிறந்த மாயாவை எடுத்து வருகிறார். ஒவ்வொரு கணமும் மனம் அதை பதட்டத்தோடு அசைபோட்டது. அதன் பின் கம்சன் வந்து மாயாவைத் தொட அவள் வானத்தில் சென்று அசரீரியாக ஒலித்தது கூட மனக்கண்ணில் தெரிந்தது. மௌனம் கலைய வணங்கி எழுந்தோம்

நந்தகோபரின் குலம் வாழவைக்க வந்த குட்டிக் கிருஷ்ணர் தப்பித்தார் என்று மனதார வணங்கி வெளியே வந்தால் பிரம்மாண்டமான இன்னொரு கோயில் மாடியில் இருந்தது. மார்பிள் சிலைகள், சதுரத் தூண்கள், தசாவதார ஓவியங்கள் என்று கீழே பார்த்த எளிமைக்கு மாறாக படாடோபமாக இருந்தது மேலே இருந்த கோயில். அங்கேயும் வணங்கி எழுந்தோம்.

இந்த விரஜ பூமியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய சஞ்சீ என்னும் மலர்க் கோலமும், ராஸியா எனப்படும் க்ருஷ்ணர் பற்றிய கிராமியப் பாடல்களும், யமுனை நதிக்கரையில் தலையில் தீப அடுக்குகளை ஏந்திய கோபிகளுடனான சார்குலா நடனங்களும் துலந்தி – ஹோலி எனப்படும் திருநாளில் ராதை கிருஷ்ணரின் ராஸலீலையை நினைவுறுத்தி டோலியில் அடித்துப் பாடி ஆடப்படுகின்றன. இவர்கள் பேசும் பாஷை கூட விரஜ் பாஷா - ப்ரஜ்பாஷா ( ஹிந்திதான் உச்சரிப்பு அப்படி ) என்று அழைக்கப்படுகின்றது.

இங்கே கோவர்த்த நேசன் சத்யபாமாவுடன் உறைகிறார். கிருஷ்ண ஜென்மாஷ்டமி விசேஷம். இந்தத் திருவிழாவில் கிருஷ்ண சரிதம் நாடகமாக ஒரு வாரம் நடிக்கப்படுகிறது. பல லட்சம் யாத்ரீகர்கள் அப்போ வருவாங்களாம். இங்கே பால் பொருட்கள், இனிப்பு வகைகள், கடுகு எண்ணெயில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், கண்ணாடி வளையல்கள்தான் முக்கிய வியாபாரம் ஆகுது,

இன்னும் மதுராவில் லோவன் மாதா மந்திர், ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ், கோபிநாத் மஹாராஜ் மந்திர், விஷ்ராம் காட் ( யமுனை நதிக்கரை ), ஸ்ரீ ஜெகன்னாத் மந்திர் புட்டேஷ்வர் மதுரா, மதுரா மியூசியம் ( இங்கே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ) , பிர்லா மந்திர், நாம் யோக் சாதனா மந்திர், இஸ்கான் மந்திர், பிருந்தாவனத்தில் ப்ரேம் மந்திர், சந்த்ரோதய மந்திர் ஆகியன காண வேண்டிய முக்கிய கோயில்கள்.

இரு பக்கமும் கடைகள். அவற்றில் குலம் வாழும் பிள்ளைகள். தலையில் கொண்டையிட்டு ஒரு பக்கம் மயிற்பீலி சொருகி, கையில் வெண்ணைக் குடத்தைப் பற்றித் தவழும் குழந்தைகள், குட்டிக் கிருஷ்ணர்கள் எல்லாக் கடையிலும் இருந்தார்கள். இவர்களை வாங்கி வந்துதான் எங்களூரில் திருமணத்தின் போதே குலம் வாழும் பிள்ளை கொடுத்து வாங்குதல் என்ற சடங்கில் வைத்துக் கொள்வார்கள். பூஜையறையில் மக்கட்பேறு கிடைக்கவும் குழந்தைச் செல்வம் பெருகவும் வைத்து வணங்கி வருவார்கள். நாங்களும் வீட்டில் வைத்து வணங்கவும் நண்பர்களுக்கு வழங்கவும் குட்டிக் கிருஷ்ணர்களைக் குலம்வாழும் பிள்ளைகளை வாங்கி வந்தோம்.


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி சகோதரி...

G.M Balasubramaniam சொன்னது…

நாங்கள் மதுரா சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறேன் இப்போது மீண்டும் உங்கள் இடுகை மூலம் அனுபவிக்கிறேன் வாசகர் ஒற்றுமை ஓங்குக,

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி பாலா சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...