திங்கள், 9 ஜனவரி, 2017

தென் திருப்பதி அரியக்குடியின் மூலைக் கருடனும், சுதர்சனச் சக்கரத்தாழ்வாரும்.

திருப்பதிக்கு நேர்ந்து கொண்டால் கூட அந்தப் ப்ரார்த்தனையை அரியக்குடி பெருமாள் ஏற்றுக் கொள்வதால் நிறைவேற்றி விடலாம். ஆனால் அரியக்குடியில் நேர்ந்துகொண்டால் அந்தப் பிரார்த்தனையை அங்கேயேதான் நிறைவேற்றவேண்டும். அந்தத் திருவேங்கடமுடையான் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பார்கள்.

திருப்பதி பெருமாளைச் சேவிக்கச் சென்ற சேவுகன் செட்டியார் அவர்கள் முதுமை அடைந்ததால் மலை ஏற முடியாமல் தவிக்க பெருமாளே அவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதாக அருள் பாலித்துக் கோயில் கொண்டதால் திருப்பதியை விட அரியக்குடியே அதிகம் சக்தி கொண்டது என்கிறார்கள்.இதைத் தென் திருப்பதி என்றும் சொல்கிறார்கள்.

சேவுகன் செட்டியார் தேடியபோது துளசிச் செடியும் காளாஞ்சியும் குங்குமமும் கண்ட இடத்தில் மூலவர் கிடைத்ததாகச் சொல்வார்கள்.  அங்கேயே பிரம்மாண்டமாகக் கோயில் ( கல் மண்டபங்கள் ) எழுப்பி உள்ளார்கள். வெளிப்பிரகாரத்தில் தசாவதாரச் சிலைகள் உள்ளன.

வருடா வருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்வதோடு அவ்வப்போதும் அரியக்குடி சென்று வருவதுண்டு. மிகச் சிறப்பான வைணவத் தலம் அது.

வைகுண்ட ஏகாதசியன்று பெருங்கூட்டம் இருக்கும். வீட்டிலேயே மானஸபூஜை செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதுண்டு. முடிந்தவர்கள் நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தமும் படிக்கலாம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் 1
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே. 11


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே 1
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே 11

அதைப் பற்றி விரிவா இங்கேயும் பாருங்க. !!!


அரியக்குடி கோயில் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்றாலும் அதன் கீர்த்தி அளவிடற்கரியது.திருப்பதிக்கு நிகரான பெருமை உடையது. அதன் கோயிலும் திருச்சுற்று மாளிகையும் பிரம்மாண்டமானது. இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்களுடன் கண்கவர் காட்சி கொண்டது.

இங்கே பெருமாள் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் இதன் உற்சவர் சேவுகன் செட்டியாரால் ஸ்ரீரங்கத்தில் உடையவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டுவரப்பட்டதாம். அதன் ஒவ்வொரு வாகனங்களும் மிகப் பிரம்மாண்டமானவை.   

ஹரி > அரி குடி கொண்ட ஊர் என்பதால் அரியக்குடி என வழங்கப்படுகிறது. மிக அழகான ஒன்பது நிலைக் கோபுரம். அதன் கருடாழ்வாரின் இருபுறமும் சிங்கங்கள் அமைந்து கவினுறக் காட்சி தருகிறார்கள். மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.

வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்து அரியக்குடிப் பெருமாளைத் தரிசித்து மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தி முடிந்தவர்கள் பழ ஆகாரம் கொண்டு முடிப்பார்கள்.  அநேகர்  நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி, அகத்திக்கீரைப் பொரியல், சுண்டைக்காய்ப் பச்சடி, கருணைக்கிழங்குக் குழம்பு, பாசிப்பருப்பு மசித்து பச்சரிசிச் சோறு, நெய், தயிர் உண்டு விரதம் முடிப்பார்கள்.

முதல்நாள் தூக்கம் வராமல் இருக்க ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்வதும் பரமபதம், தாயம் விளையாடுவதும் உண்டு.

அரியக்குடியில் பிரகாரத்தில் இருக்கும் அழகு கருடாழ்வார். :) இதன் புஷ்கரணியின் பெயர் ஆகாச கங்கை. அது இதன் எதிரில் படிகள் வைத்த மிகப் பெரிய சைஸ் கிணறு போல் இருக்கும்.
ஒன்பது நிலை ராஜ கோபுரம். தெங்கிளங்கீற்றுகளுக்குள் ஒய்யாரக் காட்சி தருகிறது.


உள்ளே புகைப்படம் எடுக்க முடியாது. எனவே வெளியே அழகுக் காட்சி தரும் பெருமாளும் தாயாரும்.உள்ளே தீர்த்தமும், சடாரியும், குங்குமமும் கிடைக்கும் . சேவித்துக் கொண்டு வெளியே வந்தால் மிகப் பிரகாசமான ஒளி முகத்தில் படரும். அவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி.
நந்தவனத்தில் இருக்கும் பெரிய மணி. ( நீதி மணி ?!) கீழே ஒரு பசுவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
சொர்க்க வாசலில் இருந்து வரும் வழி.
வேண்டுதல்கள் நிறைவேற தேங்காய்கள் உடைபடும் மூலக்கருடன் சந்நிதி. 108, 1008  என்று வேண்டிக்கொண்டு உடைப்பார்கள்.
கோயிலின் நீள முன் புற நடை. பிரம்மாண்ட கோட்டைக் கதவுகள் போன்ற வாயிற்கதவுகள். முன்புறம் தெரியும் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் இருக்கின்றன. கூர்ந்து பார்த்தால் தெரியும்.

அரியக்குடிக்கோயிலுக்கு எதிரில் இருக்கும் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் கோயில். சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளே இருக்கிறது.இங்கே தீர்த்தம் & அட்சதை கொடுப்பார்கள்.
துஷ்ட கிரகங்களின் வாதை நீங்க இங்கே நெய்விளக்குப் போடுதல் பிரசித்தம்.
விளக்கில் கூட சங்கும் சக்கரமும் :)


பூஜைக்கு அமரும் மணைப் பலகை ஆமையின் வடிவத்தில்  செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். !

இங்கே ஒரு அழகான நாழிக்கிணறு இருக்கிறது.

சுதர்சன ஹோமத்துக்குத் தயாராய் பூஜைப் பொருட்கள். இங்கே அனுமார் சந்நிதியும் இருக்கு. சக்கரத்தாழ்வார் ஒரு புறமும் நரசிம்மர் ஒரு புறமும் அருள் பாலிக்கிறார்கள். முன்புறத்தில் யோக நரசிம்மர் லெக்ஷ்மி சமேதராக அருள் பாலிக்கிறார். 
கோயிலில் எடுத்த ஒரு புகைப்படம் வீடியோவாக ஆகிவிட்டது. ஆனாலும் அதன் தெய்வீக ஒலி நயம் மனதை வருடியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

டிஸ்கி:- இதையும் பாருங்க.

காஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும்.9 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்களும் தகவல்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்களும் தகவல்களும் சிறப்பாக உள்ளன! மிக்க நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி துளசி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

’தென் திருப்பதி அரியக்குடியின் மூலைக் கருடனும், சுதர்சனச் சக்கரத்தாழ்வாரும்’ என்ற தலைப்பினில் இங்கு கொடுத்துள்ள பதிவும் படங்களும் செய்திகளும் மிகவும் அருமை.

வைகுண்ட ஏகாதஸியை ஒட்டிப் பதிவு கொடுத்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

இந்தப்பதிவினில் ’ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !’ என்ற தலைப்பினில் என் வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள பதிவுக்கான இணைப்பினையும் கொடுத்துள்ளதற்கு
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_5095.html என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இதே போலவே எங்கள் குலதெய்வமான ‘குணசீலம் பெருமாள்’ மிகப்பிரபலமானவர்.

திருப்பதிக்கு வேண்டுதல் செய்வதாக வேண்டிக்கொள்பவர்கள், திருப்பதிக்குத்தான் போக வேண்டும் என்ற அவசியமே இல்லை. இந்தக்கோயிலுக்குச் சென்று செய்தாலே போதும். ஆனால் இங்கு செய்வதாக வேண்டிக்கொண்டு, திருப்பதியில் போய்ச் செய்யக்கூடாது.

திருப்பதி கோயில் பெருமாளுக்கே அண்ணா இவர் எனச் சொல்லுவார்கள். இந்தக் கோயிலும் சுயம்புவாக ஏற்பட்டதே என பல ஸ்தல புராணங்கள் சொல்லுகின்றன.

‘குணசீலம் பெருமாள் கோயில்’ திருச்சி to சேலம் தார் சாலையில் முசிறி என்ற ஊருக்கு மிகவும் முன்னால் உள்ளது. பிரபல சுற்றுலாத்தளமான முக்கொம்புக்கு மிக அருகில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான டவுன் பஸ்கள் இந்தக்கோயிலுக்குச் செல்கின்றன. திருச்சி டவுனிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் மட்டுமே. டவுன் பஸ்ஸில் 45 நிமிடப்பயணம் மட்டுமே. கூட்டம் அதிகமில்லாத நிம்மதியான திவ்ய க்ஷேத்ரமாகும்.

குறிப்பாக மனநலம் குன்றியவர்களுக்கும், தரிஸனம் செய்யவரும் மற்ற அனைவருக்குமே, தினமும் மதியம் 12 மணி சுமாருக்கும், சிறப்பான வழிபாடுகள் நடத்தி, முகத்தில் தீர்த்தம் தெளிப்பார்கள்.

இந்தக்கோயில் பற்றி மேலும் அறிய இதோ சில இணைப்புகள்:

http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html

http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி விஜிகே சார்

குணசீலம் பெருமாள் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன் . இன்னும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. ராஜி அவர்கள் எழுதி இருப்பதும் மிகச் சிறப்பு.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

Thenammai Lakshmanan சொன்னது…
மிக்க நன்றி விஜிகே சார்

குணசீலம் பெருமாள் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன் . இன்னும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. ராஜி அவர்கள் எழுதி இருப்பதும் மிகச் சிறப்பு.//

:))))))))))))))))))))))

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...