புதன், 30 நவம்பர், 2016

ஓங்காரச் சுனையில் மிருதங்க ஒலி.

களத்திர தோஷமும், புத்திர தோஷமும், காலசர்ப்பதோஷமும் இருந்தாலும்,

ஏழிலும் எட்டிலும் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தாலும்,

ஒன்பது கிரகங்களும் லக்னத்திலிருந்து ( ராகுவிலிருந்து கேதுவரை )  தலையும் வாலுமாய்ப் பக்கம் பக்கம் அமர்ந்திருந்தாலும் ( காலசர்ப்ப தோஷம் )

இம்மாதிரித்  தகராறு செய்யும் களத்திரன் ராகுவையும், ஞானகாரகன் கேதுவையும் கார்வார் செய்யணும்னா புகார் செய்யவேண்டிய கடவுள் பேரையூர் நாகநாத சுவாமிதான்.!

இக்கோயில் 1878 இல் ஆவணிமாதம் திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்தில் இராமச்சந்திர மகாராஜா அவர்கள் உத்தரவுப்படி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.  அதன்பின் 99 ஆண்டுகள் கழித்து 1977 இல் மகராஜன் என்பவராலும், 1989 இல் அய்யாக்கண்ணு என்பவராலும் திருக்குடமுழுக்குப் பெருஞ்சாந்திவிழா நடைபெற்றிருக்கிறது.

காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் நமுணசமுத்திரம் தாண்டி அமைந்துள்ளது பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயம் . 42 கிமீ தூரம். இக்கோயிலைப் பார்த்தவுடன் எங்கெங்கும் நாகம் கண்டு ஒரே மிரட்சியாகிவிட்டது. தரையில், மதிலில், கோபுரவாசலில், நந்தவனத்தில் எங்கெங்கும் நாகர்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் மாலை நாலரையிலிருந்து ஆறு மணிக்குள் ராகுகாலத்தில் அங்கே இருக்கும் நாகர் சிலைக்கும் நாகராஜனுக்கும் பால் அபிஷேகம் செய்து நெய்விளக்கு ஏற்றுகின்றார்கள். அழகழகான இளையவர்கள் கூட்டம் அதிகம். பார்த்ததும் அவர்கள் அழகுக்கு இன்னும் ஏன் திருமணமாகவில்லை என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆறு மணிக்குள் பாலாபிஷேகம் செய்து முடித்து விடுகிறார்கள்.
அதன் பின் நாகராஜனுக்கும் நாகநாத சுவாமிக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் அர்ச்சனை.
300 பேர் இருந்த இடம் ஆறுமணிக்குள் பளிச்சென்று கூட்டம் கலைந்துவிட்டது. ஒன்பது வாரம், பதினோரு வாரம் என வேண்டிக்கொண்டு இளைஞர்கள்தாம் தற்போது அதிகம் வருகிறார்கள்.
இங்கே இருக்கும் ஓங்கார வடிவ புஷ்கரணி கண்ணைக் கவர்ந்தது. அதுவும் சுற்றிலும் நாகர்கள் புடை சூழ ஒரு டெரர் சினிமா எஃபக்ட்டில் இருந்தது. பங்குனி மாதத்தில் அதன் மையத்தில் இருக்கும் ஓங்காரச்சுனையின் கரையில் செதுக்கப்பட்டிருக்கும் சூலத்தைத் தொடும் அளவு நீர் உயரும்போது பல்வேறு மிருதங்கங்களின் ஒலி கேட்பதாகச் சொல்கிறார்கள். சிவன் நாகலோகத்தில் நாகர்களுக்காக நடனமாடியபோது எழுந்த ஒலி அது. டமருகச் சத்தம்.
////
நான்கு யுகங்களைக் கண்ட ஆலயம், நாகராஜன்நாகக் கன்னிகைகள் வணங்கி வழிபட்ட தலம், ராகுகேது தோஷம் போக்கும் தலம், திருமணப்பேறு மற்றும் குழந்தைப்பேறு அருளும் இறைவன் என்பது உள்ளிட்ட பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாக நாகநாத சுவாமி திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயமானது, புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரில் வெள்ளாற்றங்கரைக்கு தெற்கே அமைந்துள்ளது.////

/////
புராண வரலாறு

பதினெட்டு தீவுகளுக்கும் மன்னனாக விளங்கிய சலேந்திரன் என்பவன், நாள்தோறும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். யாரும் இல்லாத வேளையில் தினந்தோறும் நாகக்கன்னிகளும் இந்த இறைவனுக்குப் பூஜை செய்வதை வழக்கமாகக்  கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் சலேந்திரன், நாகக் கன்னிகளில் ஒருத்தியைக் காண நேர்ந்தது. அவள் அழகில் மயங்கிய மன்னன், அவள் மீது காதல் கொண்டான்.

இதனால் இறைவன் கட்டளைப்படி, நாக லோகத்தில் வாழும் நாகராஜனுக்கு மகனாகப் பிறந்து நாக கன்னிகையை மணந்து வாழ்ந்தான். எனினும் சிவபூஜையை அவன் தொடர்ந்து செய்து வந்தான். அவனுக்காக ஆலய புஷ்கரணியில் பிலத்துவாரத்தின் வழியே நாக கன்னிகைகள் பூலோகத்துப் பேரையூர் வந்து பூப்பறித்துச் சென்றனர்.

இடைவிடாத பூஜைகளினால் மனம் மகிழ்ந்த இறைவன், சலேந்திரனை அழைத்துவர நந்தியெம்பெருமானிடம் கேட்டுக்கொண்டார். இதனை அறிந்த நாகராஜனும் புஷ்கரணி பிலத்துவாரத்தின் வழியே பேரையூருக்கு உடன் வந்தான். அங்கு தோன்றிய இறைவனைத் தன்னுடைய நாகலோகம் வந்து நடனமாட வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே இறைவன், வாத்திய  இசையுடன் நடனமாடினார். அந்த இசை பேரையூர் புஷ்கரணியில் ஒலித்தது. அதன்பின் ஆண்டுக்கு ஒருமுறை இந்நடனத்தை  பங்குனி மாதத்தில் நிகழ்த்தி வந்தார். இதை நிரூபிக்கும் வகையில், இன்றும் பங்குனிசித்திரை மாதத்தில் ஒருநாள் புஷ்கரணியில் இசை முழக்கம் கேட்பதாக ஆலய அர்ச்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டுகள்

இந்த ஆலயம் மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதற்கு இத்தலத்தின் அமைப்பும், கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டுகளுமே சான்றாக உள்ளன.

கி.பி. 1907–ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின் பத்தொன்பது கல்வெட்டு மூலம், பரகேசரிவர்மன் (கி.பி.1012), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1106), முதலாம் சுந்தர பாண்டியன் (கி.பி.1218–1229), மூன்றாம் ராஜராஜன் (கி.பி.1236), விக்கிரம பாண்டியன், குலசேகரத்தேவன் (கி.பி.1218), முதலாம் குலசேகரன் (கி.பி.1287–1300) முதலான மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது. மேலும், இவற்றின் மூலம் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட கொடைகள், நிலதானம், கால்நடை தானம் போன்றவற்றையும், சமுதாயத்து பழக்க வழக்கங்கள், வழக்குகள் அதன் மீதான தீர்ப்புகள் முதலியவையும் அறியப்படுகிறது///

கோபுரத்தின் மாட்சி.
கோபுர முன்மண்டபம்.
இரட்டை துவஜஸ்தம்பங்கள்.
கம்பீரக் காட்சிதரும் மூன்றுநிலைக் கோபுரம்.
குழந்தைப்பேறு வேண்டுவோர் இந்தத் தல மரத்தில் ( பின்னை மரம் ) பட்டுத்துணியில் கல்வைத்து முடிகிறார்கள்.
முதலில் இடப்புறம் விநாயகர், அதன் பின் நான்கடி உயரமுள்ள நாகராஜர் ( பரிகாரமெல்லாம் இவருக்கு மட்டுமே ) சன்னதி  , அதன்பின் நாகநாதசுவாமி, பெரியநாயகி அம்பாள் (பிரகதாம்பாள் ) சன்னதி, , வள்ளி தெய்வயானை முருகப் பெருமான் சன்னதி, பைரவர் சன்னதி, நவக்ரக சன்னதி  ( அனைத்து கிரகங்களும் சூரியனை மட்டுமே வணங்கி நிற்கும் நவக்கிரக சன்னதி ஸ்பெஷல் ) ,கருவறை சுவரில் வளர்ந்து வரும் சுயம்புலிங்கம் ஆகியோரைத் தரிசிக்கலாம்.
இங்கு ஓங்காரச் சுனையும் சிவகங்கைத் தீர்த்தமும் என இரண்டு ஸ்தல தீர்த்தங்கள். லிங்கோத்பவர், துர்க்கை, சண்டீசர், சண்டீஸ்வரி, அம்பாள், காலபைரவர் என உக்கிர தெய்வங்களின் ஆதிக்கமும் ஓட்டமும் அதிகமாக இருக்கிறது.
நீரிலும் நிலத்திலும் பிலத்திலும்  நாகர்கள்.
வேண்டுதலாய் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட நாகர்கள்.
சுவரிலும் வரிசையாக மதில்களிலும் காவலாக நாகர்கள்.

தோட்டம் துரவு எங்கும் நாகர்கள்.
கொட்டிக்கிடக்கும் நாகர்கள்.
வேண்டுதல் நிறைவேறியதும் ( திருமண பாக்கியம், குழந்தைப்பேறு ) இங்கே கோயிலிலேயே கல்நாகம் வாங்கி வைத்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
கோவிலுக்கு வெளியே கவினுற அமைந்திருக்கும் அழகு ஊருணி.
பரிகாரஸ்தலமான இங்கு ஞாயிறு மாலையில் சீக்கிரம் சென்றால் நன்கு தரிசனம் செய்து திரும்பலாம்.

7 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

தமிழகத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், நாகர்கோயில், பேரையூர் ஆகிய கோயில்களை நாகர் கோயில்கள் என்கின்றனர். இந்த அனைத்துக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். உங்கள் மூலமாக மறுபடியும் பேரையூர். நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

யம்மாடி... எத்தனை நாகர்கள்...!

படங்கள் அனைத்தும் அருமை...

விஸ்வநாத் சொன்னது…

அருமையான கோவில். படங்களுடன் பதிவு செய்தமைக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

நன்றி டிடி சகோ. ஆம் கொஞ்சம் பயமா இருந்தது.

நன்றி விசு சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...