ஞாயிறு, 30 அக்டோபர், 2016

வளம்தரும் வளரொளிநாதரும் வடிவுடை நாயகியும் அருள்தரும் கருப்பரும்.

கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது வைரவன்பட்டி வைரவன் கோயில். காரைக்குடியில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வைரவன் பட்டி. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி தாண்டியவுடன் ஒரு கிலோமீட்டர் பயணத்தில் வைரவன்பட்டியை அடையலாம். இது நகரத்தாரின் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்று.  நகரத்தார் திருப்பணி செய்த நகரச் சிவன்கோயில்.இங்கே நகர சத்திரம், திருமண மண்டபம் உணவுக்கூடம் எல்லாம் இருக்கிறது. திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.

சிற்பக் கலைக்குப் பெயர்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய கோவில். ஐந்து நிலை ராஜகோபுரம், சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லெட்சுமணனைக் காப்பாற்றியதால் விசுவரூப ஆஞ்சநேயரை வணங்கும் ராமர், நாய்வாகனத்துடன் காட்சி தரும் வைரவர், ஏழிசைத்தூண் மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தோஷம் நீக்கும் பல்லி, குடைவரைக் கோயில் பாணியில் அமைந்த சண்டீசர் சன்னதி, போருக்குச் செல்லும் குதிரை வீரன், கண்ணப்ப நாயனார், கொடிப்பெண்கள் சிற்பங்கள், ஏறழிஞ்சில் மரம் , வைரவர் தனது சூலத்தால் உருவாக்கிய வடுகதீர்த்தம்/வைரவதீர்த்தம் என்ற புஷ்கரணி ஆகியன சிறப்பு.

பிரம்மாவின் அகந்தையை அழிக்க சிவன் உருவாக்கிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார். அந்த பைரவர் தண்டமும், பிரம்மன் தலையும், முத்து மாலை, சிலம்பு அணிந்து கோயில் கொண்டுள்ள ஸ்தலம் இது. பைரவர் காக்கும் கடவுள். எல்லா சிவன் கோயில்களிலும் எழுந்தருளி இருப்பார். தினமும் திருக்கோயில் சாவியை பைரவர் சன்னதியில் அனுமதி பெற்று எடுத்து அர்த்தசாம பூசையின்போது அவரிடம் ஒப்படைத்துத்தான் கதவை சாத்துவார்கள்.

மும்மூர்த்திகளிலும் யார் பெரியவர் என்ற போட்டி வந்தபோது அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாராக நின்று ஒளிவடிவமாகத் தோன்றி மலையாகக் குளிர்ந்ததாலேயே இவர் வளர் ஒளி நாதரானார்.
இரண்டு கோபுரங்கள். கட்டுக்கோப்பாக நிர்வாகிக்கப்படும் கோயில் வளாகம். ( இதன் புஷ்கரணியை முன்பே ஒரு இடுகையில் போட்டிருக்கிறேன்.

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும். )

விநாயகர் சன்னதி.
ஐந்து நிலைக் கோபுரம். இது கற்கோயில்.
 இங்கே புடைப்புச் சிற்பங்கள் போல இயற்கைச் சாயத்தால் வரையப்பட்ட ஓவியங்களும் சிறப்பு. மாதிரிக்கு ஒன்று.
ஏழிசைத்தூண் மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி. பின்னே கல்லால மரம். குருமுகம் உபதேசம் பெறும் சனகாதி முனிவர்கள். இங்கே இரு தட்சிணாமூர்த்தி சன்னதி உண்டு.
சங்கு ஊதிக் கருப்பர் சன்னதியில் இருக்கும் விநாயகர். இங்கே  கருப்பரை நேரடியாக தரிசிக்க முடியாது. பிரகாரத்தில் சுற்றி வந்து ஜன்னல் மூலமே தரிசிக்க இயலும். அவ்வளவு சக்தியையும் உக்கிரத்தையும் அங்கே அடக்கி வைத்திருக்கிறார் கருப்பர்.
இனி இதன் வரலாற்றுப் பெருமைகள்.

இத்திருக்கோயில் நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்று. இவ்வூர் முன்பு கேரள வளசிங்க நாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு வளர் ஒளி நாதரே கபால வைரவராகத் திருக்கோலம் கொண்டுள்ளார். மார்த்தாண்ட வைரவர் என்ற திருப்பெயருடன் அம்மனுக்கு உரிய இடத்தில் தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். துன்பங்களைப் போக்கும் அசுரசம்ஹார மூர்த்தியாக இவர் பக்தர்களுக்குக் கேட்ட வரம் அனைத்தும் கொடுத்து அருள் புரிகிறார். இச்சிறப்புகளாலேயே இத்தலம் வைரவன்பட்டி வைரவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோயில் கி. பி. 712 இல் நகரத்தார்களால் கட்டப் பெற்றது. இதன் தென்புறம் வைரவ சாமியின் அருள் போல் பொங்கிப் பெருகும் ஊற்றுக்கண் உள்ள வயிரவ தீர்த்தம் உள்ளது. இது மக்களின் சகல பிணிகளையும் தீர்க்கிறது. இதில் நீராடுவோர் எய்தும் பல பேறுகளில் மகப்பேறு முதன்மை வாய்ந்தது. நினைத்த செயலுக்கு முழுவடிவம் தருவதால் அம்மனுக்கு  வடிவுடைய நாயகி என்று பெயர். உயர்வான புகழ் ஒளி கிடைக்கச் செய்வதால் சுவாமிக்கு வளர் ஒளி நாதர் என்று பெயர்.

பரமாத்மா  இறைவனிடமிருந்து  வந்த உயிர் ( ஜீவாத்மா) மீண்டும் அவர் திருவடிக்கே சென்று வீடுபேறு அடைவதைக் குறிக்கும் ஏறுஅழிஞ்சில் மரம் இக்கோவில் தலவிருட்சம் ஆகும். அதன் கற்சிற்பம் நாகதேவதைகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் வடபுறம் அருள்தரும் கருப்பன் சுவாமி ஆலயம் உள்ளது. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற விரும்புவோர் இங்குள்ள சங்கு ஊதிக் கருப்பரை வழிபட்டு மகிழ்வான வாழ்வு பெறுகிறார்கள்.

சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் கோயில் வைரவன்பட்டிக் கோயில் ஆகும். இங்குள்ள வயிரவரின் மூல விக்கிரகத்தைப் பார்த்தாலே வீரம் வரும். பணிந்தாலோ வெற்றி வரும். எவரையும் வெல்லும் வைரநெஞ்சமும் வரும். இதனை வயிரவர் சன்னதியின் மேல் உள்ள இராமபிரானின் சிற்பம் நன்கு தெரிவிக்கும். யாராலும் துளைக்க முடியாத ஏழு மரா மரங்களை இராமர் வயிரவர் தந்த அருளால் அம்பு செலுத்தித் துளைக்கும் காட்சி வைரவரின் மாட்சிக்கு சாட்சியாகும்.

15 குடைகளைப் பிடித்து நிற்கும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள அழகு மிகு தெட்சிணாமூர்த்தி மீனாட்சி திருக்கல்யாணம், கண்ணப்பநாயனார் புராணம், வாகை சூடிய குதிரை வீரர்கள், ரதி மன்மதன் , ருத்திர தாண்டவம், மாணிக்கவாசகர், யாளி, பல்லி, மயில் ஆகிய சிற்பங்கள் வெகு சிறப்பானவை. கல்லினால் அமைந்த சங்கிலித் தொடர் காணத்தக்கது.

மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள குடைவரைக் கோயிலைப் போல ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சண்டிகேஸ்டரரின் சிற்றாலயம் வியந்து பாராட்டத்தக்கது. நடராஜர் முன் மண்டபத்தில் நுட்பமான வேலைப்பாடுகளை காணக் கண் கோடி வேண்டும்.

சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லெட்சுமணனைக் காப்பாற்றிய ஆஞ்சநேயரை இராமபிரான் வணங்கி நன்றி தெரிவிக்கும் சிற்பம் உலகிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

தெட்சிணாமூர்த்தியின் திருக்கோட்டம் முன்பு மரத்தாலான கோயில்களே இருந்தமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. மரவேலைப்பாட்டின் நகாசு வேலைகளைக் கல்லிலே வடிவமைத்து கலைக்கோயிலாகக் கட்டியுள்ளனர். ஐந்து இசைத்தூண்களுடன் அந்த எழில் மண்டபம் நெஞ்சை அள்ளுகிறது.

நந்திக்குத் தனிமண்டபௌம் தனி விமானமும் இங்கு மட்டுமே காணப்படுகிறது. சூரிய ஒளி சுவாமி சன்னதியில் பரவுவதற்குப் போதிய இடைவெளிகளுடன் அவ்விமானம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மூலிகைகளால் வரையப்பட்ட புராண ஓவியங்கள் சுற்றுப் பிரகார மேற்கூரைகளில் கண்டு இன்புறத்தக்கது.

கல்லிலே கலை வண்ணம் காட்டும் இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் நூற்றுக் கணக்கான சுதைச் சிற்பங்களால் உயர்ந்து விளங்குகிறது. கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்பதைத் தத்துவ விளக்கமாகக் கூறிக்கொண்டிருக்கிறது ராஜ கோபுரம்.

ராஜகோபுர நுழைவாயிலில் உள்ள கொடிப்பெண்களின் சிற்பவேலைப்பாடுகள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன. மயமதம், மானசாரம், சில்ப கலா ரத்னம், போன்ற கோயில் கலை நூல்களில் சொல்லியுள்ளபடி 100 % நிறைவாக அமைந்த கோயில் இந்த வைரவன்பட்டி திருக்கோயிலாகும்.

வாழ்வில் வசந்தம் தரும் வயிரவர்.

ஆத்மலிங்க வழிபாடே சிறந்தது. அதனை அஷ்ட பைரவர்களில் ஒருவரான வயிரவன்பட்டி வயிரவ மூர்த்தி தந்தருள்கிறார். இந்த ஆத்ம வயிரவர் தரிசனம் வாழ்க்கையில் வசந்தம் மலரச் செய்யும். இவ்வயிரவ வழிபாட்டினால் வெற்றியும் செல்வமும் நீங்காப் புகழும் நித்திய பராக்கிரமமும் கிடைக்கும். இங்குள்ள வயிரவ தீர்த்தம் கங்கைக்கு நிகரானது. அவ்வயிரவர் திருக்குளத்தில் நீராடி ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வயிரவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் சந்தான பாக்கியமும் கிடைக்கும். கிரகதோஷம் நீக்கும் கோயில். தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சார்த்தி வணங்குகிறார்கள். ஒரு முறை சென்று வாருங்கள்.

5 கருத்துகள் :

Nat Chander சொன்னது…

well i just can pray to god for two minutes only...
the third minute i get distracted....

பரிவை சே.குமார் சொன்னது…

படங்களுடன் விவரமாய்... நானும் போயிருக்கிறேன் அக்கா...

G.M Balasubramaniam சொன்னது…

நாங்கள் நகரத்தார்கோவில்கள் ஒன்பதுக்கும் சென்று வந்திருக்கிறோம் ஆனால் இத்தனை விஷயங்களை அறிந்திருக்கவில்லை

Thenammai Lakshmanan சொன்னது…

எல்லாருக்கும் அப்படித்தான் சந்தர்

நன்றி குமார் சகோ

நன்றி பாலா சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...