வெள்ளி, 1 ஜூலை, 2016

அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

பெருமாள் கோயில், பத்ரகாளி கோயில், திருவேட்பூருடையார் என்ற ஆட்கொண்டநாதரான சிவன்கோயில் கொண்டிருக்கும் இடம் இரணியூரில் உள்ள இரணிக் கோயில்.

இன்னும் இங்கே பல சிறப்புகள் உண்டு. இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவபெருமான் அருளிய தலம் என்பதால் இது இரணியூர் என்றழைக்கப்படுது. திருமாலை ஆட்கொண்டதால் இவர் ஆட்கொண்டநாதர் என அழைக்கப்படுகிறார். நரசிம்மருக்கு விமோசனம் தந்ததால் இவரை நரசிம்மேசுவரர் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.


ஐந்து நிலைகள் கொண்ட அழகான கோபுரம், சிற்பங்கள், தாவரச் சாறினால் வரையப்பட்ட காலத்தால் அழியாத அற்புத ஓவியங்கள், குபேரன் & வாயு வழிபட்ட தலம், வித்தக விநாயகர், சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் தக்ஷிணா மூர்த்தி, தனித்தனி மயில் வாகனங்களில் முருகன், வள்ளி, தெய்வானை, குபேரமூலையில் குதிரை வாகனத்தில் அமர்ந்திருக்கும் குபேரன் சிலை ( ஐயனார் சிலை போல் இருக்கிறது தோற்றத்தில் ) , இரண்ய மல்யுத்தம், இரண்ய சம்ஹாரம், அஷ்ட பைரவரில் (மற்ற பைரவர்கள் திருப்பத்தூர், மாத்தூர் இன்னும் சில பைரவர் திருக்கோயில்கள் பெயரை அர்ச்சகர் கூறினார் ) இங்கே அமர்ந்திருக்கும் கால பைரவர் சன்னதி அதன் கோஷ்டம் முழுவதும் 108 பைரவ மூர்த்தங்கள் !

அதே போல் அம்மன் சிவபுரந்தேவி சன்னதியின் கோஷ்டம் முழுமையும் 108 லலிதா திரிபுரசுந்தரி உருவங்கள் மட்டுமல்ல சுதந்திர தேவி சிலையும் உயரே செதுக்கப்பட்டு அசர வைக்கும் கோயில் . இன்னும் பலவித பூக்களும் தெய்வத்திருவுருவங்களுமாக எங்கு நோக்கினும் சிற்பங்கள் சிற்பங்கள் சிற்பங்களே.

உக்கிரமும் அதிகமாக இருப்பதால் வக்கிரம் கொண்ட அமைப்பில் கோயில் திரு உருவங்கள் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தூண்களில் நவ துர்க்கைகள் உள்ளிருக்க, அஷ்டலெக்ஷ்மிகளும் வெளிப் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அமைந்திருப்பது இக்கோயிலில் மட்டுமே. பொதுவாக லெக்ஷ்மி உள்ளே இருப்பதும் துர்க்கைகள் வெளிச்சன்னதியில் காவல் காப்பதும்தான் வழக்கம்.

இங்கே இருக்கும் இரணிக்காளி கோயில் மிக விசேஷமானது.  ( என்னை இரணிக்காளி என்று சில சமயம் என் அம்மா அழைப்பார்.  அவ்ளோ உக்கிரமாகவா இருக்கேன்  :) ) அதே போல் நீலமேகப் பெருமாள் கோயிலும். தனித்தனி புஷ்கரணிகளும் உண்டு.

நரசிம்மர் உக்கிரமானபோது சிவன் ( ஆட்கொண்டநாதர் ) சரபேசராக அவர் உக்கிரம் தணித்த கோயில். மேலும் அதனால் அண்ணனைக் கண்ட சிவபுரந்தேவியும் உக்கிரமாகக் காட்சி அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவள் உக்கிரமான போது உருவான நவசக்திகள்தான் நவ துர்க்கைகளாக அருள் பாலிக்கிறார்கள்.

பைரவர் சன்னதியில் இவர் இடது புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் கோரைப் பற்களுடன் காட்சி அளிக்கிறார்.அந்த உக்கிரத்தை உணர முடிகிறது எங்கும்.

இக்கோயில் பற்றி இன்னும் பல தகவல்களை அடுத்து வரும் இடுகைகளில் பகிர்கிறேன். பைரவருக்கு வேண்டிக்கொண்டு வடை மாலை சார்த்துகிறார்கள். நாங்கள் சென்றபோது தங்கக் கவசத்தில் இருந்தார்.அஷ்டமி பூஜை வெகு சிறப்பு.

இனி அங்கே எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

டிஸ்கி :- 1.  

////ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.////அடிக்கடி படித்த பாடல் என்றாலும்இதை பைரவருக்கென்று தனித்தளம் உள்ள இங்கேயிருந்து எடுத்தேன்.

http://bairavararul.blogspot.in/2011/07/blog-post_31.html


டிஸ்கி :- 2 _ என் அன்புத் தோழி கோயில்களின் காதலி, துளசி கோபாலுடன் இங்கே இருக்கும் கோயில்களை எல்லாம் விசிட் செய்யணும்னு ஆசை. அதிலும் இங்கே இருக்கும் நீலகண்டப் பெருமாள் கோயில் சுற்றுப்புற கோஷ்டத்தில் தசாவதாரம் மட்டுமில்லை, கிருஷ்ணரின் லீலைகளும் கூட அழகுச் சிற்பமாகப் பொலிகிறது. அது பற்றி இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். :)5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிற்பங்களைப் பார்ப்பதற்கே இங்கே ஒரு முறை செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. பகிர்விற்கு நன்றி.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அழகிய படங்களுடன்
அருமையான வரிகள்
தொடருங்கள்

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

கோமதி அரசு சொன்னது…

இரணியூர் பற்றி தெரிந்து கொண்டேன். மற்ற பைரவர் கோவில்கள் பார்த்து இருக்கிறேன். இந்த கோவில் பார்க்கவில்லை.
பகிர்வுக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி கோமதி மேம்

அனைவரும் கட்டாயம் சென்று வாருங்கள். அற்புதமான கோயில்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...