வியாழன், 7 ஜனவரி, 2016

குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

தக்காணப் பீடபூமி என்று சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம். கர்நாடகத்தின் இராஷ்ட்ர கூடர்களும் சாளுக்கியர்களும் யாதவர்களும், ஹொய்சாளர்களும் ஆண்டுவந்த பகுதியில் வடக்கு பாகம் குல்பர்கா பகுதி சுல்தானிகளின் ஆதிக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் அவர்களிடமிருந்து ஆசன் கங்கு என்பவர் தலைமையில் போரிட்டுப் பெற்ற பகுதியை ஆசெனாபாத் ( குல்பர்கா ) என்ற தலை நகராகக் கொண்டு பஹாமனியர்கள் பாமினி அரசை நிறுவினார்கள். வாராங்கல் ராஜா குல்சந்தால் கட்டப்பட்ட இக்கோட்டையை பஹாமனியர்கள் இன்னும் உறுதியுள்ளதாக ஆக்கினார்கள்.

அந்த குல்பர்கா அழகான கோட்டை என்று நமக்கு தமிழ் சினிமா பாடல் காட்சிகளும் நடனங்களும் சொல்லி இருக்கின்றன. ஹிந்தி சினிமாவில் கதாநாயகன் ( ஷாரூக் கான் )  கதாநாயகியுடன் ஆடிப் பாடும்போதெல்லாம் இது குல்பர்கா கோட்டையில் எடுத்தது என்று யாராவது சொல்வார்கள். அட அப்படி அழகான அந்தக் கோட்டையை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று நினைத்ததுண்டு.

அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தது, கணவரின் பணி நிமித்தம் குல்பர்காவிலேயே இரண்டு நாட்கள் தங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அங்கே சர்தார் வல்லபாய் படெல் சௌக்கில் மதுரா இன் ஹோட்டலில் தங்கி காலை உணவை காமத் ஹோட்டலில் சாப்பிட்டோம். கேசரி பாத் என்று தெரியாமல் அதை வாங்கி சாப்பிட்டு அசடு வழிந்தது ஒரு வகை. என்றால் நம்மூரு போல் சாம்பார் எல்லாம் ருசியாக இல்லை. தேங்காய் அரைத்துவிட்ட குழம்பு போல இருந்தது. கேசரி பாத்தில் ஒரு முந்திரி இல்லை திராட்சை இல்லை. வெறும் பாத் தான் இருந்தது.

அங்கே நாங்கள் சென்றபோது அந்த ஊரு சட்ட சபையின் ஒரு அங்கத்தினர் தினம் அங்கே சாப்பிட்டுவிட்டுத்தான் விதான் சபாவுக்குச் செல்வார் என்று சொன்னார்கள்.  நாங்கள் போகும்போதே முன்பக்கம் எல்லாம் ஒரே கூட்டம்தான். அட அவ்ளோ நல்லா இருக்குமா என்று நினைத்துப் போக நம்மூரு அன்னபூர்ணா கௌரிசங்கர் உடுப்பியே தேவலாம் என்று இருந்தது. மேலும் பொதுவாக கர்நாடக ஹோட்டல்களில் இரவு சாப்பாடுதான் பிரதானம். டிஃபன் சாப்பிடுபவர்கள் கம்மிதான்.

அந்த ஊரின் சட்டசபையை – மினி விதான் சபாவைப் ( கோட்டை ஸ்டைலில் கட்டப்பட்டது ) பார்த்துவிட்டு இதுபோலத்தான் குல்பர்கா கோட்டையும் இருக்கும் என நினைத்திருந்தேன். ஒரு வேளை இதுதானோ என்ற மயக்கமும் ஏற்பட்டது. அது வெய்யிலாலோ இல்ல சாப்பிட்ட கேசரி எஃபக்டான்னும் தெரியல. J பெரும் மக்கள் கூட்டம் சென்று வந்துகொண்டிருந்தார்கள். அரசு அலுவலகங்கள் எல்லாம் உள்ளேதான். குல்பர்கா மாநிலத் தலைநகரம் அதுதான். இது கர்நாடகாவில் அமைந்திருந்தாலும் பெங்களூரைவிட ஹைதையிலிருந்து சீக்கிரம் போய் வரலாம். 200 கிமி தூரம்தான்.

பக்கத்தில் போலீஸ் ஆஃபீஸ் காம்ப்ளெக்ஸ். இது க்ரீன் பில்டிங்க் கான்செப்டில் கட்டப்பட்டிருக்கு. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க்கவும் நீர் சேமிப்பு, ரீசைக்ளிங் பொருட்களைப் பயன்படுத்தியும் வடிவமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து இயற்கை முறையில் சோலார் டிசைன், மறு சுழற்சி முறையில் மின்சாரம் தயாரித்தல், மின் சக்தி சேமிப்பு ஆகியன பின்பற்றப்படுதாம் ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.

மாலை நாலு மணிக்குப் புறப்பட்டு குல்பர்கா புத்தவிஹார், ( இதைப் பத்தி இன்னொரு தருணத்தில் சொல்கிறேன். ). குல்பர்கா கோட்டை மற்றும் சரணபசவேசுவரர் கோயில் ஆகியவற்றை அடுத்தடுத்துப் பார்த்ததால் குல்பர்கா கோட்டையில் நான் பார்த்தவற்றை மட்டும் சொல்கிறேன். புகைப்படம் எடுத்தவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

குவாலியர் கோட்டைக்குச் சென்று வந்தபின் குல்பர்கா கோட்டையும் அவ்விதமே இருக்கும் என எண்ணியிருந்தேன். அங்கே செல்லச் செல்ல ஆவல் அதிகரித்தது. ஏனெனில் டாக்ஸியில் மிகப் பெரும் அகழியைச் சுற்றிப் போய்க்கொண்டே இருந்தோம். 


தஞ்சைப் பெரிய கோயில் போல ரோடை ஒட்டி ஒரு தடுப்புச் சுவரும் பெரிய அகழியும் இருந்தது. ஆனால் அதில் எல்லாம் நீர்ச்செடிகள் பரவி இருந்தன. கிட்டத்தட்ட 30 அடி ஆழம் இருந்ததாம் இப்போது ஒரு 20 அடி இருக்கும்.

அகழியை ஒட்டி இரட்டை மதில்கள் காணப்பட்டன. வெளிப்புறம் ஒரு குட்டை மதிலும் அதன் உட்புறம் நெடிய மதிலும் இருந்தது. டைனோசர் முதுகுச் செதில் போல அதன் ஓரங்கள் பூரா மெர்லன் எனப்படும் அமைப்புகள் கட்டப்பட்டிருந்தன. அங்கங்கே பாஸ்டியன்ஸ் எனப்படும் ட்ரபீசிய அமைப்புகளும் இருந்தன. மொத்தம்  15 பாஸ்டியன்களும் ( கொத்தளங்கள் ) 26 துப்பாக்கிகளும் இருக்கின்றனவாம். அங்கே நடுவில் இருக்கும் ஒரு கொத்தளத்தில் ( பாஸ்டியனில் ) வைக்கப்பட்டிருக்கும் பீரங்கி 29 அடி நீளத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது.


இங்கே இருக்கும் மதிற்சுவரின் சிறு கொத்தளங்களில் இருந்து சிறிய ஓட்டைகளின் வழியாக அதை ஆக்கிரமிக்க வரும் எதிரிகளைத் துப்பாக்கியால் சுடுவார்களாம். ஏதோ ஒரு கோட்டையில் இப்படி இருக்கும் இடத்திலிருந்து அகழியைத் தாண்டி மதில் மேல் ஏறிவரும் வீரர்களின் மேல் கொப்பரையில் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றுவார்கள் என்று கேட்டிருக்கிறேன்.

இப்போது உருத்தெரியாமல் சிதைந்திருக்கும் இக்கோட்டையில் இருக்கும் முக்கியமான விஷயங்களைச் சொல்லியே ஆகணும். முதலில் ஒரு அழகான மெயின் பாதை. அடுத்து இடது பக்கம் வளைந்து சென்றால் அதன் பக்கம் மத்திய கொத்தளம் ( செண்ட்ரல் பாஸ்டியன் ), மேற்கு கொத்தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 29 அடி உயரமுள்ள பீரங்கி, ஜுமா மசூதி.

இதில் நடை பாதை இருபுறமும் கல்பாவி கான்க்ரீட் சாலை போல உறுதியாக இருக்கிறது. கோட்டை வாயில்களும் சிதையாமல் இருக்கின்றன. இந்த மஸ்ஜித்தின் எதிரில் இரு கட்டிடங்கள் உள்ளன. ஒன்று புது மசூதி போல வெள்ளை பச்சைக் கலரிலும். இன்னொன்று பெரிய கொத்தளமாகவும் உள்ளது.


 ஜும்மா மசூதியின் வெளியே அங்கே தொழுகைக்கு வந்த ஆண்கள் ஒலு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதாவது ப்ரேயருக்கு முன் கை கால் கழுத்து கண் ஆகிய பகுதிகளை நீரால் சுத்தம் செய்வார்கள். இதற்கு ஏற்றாற்போல அங்கே கீழே பைப்புகள் அமைக்கப் பட்டிருந்தன.

வெளிப்புறம் கறுப்படைந்திருந்தாலும் மிகப்பெரிய மசூதி என்று அழைக்கப்படுகிறது ஜும்மா மசூதி. பிதார் கோட்டையின் சோலே கம்பா மசூதி போல இதுவும் பெர்சியன் கட்டடக் கலைக்கும் இந்திய, இஸ்லாமியக் கட்டடக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் இதன் உட்புறம் திகழ்வதாகச் சொல்கிறார்கள். ஈரானின் க்வாஜ்வின் பகுதியிலிருந்து வந்த ரஃபி என்னும் கட்டிடக் கலை வல்லுநரால் 1367 இல் இது வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. வடக்கு தெற்காக 176 அடி நீளமுள்ள இதில் ஒரே நேரத்தில் 5000 பேர் தொழ முடியுமாம். 140 தூண்கள், 250 ஆர்ச்சு வளைவுகள், 5 பெரிய குவிமாடங்கள், கொண்ட இதன் மையக்குவிமாடம் 80 அடி விட்டம் கொண்டதாம். இதன் உட்புறம் முழுக்க பூக்களும் கொடிகளும் வரையப்பட்டுள்ளது. இது போக 63 சின்ன டோம்களும் இருக்கின்றதாம். அடேயப்பா என்று அசந்தோம். 

தொழுகை நேரமாதலால் செல்ல இயலவில்லை. அதிலும் பெண்கள் செல்லாமோ விடுவார்களோ என்று கேட்கவும் யோசனையாக இருந்தது. 

இதன் கட்டிடக் கலை அமைப்பு ஸ்பெயினில் கார்டோவா நகரில் இருக்கும் பிரபல மசூதியின் அமைப்பை ஒத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.ஆனால் யஷ்தானி இந்த மசூதி பைன்சாண்டைன் என்னும் சமகாலக் கட்டிடக் கலையைப் போன்ற துருக்கிய நகரின் கட்டிடக் கலையைப் பின்பற்றிக் கட்டி இருப்பதாக கருதுகிறார்.  

சாண்ட்லியரும் விதம் விதமான ஓவியங்களும் தூண்களின் அமைப்புகளும் ப்ரேயர் ஹாலின் விசாலத்துக்கும் அங்கே பாயும் இயற்கை ஒளி வெள்ளத்துக்குமே பார்க்கப்பட வேண்டிய மசூதி இது. மற்றவை எல்லாம் அழிந்து போக இந்த மசூதி மட்டும் இன்னும் பாதுகாப்பாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. இறைவன் இருக்கும் இடத்துக்கு அழிவேது.

பிரோஸ் ஷா , அகமது ஷா முகம்மது ஷா ஆகிய மன்னர்கள் அங்கே ஆட்சி புரிந்தாலும் 200 ஆண்டுகளிலேயே பஹாமனி அரசர்களின் ஆட்சி போட்டி பொறாமை, மது, மாது, கொலைகள் என்று முடிவுக்கு வந்துவிட்டது. எஞ்சியவை இவை மட்டுமே. அங்கே குடியிருப்புகளும் இருக்கின்றன சொற்ப மனிதர்களும் வசிக்கின்றார்கள். பழைய ஆட்சியாளர்களின் மிச்ச நினைவுகளாய்.  


இன்னும் குல்பர்காவில் சோர் கும்பாஸ், ஷேக் கா ரோஸா, க்வாஜா பந்தா நவாஸ் தர்கா, போன்ற குவிமாடங்களும் தர்காக்களும் நிரம்பிய ஊர். சரித்திரத்தின் ஒவ்வொரு துணுக்கும் அங்கே சிதறிக் கிடக்கும் கற்களில் கொட்டி இருக்கிறது.

குல்பர்கா என்றால் உருதுவில் பூக்கள் மற்றும் தோட்டங்களின் நகரம் என்றும் பொருள் படும். அதே கன்னடத்தில் கலபுராகி  என்றால் கல் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இன்று அந்தப் பூந்தோட்டம் மனிதர்கள் குறைந்து அமைதிப் பூங்காவாய் வெறும் கல்கோட்டைதான் இருக்கிறது.

குல்பர்கா கோட்டையையும் சரண பசவேசுவரர் கோயிலையும் பார்த்துவிட்டு மதுரா இன் ஹோட்டலுக்கு வந்து ஸ்டஃப்டு குல்சா, லச்சா பராத்தா, பாலக் பனீர் என்று  நார்த் இந்தியன் ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிச் சாப்பிட்டு உறங்கச் சென்றோம். மறுநாள் பிதார் கோட்டையைப் பார்க்க வேண்டும் என்ற ப்ளானோடு.

6 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கோட்டைக் கொத்தளங்களின் படங்களும் பதிவும் அருமையோ அருமை. கர்நாடக சட்டசபை விதான் செளதாவுக்குள் நான் ஒரு முறை உள்ளே சென்று சுற்றிப்பார்த்து வந்துள்ளேன். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

venkat சொன்னது…

அருமை பதிவும் படங்களும்.

G.M Balasubramaniam சொன்னது…

ஜும்மா மசூதி என்னும் பெயர் சில சந்தேகங்களைக் கிளப்புகிறதுஅநேக இடங்களில் ஜும்மா மசூதிகள் இருக்கின்றன எதாவது விசேஷ காரணம் இருக்கிறதா. தமிழ் மக்கள் பலருக்கும் தமிழகம் தாண்டிய அரசுகளும் முக்கியத்துவமும் தெரிவதில்லை. அந்த சரித்திரம் பள்ளிகளில் கற்பிக்கப் படுகிறதா ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பதிவும் படங்களும் நன்று. உங்கள் மூலம் நானும் குல்பர்கா கோட்டையைப் பார்த்து ரசித்தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி வெங்கட்

நன்றி பாலா சார். அது பத்தின விபரம் தெரியலையே.

நன்றி வெங்கட் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...