வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிரவண மாதத்தில் சுதாமாபுரி

மொகலாயர்கள், கெயிட்வாக்கள், பேஷ்வாக்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சிகளுக்கு உட்பட்டிருந்த ஒரு துறைமுகநகரமான போர்பந்தர் சுதாமாபுரி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தனை பேர் ஆட்சிக்குப் பின்னும் அங்கே 12,13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறு கோயில் ஒன்று போர்பந்தரின் பவ்ஷிங்ஜி மகாராஜாவால் புனருத்ராதாரணம் செய்யப்பட்டு மிளிர்கிறது. அதுதான் சுதாமா மந்திர்.

கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டான கோயில்

சுதாமரும் பக்த மீராவும் மகாத்மாவும் பிறந்த ஊர் இது. சுதாமா என்பவரை நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நம்ம குசேலர்தாங்க அவர். கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர். உஜ்ஜயினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக் கல்வி முறையில் இருவரும் பயின்றவர்கள். {ஒரு முறை குருவின் வயலில் நீர் அதிகம் வருவதால் மண் வெட்டி அடைக்க கிருஷ்ணர் செல்ல வேண்டி வந்தது. கிருஷ்ணருக்காக குசேலர் தான் சென்று அடைக்கச் சென்றார். நீர் கட்டுப்பட்டு நிற்காமல் வரப்பை உடைத்துக்கொண்டே இருந்தது. வயலில் உள்ள பயிர் அழிந்துவிடும் என்று வரப்பின் உடைபட்ட பகுதியில் தான் படுத்து அடைத்தார் என்பது என் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறிய செவி வழிச் செய்தி. அதேபோல் இன்னொரு முறை கானகத்திற்கு சுள்ளி பொறுக்கச் சென்ற போது இருவருக்கும் உண்ணக் கொடுக்கப்பட்ட அவலை பசியின் காரணமாக சுதாமரே சாப்பிட்டதாகவும் சொன்னார். }

சுதாமாகுண்ட் என்ற கிணறு.
இருவரும் குருகுலக் கல்வி முடிந்ததும் தத்தமது ஊருக்குத் திரும்பினர். குசேலருக்குத் திருமணமாகி ( 27 குழந்தைகள் என்று நினைக்கிறேன் - 27 நட்சத்திரங்கள் என்ற கணக்குப் படி ) சம்சார சாகரத்தில் மூழ்கி தத்தளித்து வந்தார். அப்போது அவர் மனைவி சுசீலா துவாரகையை ஆளும் அவரது நண்பரிடம் உதவி பெற்று வரும்படிக்கூறி ஒரு சிறு முடிச்சில் கிருஷ்ணார்ப்பணம் என்று கூறி அவல் கட்டிக் கொடுக்கிறார் . குசேலர். அவர் வந்திருக்கிறார் என்ற செய்தியறிந்ததும் ஓடிவருகிறார் கிருஷ்ணர். அவருக்கு வரவேற்பு, உணவு உபசாரங்கள் செய்து ஒரு ஆசனத்தில் அமர வைக்கிறார்.ருக்மணி தேவியும் கணவருடன் சேர்ந்து மயிற்பீலியால் வீசி அதிதியை ஆசுவாசம் அடையச் செய்கிறாள்
கிருஷ்ணோபசாரம் :)

அப்போது அவர் குசேலரிடம் கூறுவதாக பள்ளியில் ஒரு செய்யுள் படித்திருக்கிறேன். முழுதும் ஞாபகமில்லை. உங்கள் மனைவி உங்களுடன் இயைந்து குடும்பம் நடத்தும் குணவதியாக இருப்பாள். உங்களைக் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக் கொள்வதோடு உங்கள் குடும்பம் பற்றிய எந்த விஷயங்களையும் வெளியே சொல்லாத நற்குணத்தாளாக இருப்பாள்.  உங்கள் குழந்தைகள் எல்லாம் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள். உங்கள் மனைவி வந்த விருந்து கவனித்து வரும் விருந்தை எதிர்நோக்கும் மனத்தவளாக அமைந்திருப்பாள் என்பதே என்னுடைய எண்ணம். அப்படிப்பட்டவள் எனக்காக என்ன கொடுத்து விட்டிருக்கிறாள்  என்று கேட்கிறார்.
புகைப்படம் எடுக்கத் தடை. ரகசியமாய் ஒரு க்ளிக். :)
கிருஷ்ணரின் செல்வத்தைப் பார்த்துத் தான் கொண்டு வந்திருக்கும் மிகச்சிறிய பரிசான அவலை நினைத்து மிகவும் நாணத்துடன் அமர்ந்திருந்தார் குசேலர்.அவர் கொண்டு வந்த  தண்டம் போன்ற குச்சியில் கட்டப்பட்டிருந்த சிறு முடிச்சைப் பார்த்து அவலை எடுத்துக் கிருஷ்ணர் மகிழ்வோடு உண்கிறார்.  நண்பனிடம் எப்படி உதவி கேட்பது என்று தயக்கத்தோடு தன்னிடம் உதவி கேட்க வந்தும் ஏதும் கேட்காமல் திரும்பிச் செல்லும் குசேலரின் நிலையை உணர்ந்து  முன்னொரு நாள் குசேலர் தனக்குச் செய்த உதவியை மறக்காத கிருஷ்ண பரமாத்மா குசேலரின் தேவைகள் எல்லாம் நிரம்பிடச் செய்தார்.அவர் வீட்டிற்குத் திரும்பும்முன் அவர் வீடு மாளிகையாகி இருக்க மனைவி மக்கள் சந்தோஷமாக இருந்தனர்.

ப்ரகாரத்தில் ஆஞ்சநேயர்.
 எதிர்பார்ப்பு இல்லாத தூய பக்தி எதையும் அளிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதே போல லோகாதயப் பொருட்களில் பற்றில்லாமல் கடவுளின் பால் பற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றார் சுதாமர் என்ற குசேலர். இத்தகைய ஊரில் பிறந்து அகிம்சை, சத்யம் ஆகியவற்றையே சிந்தித்துச் செயலாற்றி வந்த  காந்தியடிகளும் ஒப்பற்ற பெருமைக்குரியவர்.

நெறையப் பிள்ளைகுட்டி பிறந்து நல்லா இருக்கணும்னோ என்னவோ  ராஜஸ்தானிய ஷத்திரியர்கள் திருமணம் முடிந்ததும் இந்தக் கோயிலுக்கு ஆசீர் வாதம் வாங்க வருவாங்களாம். சிரவண மாதத்தில் ( ஆவணி மாதம் ) இங்கே விஜயம் செய்வது சிறப்பென்கிறார்கள். நாங்களும் அந்த மாதமே சென்று வந்தது எதேச்சையான ஆச்சர்யம்.

6 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுதாமாபுரி..... நல்லதோர் கோவில் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. போர்பந்தர் சென்ற போது இக்கோவிலுக்குச் செல்ல வில்லை. அண்ணல் காந்தியின் இல்லத்திற்கு மட்டும் தான் சென்றோம்.

Imayavaramban சொன்னது…

நல்லதொரு பதிவு!

Thenammai Lakshmanan சொன்னது…

அடுத்தமுறை கட்டாயம் பாருங்க வெங்கட் சகோ

நன்றி இமயவரம்பன் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சதாமாபுரி பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி! தகவல்கள் அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...