புதன், 29 ஜூலை, 2015

மல்லிகைப்பூப்பந்தலுக்குள் கோட்டை அம்மன்.

தேவகோட்டை காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள ஊர் என்றாலும் நிறைய உறவினர்கள் எனக்கு அங்கே உண்டு என்றாலும் நேற்றுத்தான் நான் பலகாலமாகச் செல்ல நினைத்த கோட்டை அம்மன் கோயிலுக்குச் சென்று வர முடிந்தது. அழைத்துச் சென்றது என் பெற்றோர்கள்தான்  :)


காவல் தெய்வமாக தேவி அமர்ந்த கோட்டை என்பதால் இவ்வூர் தேவி கோட்டை என்றும் தேவ கோட்டை என்றும் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ஆடி மாதம் அம்மனுக்கே உள்ள ப்ரத்யேக மாதம் என்றாலும் தேவகோட்டையில் உள்ள கோட்டையம்மன் ஆடித் திருவிழா மிகப் ப்ரமாண்டமாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் போதுதான் அம்மனைத் தரிசிக்கலாம். அதுவரை கோயிலில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்திற்குத்தான் வழிபாடு எல்லாமே. வருடம் முழுமைக்கும் நீரில் இருக்கும் அம்மனை ஊரணியில் இருந்து மண் எடுத்துக் கொண்டுவந்து ப்ரதிஷ்டை செய்கிறார்கள். அதன் பின் தினம் ஒரு அலங்காரத்தில் ஜொலிக்கிறாள் கோட்டை அம்மன். செவ்வாய் அன்றும் மேடையில் உள்ள பீடத்துக்குத்தான் அபிஷேகம் ஆராதனை எல்லாம். பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனுக்கும் ஆராதனை அர்ச்சனை உண்டு. நேற்று நாங்கள் சென்றபோது தீபாராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இது பதினைந்து நாள் திருவிழா.

அம்மனுக்குக் கழுத்துரு ( கழுத்திரு ) சார்த்துதல்= ( திருமாங்கல்யம் அணிவித்தல் )  என்றொரு வேண்டுதலும் சிறப்பாக நடைபெறுகிறது. சொல்லிக் கொண்டவர்கள் அதை அலுவலகத்தில் பணம் செலுத்திப் பெற்று அம்மனுக்கு சார்த்தி ஆராதிக்கிறார்கள்.

நேற்று செவ்வாய் ( அம்மன் கோயில் திருவிழாவை நகரத்தார் செவ்வாய் என்று குறிப்பிடுவார்கள். இதற்கு புதிதாகத் திருமணம் ஆன தம்பதியினர் கட்டாயம் கலந்துகொள்வார்கள். சம்பந்தப்பட்ட சம்பந்தப்புரங்களின் வீடுகளில் உறவினர்களையும் சம்பந்தப்புரங்களையும் வீட்டுக்கு வரச்சொல்லி வடிப்பார்கள் . ( செவ்வாய்க்கு வடிப்பது என்றால் விருந்து வைப்பது என்று பொருள். அது சைவ விருந்தாகவும் இருக்கும். அசைவ விருந்தாகவும் இருக்கும். ) .

செவ்வாய் என்பதால் இங்கே பொங்கலும் மாவிளக்கும் வைக்கும் பெண்டிர் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயிலைச் சுற்றி எங்கெங்கும் பொங்கல் & மாவிளக்கு வைப்பவர்கள்தான். மாவிளக்கு என்றால் ஒன்று இரண்டல்ல பதினாறு மாவிளக்குக் கூட ஒரே குடும்பத்தார் போடுகிறார்கள். ( மாவிளக்குப் போடுதல் = மாவிளக்கு வைத்தல் )

முன்பொரு முறை உறவினர் ஒருவர் சொன்னார்., கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அவர் மகள் விரதமிருந்து திருவிழா சமயத்தில் கும்பிடு கரணம் போடுவார் என்று. ( கும்பிடு கரணம் = கும்பிட்டு எழுந்து , எழுந்த இடத்தில் இருந்து பிரகாரம் முழுமைக்கும் திரும்பக் கும்பிட்டு எழுதல். )

இங்கே இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தினரும் திருவிழா முடியும் வரை அசைவம் சமைப்பதில்லை. இந்து மதத்தினர் சமையலில் கடுகுகூட தாளிப்பதில்லை. காப்புக் கட்டும் அன்று இங்கே இருந்தால் காப்பு அவிழ்க்கும் அன்றும் இங்கே இருக்கவேண்டும் என்பது நியதி ( காப்புக் கட்டுதல் = திருவிழா ஆரம்ப தினத்தன்று கோயிலில் நடைபெறும். காப்பு அவிழ்த்தல் என்பது திருவிழா முடிவு அன்று நடைபெறும் . )

கோயிலைச் சுற்றிலும் கூட்டம் கூட்டம். கடைகள், வண்டிகள் வாகனங்கள். அனைத்தையும் தாண்டி நீந்திச் சென்றால் அம்மன் கோயிலைத் தரிசிக்க முடியும்.  அங்கே க்யூவில் மனிதர்கள். கழுத்திரு, புடவை சார்த்தும் இடத்திலும் ஆண்களுக்கே அனுமதி. அம்மனை அருகிருந்து தரிசிக்கும் வாய்ப்பு.

மிகச் சக்தி வாய்ந்த பீடம். காணும்போதே புல்லரித்தது. சக்தியின் பேராற்றல் எங்கும் பரவி இருந்தது. தினம் ஆராதிக்கப்படும் சக்தி பீடத்தைத் தொட்டு வணங்க ஆளாளுக்குப் போட்டி . ஆனால் தொடக்கூடாது என்று அங்கே ஒருவர் சொல்லி விலக்கிக் கொண்டே இருந்தார்.

பூவலங்காரத்தில் ஜொலித்த கோட்டை அம்மனையும் பீடத்தையும் கண்டு வணங்கி நெகிழ்ந்து வழிபட்டு வெளியில் வந்தால் லேசான தூறலோடு மழை ஆரம்பித்துவிட்டது.

பேரெழில் பேராற்றலோடு அவள் பொழிய நான் வழி தவறி ( உறவினர் ஒருவர் கொடுத்த பிரசாத உணவுப் பார்சல்களோடு ) ஒரு குடிசையோரம் ஒதுங்க அது தேன் சிந்துதே வானம் என்று அங்கங்கே என்னை நனைத்தது. ஒரு நிமிடத்துக்குள் பத்துப் பேர் அந்தத் திண்ணையில் ஏறி பேச்சற்று நிற்க,  கிட்டத்தட்ட 30 மாடுகள் மழைக்காக  என்னைச் சுற்றி ஒதுங்க திகில் பட எஃபக்டோடு ஓட்டுநரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கார் நிற்குமிடம் அறிந்து ஆட்டோக்களைச் சுற்றி அங்குமிங்கும்  ஓடி காரைக் கண்டுபிடித்து குளிரக் குளிர நனைந்தபடி அமர்ந்தேன்.!

வானமே பூவாய்க் கொட்ட மல்லிகைப்பூப்பந்தலுக்குள் இருந்தவள் மழைப்பூப்பந்தலுக்குள் எங்களை அனுப்பி இருந்தாள். மழை பெய்வது சுபசகுனம் என்று என்னைக் கோயிலுக்கு அழைத்துச் சென்ற பெற்றவர்கள் கூறினார்கள். :)

புகைப்படம் எடுத்த கைபேசியின் ஸ்க்ரீன் 19:00 லேயே நிற்க காரோட்டியும் திருவிழாவில் முன்பொருமுறை வேறொரு கோயிலில் கருவறை அம்மனைப் படம்பிடித்ததனால் சிலபேருடைய  செல்ஃபோனே ரிப்பேராகி விட்ட கதையைச் சொல்லியபடி வந்தார். அம்மா உன் புகழை  எழுதத்தானே எடுத்தேன் என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தால் பொறியாளர் மகன் அதை சரி செய்து கொடுத்துவிட்டார். :)

டிஸ்கி :- நீதிபதிகள் கற்பக விநாயகம், ஏ ஆர் லெட்சுமணன், சின்னத்திரை புகழ் தேவகோட்டை ராமநாதன், முகநூல் நண்பர் லயன் சின்ன அருணாசலம், அலமு விடீயோஸ் வெங்கடாசலம் ஆகிய ப்ரபலங்கள் இந்த ஊர்க்காரர்கள். இந்த ஊரில் பல்லாண்டுகளாக கந்தர் சஷ்டி விழாவும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது.

டிஸ்கி :- மதுரையில் இருந்து வரும் மல்லியைப் போல கோட்டை மல்லி என்பதும் காரைக்குடியில் பிரசித்தம். ஒரு பத்துப்பூவைத் தொடுத்து வைத்தாலே பூச்செண்டு போல இருக்கும்.

டிஸ்கி:- சகோதரி உமையாள் காயத்ரியின் இந்த இடுகையையும் பாருங்க.

தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடித் திருவிழா9 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுவாரஸ்யம்...

பொறியாளருக்கு எனது பாராட்டை சொல்லிடுங்க...

R.Umayal Gayathri சொன்னது…

மனமெல்லாம் ஊரினிலே
மகிழ்ந்து தந்தாய் நீ பதிவினிலே
கோட்டையம்மனைக் கண்டேன்
கோடி புண்ணியம் கொண்டேன்

நன்றி தேனு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

விழா வர்ணனை அருமை சிறப்புகள் அறிந்தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி .. சொல்லிட்டேன் டிடி சகோ :)

நன்றி முரளிதரன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

பரிவை சே.குமார் சொன்னது…

கோட்டையம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் அக்கா...
காப்புக் கட்டியதும் தேவகோட்டை நகருக்குள் ஆடு, கோழி வெட்டுவதில்லை... விற்பனையாளர்கள் எல்லாம் தேவகோட்டை ஆற்றுப் பாலத்துக்கு அந்தப்பக்கம் கடை போடுவார்கள்....
தாங்கள் சென்று வந்தது மகிழ்ச்ச்சி.

G.M Balasubramaniam சொன்னது…

இந்தப் பதிவிலும் நான் சொன்ன பிரச்சனை தொடர்கிறது. பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் .

Thenammai Lakshmanan சொன்னது…

அருமையான கவிதைப் பின்னூட்டம். ! நன்றி உமா :)

நன்றி குமார் தம்பி

பாலா சார் என்ன செய்வதுன்னு தெரில. எனக்கு ஒன்று போலவே இருக்கு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான படங்களுடன் தங்கள் ஊர் கோட்டை அம்மனைப் பற்றிய தகவல்களை அறிந்தோம். அந்த அம்மனின் அருள் தங்களுக்கு எப்போதுமே தங்களுக்குத் துணையாக இருக்கும்! ஐயமில்லை!

பொறியாளர் மகனுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கவும்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...