திங்கள், 23 மார்ச், 2015

பான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 1. புதிய பயணியில்
குவாலியர் என்றதும் நமக்கு சிந்தியாக்கள்தானே ஞாபகத்துக்கு வருவார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகப் பெரும் அளவில்  நடைபெற்ற சதி என்ற உடன்கட்டை ஏறுதலும் குவாலியர் கோட்டையில் நிகழ்ந்திருக்கிறது. இது இசைக்கலைஞர் தான்சேன் நகரி பிறந்த ஊர் கூட.


மத்தியப் ப்ரதேசத்தில் இருக்கும் குவாலியர் ஒரு மலை நகரம். இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் இது பள்ளத்தாக்கும் , ஏரியும், சமவெளியும் கலந்து ஒரு அற்புதமான நகரம். ஸ்வர்ணரேகா என்ற ஆறு பாயும் தங்க நகரம். 
ஹாத்தி பூல்

கோவில்கள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகம் ஆகியவற்றோடு கூட நிறைய கல்விக்கூடங்களும் கல்லூரிகளும் தொழிற் பயிற்சி நிலையங்களும் சேர்ந்து பழமையும் புதுமையுமாகக் காட்சியளிக்கிறது குவாலியர். காலை நேரங்களிலேயே வெய்யில் சீராட்டத் துவங்கி விடுவதால் மக்கள் அனைவரும் கண் மட்டும் தெரிய மாஸ்க் போல அணிந்துதான் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். 

மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த மிகப் பெரும் கோட்டை குவாலியர் கோட்டை. ஊரின் பெரும்பகுதியைக் கோட்டைதான் ஆக்கிரமித்திருக்கிறது. கோட்டைகளைக் கைப்பற்றும் போரில் இந்திய மன்னர்களும் அந்நிய மன்னர்களும் முகலாய மன்னர்களும் அதிகம் ஆசை வைத்தது குவாலியர் கோட்டை மேல்தான். உர்வாஹ் சமவெளி வழியாக குவாலியர் வந்தடைந்த மன்னர் பாபர் கோட்டைகளாலான இந்தியாவின் கழுத்து அணிச்சரத்தில் பதிக்கப்பட்ட அழகிய முத்து என்று மகிழ்ந்து பாராட்டினாராம். 

6 ஆம் நூற்றாண்டில் ஹூணர்களும், 9 ஆம் நூற்றாண்டு வரை கூர்ச்சர பிரதிஹரர்களும், பத்தாம் நூற்றாண்டில் கச்வாஹா ராஜபுத்திரர்களும், 11 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானிய அடிமை வம்சத்தின் அரசர் குத்புதீன் ஐபக்கும், 12 ஆம்  நூற்றாண்டில் சம்சுதீன் அல்டுமிஷும் அரசாட்சி செய்திருக்கிறார்கள். அதன் பின் முகலாயர்களும், 15 ஆம் விக்கிரமாதித்யா என்ற அரசரும், 18, 19 ஆம் நூற்றாண்டில் மராத்தியரின் ஒரு பிரிவினரான சிந்தியாக்களும் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் மாதவராவ்ஜி ஷிண்டே )ஆண்டு வந்திருக்கிறார்கள். 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆங்கிலேயர்கள் இதை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருக்கிறார்கள்.

விந்திய மலைகளின் மேல் கட்டப்பட்ட நான்கு அடுக்குக் கோட்டை இது. இரண்டு அடுக்குகள் கீழேயும் இரண்டு அடுக்குகள் மேலேயும் தென்படுகின்றன.குவாலியர் கோட்டை, சூரஜ் குண்ட், ஜௌஹார் குண்ட், ,கேசர் குண்ட், பூல் பாக், ஹாத்தி பூல், மன்மந்திர் அரண்மனை, கரண் மஹால், ஜெய்விலாஸ் மஹால், குஜ்ரி மஹால், விவஸ்வான் மந்திர், (சூரியனார் கோயில்) பார்க்கத்தக்கன. இங்கே இருக்கும் கணேஷ் மந்திரில் தான் முதன் முதலாக பூஜ்யம் என்ற எண் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்றாங்க. 

சூரஜ் சென் என்ற அரசர் ஒரு முறை கானகத்தில் வழி தெரியாமல் தவித்தபோது குவாலிபா என்ற ஒரு சாது அவருக்கு வழிகாட்டினார். மேலும் தாகவிடாயால் தவித்த அவருக்கு அங்கே இருந்த ஏரித்தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். தாகவிடாய் தீர்ந்தோடு அல்ல அவரைப் பீடித்த குஷ்டநோயும் குணமானதால் மன்னன் சூரஜ் சென் அவருக்கு கைமாறு செய்ய எண்ணியபோது சாது வனவிலங்குகளின் ஆதிக்கத்திலிருந்து யக்ஞம் செய்யும் சாதுக்களைக் காக்க மிகப் பெரும் மதிலை எழுப்புமாறு கூறினார். அதன்படி அரசன் மதில் கட்டினார். அதன் பின் இக்கோட்டையையும் கட்டி இந்த நகருக்கு சாதுவின் பெயரைச் சூட்டினார். அதனால் குவாலியர் ஆனது. 

சூரஜ் மன்னர் நீர் அருந்தி குணமான ஏரி சூரஜ் குண்ட் என்று அழைக்கப்படுகிறது. யானை வரும் பாதை ஹாத்தி பூல் என்றும், பூந்தோட்டம் பூல் பாக் என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு வாயில்களைக் கடந்து கோட்டைக்கு உள் நுழையும் ஏழாம் நுழைவாயில்தான் ஹாத்தி பூல். மிகப் பெரும் கட்டுக் காவல் கொண்ட கோட்டை இது. 


அங்கே வாயில் யானை நுழையும் அளவு பெரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கு. ஒரு யானையின் சிலையும் நிறுவப்பட்டிருக்கு. ராஜா மான்சிங் கட்டிய அரண்மனையைத்தான் மன்மந்திர்னு சொல்றாங்க. இது குவிந்த மாடத்துடன் உருளை வடிவ கோபுரங்களுடனும் அமைக்கப்பட்டிருக்கு. காவலுக்கு வீரர்கள் நிற்பதற்கு ஏற்ப வெளிப்புறப் பலகணிகளும் இருக்கு. 

 கோட்டையிலிருக்கும் அரண்மனை மன்மந்திர் என்றும், நகருள் இருக்கும் சிந்தியாக்கள் வசிக்கும் இன்னொரு அரண்மனை ஜெய்விலாஸ் மஹால் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்தக் கோட்டைகளிலும் மஹால்களிலும் யாரும் தற்போது வசிக்கவில்லை. 
என் பின்னே இருப்பதுதான் ஜௌஹார் குண்ட்.அது தெரியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன். :(

இந்த ஜௌஹார் குண்ட் தான் 12 ஆம் நூற்றாண்டில் ஆயிரக் கணக்கான ராஜ்புத்திரப் பெண்களைக் காவு கொண்ட இடம். சம்சுதீர் அல்டுமிஷ் இந்நகரை வெற்றி கொண்டபோது அவர்கள் கோட்டையினுள் நுழையுமுன் ஆயிரக்கணக்கான ராஜபுத்திர ராணிகள் அந்நியர் வசம் அகப்படலாகாது என்று அங்கே இருந்த குளத்தில் குதித்து இறந்திருக்கிறார்கள். இந்தக் குளத்தில் இருந்துதான் கோட்டை முழுமைக்கும் தண்ணீர் சேமித்து வழங்கப்பட்டிருக்கிறது. அது போக ஜௌகார் குண்ட் என்ற சிதையை மூட்டி அதில் அனைவரும் உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள். கொளுத்தும் வெய்யிலில் அந்த ஊரில் இருப்பதே கடினமாக இருந்தது. அதில் கொழுந்துவிட்டு எரிந்திருக்கும் ராணிகளை நினைத்தால் வருத்தமாகத்தான் இருந்தது. 

இக்கோயிலும் கோட்டையும் ரெட் சாண்ட் ஸ்டோன் எனப்படும் செம்மணல் கற்களால் ஆனது. குவாலியர் கோட்டையில் குரு ஹர்கோபிந்த் சிங் பேரரசர் ஜஹாங்கீரார் சிறை வைக்கப்பட்டிருந்தாராம். அதன் பின் இங்கே ஒரு குருத்துவாரா நிறுவப்பட்டதாகச் சொல்றாங்க. ஜைனர்களின் தீர்த்தங்கரர் சிலைகளும் , அவர்கள் செதுக்கிய பிரமாண்ட கல்வெட்டுகளும் இருக்கின்றன.
சீன ட்ராகன் உருவங்கள் ( கையால் வடிவமைக்கப்பட்டவை ) மத்திய கால இந்தியக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. 


சீன ட்ராகன் உருவங்கள் ( கையால் வடிவமைக்கப்பட்டவை ) மத்திய கால இந்தியக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. 

 கோட்டையைப் பார்க்கும்போதே எத்தனை மனிதர்களின் உழைப்பு, எத்தனை நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கின்றது என்று புரியும்.

டிஸ்கி:- ஜனவரி 2015 இல்  வெளியிடப்பட்டுள்ள முதல் பயணி இதழில் இந்தக்கட்டுரை பிரசுரமானது. இன்னும் இரு பாகங்களை அடுத்தடுத்து வெளியிடுகிறேன். :)

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்களே அசர வைக்கிறது...

மனோ சாமிநாதன் சொன்னது…

புகைப்படங்களும் தகவல்களும் மிக‌ அருமை! அதுவும் அந்த ஹாத்தி பூல் பிரமிக்க வைக்கிறது!

Ponchandar சொன்னது…

இந்திய விமானப்படையில் சேர்ந்து குவாலியரில் நான்கு வருடங்கள் இருந்திருக்கிறேன். கோட்டையை பார்த்ததுண்டு..இவ்வளவு விஷயங்கள் எனக்குத் தெரியாது. அருமை....

டைனிங் மேஜையில் இரு ட்ரெயின் உண்டே ! ! !

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி மனோ மேம்

முதன் முதலில் கருத்திட்டுள்ளமைக்கு நன்றி பொன்சந்தர்.
ஓரளவு சுற்றிப் பார்த்தோம். டைனிங் மேஜையில் இரு ட்ரெயின் எங்க இருக்கு.. நாங்க பார்க்கலையே.

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Ponchandar சொன்னது…

https://www.youtube.com/watch?v=g7zbL-6ufsI வெள்ளியினால் செய்யப்பட்ட ட்ரெயின் அது. யூட்யூபில் பாருங்கள்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...