எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 மார்ச், 2014

புத்தக வாசம்:-



புத்தக வாசம்
==================

கண்ணை மூட முடியவில்லை. அந்தப் புத்தக நிலையத்தின் வாசம் முழுக்க உடம்பெல்லாம், மனசெல்லாம், அப்பிக் கொண்ட மாதிரி இருந்தது. தேடித் தேடி எடுத்த புத்தகம் இது. பன்னிரண்டு ரூபாய் முட்ட முழுசாய். என்னுடைய தகுதிக்கு அது அளவுக்கு மீறியதுதான். அப்பா பணம் அனுப்புவது டியூஷன் ஃபீஸுக்கும் மெஸ்ஸுக்கும்தான்.

அதிலேயும் ’மில்க்கும் எக்கும்’ வாங்காமல் இப்பிடித் தகிடுதித்தம். அப்பா வாராவாராம் ”ஏம்மா எக்ஸ்ட்ராஸ் எல்லாம் எடுக்குறியா.?”. ஓ.. ரெகுலரா எடுக்குறேம்பா “ . ”பிள்ளை மெலிஞ்சுக்கிட்டே போகுது, முடியும் இப்பிடிக் கொட்டுதே ”. தனக்குக் கவலைப்பட ஆளிருப்பதாலேயே வெளியில் ஒரு நமுட்டுச் சிரிப்பு உதிர்க்கும்.

அம்மாவுக்குத் தெரியும் நான் பாங்கில் பணம் போடுவது. ரொம்ப நாள் ஆசை. நாலாங்கிளாசிலிருந்தே ’புத்தகக் கடையிலிருக்கிற அத்தனை புத்தகத்தையும் வாங்கிவிட வேண்டும். ‘. பள்ளிக்கூடத்திலேயே வருடா வருடம் புது நோட், புக்ஸ் எல்லாம் பீஸ் கட்டி வாங்கும்போது விடிறி அடிப்பதாய் ஒரு கையில் பிடித்து மறுகையால் படபடவென்று பிரித்து மூக்கருகில் வைத்து அத்தனை புத்தகங்களையும் சலிக்காமல் வாசம் பார்ப்பேன்.


புத்தகப் பித்து. பித்து.. மூன்றாம் கிளாசிலேருந்தே எல்லாக் கதையும் எல்லாப் புத்தகமும், மிக்சர் பொட்டலம் கட்டியிருந்த பேப்பராயிருந்தாலும் படிப்பேன். அம்மாவிடம் நன்றாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன் செமத்தியாய்.

இதற்காய் அம்மா ஒரு அழகான பைண்டிங் புக்கை – ‘இவள் அல்லவோ பெண்’ – கிழித்து வெந்நீர் அடுப்பில் போட்டு விட்டிருந்தும் எனக்குப் படிப்பின் மேல் பைத்தியம். ஒரு சில நாள் அம்மா குறிப்பிட்ட வேலைகளைக் கொடுத்து இதையெல்லாம் முடித்தால்தான், ’ஆனந்த விகடன்’ என்று கூறுவார்கள்.

வீட்டை மெழுகிக் கொண்டே’அழகு’ கதையில் பாதி, உளுந்தில் கரம்பைப் பொறுக்கிக் கொண்டே ‘மரண அடி மல்லப்பா’ காப்பித்தூளை டின்னில் கொட்டிக் கொண்டே ‘ப்ளான் பட்டாபி’ படித்து இருக்கிறேன். 

ஒரு சில நாள் அம்மா புத்தகங்களை அடுக்கி தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு படுத்து விடுவார்கள். மறுநாள் காலை பல் கூட விளக்காமல் எழுந்து அம்மா தலையணைக் கீழ் புக் உருவி முதல் ரூமில் போய் உட்கார்ந்து படித்துவிட்டு அவசர அவசரமாய் வாசலில் கோலம் போட்டுப் பால் காய்ச்சி விடுவேன்.

ஒரு தடவை அம்மாவுக்கு அந்தத் திருட்டுத்தனமும் தெரிந்து போயிற்று.

எப்போதாவது சாயந்தர வேளைகளில் யார் வீட்டுக்காவது போக நேரும்போது நடு ரூம் ஷெல்பில் அம்மா என்னை ‘மாதிரி’ பார்க்கவென்றே புத்தகங்களை தடுக்குகளுக்கிடையில் மறைத்துப் போட்டுப் போவதுண்டு. வாசல் கதவை நன்றாகத் தாள் போட்டுவிட்டுப் படிக்கும்போது அம்மா செருப்புச் சத்தம் கேட்காமல் மெல்ல வந்து ‘படக்’கென்று கதவை அழுத்தித் திறந்துவிடும்போது புத்தகத்தைச் ‘சடக்’ கென்று செல்ஃபில் சொருகிவிட்டு விலாங்கு மீனாய்ப் பாய்ந்து (உடல் வலிக்காது) தரையில் கரெக்டாய்ப் புத்தகங்களுக்குப் பக்கத்தில் – விரித்திருக்கும் பாடப் புத்தகங்கள்- விழுவேன். அம்மா தம்பிகளை எல்லாம் எழுப்பிக் கேட்பார்கள். ஆனாலும் ஒரு த்ரில் இருக்கும். படிக்காதே படிக்காதே என்னும்போது திருட்டுத்தனமாகவேணும் அதில் என்ன இருக்கும் எனத் தெரிந்து கொள்ளவேணும் படிப்பது.

சகுந்தலா மாமி வள்ளிக்கண்ணு சின்னப் பிள்ளையாய் இருக்கும்போது கடைக்கோ, யார் வீட்டு விசேஷத்துக்கோ செல்ல நேர்ந்தால் கூப்பிட்டுக் கையில் சத்தியம் வாங்கிய பின்பு – நீங்க இங்க வர்றவரைக்கும் கதைப் புத்தகம் படிக்கமாட்டேன். புள்ளையப் பத்திரமாய்க் கவனிச்சுக்குவேன் – செல்வார்கள். அதற்கு மட்டும் கட்டுப்பட்டுக் கிடப்பேன். புத்தகங்கள் பரவிக் கிடக்கும் பிள்ளையை வைத்துக் கொண்டு கூத்தாடிக் கொஞ்சி, டிரஸ் மாத்தி மூளையைத் திருப்பி அதனுடன் விளையாடிக்  கொண்டிருப்பேன்.

ரெண்டாங்கட்டுப் பாட்டிதான் என்னுடைய புத்தகப் பித்துக்குப் பெரும் காரணம். மெத்தவும் நன்றி சொல்ல வேணும். ‘அடி இவ சோடாப்புட்டிக் கண்ணாடிதான் மாட்டப் போறா. ‘ ‘ சொம்மா சொம்மா படிச்சிக்கினே கிடக்குறதில்ல..’.

பின்னே அவ்வளவு பெரிய வீட்டில் வீடு கூட்ட, டிரஸ் துவைக்க, சமைக்கப் பரிமாற என ஆட்கள் இருக்கும்போது பேசுவதற்கும் வயதானே ஆள்களே இருக்கும்போது – ( விசேஷ நாட்கள் தவிர) – புத்தகமும் படிக்காவிட்டால் நிச்சயம் கிறுக்குப் பிடித்துத்தான் போகும்.

சின்ன வயசில் கமலாதாஸ் பத்திப் படிச்சிருக்கேன். ஒண்ணும் புரியாது. ஆனாலும் படிப்பேன். எல்லாரும் படிக்காதே அப்பிடின்னு பிடுங்கிப் பிடுங்கி வைக்கிறப்ப அதைப் படிச்சா என்ன., அப்பிடி என்ன இருக்கப் போகுதுன்னு தோணும்.

இத்தனை நாளும் ஓசிப் புத்தகங்கள்தான். லெண்டிங் லைப்ரரி புத்தகங்கள் முன்பெல்லாம் வாங்கினார்கள். பிறகு வீட்டில் ஆனந்த விகடனும், குமுதமும் கல்கண்டும், கல்கியும், வாங்கினார்கள். எல்லாம் விலைக்குப் போட வேண்டுமென்று அம்மா ஒரு புத்தகத்தில் கூடத் தொடர்கதைகள் எடுக்க விட்டதில்லை. இருந்தாலும் மனலைப்ரரியில் நினைவு ஷெல்ஃபுகளில் அந்தக் கதைகள் குந்தியிருக்கிறது.

இங்கே வந்தபின்பு லைப்ரரிதான் சதம். புதிதாய் இப்போது சில தனிப்பதிப்புக்களும் ஒருவரின் கைங்கரியமாய்ப் புதுவாசனையாய் நுகரமுடிகின்றது. இருந்தாலும் மனசில் ஒரு குறைவு. ஒரு புத்தகமாவது சொந்தமாய் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எப்படி.. எப்படி..

அந்த அற்புதம் நிகழ்ந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாய் ஒரு புத்தகக் கண்காட்சியே கல்லூரி வரவேற்பறையில் நடத்தப்பட எல்லாம் புத்தகங்கள். பால் மணம் மாறாத பச்சை மண்களாய், முற்றியும் முற்றாமலும் பசுமையாய்த் தலையில் பால் வைத்திருக்கும் பயிர்களாய், திருமணத்துக்குக் காத்திருக்கும் பருவம் வந்த பெண்களாய்,  கருத்துக்களைக் கருக்கொண்டு படிப்பவரின் பார்வை ஆபரேஷனில் சுகப்பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளாய், நாலைந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பஸ்தனாய் எத்தனை புத்தகங்கள். வெள்ளைக் குழந்தைகள்.. அவை அழுக்குப் படியாத வெள்ளைக் குழந்தைகள்.

தேடித் தேடிப் பொறுக்கி எடுத்துத் தடவிப் பார்த்து பாலகுமாரனாய் ஆராய்ச்சி செய்து கடைசியில் புத்தக வாசங்களுக்குள் புதைந்து எழுந்து புதைந்து எழுந்து புரட்டிப் போட்டு உருவி எடுத்தேன் பச்சை வயல் மனது.

ரூமில் கொண்டு வந்து அன்னைக்கு முழுக்க முழுக்க உல்லாசம். கிளாஸ் ஊரில் உட்கார்ந்து அட்டையை ஸ்பரிசித்து அதன் வழுவழுப்பை உணர்ந்து நிலை கொள்ளாத சந்தோஷம். அந்த புக்கை மூக்குக்கு எதிரே பிடித்துப் பிரித்து வாசம் பார்த்தல்.. மூக்கையே புத்தகத்துக்குள் புதைத்து விட்டேன்.

இதற்குக் கண்ணாடிப் பேப்பரில்தான் கவர் போட வேண்டும். ரெண்டு ஓரம் மட்டும் பின் அடிக்க வேண்டும். பிரிந்து கொள்ளாமலிருக்கும். 

‘ஹுர்ரே… எனக்கு எனக்கு மட்டுமேய் எனக்கே எனக்குச் சொந்தமாய் ஒரு புக்கு வாங்கிட்டேன். இது இன்னைக்குத்தான் வாங்குனேன்’ ஏகப் பீத்தல். டமாரம் கட்டாத குறைதான். மற்றபடி காலேஜுக்கே அனௌன்ஸ் பண்ண மாதிரித்தான். கிளாஸ் ஹவர்ஸ் நடுவில் லேசாய் ரெண்டு விரல் நடுவில் பிரித்துக் கதையை அரையும் குறையுமாய்ப் படித்து, மிஸ் போர்டை விட்டுத் திரும்பியதும் மடியுள் மெதுவாய்ப் பதித்து, இன்னும் அந்த சந்தோஷம் மனதுள் துள்ளிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல பல்லியின் வாலசைப்பாய், சந்தோஷக் கவுளியாய்.

“ஹை .. உனக்கெப்படித் தெரியும்.. எனக்கு இன்னிக்குப் பிறந்த நாளுன்னு. எனக்கு பாலகுமாரன் கதைகள் பிடிக்குனு யாரு சொன்னா உனக்கு. எனக்குத்தான் ப்ரஸண்ட் பண்ண வாங்கினியா. ரொம்ப தாங்க்ஸ். வெரி நைஸ் வெரி நைஸ். “ குழந்தைக் குட்டியாய்ப் பிரியமாய், உரிமையாய், என் முன்னே குதிக்கும் இவள் என் பிரிய ஸ்நேகிதி, இவள் பிரியப்பட்டது இதுதான். என்னிடத்தில் புதுசாய்க் கொடுக்க முடிந்ததும் இதுதான். பரவாயில்லை இன்னொருதரம் வாங்கிக்கொண்டால் போயிற்று. 

கொட்டையாகப் “பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புடன்..” என எழுதிக் கொடுக்கும்போது மனசுள் பிரியமான ஒன்று பிரிந்து போவது கொஞ்சம் வெறுமையாய்த்தானிருந்தது. மூக்கைச் சுற்றிலும் புத்தக வாசம் சுழன்று கொண்டேயிருந்தது.


டிஸ்கி:- இந்தச் சிறுகதை 1984 இல் எழுதியது.

டிஸ்கி:- இந்தச் சிறுகதை ஆகஸ்ட் 5, 2014, அதீதத்தில் வெளியானது. 


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...