வியாழன், 9 ஜனவரி, 2014

எச் சிக்கலையும் போக்கும் ஆறுமுக சுவாமிகள் கோயில் .

காரைக்குடியிலிருந்து கோட்டையூர் வழியாகக் கண்டனூர் செல்லுமுன் அழகாபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறது ஆறுமுக சாமிகள் கோயில். இவர் ஒரு சித்தர் என்று சொல்கிறார்கள்.

உறவினர்கள் அழைத்துச் சென்றார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருவாரம் என்று சொல்லி அங்கே பெருங்கூட்டம் கூடுகிறது.


ஆறுமுக சாமிகள் கண்டனூரைச் சேர்ந்த நகரத்தார் ஒருவரின் வீட்டிற்குச் செல்வார் என்றும் அப்போது அங்கே உணவு வழங்கப்பட்டால் அதை உண்பார் என்றும் சொன்னார்கள். சில பொழுதுகளில் உணவை வைத்து விளையாடுவதும் உண்டாம். சித்தர்கள் போக்குப் பற்றி என்ன சொல்ல முடியும்..?

அவர் ஒரு சித்தர் என உணர்ந்த அந்த நகரத்தார் அவர் (வைகாசி மாதம் ) முக்தியடைந்ததும்  அழகாபுரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் இவர் சமாதியை அமைத்து அங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளார்.

பொதுவாக யோகிகள், சித்தர்கள் சமாதியின்மேல் சிவன் கோயில் அமைக்கப்படுவதுண்டு. வியாழக்கிழமைகளில் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது இங்கே. பிரசாதங்கள் படைக்கப்பட்டு இரவு உணவும் இங்கேயே வழங்கப்படுகிறது.

பல மக்கள் வேண்டுதல் செய்துகொண்டு தங்கள் பிரச்சனைகள் தீர, வேண்டுதல் நிறைவேற 7 வாரம், 9 வாரம், 12 வாரம் இங்கே வந்து வியாழக்கிழமைகளில் பூஜை புனஸ்காரம் முடிந்ததும்  இரவு தங்குகிறார்கள். அனைவரும் ஆளுக்கொரு தோள்பையோடு ( உடைகள் ) வந்திருந்தார்கள். மறுநாள் அங்கேயே நீராடி பூஜை செய்து செல்வார்களாம்.

சாமான்ய மனிதர்கள் சித்தர்களைச் சரண் அடைந்தாலும் அவர்கள் அருள் கிடைத்தாலும் ஒவ்வொருவரும் தனது கர்மா என்பதை  அனுபவித்தே தீர்க்கவேண்டும். என்பதே எனக்கு அங்கே தோன்றியது.

 நமது நல்வினை, தீவினைக்கேற்ப  நமக்கு நடப்பவைகள் நல்லது கெட்டது சேர்ந்தேதான் நடக்கும். ஆனால் சித்தர்கள்  தீயவழியிலிருந்து, தீய கர்மாவிலிருந்து திருப்பி வழிநடத்துவார்கள் என்பது சாமான்யர்களான நமது நம்பிக்கை.

அந்த நம்பிக்கையோடு பலதரப்பட்ட மனிதர்களும் கலந்து இருந்தார்கள். தீப ஆராதனைகளோடு பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆறுமுக சாமியின் பேரிலேயே  இயற்றப்பட்ட பல பாடல்களும் பாடப்பட்டன.

தீப ஆராதனையின்போது அருகே  நட்ட நடுச் சன்னதியில் ஒரு நாய் படுத்திருந்தது. சித்தர்கள் வரும்போது நாய்களும்  அவர்களின் கூடவே வரும் என்றும் தீப ஆராதனையின்போது நாய் ஊளையிடும் என்றும்  ஒரு அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். தீப ஆராதனையின்போது மணி அடிக்கப்பட்ட சமயம் பக்கத்தில் இருந்த நாய் அனைவரையும் அமைதியோடு நோக்க , தொலை தூரத்தில் இருந்து ஒரு நாயின் ஊளைச் சத்தம் கேட்டபோது அனைவருக்கும் மயிர்க்கூச்செறிந்தது.  சித்தரின் (எச் சிக்கலையும் போக்கும் ஆறுமுக சாமியின் அருள் ) ஆசீர்வாதம் கிடைத்ததென மகிழ்ந்தார்கள்.

சன்னதிகளில் மட்டுமல்ல இங்கே நிலவுக்கும் தீபத்தைக் காட்டி விட்டு வந்தார் அர்ச்சகர். இரவும் நிலவும் அங்கே நிலவிய சில்வண்டுகளற்ற அமைதியும் கோயிலைச் சுற்றிப் பரந்த இருள் வெளியில் மோன மனநிலையையும் அமைதியையும் தந்தன.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத தகவல்... நன்றி சகோதரி...

சே. குமார் சொன்னது…

காரைக்குடியில் இருந்தும் இதைப் பற்றி அறியவில்லை...
இந்த முறை ஊருக்குப் போகும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி குமார். குமார் உலக எழுத்தாளர் மாநாட்டில் சிறுகதைப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டுவிட்டது.. ஆண்கள் இருவர் ( சென்னை என்று நினைக்கிறேன்) முதலிரண்டு பரிசுகளும் , பெண் ஒருவர் யசோத பாலகிருஷ்ணன் என்று பெயர் . மூன்றாமிடமும் பெற்றிருக்கிறார்கள். காரைக்குடிக்குச் செல்லும்போது அய்க்கண் ஐயாவைப் பார்த்து விபரம் கேட்டு வருகிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...