எனது பதிமூன்று நூல்கள்

சனி, 11 ஜூலை, 2020

மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

மாத்தூர் பெரியநாயகி சமேத ஐநூற்றீசுவரர் கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறும். அப்போது சுவாமிகளை ஊர்வலமாக எழுந்தருளப் பண்ணுவார்கள். மாத்தூர்க் கோவிலில் புள்ளிகள் அதிகம் என்பதால் அந்தப் பத்து நாட்களுக்குள் இரண்டு ஊர்க்காரர்கள் சேர்ந்து மண்டகப்படி செய்வது வழக்கம்.

கானாடுகாத்தான் பங்காளிகள் ( எங்கள் ) மண்டகப்படி அன்று ஒருமுறை நானும் சென்று கலந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம். ரிஷபம், காமதேனு, யானை, சிங்கம், மயில் என்று விதம் விதமாய் உலா இருக்கும்.


நாங்கள் சென்ற அன்று ரத ஊர்வலம்.ஐந்து சுவாமிகளையும் ( விநாயகர், முருகன் வள்ளி தெய்வானயுடன் , ஐநூற்றீசுவரர் பெரியநாயகியம்மன், பிரியாவிடை, சண்டீசர் ) முன்மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன.


பெரியநாயகி சமேத ஐநூற்றீசுவரர்.

பெரிய நாயகி அம்மன்.

சண்டீசர்.

முருகன் வள்ளி தெய்வானை.

தனித்தனி ரதங்களில் கோவிலைச் சுற்றி உலாவந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் கடவுளர்களை வரவேற்க அழகழகான கோலங்கள். அர்ச்சனைசெய்து தீபம் பார்த்தார்கள் மக்கள்.

( வைராவி, மற்றுமுள்ள மக்கள் வீடுகளில் நீர்மோர், பானகம் கொடுத்து உபசரித்தனர் )

கண் எரியும் வெய்யில் ஆனால் சுவாமி உலாவின்போது தண்ணென்றிருந்தது அதிசயம்.

கோவில் அக்ரஹாரம், ஊழியர்கள் தங்குமிடம், ஊருணி , தேர்நிலை, என கோவிலைச் சுற்றிப் பெரிய உலா வந்ததும் மாத்தூர் சத்திரத்தின் முன் அன்றைய மண்டகப்படி நகரத்தார்கள் சார்பில் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

முன்புறம் பெஞ்சில் ஸ்லேட்டு விளக்கு, குத்து விளக்குகள் வைத்து அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள்.
மாத்தூர் நகர விடுதியே கோட்டை போலவும் மினி அரண்மனை போலவும் இருக்கும். இங்கே பிரமோற்சவத்தின்போது பத்து நாளும் தினமும் மூன்று வேளையும் உணவு உண்டு. ஆன்மீகச் சொற்பொழிவு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுத் தினம் நடைபெறுகிறது. நடுக்கூடத்தில் பலர் தங்கி இருந்தனர்.

மற்ற நாட்களிலும் தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது. மிக அருமையான ஆன்மீக உலா. எனர்ஜி ரீசார்ஜ். அவ்வப்போது உங்கள் குலதெய்வக் கோவிலுக்கும் நகரக் கோவிலுக்கும் சென்று வாருங்கள். சுவாமிகள் அனைவரும் நம்மை அரவணைக்கவும் அருளாசி வழங்கவும் காத்திருக்கிறார்கள். 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...