எனது நூல்கள்.

ஞாயிறு, 12 மே, 2019

சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயில்

சங்கரன் கோவிலுக்குக் செல்லும் பாக்கியம் கிட்டியது. அதோடு அதாக அது ஒரு ஆகஸ்ட் மாதம் என்பதால் ( ஆடிமாதம் - ஆடித் தபசு ) புஷ்பப் பாவாடை வேண்டுதல்களையும் தரிசிக்க முடிந்தது. இங்கே பிரகாரத்தில் உள்ள புற்று மண் விசேஷம். பதினோரு நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரம். சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கர நாராயணராகக் காட்சி அளித்த தலம். அம்பாள் ஊசிமுனையில் ஈசனுக்காகத் தவமியற்றிய ஸ்தலம்.
இறைவன் சங்கரலிங்க ஸ்வாமி, இறைவி கோமதியம்மன். இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள், தனித்தனிப் பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மஹா மண்பபங்கள். பிரம்மாண்டம்.


பாம்பு, தேள் ஆகிய விஷ ஜந்துக்களின் தொல்லையிலிருந்து விடுபட இங்கே உரு விக்கிறார்கள். ( வெள்ளியில் ) வாங்கி உண்டியலில் செலுத்தி வேண்டிக் கொண்டால் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபடலாமாம்.

கோவிலுக்குள் இக்கோவிலைக் கட்டிய மன்னன் உக்கிரபாண்டியன், உமாபதி சிவச்சாரியார், நால்வர், சேக்கிழார், மஹாவிஷ்ணு, 63 நாயன்மார், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்த்ர சக்தி, சாமுண்டி சக்தி ஆகியோர் சிலைகளோடு மாபெரும் வீரர் பூலித்தேவனின் சிலையும் கண் கவர்கிறது.
இக்கோவில் உக்கிரபாண்டிய மன்னனால் கிபி 1022 இல்கட்டப்பட்டது. நாகன், சங்கன் என்ற இரு பாம்புகள் சிவனே உயர்ந்தவர் என்றும் நாராயணனே உயர்ந்தவர் என்றும் சண்டையிட இவர்கள் சண்டையைத் தீர்க்க சங்கரனும் நாராயணனும் தாம் ஒருவரே எனக் காண்பிக்க சங்கரநாராயணராகக் காட்சி தந்த ஸ்தலம்.


எனவே அவ்விரு பாம்புகளும் இங்கேயே ஐக்கியமாக இருப்பதால் பிரகாரத்தில் மாபெரும் புற்று சுற்றிலும் புற்றுமண் செரியக் காட்சி அளிக்கிறது. ஒரு கிணற்றில் இம்மண் நிரம்பிக்கிடக்கிறது. மேலும் இங்கே உள்ள இறைவனுக்கு வன்மீகநாதர் என்று பெயர்.

எங்கே பார்த்தாலும் கூட்டம். மேலும் புஷ்பப் பாவாடை சார்த்துதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பக்தர்கள் புஷ்பப் பாவாடையைச் சுமந்து வந்த வண்ணமே இருக்கிறார்கள். அது வெகு அழகு.

இதை ப்ருத்வி ஸ்தலம் என்கிறார்கள். நடராஜர் சந்நிதி. இவர்  இங்கே ஊன நடனமும் ஞான நடனமும் புரிகிறாராம். அன்னை சிவகாமி தாளமிட, காரைக்காலம்மை தரிசிக்கிறாராம்.

தட்சனின் யாகத்தின்போது சிவன் அவமதிக்கப்பட தாட்சாயிணி கோபமுற்று தீயில் பாய, அவளது உடலைச் சுமந்தபடி சிவன் உக்கிரதாண்டவம் ஆட அவரது கோபத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதம் கொண்டு தாட்சாயிணியின் உருவத்தை 51துண்டுகளாக்குகிறார். அத்துண்டுகள் விழுந்த இடம் சக்தி பீடம் எனப்படுகின்றன.

அவளது ரத்தம், சதை பாகங்கள் விழுந்த இடம் உபசக்தி பீடமாம். எனவே இங்கே கோமதி அம்மனின் நெற்றிப்பகுதி ( சகஸ்ராரம்)  விழுந்ததால் இது மஹாயோகினி சக்தி பீடம் என அழைக்கப்படுகிறது.
ஸ்தல விருட்சம் புன்னை, தீர்த்தம்  நாகசுனை, சங்கர தீர்த்தம், கௌரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்.
முன் பக்கம் சுயஜா தேவி இருப்பது போல் தூண்களில் அடிப்பகுதிகளில் எல்லாம் பிரம்மாண்ட சிம்ம யாளிகள் தாங்கி நிற்கின்றன.

மேலும் எங்கெங்கு நோக்கினும் சிறிய பெரிய சிலைகள் கண்கவர் தோற்றத்தில். இங்கே இல்லாத தெய்வத் திருவுருவமே கிடையாது. ஐயப்பன் கூட பிரகாரத்தில் இருக்கிறார். விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, அம்பாள், சண்டீசர், நவக்ரஹம், சூரியன், சந்திரன் , பைரவர், காசி விசுவநாதர் ஆகியோரும் காட்சி தருகிறார்கள். இன்னும் பல்வேறு வகையான தெய்வத் திரு உருவங்களும் காட்சி அளிக்கின்றன. ( தசமுக ராவணன், வீணை வாசிக்கும் காளி , ஊர்த்துவ தாண்டவர், கால சம்ஹார மூர்த்தி )

கதவு மரக் கதவு போல் சிற்பங்களால் பொலிகிறது. 30 முதல் 33 வரையான தெய்வத் திரு உருவங்கள் அழகூட்டுகின்றன. இருபக்கக் கதவுகளும் பிரம்மாண்டம். மணிகள் பூட்டப்பட்டிருக்கின்றன.மேலும் கதவுக்குள்ளேயே ஒரு குட்டி திட்டி வாசலும் வைத்திருக்கிறார்கள்.
ராமேஸ்வரம் போல் நீண்ட பிரகாரங்கள். இங்கே ஆடித்தபசு விசேஷம்.

அம்மன் சந்நிதி முன்பு ஒரு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து சென்றால் மனநலம் பாதிப்படைந்தவர்கள் மற்றும் பேய் பிசாசு, துர்ச்சக்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குணம் கிடைக்கிறது.
கோபுரத்திலேயே சங்கரநாராயணராகவும் அடுத்ததில் சங்கரலிங்கமும் கோமதி அம்மனாகவும், அடுத்ததில் கோமதி அம்மனாகத் தனியாகவும் காட்சி அளிக்கிறார்கள்.

பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடமாகையால் கால சர்ப்ப தோஷம், செவ்வாய் பகை, திருமணத் தடை, ராகு கேது தோஷம் போக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.

இங்கே ஆடித்தபசு விழாவையும் புஷ்பப்பாவாடை சாத்துதலையும் ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள். கொள்ளை அழகு :) 

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான கோவில். நீண்ட பிரகாரங்கள் கவர்கின்றன.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்களும் தகவல்களும் அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...