எனது நூல்கள்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சுப்ரமண்யசுவாமி, சனிதேவாரா, விஷ்ணு, வாசவி , ஜெயின் கோயில்கள்.

பெங்களூரிலும் கோவாவிலும் கோவில்கள் கொள்ளை அழகு, சுத்தம் மற்றும் பணக்காரத்தன்மை நிறைந்தவை. ஆன்ம அருளோடு மனதில் தெளிவும் சந்தோஷமும் உண்டாக்குபவை. ( ஸ்பெஷலாக காக வாகனத்தில் சனிபகவான் அம்சமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தைக் கண்டு களித்தோம். )

எல்லாக் கோயில்களும் பளபளவெனப் பராமரிக்கப்படுவதோடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றால் சிலைகள், கவசங்கள், சுவர்கள், கதவுகள் பூஜைப்பாத்திரம் கொண்டவை. எனும்போது அவற்றின் செழிப்பை மனக்கண் முன் உணரலாம்.


முதலில் சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் , இது பசவங்குடியில் இருந்து டிவிஜி ரோடு வழியாகச் சென்றோம். விவி புராவின் பார்வதி புரத்தில் சஜ்ஜன் ராவ் சர்க்கிளில் அமைந்துள்ளது.முருகன் வள்ளி தெய்வானை அருள் பாலிக்கிறார்கள்.

வெளியே ஐந்து நிலை ராஜ கோபுரம். பிரணவம் உரைத்தகோலத்திலும்,தெய்வயானை திருமணக் கோலத்திலும் ஒரு புறம் அருள் பாலிக்கிறார் முருகன். ஆண்டிக் கோலத்திலும் கூட !

கோபுரத்தின் நடுவில் லெக்ஷ்மி சரஸ்வதியும் வீற்றிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் இராமர் பட்டாபிஷேகமும், பெருமாளும் அனுமனுடன் காட்சி அளிக்கிறார்கள்.
வித்யாசமாய் சுப்ரமண்ய சுவாமி கோவில் கோபுர முகப்பில் கின்னரர்களும், பறவைகளும் நாகங்களும் கூட துவார பாலகர்களுடன் காட்சி அளிக்கின்றார்கள். உச்சியில் ஐந்து கலசங்கள் வைக்கப்பட்ட விமானம் வெகு ஜோராக நட்டநடு நாயகமாக ஜொலிக்கும் வேலுடன்  காட்சி தருகிறது.

வள்ளி தெய்வானை சமேத முருகன் கொள்ளை அழகு. மொத்தத்தில் மிக இனிமையான பக்தி அனுபவம்.

அடுத்து அதே சஜ்ஜன் ராவ் சர்க்கிளில் அமைந்துள்ளது சனி தேவாரா டெம்பிள். இது சர்க்கிள் வடிவத்தில் அமைந்துள்ளது வித்யாசம்.

உள்ளே சிவலிங்கமும், ஐயப்பனும் காட்சி தருகிறார்கள். மஞ்சுநாத் என்று சிவன் பெயர்.

வாயிலில் தசாவதாரமும் , இறைவனின் பல்வேறு அவதாரத் திருக்கோலங்களும் சிலை வடிவில் மினியேச்சராகக் காட்சி அளிப்பது சிறப்பு.

தசாவதாரங்கள் மட்டுமல்ல பல்வேறு கடவுளர்களின் அவதாரமும் இடம் பெற்றுள்ளது. பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. மெயின் ரோட்டில் சுற்றிச் சுற்றி அனைவரும் பார்க்கப் படம் பிடித்தேன். :)


முருகன், சிவன், விநாயகர், ஆகியோரும் உண்டு. இக்கோயில் அமைப்பு வித்யாசமாக உள்ளது. மேலும் மூன்று நிலை ராஜ கோபுரம். இரண்டு பக்கம் வாயில்கள்.

அதோ காட்சி அளிக்கிறார் பாருங்கள் சனி தேவாரா காக வாகனத்தில். சிவன் பார்வதி ஒருபுறமும், விஷ்ணு லெக்ஷ்மி இன்னொரு புறமும் நின்றிருக்க சனியோ காக வாகனத்தில் வீற்றிருக்கிறார். ஈஸ்வரப் பட்டம் பெற்றவரல்லவா.

எந்தக் கோயிலிலும் காணமுடியாத கண்கொள்ளாக் காட்சி. தேர்போல் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தது பெருமாள் கோவில். சத்யநாராயணா சுவாமி கோயில். கவி லெக்ஷ்மிம்மா ரோட்டில் பார்வதிபுரம் விவிபுராவில் அமைந்துள்ளது.

இதுவும் ஐந்துநிலை இராஜ கோபுரம் கொண்டது. சங்கு சுதர்சனச் சக்கரம் நாமம் எல்லாம் கோபுரத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பது பேரழகு.

இக்கோயிலில் விஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் கொள்ளை அழகு. சிறிய திருவடியும் பெரிய திருவடியும் வாயிலைக் காக்கிறார்கள்.

அடுத்து வாசவி கோயில். என்னைக் கொள்ளை கொண்ட கோயிலில் இதுவும் ஒன்று. வாசவி கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில்.

வாசவிதான் என்ன அழகு. வெண்மையாக வடிவழகோடு சாந்தமாக நிற்கிறாள். வாரி அணைக்கத்தூண்டும் அழகு.

இக்கோயிலும் ஐந்து நிலை இராஜ கோபுரம் கொண்டது.

கோயிலின் கோபுர பொம்மைகள் எல்லாம் பிரம்மாண்டம். கந்தர்வ கானம் இசைக்கும் விறலிகள், யட்சிணிகள் கொள்ளை அழகு. சாமரப் பெண்களும் பணிப்பெண்களும் என கோபுரம் முழுமைக்கும் பெண்களின் ஆட்சி.

கருவறைக்கு அருகில் இரு கருவறைகள். வாசவியின் இருபுறமும் உமாமகேஸ்வரரும், விஷ்ணுவும் தம்பதி சமேதராகக்  காட்சி அளிக்கிறார்கள்.

கருவறையில் வாசவியுடன் இன்னொரு அம்மனும் காட்சி அளிக்கிறார். இக்கோயில் அமைந்துள்ள சாலை வாசவி ரோடு என்றும் ஜெயின் ரோடு என்றும் அழைக்கப்படுது.

பக்கத்திலேயே அமைந்துள்ளது ஜெயின் கோயில் ஒன்று.

ஜெய்ப்பூரின் சலவைக் கற்களால் முழுக்க முழுக்க ஆக்கப்பட்ட கோயில் இது. ஜைனர்கள் கோயில் பெங்களூரில் அதிகம் இருக்கின்றன. அவற்றில் இது ஸ்ரீ ஷிமந்தர் ஷாந்திசூரி ஜெயின் மந்திர்.


உள்ளே மூன்று சந்நிதிகள். நடுவில் சிமந்தர் ஷாந்திசூரி ஜெயினர் அமர்ந்திருக்கிறார். இருபுறமும் இன்னும் இரு மகான்கள் இருக்கிறார்கள். ஊதுபத்தியின் நறுமணம் எங்கெங்கும். பஞ்சாபிகளின் குருத்துவாரா போல் இருக்கு. உள்ளேயே இருபுறமும் மேலே செல்ல வழிகள்.

கோயில் முழுமைக்கும் தேவதைகளின் ஆட்சி. விதம் விதமான குட்டிச் சிற்பங்களும் வண்ண ஓவியங்களுமாகக் கொள்ளை அழகு.

பெங்களூரில் கோயில்கள் தண்ணென்றிருக்கின்றன. குளிர் காலம் வேறு. அனைத்தும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன.

விபூதி குங்குமம் எல்லாம் எங்கே என்று தேட வேண்டி இருக்கு. சுப்ரமண்ய சுவாமி கோவிலிலேயே தீர்த்தம்தான் கொடுத்தார்கள். எங்கோ கிண்ணியில் மாட்டி இருந்த விபூதியைத் தேடிச்சென்று தரித்துக் கொண்டோம்.

மேலும் ஜெயின் மந்திர் பக்கவாட்டில் டீ ஷாப் போல் இருக்கிறது. எல்லாக் கோயில்களிலும் அர்ச்சர்களுக்கு பின்புறமே வசிப்பிடங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஃபேஷனாக அழகாகக் காட்சி அளித்தார்கள்.

ஒன்று போல எல்லா அர்ச்சகர்களும் மஞ்சளில் அரக்கு பார்டர் போட்ட வேஷ்டி மேல் துண்டை குறுக்கு வாட்டில் அணிந்திருந்தார்கள். கோயில்களில் ஊழியர்களும் கூட நிஷ்சாந்தியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். மிக மிக இனிமையாகவும் மௌனமாகவும் ஆன்ம பலம் அளிப்பதாகவும் இருந்தது இந்தகோயில் உலா. பெங்களூர்க்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நெட்டிசன்கள் பெருகப் பெருக கோயில்களும் பெருகி அவற்றின் அருளாட்சியும் பெருகுகிறது. வாழ்க வளமுடன். 

2 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோயில்கள் பற்றிய விவரங்கள் படங்களுடன் அருமை - துளசிதரன்

நான் இப்ப பங்களூரில்தான் தாமசம். கோயில்கள் இங்க நல்லா மெயின்டெய்ன் செய்யறாங்க...நீங்க சொல்லிருக்கற கோயில்களையும் பார்க்கனும்.

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா அப்போ கட்டாயம் பாருங்க துளசி சகோ. இன்னும் நிறைய கோவில்களும் இருக்கின்றன இங்கே.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...