எனது நூல்கள்.

திங்கள், 16 ஜூலை, 2018

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் இரண்டு கோபுரங்களின் வழியாக ஆட்டோ போன்றவையும் வரும். இரண்டாவது கோபுரம் வழியாக கோயிலுக்கான பொருட்களைச் சுமந்து மெட்டாடர் வேன் சன்னிதிக்கு முன்பு வரை வரும். அம்மாம் பெரிசு. !!!
இக்கோயிலில் ஒரு சிறப்பு காலைச்சந்தி பூஜையில் கோ பூஜை நடக்கும். சங்காபிஷேகங்களும் பிரசித்தம். உச்சிக்கால பூஜை விமர்சையாக நடக்கும். அப்போது அர்ச்சகர் புடவை உடுத்தி க்ரீடம் அணிந்து மேளதாளத்தோடு யானை முன் செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து பூஜை செய்வார். அர்ச்சகார் ரூபத்தில் அகிலாண்டேஸ்வரியே இறைவனை பூஜைசெய்வதாக ஐதீகம். பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று இது. காவிரி நீர் இங்கே சந்நிதிக்கே வருகிறது. எனவே இது அப்பு ஸ்தலம்.இறைவன் சந்நிதிக்கு நாம் நேரே செல்ல முடியாது. மேற்குப் பார்த்த சந்நிதி . அதற்கு நாம் பக்கவாட்டில் சென்றுதான் வணங்கி வரவேண்டும். நேரே சாளரம் போன்ற அமைப்பு உள்ளது. காவிரியே வந்து ஈசனை வழிபடுவதால் கருவறை ஈரம் காத்துக்கொண்டே இருக்கும். வெண் நாவல் மரத்தடியில் இந்த ஈசன் சுயம்புவான அப்புலிங்கமாகத் தோன்றியதால் ( நாவல் = ஜம்பு ) ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். யானையும் சிலந்தியும் இவரை போட்டி போட்டு வணங்கி வந்தன. மறு ஜன்மத்தில் அந்த சிலந்தி கோச்செங்கட் சோழன் என்னும் மன்னனாகப் பிறந்து யானை ஏறமுடியாத மாடக் கோயில்களாகக் கட்டினானாம். அவன் கட்டிய முதல் மாடக் கோயில் இது. காவிரிக்கரையில் அமைந்த சிவத்தலங்களுள் ஒன்று


அம்மன் சந்நிதி கிழக்குப் பார்த்தது. மிகப் பிரம்மாண்டமாய் இருக்கும். கோடிலிங்க தீர்த்தம் என்ற ஒன்று கிழக்கில் உள்ளது. ஒவ்வொரு முக்கிலும் மட்டுமல்ல ஒவ்வொரு திசையிலும் ( எட்டு ) விளக்குத்தூண்கள் நிறுவப்பட்டுள்ள சிறப்பான கோவில் இது. உள்ளே மூன்று நிலை இராஜகோபுரமும் வெளியே ஏழு நிலை இராஜகோபுரமும் அமைந்துள்ளன.


வெகு உயரமான மதில்கள் அமைந்துள்ளன. பிரகாரங்களும் பிரம்மாண்டமானவை. யானையே பிரகாரத்தில் வந்து நிற்கும் அளவு பெரிது. அங்கே இருந்த கொடுங்கைகள் சிற்பங்கள் இவற்றின் அழகு சொல்லில் அடங்காதது. 


நாங்கள் சென்ற அன்று சமயபுரத்தாளுக்கு சீர் சென்றதால் முகபடாம் அணிந்த யானையுடன் செண்டை ஒலிக்க சீர்வரிசை எடுத்து கொடியும் குடையும் பிடித்துச் சென்றார்கள். 

இக்கோயிலின் ஸ்தலவிருட்சம் வெண்நாவல். ஸ்தல தீர்த்தம் காவிரி, இந்திர, சந்திர  நவ தீர்த்தங்கள். திருநாவுக்கரசரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்புடைய ஸ்தலம். இங்கே 59ஆவது பிறந்தநாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் பீமரத சாந்தி ஆகியவை கொண்டாடுகிறார்கள்.

அம்பாள் சந்நிதி வெகு அழகு. பிரம்மாண்ட நாயகி அகிலாண்டேஸ்வரி தாழம்பூ சடை பின்னி அதை முன்னே போட்டிருக்கும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அம்பாள் உக்கிரத்தைத் தணிக்க ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான தாடகங்கள் ( காதணிகள் ) செய்து அணிவித்ததாகச் சொல்கிறார்கள். அதே போல் இறைவியின் கோபம் தணிக்க முன்புறமும்  பின்புறமும் பிள்ளையாரையும் முருகனையும் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். 

அங்கே உறவினரைச் சந்தித்தோம். 
 வெளியூர் மக்கள் வேண்டுதல் நேர்ந்துகொண்டு வந்து இரவு தங்குவார்கள் போல  அதனால் வெளிப்பிரகாரம் முழுக்க பக்தர்கள் குழாமின் கூட்டம். அங்கேயே குளிக்க பாத்ரூம் டாய்லெட் வசதிகளை நிர்வாகம் செய்துள்ளது. வெளியே மாடுகளுக்குக் கொடுக்க அகத்திக்கீரை போன்றவை விற்கிறார்கள்.


நான்கு சுற்றுத் திருமதில்கள் உடைய மிகப் பெரிய கோவில் இது. அம்பிகையே நீர் எடுத்து லிங்கம் செய்து வழிபட்டதால் இது ஜம்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறதாம். இன்னொரு இடத்தில் ருத்ராக்ஷம் தாங்கிய லிங்கம் உள்ளது . இது குபேரன் வழிபட்டதால் குபேரலிங்கம் என்கிறார்கள். 

உற்சவ மண்டபம் அழகு.  மூன்றுகால் முனிவர், ஏகநாதர், முகப்பில் நான்குகால் தூண்களில் உள்ள மங்கையர்கள் ஆகிய வடிவங்கள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருநீறு தங்கமாகிய ஸ்தலம் இது .பல்வேறு அரசர்கள், செல்வந்தர்கள் இக்கோயிலுக்கு  நிபந்தங்களும் இறையிலி நிலங்களும் வழங்கி உள்ளார்கள் . பல்வேறு திருப்பணிகளும் செய்துள்ளார்கள். கண்டு தரிசித்துப் பிரமித்து வந்தோம். ஓம் நமச்சிவாய !  ஓம் சக்தி ஓம். ! 

5 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோயில் படங்கள் விவரணங்கள் எல்லாமே அருமை!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை //

உண்மைதான். மன்னர்கள் காலத்து சோழ மண்டல கோயில்கள் எல்லாம் பிரமாண்டமானவை தாம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சில மாதங்களுக்கு முன் சென்று வந்தோம்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

காவிரி நீர் இங்கே சந்நிதிக்கே வருகிறது என்று பதிவில் உள்ளது....சன்னதிக்கு அல்ல கருவறையில் மூலவர் இருக்கும் இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது பார்த்துள்ளேன். இயற்கையாகவே வந்ததாகக் கூறுவர். தற்போது அவ்வழி அடைக்கப்பட்டுவிட்டதால் செயற்கையாக மோட்டார் வைத்து உள்ளே தண்ணீர் இருப்பதுபோல் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ

தகவலுக்கு நன்றி இளங்கோ சார்

நன்றி டிடி சகோ

அரிய தகவலுக்கு நன்றி ஜம்பு சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...