எனது பதிமூன்று நூல்கள்

புதன், 4 ஜூலை, 2018

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.

அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாரை தரிசிக்கவில்லையே என பலகாலம் ஏங்கி இருக்கிறேன். அதற்கான வாய்ப்பு சில மாதங்களுக்குமுன் கிட்டியது.

அடி அடியாய் கிரிவலம் வரும் வாய்ப்பும் கிட்டியது. அடேயப்பா கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர்கள். ஒரு பௌர்ணமி இரவில் கிழக்கு கோபுர வாசலில் ஆரம்பித்து ( சுமார் 7 மணி இருக்கும். ) இரவு இரண்டரை மணிக்கு கிரிவலம் முடித்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் மாலைதான் எழுந்து திரும்ப கோயில் தரிசனம் செய்தோம்.

கட்டாயம் ஒருமுறை சென்று தரிசிக்க வேண்டிய கோவில் இது.

அடிமுடி அறியவொண்ணா அருணாசலராக ஜோதிஸ்வரூபமாக எழுந்தருளி இருக்கிறார் அண்ணாமலையார்.

அயனும் அரியும் அரனின் அடிமுடி அறிய அன்னமாகவும் வராகமாகவும் உருமாறித் தேடுகிறார்கள்.

அப்போது அரனின் சிரசில் இருந்து பல்லாண்டுகளாக விழுந்து வந்து கொண்டிருந்த தாழம்பூவிடம் பிரம்மன் தான் முடியை தரிசித்ததாக பொய் சாட்சி சொல்லும்படி வேண்டுகிறார்.  அது பொய் சொல்ல சம்மதிக்கிறது.

அரனிடம் அப்படிச் சொல்லும்போது வெகுளும் அவர் தன் பூஜையில் இனி தாழம்பூவிற்கு இடமில்லை சாபமளிக்கிறார். பொய் சொன்ன பிரம்மனுக்கும் உருவ வழிபாடு இல்லை என சாபமளிக்கிறார்.

சிவலிங்க ரூபத்தில் மட்டும் அடிப்பாகம் பிரம்மாவாகவும், நடுப்பாகம் விஷ்ணுவாகவும் மேற்பாகம் சிவனாராகவும் காட்சி அளிக்க அருள்கிறார்.

இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக வருடந்தோறும் கார்த்திகைமாதத்தில் பரணி நாளில் தீபத்திருவிழா நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் மலை மேல் ஜோதி ஏற்றப்பட லட்சக்கணக்கில் மக்கள் வந்து ஈசனை தீபத்தில் தரிசிக்கின்றனர்.

இங்கே உள்ள சத்திரங்களில் பதினோரு நாட்கள்  சாமி தரிசனம் செய்வதற்காகத் தங்குவதாக வேண்டிக் கொண்டு தங்குபவர்கள் உண்டு. காரைக்குடியில் நிறைய பேருக்கு அருணாசலம் என்ற பேர் உண்டு. என் அன்பிற்குரிய அப்பத்தா வீட்டு ஐயா பேரும் அதுதான்.  என் சகோதரன் பேரும் அதுதான்.

ஜோதியாய் அப்பன் இருக்க அவன் நெற்றியில் உருவான தீப்பொறியால் உண்டானவன் முருகன். அவனுக்கும் இங்கே ஸ்பெஷல் வழிபாடுதான்.

இக்கோயில் அருணகிரி நாதர் வழிபட்ட தலம். இத்தல முருகனுக்காக திருப்புகழை நாமணக்கப் பாடியுள்ளார். தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.

அருணாசலத்தின் மகிமையையும் அருணாசலேஸ்வரரின் மகிமையையும் எழுதித் தீராது. மிகப் பெரும் லிங்க மூர்த்தி. அம்பாள் சிட்டுப் போல காட்சி அளிக்கும் உண்ணாமுலையம்மன். சொப்புப் போல கண்கவர் உருவம்;

பல்வேறு சந்நிதிகள், பல்வேறு கடவுளர்கள், சிவனே பல்வேறு திருநாமங்களில் உறையும் இடம். மேலும் கோயிலைச் சுற்றிலும் பல்வேறு சமூகத்தாரின் மடங்கள், சமய மடங்கள், சாமியார் மடங்கள் மட்டுமல்ல சாமியார்களின் சமாதிகளும் காட்சி அளிக்கின்றன.

கிரிவலம் அன்று மட்டும் லட்சக்கணக்கில் புனித யாத்ரீகர்கள் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

பாதை முழுவதும் சாமியார்கள் சித்தர்கள் நடைபாதை உணவு , இயற்கை மருந்து வியாபாரிகள் , அன்னதானக் கொட்டகைகள், இது போக கார்ப்பரேட் சாமியார் மடங்களும் திசைக்கொன்று இருக்கிறது.

ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு லிங்கம். அப்பு, வாயு, தேயு , ஈசான லிங்கம் என்று கிட்டத்தட்ட ஒன்பது லிங்கங்கள். ஒவ்வொரு இடத்திலும் கியூவும் கூட்டமும்தான்.

இது போக காளி, முனீஸ்வரர் போன்ற உக்கிர தெய்வங்களும் , சனீஸ்வரர் போன்ற கிரகங்களும் தனிக்கோயிலில் காட்சி அளிக்கின்றார்கள். ஆதிபராசக்தி, ஆஞ்சநேயருக்கும் தனிக்கோயில்கள் இருக்கின்றன.

ப்ளாஸ்டிக் பொருட்களில் இருந்து இயற்கை மூலிகை வேர் வரை அனைத்தும் கிடைக்கிறது.

போலீசாரின் பூத் அங்கங்கே காவல் கண்காணிப்போடு செயல்படுகிறது. நல்ல விஷயம். ஆனால் முக்கிய விஷயம் ஆட்டோ, கார், டூவீலர் போன்ற வண்டிகள் கிரிவலப் பாதையில் மட்டுமல்ல ஊருக்குள்ளே கூட அனுமதிக்கப்படுவதில்லை.  கிரிவலம் ஆரம்பித்து விட்டவர்கள் முடித்துத்தான் வெளியே வந்து ஆட்டோ போன்றவற்றில் ஏறலாம் . இல்லாவிட்டால் திரும்ப நடக்க தெம்பு வரும்வரை  நடைபாதையிலேயே அமரவேண்டியதுதான்.

பலர் கான்வாஸ் ஷீ போன்றவை அணிந்து நடக்கிறார்கள். காற்றில் மூலிகை வாசமும் பௌர்ணமியின் பால் வாசமும் அங்கங்கே தூபத்தின் வாசமும் கலந்து நம்மேல் ஒரு தெய்வீகச் சாயலைப் படரவிடுகிறது.


பஸ் ஸ்டாண்டுக்கு பலகாத தூரம் முன்பே இறக்கி விட்டு விடுகிறார்கள். பௌர்ணமி அன்று ஊருக்குள்பஸ் போகாதாம்.

நாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சிவ  தரிசனம்.
கிரிவலம் செய்யும்போது இரவு சாப்பாட்டுக்காக ஓரிடத்தில் நின்றோம். ஒன்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி புனிதப் பயணிகள் வரும் இடத்தில் சாப்பாடு படு மோசம். அநேக இடத்தில் சுத்தமும் சுகாதாரமும் இருப்பதில்லை. ஓரிடத்தில் டேபிள் சேர் போட்டிருந்தார்கள். பல இடங்களில் போட்டிருந்தாலும் இந்த இடம் பார்க்கப் பரவாயில்லாமல் இருந்ததாலும் நம்மைப் போன்ற பலர் சாப்பிட்டதாலும் போய் அமர்ந்தோம். சாம்பார் சட்னி ஏதும் வாய்க்கு வைக்க விளங்கவில்லை. இட்லி, தோசை பரவாயில்லை.

ஆனால் இதை ஏன் சேவை முறையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம்  ஒப்படைத்து குறைந்த விலையில் நான்கு இடங்களில் சுகாதாரமான முறையில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை மட்டுமாவது வழங்கக் கூடாது.

அது போல் ஒரு டீ கடை கூட இல்லை. எல்லாம் பாட்டில் பானங்கள். இல்லாவிட்டால் எலுமிச்சை கிரஷ் , சோடா.

அன்னதானம் பண்ணிக் கொட்டும் குழுவினர் பாத யாத்ரீகர்களுக்கான இரவு உணவைக் குறைந்த அளவில் சுகாதாரமாகக் கொடுத்து ரோட்டைக் குப்பையாக்காமல் சுத்தம் செய்து புண்ணியம் தேடலாம்.

தக்காளி சாதமும் சாம்பார் சாதமும் புலவு சாதமும் தயிர் சாதமும் ரோடெல்லாம் மிதிபட்டது.

மறுநாள் துப்புரவுப் பணியாளர்கள்பாடுதான் பெரும்பாடு. அவ்ளோ குப்பை மலைபோல்.

நடந்து நடந்து நாமே ஒரு கட்டத்தில் இந்த ப்ளாட்ஃபார்மில் படுத்துக் கிடந்தோம் என்றால் நம்புவீர்களா. கிடைத்த இடத்தில் கட்டையைச் சாய்ப்பது என்பார்களே அப்படி இருந்தது. இதில் பாதி பாதியாக பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திலும் விருட்சத்தில் அடியில் இருந்து ஒருதேரை குதிக்க நாமும் கால்வலியோடு பயந்து உருண்டு குதித்து இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

தார் ரோடு நல்லா இருக்கு. ஆனால் இன்னும் தார் ஊற்றணும். ஏனெனில் கொஞ்ச தூரம் நடந்ததுமே நமக்குக் காலில் கொப்புளம் வந்த மாதிரி இருந்தது. ஏனெனில் தாரை சரியாக ஊற்றாததால் அந்த குட்டிக் கருங்கற்கள் எல்லாம் நீட்டிக்கொண்டு தீமிதி பூமிதி சுற்றுவது போல் காலை ஒரு வழியாக்கிவிட்டது. பருமன் காரணமாக தொடையின் பந்துக்கிண்ணமூட்டு கழண்டு விடுவதைப் போல் வலிக்க, பாதமும் கணுக்காலும் இத்துப் போய் விட்டன. அதிலும் பாதம் பட்ட பாடு.

கிரிவலம் வந்தா இதை எல்லாம் சொல்லக்கூடாது. கால் வலிக்குதுன்னு சொன்னாலே பலன் போய்விடும் என்பார்கள். ஆனால் பலர் செருப்புப் போட்டும் வந்தார்கள். அன்று போக இயலாதவர்கள் மறுநாள் ஆட்டோவிலும் கிரிவலம் ( !) வந்தார்கள். இது எல்லாம் பக்தி தானே.

கொஞ்சம் சாலைகளை சீர்படுத்தலாம். அது போல் கிரியை விட்டு கிரிவலப்பாதையில் மக்களை வரச்சொல்லிப் படுத்துகிறார்கள் காவலர்கள் . இது ஏனோ. ? இதை யாராவது அந்தக் கோயிலின் அல்லது அறநிலையத்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நலம்.

ஏனெனில் வீட்டில் சிறிது தூரமே நடக்கும் நம்மைப் போன்றோர் ஒரு ஆன்மீக ஆசையில் நடக்க ஆரம்பித்தால் இதோ வந்துடும் இதோ வந்துடும் என்று செல்லும்போது சுத்தி சுத்தி எங்கேயோ போய் ஊரைச் சுத்தி வந்தால் கடுப்பும் கோபமும் மட்டுமல்ல தலையும் சுற்றுகிறது. கிரியை ஒட்டியே கிரிவலப்பாதையை பலப்படுத்தி சாலையில் தார் நன்கு ஊற்றி சீர் படுத்தினால் நடக்கும் பக்தர்களின் வாழ்த்தால் அருணாசலேஸ்வரர் அவர்களுக்கு இன்னும் புண்ணியத்தை அருள்வார்.

ஹோட்டலில் தங்கி இருந்த மூன்று நாளும் கோயிலை சிவனாய் நினைத்துத் தரிசித்துக் கொண்டே இருந்தேன்.
நடந்த களைப்பில் முதல்நாள் நாம் தங்கி இருந்த எஸ் டி டி ரெஸிடென்ஸியில் தங்கி மறுநாள்தான் சாமி தரிசனம் செய்தோம்.

பதினோறு நிலை இராஜகோபுரம் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. மிகவும் பாப்புலேஷன் அதிகம் உள்ள ஊர். இதில் ஆஸிலேட்டிங் பாப்புலேஷன் வேறு மிரட்டுகிறது.
ஐந்து சுற்றுப் பிரகாரங்கள் உள்ளேயே இருக்கலாம்.  நீண்ட நடைகள், சந்நிதிகள். கூட்டமோ பெருங்கூட்டம். க்யூ நீண்டுகொண்டே இருக்கிறது.

ஆனால் தரிசனம் ஒரு நொடியில் முடிந்துவிட்டது.
ஒரு மண்டபத்தில் விநாயகர் நாம் செல்லும் திசையெல்லாம் நம்மைக் கனிவு கூர்ந்து நோக்கினார். இதுபோல் இந்தக் கோயிலில் ஏகப்பட்ட ஸ்பெஷல் சந்நிதிகள். ஏகப்பட்ட பரவஸ தரிசனங்கள். உடம்பை சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள். சித்தர்கள் பூமிதான்.

சித்தர்களும் சாமியார்களுடன் கலந்து இருப்பார்கள் என்று தோன்றியது. பாதை இருமருங்கிலும் அமர்ந்து காவி உடை அணிந்த சாமியார்கள் சிவனைப் பாடிப் பரவிக் கொண்டிருந்தார்கள்.
அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாரை தரிசித்தது வாழ்வின் அற்புதங்களில் ஒன்று.

மொத்தத்தில் திருவண்ணாமலை ஒரு மறக்க முடியாத தெய்வீக அனுபவம்.

4 கருத்துகள் :

padhmasri vijaykumar சொன்னது…

கூட்ட நேரங்களில்,தி.மலை கடைகளில் மைதா மாவு ஊத்தாப்பம்,கடலைமாவு சாம்பாருமாக இருக்கும்.

மடங்கள் நிறைய இருக்கு.இன்னும் எழுதவும் நிறைய இருக்கு.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Anuprem சொன்னது…

மிக அழகிய கோவில் இது...

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க பத்மஸ்ரீ விஜயகுமார்.

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...