எனது நூல்கள்.

புதன், 11 ஜூலை, 2018

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

திருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி  சிறப்பாக எழுதப்படுகிறதாம். திருச்சியிலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டரில் ( சமயபுரத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ) இருக்கிறது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கே ஒரு விசேஷம் தினமும் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரரின்மேல்பட்டு  அவரைத் தரிசித்து வணங்குகிறது.

இங்கே தினமும் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிவன் சந்நிதியிலிருந்து ப்ரகாரத்தில் சிவனுக்கு வலப்புறம் தெற்குத் திசையில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் பிரம்மா. இவருக்கு மஞ்சள் பூசி விசேஷபூஜை நடக்கிறது. இந்த பூஜை கட்டாயம் காணவேண்டிய ஒன்று. அன்று வியாழக்கிழமையாகவும் அட்சய திரிதியையாகவும் அமைந்தது வெகு சிறப்பு. எனவே ஏழரைக்கு மேல் அபிஷேகமும் அலங்காரமும் நடந்தது
பிரம்மன் சிவனைப்போல ஐந்து தலைகள் பெற்றதால் ஆணவம் அடைய சிவன் அவரது ஐந்தாவது சிரசைக் கொய்துவிடுகிறார். இதற்குபிரம்மா சாபவிமோசனம் கேட்க ஈசன் தன்னைத் திருப்பட்டூர் என்னும் தலத்தில் துவாதச லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கச் சொல்கிறார். அதே போல் வணங்கும் பிரம்மனின் தலையெழுத்தை சிவன் மாற்றியதுமல்லாமல் இங்கே பிரம்மனை வணங்க வருபவர்களின் தலையெழுத்தையும் மாற்ற அருள் செய்கிறார். பிரம்மன் வழிபட்டதால் ஈசன் பிரம்மபுரீஸ்வரர், நாயகி பிரம்ம நாயகி.
காலபைரவர் மேற்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். குழந்தைகளுக்காக இங்கே காலபைரவர் வழிபாடு நடக்கிறது. கமண்டலம் , அட்சமாலையுடன் காட்சி தரும் பிரம்மனை வணங்கினால் குரு ப்ரீதி செய்த பலன் உண்டாகுமாம். சேரமான் ஞான உலா அரங்கேற்றம் என்ற சிற்றிலக்கியத்தை இங்கே ஐயனார் துணையுடன் சிவன் சந்நிதியில் படைத்தாராம். 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனார் இங்கிருந்துதான் தமிழகம் முழுவதும் காவல் தெய்வங்களாகக் கொண்டு சென்று வணங்கப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்கள். இங்கே பூரணா புஷ்கலா சமேத ஐயனார் கோவில் ஒன்றும் இருக்கிறது. இவரை அரங்கேற்ற ஐயனார் என்றும் சொல்கிறார்கள். 

அம்மன் பிரம்மநாயகி தனியே கிழக்கு நோக்கிய தனிக்கோவில் கொண்டிருக்கிறாள். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கே சிவனை வணங்கி படை திரட்டிச் சென்றாராம். அதனால் திருப்படையூர் என்பது திருப்பட்டூர் என மருவியது என்கிறார்கள். வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர் வழிபட்டு உபாதை நீங்கிய திருத்தலம் இது. படைக்கும் பிரம்மனின் திருத்தலம் என்பதால் குழந்தைப்பேறு வேண்டுவோரும் ஏழாம் எண் உடையவரும் கட்டாயம் வணங்க வேண்டிய திருத்தலம் இது. இங்கே பிரசாதமாக பிரம்மனுக்குச் சாற்றிய மஞ்சளையும் புளி சாதத்தையும் தருகிறார்கள்.

இதுபோக பிரம்மனின் தலையைத் துண்டித்த ஈசனை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க அவர் இங்கே உள்ள பெருமாளை வணங்கினார். அவர் சிவனின் பசிப்பிணியையும் தோஷத்தையும் நீக்கியதால் விதியை மாற்றும் பெருமாள் என வணங்கப்படுகிறார். இங்கே அவர் நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்த  சங்கு முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.

இது எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது, இரண்டாம் நந்திவர்மனும் ஜடாவர்ம வீரபாண்டியனும் திருப்பணி செய்த பெருமைக்குரியது. இக்கோயிலில் காளிங்க நர்த்தன கண்ணனும் அன்னபட்சி வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும் காட்சி அளிக்கிறார்கள்.

இங்கே சென்று வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

அன்று அட்சய திரிதியை தினம் என்பதால் நாங்களும் அங்கே பலருக்கு கடையில் கிடைத்த வடைகளை வாங்கி தானம் செய்து வந்தோம்.

2 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

பவித்ரா நந்தகுமார் சொன்னது…

நாங்களும் சென்று வருகிறோம்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...