எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜூன், 2018

தாய் சொல்லைத் தட்டாதவன். தினமலர். சிறுவர்மலர் - 24.


தாய் சொல்லைத் தட்டாதவன்.

ரவின் சில்வண்டுப் பூச்சிகள் கத்திக்கொண்டிருக்கின்றன. சில்லென்று மலையமாருதம் வீசுகிறது. எங்கெங்கோ கானக மிருகங்கள் உறுமும் சத்தம். விருட்சங்களின் கொடிகள் கால்களில் சிக்குகின்றன. அரவமா, ஆலமா என்று தெரியாத இருட்டு. மேடும் பள்ளமுமான பாதை, சதுப்பாய் நீர் தேங்கியிருக்கும் குட்டை. ஆனால் எதற்கும் கலங்காமல் ஒரு சிறுவன் கையில் வில் அம்பு ஏந்தித் தன்னந்தனியனாய் அந்தக் கானகத்துக்குள் கொடிகளை விலக்கிக் கொண்டு முன்னேறிச் செல்கிறான்.

வனராஜன் போல் கம்பீரமாகச் செல்லும் அவனுக்கு எந்த பயமுமில்லை. நாடாளும் தகுதி படைத்த இளவரசன் அவன். அவன் ஏன் கானகத்துள் செல்கிறான். எதைத் தேடிச் செல்கிறான் ? எல்லாம் அவன் தாய் பந்தளநாட்டு ராணிக்காகத்தான். அவளுக்கு ஏற்பட்ட தலைவலியை நீக்க புலிப்பால் கொணர புலியைத் தேடி அவன் காட்டுக்குள் செல்கிறான்.

ந்தளநாட்டின் பம்பாதீரத்தில் ஒரு மரத்தடியில் அப்போதுதான் பிறந்த ஒரு சிசு கைகால்களை உதைத்து அழுதுகொண்டிருக்கிறது. பாண்டிய வம்சத்தின் பந்தளநாட்டு அரசன் ராஜசேகரன் தனது படை பரிவாரங்களோடு பம்பாதீரத்தைக் கடந்துகொண்டிருந்தார். அவர் செவிகளில் அச்சிசுவின் அழுகுரல் கேட்கிறது. பல்லாண்டுகளாகப் பிள்ளை வரம் வேண்டியும் கிட்டாததால் குழந்தையின் குரல் கேட்டதும் அங்கம் பதறுகிறது ராஜாவுக்கு.

சோலைபோல் அடர்த்தியாக இருக்கும் மரங்களின் பக்கமாக விரைகிறார். ஒரு மரத்தின் அடியில் அப்போதுதான் பிறந்த குழந்தை ஒன்று கழுத்தில் மணியோடு காணப்படுகிறது. அக்குழந்தையைப் பார்த்ததும் அவருக்குப் பாசம் ஊற்றெடுக்கிறது. இரு கரங்களாலும் வாரி அணைத்து அரண்மனைக்குத் தூக்கி வருகிறார். குழந்தையும் அவர் கரங்களைப் பிடித்துச் சப்பிக்கொண்டு உறங்குகிறது. அரண்மனைக்கு வந்து பந்தளநாட்டு அரசியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார்.

கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிடுகிறார் ராஜா. ராஜா ராணி இருவருக்கும் செல்லமகனாக இருக்கிறார் மணிகண்டன். ஆனால் அது குறுகிய காலம்தான். மணிகண்டன் அடியெடுத்து வைத்த நேரம் பிள்ளையில்லாமல் இருந்த ராஜாவுக்கும் ராணிக்கும் ராஜராஜன் என்ற குட்டி இளவரசன் பிறக்கின்றான். அவர்களின் சொந்த மகன் வந்ததும் ராஜா என்றும் போலவே மணிகண்டனிடம் அன்பு செலுத்தி வருகிறார். ஆனால் ராணியோ தன் வயிற்றில் பிறந்த ராஜராஜனிடம் அதிக அன்பு செலுத்தி மணிகண்டனை வெறுக்கத் துவங்குகிறார்.

முதல் மகன் மணிகண்டன் என்பதால் அவனுக்கு அரசபட்டம் கொடுத்து ராஜா முடிசூட்டி விடுவார் என அஞ்சும் ராணி அரண்மனை வைத்தியருடன் சேர்ந்து சதியாலோசனை செய்கிறார்.

“ஐயோ தலையெல்லாம் வலிக்கிறதே . எந்த மருந்து போட்டாலும் அடங்கலையே “ என்று துடித்துக் கொண்டிருக்கிறார் ராணி.

“அம்மா, நான் மருந்து தடவுகிறேன்மா “ என்று சொல்லி தைல பாட்டிலில் இருந்து மருந்தைத் தடவுகிறான் தனது பிஞ்சு விரல்களால் சிறுவன் மணிகண்டன். சேடிகளும், வைத்தியரும் மாறி மாறி மருந்துகொடுத்துப் பார்த்தும் ராணியின் தலைவலி விடவில்லை. ராஜாவும் வந்து பார்த்து செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.

“எதற்கும் கட்டுப்படாமல் இருக்கும் தலைவலிக்கு என்ன செய்யலாம்?” என்று ராஜா வைத்தியரிடம் வினவுகிறார்.

இதுதான் சமயமென்று வைத்தியர் “ ராஜா புலிப்பால் கொண்டுவந்தா குணமாக்கலாம். அதுவும் முதல்மகனான மணிகண்டன் கொண்டுவந்தா சீக்கிரம் குணமாயிரும் “ என்கிறார்.

ராணியும் மணிகண்டனைப் பார்த்து “ அம்மாவுக்காக புலிப்பால் கொண்டு வாப்பா. “ மண்டையிடி தாங்கவில்லை என்று கூறுகிறார். எதையும் கேட்காத தாய் இதைக் கேட்டதும் மனம் கனிந்துவிட்டது மணிகண்டனுக்கு. தாயின் ஆணையை நிறைவேற்ற விழைகிறான்.

வில் பயிற்சி வாள் பயிற்சி பெற்றுவந்தான் மணிகண்டன் என்றாலும் சின்னஞ்சிறுவனான அவனைக் காட்டுக்குள் அனுப்புவதா என ராஜா தயங்க மணிகண்டனோ தன் தாயின் தலைவலி நீங்க புலிப்பால் கொணர கானகம் செல்வதாக தந்தைக்குத் தைரியம் கூறிச் செல்கிறான்.   

விடியத்துவங்கி இருக்கிறது. சூரியனின் கிரணங்களும் புகமுடியாதபடி கானகத்தில் மரங்கள் உயர்ந்து அடர்ந்திருக்கின்றன. கொடிகள் வேரோடி இருக்கின்றன. எங்கோ குரங்குகள் தாவிச் செல்கின்றன. திடீரென்று அவை எதையோ பார்த்ததுபோல் பதறிக் கதறிக் கொண்டு சிதறித் தாவியோடுகின்றன.  ஏதோ ஒரு ராட்சச மிருகத்தின் பெருங்கொண்ட உறுமல் ஒன்று எழுகிறது.

தனது சகோதரன் மகிஷன் இறந்ததால் கோபமாகக் கானகத்தையே அதகளம் செய்துகொண்டிருந்தாள் மகிஷி என்னும் அரக்கி. அசுரபலம் கொண்ட அவள் கானகத்தை துவம்சம் செய்வதோடு அமரர்களையும் துன்புறுத்தி வந்தாள். அவள்தான் உறுமிக்கொண்டு வந்தாள். அவள் முன்னே சின்னஞ்சிறு பாலகனான மணிகண்டன் கையில் வில்லுடனும் அம்புடனும் நிற்கிறான்.

இச்சிறுவனா தன்னை எதிர்ப்பது என்று மூர்க்கமாகப் பாய்கிறாள் மகிஷி. அரக்கியின் அரக்க புத்தியை தனது சாதுர்யமான புத்தியால் எதிர்கொள்கிறான் மணிகண்டன். அவள் பாயும் திசைகளிலிலிருந்து தப்பி தூரத்தே ஒரு மரத்தின் பக்கம் சென்று வில்லில் இருந்து அம்பு மழை பொழிகிறான். வாள் ஏந்திய வனராஜன் போல அவன் மகிஷியை வதம் செய்கிறான். கானகம் அதிர பெருஞ்சத்தத்துடன் பெருங்கொண்ட மலை வீழ்வதுபோல் வீழ்ந்து மடிகிறாள் மகிஷி.

மகிஷியால் துன்புற்ற கானக விலங்குகள் மணிகண்டனுக்கு அடிபணிகின்றன. புலிகள் மணிகண்டனின் முன்பு தானாகவே வந்து மண்டியிடுகின்றன. அதில் ஒரு புலியின் மேல் ஏறி மற்ற புலிகள் பின்தொடர  பந்தளநாட்டை அடைகிறான் மணிகண்டன்.

தாய் சொல்லைத் தட்டாமல் நிறைவேற்றிய மணிகண்டன் அரண்மனைக்குள் நுழைகிறான். புலிமேல் வந்த பம்பாதீரனைப் பார்த்து வைத்தியரும் ராணியும் நடுங்குகிறார்கள். தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டுகிறார்கள். ராஜா உச்சிமோர்ந்து அணைத்துக் கொள்கிறார். தாய் சொல்லைத் தட்டாத அந்தத் தனயனைப் போல் நாமும் நடப்போம். நன்மையே விளையும்..  

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 22. 6. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

  1. மண்கண்டன் தாய் சொல்லைத் தட்டாத தனயன். சிறுவர்களுக்கு எளிய மொழி நடையில் எழுதியது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    https://www.tamilus.com

    – தமிழ்US

    பதிலளிநீக்கு
  3. கதை கூறும் உங்களின் பாங்கு அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி முத்துசாமி சகோ

    நன்றி தமிழ்

    நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...