எனது புது நாவல்.

வெள்ளி, 9 மார்ச், 2018

கொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.

பள்ளத்தூர் அருகே கொத்தரியில் புரவிகள் வரிசை கட்டி நிற்கின்றன.  பார்த்தவுடனே அதிர்கிறது இதயம். அடர்ந்த விருட்சங்களிடையே ஆற்றலான புரவிகளின் ஆனந்த ஆர்ப்பரிப்பு. நேர்த்திக்கடனுக்காக மக்கள் செலுத்திய புரவிகளே இவை. ( நரியங்குடி கருங்குளம் போன்ற  சில கோயில்களில் புரவி எடுப்பு என்ற திருவிழா நடைபெறும். )

அதிர்வுகள் அதிகம் உள்ள புண்ணியஸ்தலம் இது.  புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோவென யோசனையோடு எடுத்த படங்கள் இங்கே.

காரைக்குடியில் இருந்து பதினோரு கிமீ தொலைவில் உள்ளது கொத்தரி. இந்தக் கோயிலில் வணங்க சில விதிமுறைகள் உள்ளன. சந்நிதிக்கு நேரே வந்து ஆண்களும் முழுக்கு நின்ற பெண்களுமே வணங்கலாம். மற்ற இளம்பெண்கள் பக்கவாட்டில் வந்து நின்று பிரசாதங்கள் பெற்றுக் கொள்ளலாம். வருவது என்றாலும் சந்நிதியின் நேரே வரக்கூடாது பக்கவாட்டிலேயே வந்து தரிசிக்க வேண்டும்.

சிவன் ராத்திரியின் போது மட்டும் இங்கே அனைவரும் வந்து தரிசிக்கலாம். அநேகருக்கு இந்தப் பள்ளத்தூர் கொத்தரியிலுள்ள சோலை ஆண்டவர் கோயில் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. வேளார்கள் எனப்படும் பூசாரிகளே இங்கே வழிபாட்டு பூஜையை நிகழ்த்துகிறார்கள்.
இந்தக்கொட்டகையின் அருகே இரு சத்திரங்களும் உணவுக்கூடங்களும் இருக்கின்றன. இதன் பின் தொடரும் விருட்சங்களின்பின் கோயில் தொடங்குகிறது.


இங்கே ஆண்டவர் பெயர் சோலை வளர்த்த ஐயனார் என்றும் சோலை ஆண்டவர் என்றும் ஆண்டவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இக்கோயிலையும் இவ்வூரையும் சார்ந்த பலருக்கும் மேலும் வீட்டின் முதல் பிள்ளைகளுக்கும் சோலையப்பன், சோலை, சோலைச்சி என்ற பெயர்கள் இடப்படுகின்றன.
மகன் , மகள் திருமணம் முடிந்தால் அபிஷேக ஆராதனைகளும் முதல் குழந்தைக்கு இங்கே முடி இறக்குவதும் நிகழ்த்துகிறார்கள்.
சிவன் ராத்திரி ஏற்பாடுகளில் இருந்தது கோயில். இங்கே இரவெல்லாம் விழித்து பூஜை அபிஷேகங்கள் செய்வார்கள். ஆறுகால பூஜை நடைபெறும்.
உக்கிர தெய்வங்களுக்குத் தனிச்சந்நிதி. சோலை ஆண்டவரோடு  கோஷ்ட தெய்வங்களான சன்னாசி, அகோர வீர பத்திரர், பதினெட்டாம்படிக் கருப்பர், அடைக்கலங்காத்த ஐயனார், முனீஸ்வரன், காளியம்மா, சப்தகன்னியர், சாத்தப்ப சாமி, ஆகிய சாமிகளின் அருளாட்சி அதிகம்.
இந்த ஊரணியில் நீர் நிரம்பி இருந்தது. நீராடுவார்களா அதற்கு அனுமதி உண்டா எனத் தெரியவில்லை.

முதல் அறுவடையில் ஒரு பகுதியை இக்கோயிலில் செலுத்துவார்கள் என ஒரு உறவினர் சொன்னார்.
உறவினர் அழைப்பின் பேரில் சென்று வணங்கி வந்தோம். ரொம்ப பவர்ஃபுல்லான காவல் தெய்வம் என உணர்ந்தோம்.  சித்ரா பௌர்ணமியும் சிவராத்திரியும் தமிழ் வருஷப் பிறப்பும்  இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தன்னுடைய நூலில் நீதிபதிகள் என்று இக்கடவுளர்களை அவர் குறிப்பிடுகிறார்.

///எங்கள் ஊருக்குப் பக்கத்தில், பள்ளத்தூர் என்ற ஊரில் ‘சோலை ஆண்டவர் கோயில்’என்றொரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுள்ள தெய்வம் சக்தி வாய்ந்தது என்று ஊரார் நம்புகின்றனர். திருட்டுப் போன தாலி திரும்பி வந்ததாகவும், வண்டிச் சக்கரத்தில் நசுக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்றதாகவும் பல கதைகளை அங்கே கூறுகிறார்கள். மொத்தத்தில் இந்துக்களின் சிறுதேவதை வழிபாடு நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததே தவிர, மூட நம்பிக்கையில் எழுந்தது அல்ல. ///

அருமை மற்றும் உண்மையும் கூட. ஐயனாரும், காட்டுக் கருப்பரும், சோலை ஆண்டவரும் புரவிகளில் ஆரோகணித்து வருகிறார்கள். நமக்கு மெய்சிலிர்க்கிறது. பரவஸத்தில் வேனில் கூட இதமாகிறது. நம் குலதெய்வங்களை ஆண்டுக்கு ஒரு முறையேனும் சென்று வணங்கி வாருங்கள். அவர்கள் நமக்கு அருள் பொழியக் காத்திருக்கிறார்கள். 

4 கருத்துகள் :

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த கோவில் தரிசனம்
தங்கள் பதிவு எங்களை ஈர்த்துக்கொண்டது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சக்திவாய்ந்த கோயிலைப் பற்றிய பதிவினைக் கண்டேன். சில கோயில்களுக்குச் செல்லும்போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்படும். அதனை நான் உணர்ந்துள்ளேன். அவ்வாறான நினைவை சிந்திக்க வைத்தது இப்பதிவு.

R Muthusamy சொன்னது…

1960 களில் அடிக்கடி சென்றுவந்த இடம். சித்திரை வருடப்பிறப்பன்று இந்தக் கோவில் திருவிழா களைகட்டுகிறது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...