எனது புது நாவல்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

துலாபாரம் கொடுக்கப்படும் சிறப்புக் கோயில்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்றாக காரைக்குடியின் அருகில் இருக்கும் வைரவன்பட்டியில் இருக்கும் வைரவன் கோயில் திகழ்கின்றது. இதற்கு வைரவர் துலாபாரம் என்று பெயர்.

காரைக்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இக்கோயில். குன்றக்குடி , பிள்ளையார் பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் சிறிது பிரிந்து செல்லும் உட்சாலையில் அமைந்துள்ளது. ( வழியில், நேமங்கோயில்,  இரணிக்கோயிலுக்குச் செல்லும் சாலையைச் சந்திக்கலாம். )
இக்கோயில் நகரத்தார் கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் புஷ்கரணி மிகவும் அழகானது. அந்தக்காலத்திலேயே நீர் சேகரிப்பு முறைப்படி வாய்க்கால் , கால்வாய்களின் மூலம் நீர் வரத்து எப்போதும் இருக்கிறது.

இங்கே கோயில் கோபுரத்தில் கவின்மிகு சிற்பங்கள் கொள்ளை கொள்கின்றன. இக்கோயில் வளவேந்திர ராஜனால் கட்டப்பட்டது என்கிறார்கள்.

இக்கோயிலை பாண்டிய அரசர் கி பி 712 இல் நகரத்தார்களுக்கு வழங்கி இருக்கிறார். இக்கோயிலில் ஏறு அழிஞ்சில் மரம், சங்கு ஊதிக் கருப்பர் ஆகியோரும் விசேஷம்.
சிவன் அரக்கர்களை அழிக்க வைரவர் திருக்கோலம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இங்கே வைரவரிடம் வேண்டிக்கொண்டு அரிசி, வெல்லம், சர்க்கரை, உளுந்து இவற்றைத்துலாபாரமாக கொடுத்தால் ஏழரை நாட்டுச் சனி , அஷ்டமத்துச் சனி, சனி புத்தி, சனி அந்தரங்கம், சனியால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். மாங்கல்யபாக்கியம், சந்தான பாக்கியம் அனைத்தும் கிட்டும், மேலும் வியாதி நிவர்த்தியாகி ஆயுள் விருத்தி உண்டாகும். மேலும் இந்த துலாபாரம் கொடுப்பது சுதர்சன ஹோமம் செய்வதற்கு உண்டான பலன் கிடைக்கும். என்று எழுதப்பட்டுள்ளது.
பிரகாரத்தில்  இதோ அந்த துலாபாரம்.
மிக அழகான சிற்பங்களும் கொடுங்கைகளும் கூட இக்கோயிலின் அழகு அம்சங்கள். மீனாக்ஷி திருக்கல்யாணம் செதுக்கப்பட்டுள்ள தூணைப் பாருங்கள். அந்த விருட்சம் எவ்வளவு நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளது.
ஈசனுக்கே கண்ணப்பிய திண்ணப்பர் சிற்பம் வெகு வாஞ்சை . அவரைத் தடுத்தாட்கொள்ளும் ஈசன் அதைவிடப் பரிவு.
கோயில் திருச்சுற்றில் இன்னோரு புறத்திலும் கண்ணப்பரும் திண்ணப்பரும்.
கல்லாலின் புடை அமர்ந்த தட்சிணாமூர்த்தி. இம்மண்டபத்தைச் சிம்மங்கள் தாங்குகின்றன. பெருந்தூணைச் சுற்றியுள்ள சிறுதூண்களும் அவற்றில் நாற்புறமும் கர்ஜிக்கும் சிம்மமும் காந்தமாய்க் கவர்கின்றன.

////வடிவுடை நாயகி யுடனாய
வளரொளி நாதர் திருக்கோயில்
படியினை வணங்கி நின்றாலும்
படரும் வல்லிருள் பறந்தோடும்.!
விடியலின் வெளிச்சம் விரிவடையும் !
வெற்றிகள் நாளும் பெருகிவரும்!
குடிமர மோங்கப் பல்லாண்டு
குவலயம் இதனில் வாழ்வோமே ! “//// - நன்றி நமது செட்டிநாடு இதழ்.

வைரவன் கோயிலைச் சார்ந்தவர்களை.

கேரள சிங்கவள நாடாகிய ஏழகப் பெருந் திருவான வீரபாண்டியபுரத்தில்

1. சிறுகுளத்தூருடையார்,

(அ) பெரிய வகுப்பு , ( ஆ) தெய்வநாயகர் வகுப்பு, (இ). பிள்ளையார் வகுப்பு.

2. கழனிவாசலுடையார்,

3. மருதேந்திரபுரமுடையார்

எனக் குறிப்பார்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.


2 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

பலமுறை இவ்வழியில் போய் வந்தாலும் இப்பொழுதே அறிந்தேன் தகவல் விபரங்களுக்கு நன்றி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...