புதன், 3 ஜனவரி, 2018

அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைத் தேனமுது.

காரைக்குடி அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. ஐந்து திருமுறைகளில் இருந்து 500 பாடல்கள் பாடப்பட்டன. சமயக்குரவர்கள் நால்வர் பாடிய பன்னிரு திருமுறைகளில் இருந்து இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. காரைக்கால் அம்மையாரின் பாடல்களும் இருந்தன.

நமக்கு மிகவும் பரிச்சயமான பாடல்கள் அநேகம். திருமூலரின் பாடல்கள் பலவும் கூட இடம் பெற்றிருந்தன. திருமுறைத் தேனமுதைச் சுவைத்து மகிழ்ந்தேன். இதற்கு ஆயிரம் ஜன்னல் வீட்டு நா. நா. நா.அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி வீட்டார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும், மந்திரமாவது நீறு, கூற்றாயினவாறு விலக்கலீர், அப்பனை நந்தியை ஆரா அமுதினை., சொற்றுணை வேதியன்  இவற்றோடு

திருவாசகமும் “ தொல்லை  இரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்லலறுத்து ஆனந்தமயமாக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசமென்னும் தேன் “ஆகியனவும் பாடப்பட்டன.

ஒவ்வொரு பாட்டுக்கும் உரிய ராகத்தில் அவற்றைப் பாடினார்கள், இந்த பன்னிரு திருமுறைப் பாராயண குழுமத்தார். நாமும் பின் தொடர்ந்தோம்.
திருப்பொன்னூஞ்சல் என்னும் பாடல் பாடப்படும்போது இந்த ஊஞ்சலை ஆட்டியபடி பாடினோம்.

இதில் ஈசனும் இறைவியும் குழந்தையாகக் காட்சி தந்ததுபோல்  இரு சிறு மாலைகளும், ஒரு கழுத்தணியும் ஒரு குழையும் காட்சி அளித்தது.

ஆனந்த மாலை பாடும்போது மிகப் பரவசமாக இருந்தது.
இந்த மடம் காரைக்குடி நகரச் சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தில் உள்ள சாலையில் உள்ளது. இதில் அனுகூல விநாயகர் கோவில் கொண்டிருக்கிறார்.


இடப்புறமும் வலப்புறமும் அறுபத்து மூன்று நாயன்மாரின் ஓவியங்கள் படமாகக் காட்சி அளிக்கின்றன.
மேலே விதானத்தில் அழகான டிசைன்கள் அமைக்கப்பட்டிருந்தன. இடப்புறமும் வலப்புறமும் கூடங்கள் இருக்கின்றன. ஒரு சாப்பாடுப் பந்தியும் இரண்டாம் கட்டும் கூட இருக்கின்றது.

சாந்தி சதாபிஷேகம், செய்துகொள்பவர்களும், பழனிக்குக் காவடி கட்டுபவர்கள், அமாவாசை தர்ப்பணம் கொடுப்பவர்கள் ஆகியோர் இம்மடத்தில் நிகழ்த்துவார்கள்.
தனி மணியும் கொத்தாகக் கட்டப்பட்டுள்ள மணிகளும் அழகு.
இங்கே அமர்ந்துதான் திருமுறை பாராயணம் செய்தோம். மதிய உணவு உண்ண அனைவரும் சென்றபோது எடுத்தேன். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களே மதிய மாலை உணவும் காஃபி டீயும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பன்னிரு திருமுறையும் சமயக் குரவர்கள் நால்வரும்.
இந்நிகழ்வில் ஹைலைட்டாக தேவகோட்டை, கயிலைமணி, பொற்கிழிக் கவிஞர், முத்தமிழ் பேரறிஞர், காசி ஸ்ரீ அரு சோமசுந்தரன் அவர்கள் பேசினார்கள். இதுவரை ஆறுமுறை நடைப்பயணமாக புனித தலங்களுக்கு இராமேஸ்வரத்திலிருந்து காசிக்குச் சென்று  வந்தவர்.

சந்தத்தோடு , எதுகை மோனை தப்பாமல் பாடல் பாடியவர்களைப் பாராட்டியதோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.
அவருடைய பேச்சின்சில துளிகள்.

தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாராயணம் செய்வது மிகச் சிறந்த தொண்டு. இன்றைய காலகட்டத்தில் இதைக் கேட்பவர்களும் பாடுபவர்களும் இம்மாதிரி நிகழ்வுக்கு புரவலரும் அருகி வருகிறார்கள். சமயத்  தொண்டில் முதன்மையானது இம்மாதிரிப் பாடல்களால் இறைவனைப் பாடிப்பரவுவதே.

தேவாரம் பக்தி இலக்கியம், திருவாசகம் ஞானம் தரும் இலக்கியம், திருப்புகழ் செல்வம் தரும் இலக்கியம், இம்மூன்றுமே வாழ்க்கைக்குத் தேவை.

இருபது வயது வரை இளமை, இருபதிலிருந்து நாற்பது வயதுவரை இல்லறம், நாற்பதிலிருந்து அறுபது வயது வரை துறவறம், அறுபதிலிருந்து எண்பது வயதுவரை ஞானம், அதன் பின் நூறு வரை தவம் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு டாக்டர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளச் சொல்கிறார்கள். ஆனால் நமக்கோ வாழ்க்கையே நடைப்பயிற்சிதான் என்று கூறிக் கூட்டத்தாரைக் கலகலக்க வைத்தார்கள். படுக்கப் படுக்க வியாதி வரும். நடக்க நடக்க வாழ்க்கை நீளும் என்றார்கள்.

காரைக்குடி வீடுகள் மிகப் பெரியவை அதனால் நடக்க நடக்க நல்லது. மேலும் நமது நடக்கும்போது நமது பாதத்தில் உள்ள அக்யுபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டு அனைத்து உறுப்புக்களுக்கும் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது என்றார்கள். அதனால் நோய் நொடியற்ற வாழ்வு கிட்டும்.

நூறாண்டு வாழவேண்டும் என ஆசைப்பட வேண்டும். ஊனுடம்பே ஆலயம் எனத் திருமூலர் சொன்னது போல் உடம்பைப் பாதுகாத்தல் முக்கியம். முடிந்தவரை நடைப்பயிற்சி  செய்தால் நூறாண்டு வாழும் பாக்கியம் கிட்டும் என்றார்.

இவர்கள் பல வருடங்கள் முன்பே  முன்பு காசிக்கு பாதயாத்திரையாக நடந்தே சென்றவர்கள். செட்டிநாட்டின், காரைக்குடியின் முக்கிய இலக்கிய கர்த்தா, நிறைய நூல்களைப் படைத்திருக்கிறார்கள்.

நகரத்தார் போஸ்ட் என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்கள்.
ஆயிரம் ஜன்னல்வீட்டு  அழகப்பன் அண்ணன் உமையாள் ஆச்சி ஆகியோரோடு காசிஸ்ரீ அரு சோ.
நன்றி கூறுகிறார் அழகப்ப அண்ணன்.
 முடிவில் திருமுறைப் பாராயண குழுமத்தினர் பாடிய ஒரு திருமுறைப்பாடலுக்காக கூப்பிய கரத்தொடு  எனது பெற்றோர்கள்.
மிக அருமையான திருமுறைத் தேனமுது இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது. அறுபத்துமூவர் மடத்துக்கும் ஆயிரம் ஜன்னல் வீட்டு அழகப்ப அண்ணன் அவர்களுக்கும் என் தாய்தந்தையருக்கும் காசி ஸ்ரீ அரு சொ அவர்களுக்கு நன்றிகள். 

6 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகிழ்ந்தேன் சகோதரியாரே
நன்றி

R Muthusamy சொன்னது…

காரைக்குடி அறுபத்துமூவர் மடத்தில் நடைபெற்ற திருமுறை பாராயணம் பற்றிய நிறைவான பதிவாகும்.

விஸ்வநாத் சொன்னது…

மிக அருமை. நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

ஆஜர்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தேனமுது நாங்களும் பருகின உணர்வு. நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி முத்துசாமி சகோ

நன்றி விசு சார்

நன்றி பாலா சார்.

நன்றி வெங்கட் சகோ.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...