வியாழன், 25 ஜனவரி, 2018

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

உலகத்திலேயே புகழ்பெற்ற விநாயகருக்குக் கட்டப்பட்ட தனிப்பெரும்கோயில்  பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோவில். இது காரைக்குடியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குன்றக்குடி வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த விநாயகர் பிரம்மாண்டமானவர் ஏறக்குறைய இரண்டு மீட்டர் உயரம் , கன கம்பீரம்.

அநேகமாக எல்லா இந்துக்களின் இல்லங்களிலும் கடைகள் , நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இவரது புகைப்படத்தைப் பார்க்கலாம். இளையாற்றங்குடிக் கோயிலில் இருந்து  ( திருவேட்பூருடையார்)  பிள்ளையார் பட்டிக்கோயிலாரும் , இரணிக்கோயிலாரும் பிரிந்து தனிக்கோயில் அமைத்துக் கொண்டார்கள். இருவரும் சகோதரர்கள் என்பதால் இவர்களுக்குள் திருமண பந்தம் கொள்வதில்லை.

குடைவரைக் கோயில், கற்றளிக் கோயில் ஆகியவற்றோடு பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் &  மலையிலேயே உருவான சுயம்பு என்பதோடு இங்கே உறையும்  இறைவனுக்கும் இறைவிக்கும் இரு தெய்வத்திருநாமங்கள் என்பது விசேஷம். அர்ஜுன வனேசர் என்ற திருவீசர்/ மருதீசர், அசோக குஸுமாம்பாள் , சிவகாமவல்லி என்ற வாடா மலர் மங்கை ஆகியன.

 எல்லா நகரத்தார் கோயில்களிலும் ஈசனுக்கும் இறைவிக்கும் மட்டும்தான் முதலிடம், இங்கோ அவர்கள் மைந்தனுக்கு முதலிடம் கொடுத்துத் தனியே அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். கேட்டதெல்லாம் கொடுப்பதால் இவர் கற்பக விநாயகர்.

இங்கே விநாயகர் மலையுடன் அமைந்த சுயம்பு மூர்த்தி என்பதால் தோமாலையாக அணிவிக்கப்படும் மாலை வெகு விசேஷம். முன்புறம் ஒன்பது தொங்கு  விளக்குகள், இரு குத்து விளக்குகள்,முன்புறம் ஒரு மெகா விளக்கு வரிசை ஜொலிக்க நடக்கும் அபிஷேகமும் அலங்காரமும் காணக் கண் கோடி வேண்டும். இடது கையைத் தொடையில் வைத்து வலது கையில் மோதகம் தாங்கி அமர்ந்திருக்கும் கம்பீரத் திருக்கோலம் அவசியம் காணவேண்டிய ஒன்று.


எக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, இராஜநாராயணபுரம் ஆகியன இவ்வூரின் பெயர்கள். இக்கோயில் 1000 வருடங்களுக்கு முற்பட்டது. இங்கே கிரிவலம் வரும்போது விநாயகர் அகவலையும், குன்றக்குடியில் கந்தர் சஷ்டிக் கவசத்தையும் சொல்லியவாறு வருவோம். :)

கிழக்கு நோக்கிய எழு நிலை ராஜ கோபுரம் சிவனார் சன்னிதிக்கும் வடக்கு நோக்கிய மூன்று நிலை விநாயக கோபுரம் விநாயகர் சந்நிதிக்கும் இட்டுச் செல்லும்.    மிக நீண்ட பிரகாரங்கள். விநாயகரை கிரிவலமாகத்தான் வந்து வழிபட வேண்டும். உள் பிரகாரம் சிவனார்க்கும் அம்மைக்கும் மட்டுமே.

இங்கே கணபதி நிருத்திய மண்டபம் ஒன்றும். கணபதி ஹோம சாலை ஒன்றும் உள்ளது. நித்யப் படியே ஏதோ ஒரு கட்டளைதாரர் மூலம் பிரம்மாண்ட கணபதி ஹோமம் தொடர்ந்து நடந்து வருகிறது.

விநாயகர் உருவம் வரையப்பட்டிருக்கும் நடராஜர் சபைக்கும் செல்லலாம். அங்கே எங்கே நின்றாலும் அந்த விநாயகர் நம்மைப் பார்ப்பது போல் வரையப்பட்டிருப்பது சிறப்பு.
ஸ்ரீ கற்பக விநாயகர் அரங்கம். ரெட் கார்ப்பெட் என்பார்கள். இங்கே பச்சைக்கம்பளம் வரவேற்கிறது.
இக்கோயிலுக்கு அருகில் உள்ள விடுதிகளில் சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியன நடைபெற்று வருகின்றன.  இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விசேஷம். சதுர்த்தி விரதமிருப்பவர்கள் இங்கே விரதம் மேற்கொண்டு ஒரு வருடம் விரதம் பிடித்துப் பூர்த்தியானபின்பு இங்கே எழுதி வைத்துக் கும்பம் சொரிந்து முடிப்பார்கள்.

முக்குறுணி மோதகம், அப்பம் ,வடை  அருகம்புல் ஆகியன வேண்டிக்கொண்டு படைத்துச் சார்த்துவார்கள். அதில் இந்த அப்பம் ரொம்பவே விசேஷம். எல்லாமே ஜெயண்ட் சைஸ்.
இக்கோயிலின் புஷ்கரணி கட்டுக்கோப்பான அழகுடையது. சுற்றிலும் தென்னை சூழ் சோலையாகக் காட்சி தரும். அவற்றின் பிம்பம் அந்த புஷ்கரணியில் புகைப்படம் போல் பதிவாகி அழகூட்டும்.

///வெற்பினில் அழகிய வடிவெடுத்து
விளங்கிடும் கற்பக விநாயகர்முன்
நற்பதி பிள்ளையார் பட்டிதனில்
நாம்போய் நின்று மனமுருகிப் 
பொற்புயர் செந்தமிழ்ப் பாவாலே
பூவடி தொழுதால் கருணையுடன்
அற்புத வளங்கள் அவர்தருவார்!
அரசெனும் வாழ்வை நாம் பெறுவோம். !///

-- நன்றி நமது செட்டிநாடு இதழ். 

பிள்ளையார்பட்டிக் கோயிலைச் சார்ந்தவர்களை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

”கல்வாசநாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியூர் மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார்.”

புத்தாண்டு அன்று கிட்டத்தட்ட 5000 பேர் வரை வந்து தரிசித்துச் செல்லும் புகழ் பெற்றது இக்கோயில்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

மக்களின் வகுப்புகள் அவர்கள் சார்ந்திருக்கும் கோவிலைப் பொறுத்ததா பிள்ளையார் பட்டி சென்று வந்திருக்கிறோம்

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் பாலா சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...