புதன், 27 டிசம்பர், 2017

திரௌபதி அம்மனுக்குக் கோவில். !

முதல் முறையாக கும்பகோணத்தில் இக்கோயிலை சாரங்கபாணி கோயிலுக்கருகில் கீழ வீதியில் பார்த்தேன். வித்யாசமான அமைப்பில் கோபுரமும் இருந்தது.

( நான் முன்பு குறிப்பிட்டிருந்த ஒரு இடுகையில் உள்ள ஓவியத்தில் இருக்கும் இரு பெண்கள் பாஞ்சாலியும் சிம்ஹிகாவுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களில் கோட்டையத்துத் தம்புரான் எழுதிய மலையாள மகாபாரதக் கதைப்படி  அஞ்ஞாதவாதத்தில்  ஷார்துளா என்ற தன் கணவனை கொன்றதற்காகப் பழி வாங்க தேவதை உருவில் வந்து துர்க்கைகோயிலுக்குப் போக பாஞ்சாலியை அழைக்கும் சிம்ஹிகாவும் பாஞ்சாலியும் இடம் பெற்ற படம் இதுவாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். )


மேலே ஒன்பது  குட்டி தேவர்கள்/ தேவதைகள் மாலை பிடித்தபடி நிற்க நாற்புறமும் காவல் தெய்வங்கள் கைகூப்பி அமர்ந்திருக்க, இரு பணிப்பெண்கள் இருபுறமும் வீற்றிருக்க பாஞ்சாலி/திரௌபதி அம்மன் பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணரும் சூழ நின்றிருக்கும் கோலத்துடன் இருந்தது கோபுரம்.

திரௌபதி அம்மனுக்கும் கோயிலா என்று அதிசயித்துப் புகைப்படம் எடுத்தேன். அதன்பின் தான் தெரிந்தது கும்பகோணத்திலேயே நான்கைந்து இடங்களிலும் உலகமெங்கும் கிட்டத்தட்ட 400 கோயில்களும் இலங்கையில் சிறப்புக் கோயிலும் இருப்பது.  இக்கோயிலில் இரு காளிகளும் மதுரை வீரன் சிலையும் கூட இருக்கிறது.
திரௌபதியின் பிறப்பு வாழ்க்கை எல்லாமே அவலம் நிரம்பியது.

துருபத ராஜா செய்த யாகத்தீயில் பிறந்தவள். இவளுக்கு ஒரு சகோதரன் திருஷ்டத்யும்னன் என்று. அவனும் நெருப்பில் அவளுடன் பிறந்தவன்தான் . சுயம்வரத்தில் இவளை வென்ற அர்ச்சுனன் மட்டுமே இவளுக்குக் கணவனாய் இருக்கவேண்டும். ஆனால் குந்தி கூறிய அவசர மொழியை ஆணையாக ஏற்ற பாண்டவர் ஐவரும் அவளை மணந்து ஓவ்வொருவரும் ஓராண்டு இல்லறம் நடத்தினர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உபபாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர்.

இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டுவந்த பாண்டவர்களைக் காணவந்த துரியோதனன் அங்கே இருந்த தரையை நீர் நிலை என்று எண்ணி வீழ்ந்துவிட அதைக் கண்டு நகைத்த திரௌபதி அவனது பகையானாள். பகை முடிக்க எண்ணி தர்மரைச் சூதுக்கு அழைத்த துரியோதனன் தனது மாமா சகுனியுடன் விளையாடச் செய்து அவர்களது உடமைகள் அனைத்தையும் பிணையமாக்கிக் கவர்ந்து கொள்கிறான்., நாடு , சகோதரர்கள், தான் மற்றும் திரௌபதி உட்பட அனைவரையும் பயணம் வைத்த தருமரிடம் திரௌபதி கேட்கும் கேள்விதான் அட்டகாசமானது.

”தன்னையே தோற்றபின் என்னை எப்படிப் பணயம் வைத்தீர்கள் ? ”

அதன் பின் துச்சாதனன் துகிலுரிந்ததும், துரியோதனன் மடியில் அமரச் சொன்னதும் கிருஷ்ணன் துகிலை வளரச் செய்து காத்ததும் பாஞ்சாலி ( பஞ்சபாண்டவரின் மனைவி ) சபதமிட்டதும் அறிந்ததுதான்.

“ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்.
பாவி துச்சாதனன் செந்நீர்
அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம்
மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான்
இது செய்யுமுன்னே முடியேன் “

என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மறக்க முடியுமா.

ஆரண்யவாசத்தில் பட்ட கஷ்டங்களும் அஞ்ஞாதவாசத்தில் சைரந்திரி என்ற பெயரில் விராட தேசத்தில் வசித்தபோது  கீசகனால் துன்புற்றதும் கொடுமை என்றால் அதை விடக் கொடுமை பாண்டவர்கள் என நினைத்து உப பாண்டவர்களை குருஷேத்திரப் போரின் 18 ஆம் நாளில் அஸ்வத்தாமன் கொன்றது.எல்லாவற்றிலும் மீண்டெழுந்த திரௌபதி இதில்தான் மடிந்திருப்பாள்.

குழந்தை வரம் தரும் தெய்வம் என்றும், மழை தரும் தெய்வமாகவும் இன்று இவள்  வணங்கப்படுகிறாள். இவளுடன் சில கோயில்களில் குருஷேத்திரப் போரில் பாண்டவர் வெல்லவேண்டி நரபலியான அரவானின் தலையும் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. உக்கிர தெய்வமான  காளியும் மதுரை வீரனும் கூட இக்கோயில்களில் காட்சி அளிக்கிறார்கள்.

8 கருத்துகள் :

rakkoli சொன்னது…

ராஜபாளையத்தில. என் பெரியம்மாவின் வீட்டருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரே திரௌமதி அம்மன் கோவில் ஸ்டாப.தான்.

ஸ்ரீராம். சொன்னது…

மலையாள மஹாபாரதம் படித்ததில்லை. என்ன வித்தியாசம்?

//என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மறக்க முடியுமா.//

எப்படி மறக்க முடியும்? மனப்பாடப்பகுதி ஆச்சே!!!

KILLERGEE Devakottai சொன்னது…

பரமக்குடியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் உண்டு
த.ம.2

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் கீழ வீதி, சாரங்கபாணி கீழ வீதி, மதகடித்தெரு, ஹாஜியார் தெரு உள்ளிட்ட பல இடங்களில் திரௌபதியம்மனுக்குக் கோயில்கள் உள்ளன. அனைத்துக்கோயில்களுக்கும் நான் சென்றுள்ளேன். வெளிநாட்டிலிருந்து திரௌபதி அம்மனைப் பற்றி ஆய்வு செய்ய வந்தவர் மூலமாக எனக்கு இது சாத்தியமாயிற்று. அவர் கும்பகோணத்தில் உள்ள கோயில்களைப் பற்றி கூறியபின்னரே நான் சென்றேன். இதுதொடர்பாக கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில்கள் என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் ஒரு பதிவினைத் தொடங்கினேன். மற்றொரு செய்தி..கும்பகோணம் ஹாஜியார் தெருவிலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் உள்ள அரவான் சிலைதான் (தலை) இந்தியாவிலுள்ள அரவான் சிலை தலைகளிலேயே பெரியது என்று கூறுவதை அங்கு சென்றபோது அறிந்தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

தகவலுக்கு நன்றி ராக்கோழி

ஸ்ரீராம் தம்புரான் எழுதிய அதில் இன்னும் இரு கேரக்டர்கள் உண்டு. சிம்ஹிகா & அவளது கணவன் ஷார்துளா என்னும் இரு கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இவர்கள் தமிழ் மகாபாரத்தில் இல்லை.

தகவலுக்கு நன்றி கில்லர்ஜி சகோ

அரிய தகவல்களை வழங்கியமைக்கு நன்றி ஜம்பு சார். விக்கிபீடியாவில் 600 கட்டுரைகள் வழங்கியவராயிற்றே !!!

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

பெயரில்லா சொன்னது…

There is a temple for Arulmigu Throubathi Amman with Aravaan Thalai too in Vazhmangalam, Near Thittacherry, Macau district. This Amman is Kuladheivam for most of the Sengundha Mudhaliyaar in Thiruvarur, Vazhmangalam, Kondhai, T.R.Pattinam.
Some more temples also there for Her in cuddalore, Mayiladuthurai etc.
GMR

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

திரௌபதி கோயில் அட! கேட்டதே இல்லை...பின்னூட்டங்கள் வழியாகவும் மேலும் இருப்பதாகத் தெரிகிறது உங்கள் தகவல்களும் அறிந்துகொண்டோம்...

Thenammai Lakshmanan சொன்னது…

தகவலுக்கு நன்றி GMR

நன்றி துளசி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...