வெள்ளி, 13 அக்டோபர், 2017

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி

பழனி மலை முருகா
பழனித் திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத் தா
ஞானப் பழம் ஒன்று எந்தனுக்குத் தா

முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
பழனி முருகனைக் கூப்பிட்டு

பழனி என்னும் ஊரிலே
பழனி என்னும் பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே
முருகன் பலனும் தந்தான் நேரிலே.
இராக்கால மடத்தில் வழிபடப்படும் தெண்டாயுதபாணி 
"ஆண்டிக் கோலத்தில் அமர்ந்தாய் தண்டுடனே" என்று பாடல் பாடினாலும் எல்லாரும் தரிசிக்க விரும்புவது பழம் நீ இராஜ அலங்காரனையே. காலையில் பழனி தெண்டாயுதபாணி  பாலதண்டாயுதபாணியாகவும் மதியம்  வைதீகக்  கோலத்திலும் மாலை இராஜ அலங்காரத்திலும்  காட்சி அளிக்கிறார் முருகப் பெருமான்.
இது கீழே இருக்கும் திருவாவினன்குடி கோயில்.


பழனியில்  தைப்பூசத்திருவிழா, தினசரி மாலை தங்கத்தேர் இழுத்தல் சிறப்பு 

வேலும் மயிலும் துணை

பழனிமலையில் ஏற படிக்கட்டுகள் ( 690 ) , யானையடிப்பாதை இருந்தாலும் ரோப் கார் & கேபிள் கார் வசதி உண்டு. எப்போதும் (மூச்சு வாங்க) ஏறுவது படி வழி அல்லது யானையடிப்பாதை. கூட்டமாக இருக்கும் என்பதால் ரோப் கார் பக்கம் போவதில்லை. எப்போதாவது சில சமயம் ரோப் காரில் அமர்ந்து த்ரில்லுடன் இறங்குவதுண்டு.

படி ஏறுமுன்னே வழிவிடும் விநாயகரை தரிசித்து ஏறினால் கிட்டத்தட்ட 30 விநாயகர்களை தரிசிக்கலாம். அதேபோல் கிரிவலத்தில் எல்லாக் கடவுளர் கோயில்களையும் தரிசிக்கலாம். யானையடிப்பாதையில் வள்ளி சுனை உண்டு. கடவுளர் கதை சிற்பவடிவிலும் காணக் கிடைக்கும். படித்தோறும் புதுப்பித்தவர்களின் பெயர்களோடு சந்தனம், குங்குமம், சூடமும் ஜொலிக்கும். ( வேண்டுதல் ). எனவே மழை பெய்யும் நேரம் பார்த்து நடங்க. படிகள் வழுக்கலாம்
பழனி என்றதும் பல்வேறு நினைவுகள். பல்வேறு பயணங்கள் தாக்குவதுண்டு. காரைக்குடியில் இருந்து செல்வது. பாதயாத்திரையாக சென்றது. கோயமுத்தூரிலிருந்து, தாராபுரத்திலிருந்து, கும்பகோணத்திலிருந்து என்று பல்வேறு பயணங்கள். ரங்க்ஸுடன் படி இறங்கும்போது கைகோர்த்து தடதடவென இறங்கி ஓடிவருவது என்று ( அதன்பின் இரு நாட்களுக்கு கெண்டைக்கால் வலி பிய்க்கும். ).
தோட்டங்கள் பூக்கள் என சுத்தமாகப் பராமரிக்கப்படும் ரோப்கார் பாதை.
மலை ஏறி கடைசிப் படியைத் தொட்டவுடன் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வரும் பாருங்க. அதுவே கடவுட் காட்சி . சூப்பர். இப்ப படிகளில் & யானையடிப்பாதையை அடைத்த கடைகளை/தடைகளை  எல்லாம் நீக்கிட்டாங்க. சோ நடக்க எளிதா இருக்கு. தர்ம தரிசனம் எப்போதாவதுதான் வாய்க்கும். பல முறை கூட்டத்தைப் பார்த்து 20 ரூ, 100 ரூ டிக்கெட்டில் போனால் அங்கே கூட்டம் எக்கித் தள்ளும். ஐயப்பன் சீசனில் ரொம்பவே அதிகம். அதுபோல் மேற்குநோக்கி தன் அருட்பார்வையை முருகன் வீசுவதாலோ என்னவோ மலையாள பக்தர்களும் அதிகம்.
அழகு முகனுக்கும் ஆனை  முகனுக்கும்  நடுவில் ஒரு மாங்கனியைக் கொண்டுவந்து நாரதர் பிரச்சனையை ஆரம்பிக்க. அழகு முகன்  தன் குட்டி மயிலில் உலகை மும்முறை சுற்றி வருகிறார். ஆனை முகனோ அம்மையப்பனே உலகம் என சுற்றி வந்து மாங்கனியைப் பெற்றுவிடுகிறார்.
அதைக்கண்டு கோபித்துக்கொண்டு வந்து  அழகன் தண்டாயுதம் சுமந்து நின்ற சக்திகிரி என்ற மலைதான் பழனிமலை.இம்மலை வந்ததும் ஒரு வரலாறு. அகத்தியர் இடும்பனிடம் சக்திகிரி, சிவகிரி ஆகிய மலைகளை காவடியாகக் கட்டி பொதிகைக்கு எடுத்துச் செல்லும்படி கூற ,  பாரம் தாளாமல் இங்கே வைக்கிறான். அப்போது சிவகிரியில் முருகன் நிற்க அவன் மலையை எடுக்க முயற்சிக்கிறான். அப்போது கோபமாகும்  அவனை முருகன் தன்  அருட்பார்வை காட்டி   ஆட்கொள்ளுகிறார்.  இதனால் இங்கே பக்தர்கள் 30 விதமான காவடி எடுக்கிறார்கள்.

பால்காவடி, பன்னிர்க்காவடி,சேவற்காவடி, சர்ப்பக்காவடி , தீர்த்தக் காவடி, ஆகியன சில. பஞ்சாமிர்தக் காவடி ரொம்ப ஸ்பெஷல். காவடியில் இருக்கும் வெல்லத்தை தேன், நெய் , கல்கண்டு, பேரிச்சம்பழம், மலை வாழைப்பழம் ஆகியவற்றுடன் கலந்து பஞ்சாமிர்தம் செய்யப்பட்டு அபிஷேகிக்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தம்தான் ( விபூதியும் )  இங்கே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆன பிரசாதம். கெளபீன பிரசாதமும் இங்கே சிறப்பு. 

வருடந்தோறும் இங்கே தைப்பூசத்துக்குக் காவடி எடுக்கும் பக்தர்கள் அநேகம். பாத யாத்திரை பக்தர்கள் சில லட்சம் பேர் வருவார்கள்.மொட்டை போட்டுவிட்டு ஷண்முகா நதியில் ( முன்னர் ) குளிப்பார்கள். வையாபுரிக்குளமும்  சரவணப் பொய்கை என்றொரு நதியும் இருக்கிறது. 

முடி இறக்கி சந்தனம் பூசி சாமி தரிசனம் செய்து வந்தால் அன்னதானம் நடக்கிறது. ஆனால் பத்து மணிக்கு உள்ளே சென்றால் க்யூவில் நின்று ஹால் ஹாலாக அமர்ந்து ஒரு மணிக்குத்தான் சாப்பிடலாம்.

ஒரு பொரியல் ஒரு கூட்டு சாம்பார் அப்பளம் மோருடன் சாப்பாடு சுட சுட பரிமாறப்படுகிறது
காலையில் எட்டு மணியில் இருந்து இரவு 10 மணி வரை அன்னதானமுண்டு !!!
சாப்பிட்டுவிட்டு அந்த ஹாலின்வழியே வெளியே பார்த்தால் ஏகாந்தமாய் நிற்கும் மலைகளும் வயலும் ( பழனியின் கழனிகளும் ) தட்டுப்படுகின்றன.
சரி மெல்லப் படி இறங்குவோம். ஊர் முழுக்க ஹோட்டல்களும் சத்திரங்களும்தான். ஆசிலேட்டிங் பாப்புலேஷன் ஜாஸ்தி. அதனால் சில கடைகளில் உணவு தரமாக இருக்காது. பார்த்து சாப்பிடணும். ரோட்டோரக் கடைகளில் பெரிது பெரிதாக பூரி இருக்கும் கண்ணை மூடிக்கொண்டு கடக்கவும். அதேபோல் பாதி ஊர் குப்பை போடப்பட்டுக் கொண்டே இருக்கும். எப்படித்தான் துப்புரவு செய்கின்றார்களோ பாவம்.

எப்போதாவது செல்லும்போது கிரிவலம்  வந்ததுண்டு. ஆனால் அந்த சிவகிரி ஏறியதில்லை. ஒரு முறை மூன்று நாட்கள் அங்கே இராக்கால மடத்தில் ( இன்னொரு மடமும் இருக்கிறது. அன்னதான மடம் என்று பெயர். அங்கேதான் காவடிகள் வந்திறங்கி பூஜை நடக்கும் ) தங்கியிருந்தபோது ரங்க்ஸ் அந்த சிவகிரி ஏறிசென்று வந்ததாக சொன்னார்.
அழகன் முருகனை அருகில் தரிசிக்க தம்பி குடும்பத்தாரோடு சென்றதை சொல்ல மறந்துவிட்டேன் . உண்ட களைப்பு .( இது கணவரோடு சென்றபோது உண்டது ). முருகனுக்கு எல்லாம் அபிஷேகத்தையும் செய்து அருகில் இருந்து கண் குளிர வணங்கி எழுந்து அந்த சந்தனத்தையும் விபூதியையும் பெற்றோம். நவபாஷாண முருகன் பின்னிருக்கிறார்.இவர் போகர் செய்த ஒன்பது விதமான பாஷாணம் கொண்டு ( வெள்ளைப்பாஷாணமும் கூட ) உருவாக்கப்பட்டவர். அவருக்கு சந்தனக்  காப்பு மட்டுமே. அபிஷேகம் இல்லை.

இங்கே உணவருந்த ஹோட்டல் நளபாகமும், மீனாட்சி  பவனும் பரவாயில்லை. என் முகநூல் நண்பர் கோகுல் சல்வாடி குடும்பத்தாரோடு அங்கே பாலாஜி பவனில் இரவு உணவு அருந்தினோம்.

இரவிலும் கண்கொள்ளாக் காட்சி. பஸ் ஸ்டாண்டில் இறங்கும்போதும் சரி, திரும்ப வந்து பஸ் ஏறும்போதும் சரி. அல்லது காரில் சென்றாலும் திரும்பித் திரும்பி மலையை ரசிப்பேன். கிடைக்கும் இடம் எல்லாம் ஓம் என்ற எழுத்தைத் தேடுவேன். 

யாமிருக்க பயமேன் என்கிறார் முருகப் பெருமான். இன்னும் எவ்வளவோ எழுதலாம் தமிழின் முதல்வனைப் பற்றி.
படிப்பாதையில் ஒரு பசுந்துளிர்

அருணகிரிநாதர் பாடிய பழனி திருப்புகழ்

அணிபட் டணுகித் திணிபட் டமனத்தவர்விட் டவிழிக் …… கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்தவன்விட் டமலர்க் …… கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற் பெறுமக் குணமுற் …… றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப் பெறுதற் கருளைத் …… தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக் கனியைக் கணியுற் …… றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக் கருதிச் சிறைவைத் …… திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற் றொருசொற் …… பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப் பழநிக் குமரப் …… பெருமாளே!

கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இக்கோயிலை சேரமன்னன் கட்டி இதற்கான  மானியமாக  இறையிலி நிலங்கள் வழங்கியது எல்லாம் தெற்கு வாயில் பக்கம் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம். போகருக்கு தனிச்சந்நிதி உண்டு, பிரகாரத்தில்  பதினெட்டு சித்தர்களின் திருவுருவையும் தரிசிக்கலாம். சிவனையும் அம்பிகையையும்  முருகன்  பூஜிக்கும் விளா பூஜை ஸ்பெஷல்.  கருவறை விமானம் தங்கத்தில் ஜொலிக்கும் இதை எல்லாம் படம் எடுக்க முடியாது. :(


அப்புறம் முக்கிய விஷயம்... பழனிக்குப் போனா ஜட்கா சவாரி செய்ய மறக்காதீங்க. 

 அறுபடை முருகன் கவசங்கள் பழனி/திருஆவினன்குடி.. 

முதலாவது கவசம் – பழநி கவசம்
காப்பு
அமரர்இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி,
துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்
வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா
ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்
சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம
எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை
தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி
மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென
வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்
துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்
ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

 நன்றி விதை & விருட்சம்


டிஸ்கி :- இதையும் பாருங்க. 

அறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்ச்சோலை

(தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.)

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம் 

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.  

4 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பழனி சென்றுள்ளேன். இன்று மறுபடியும் உங்கள் பதிவு மூலமாக.

Kurinji சொன்னது…

migavum arumai

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி குறிஞ்சி.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...