திங்கள், 28 ஆகஸ்ட், 2017

நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி.

அதிகாலை வெய்யில் சுகமாய் வருட கிழக்கு நோக்கிய ஐந்துநிலை இராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது.  பணங்காசு அதிகம் பெற்றவரைப் பார்த்து அவருக்கென்ன "சுக்ர திசை அடிச்சிருக்கு" என்று சொல்வார்கள். சுக்ரதிசை நடந்தால் தொட்டதெல்லாம் பொன்னாகும். அப்படிப்பட்ட பொன்னார்மேனியன் சுக்கிரனை வணங்கும் வாய்ப்புக்கு கிட்டியது. 
ரோஸ் அரளி மாலையுடன் சுக்கிரனைப் பார்க்க நடையை எட்டிப் போட்டோம்.
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் 2000 வருடம் பழமை வாய்ந்தது. மூலவர் அக்னீஸ்வரர்,  இறைவி கற்பகாம்பிகை. சோழர் காலக் கற்றளிக் கோயில் இது. அப்பர் பாடல்பெற்ற திருத்தலம். ஸ்தலமரம் பலாசு, தீர்த்தம் அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம்.பிரம்மன் வணங்கியதால் பிரம்மபுரி என்றும் தீர்த்தத்துக்கு பிரம்மதீர்த்தம் என்ற பெயருமுண்டு.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பேதம் வைத்து அமிர்தம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி கண்டு அசுரர்கள் வருந்தி அசுரகுலகுரு சுக்ராச்சாரியாரரிடம் முறையிட்டனர்.  தேவர்கள் நாடு நகரமிழந்து பூலோகம் சென்று துன்புற அசுரகுரு சாபம் வழங்கினார். துன்புற்ற தேவர்கள் வியாசமுனிவரின் ஆலோசனையின்படி இங்குவந்து அக்னீஸ்வரரை வணங்க சுக்கிரனின் சாபத்திலிருந்து சாபவிமோசனம் பெற்றார்கள். எனவே இது சுக்கிர தோஷம் நீக்கும் சிறப்பான ஸ்தலமாகும்.
பராசரர், ஹரிதத்தர், மானக்கஞ்சார நாயனார், கலிக்காமர், சுரைக்காய் பக்தர், கம்சன் ஆகியோர் வணங்கிய திருத்தலம் இது.  ஹரதத்தர் பஞ்சாட்ஷரத்தின் மகிமையை விளக்கிய ஊர் இது. கும்பகோணத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அக்கினியின் பாண்டுநோய், பராசரரின் சித்தபிரமை, சந்திரனின் சாபம் நீக்கிய தலம் இது. கல் நந்தி புல் தின்ற பெருமையுடையது இத்தலம். இங்கே சிவனின் முத்தித்  தாண்டவம் சிறப்பு.
சுக்ராச்சாரியார் பிரம்மனின் பேரன். பிருகுமுனிவரின் புத்திரர். இவரது தாய் பிலோமிசை. சுக்கிரன் தனது தேவி சுகீர்த்தியுடன் இங்கே காட்சி அளிக்கிறார் . இவரை வணங்கினால் கண் சம்பந்தமான  நோய் அகலும், குடும்ப ஒற்றுமை பலப்படும். தனதான்ய பசுவிருத்தியும் ஏற்படும்.
அஷ்டலெஷ்மிகளும் காட்சியளிக்கும் மண்டபம்சுக்கிரன் நிறம் வெண்மை எனவே வெண்பட்டாடை வெள்ளைத் தாமரைமலர்கள், நெய்தீபம் , மொச்சைப்பொடி கலந்த சாதம், நவரத்தினங்களில் வைரம் ஆகியன சுக்கிரனுக்கு உகந்தவை. 
சுக்கிரன் மூல மந்திரம்
"ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ",

சுக்கிரன்  காயத்ரி மந்திரம்

அச்வ த்வஜாய வித்மஹே
தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||

சுக்கிரன் துதி

சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

தக்கவர் பரவிப் போற்றும் தைத்தியர் குருவை வேண்டிச்
சுக்கிர கவசமென்னும் தோத்திரக் கவிநூல் பாடி
நெக்குநெக்கு உருகு நெஞ்சோர் நினைந்தன யாவும் கூடும்
மக்களும் மனையும் வாழ்வும் வைகலும் பெருகு மாதோ !
-சுக்கிர கவசம்.

சுக்கிரன் ஸ்தோத்திரம்

ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!

வெள்ளிக்கிழமை விரதம் இருத்தல், அம்மன் உபாசனை, லக்ஷ்மி பூஜை, கனகதாரா ஸ்தோத்திரம், சுக்கிரன் பாடல்கள்  படித்தால் சுக்கிர தோஷம் நீங்கி நற்பலன் கிட்டும். 


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்  

3 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சுக்கிரன் கோயில் அறிந்தோம். தகவல்களும் அறிந்தோம். சுக்கிரன் எல்லோருக்கும் அருள் புரிய பிரார்த்தித்திடுவோம்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் அனைத்தும் அழகு. ரோஸ் அரளி ரொம்ப அழகா இருக்கு!

Thenammai Lakshmanan சொன்னது…

Nandri Tulsi sago & Geeths. :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...