செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், கோயிலில் ஒரு நாள் அதிகாலை  நேரத்தில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் காணும் பாக்கியம் கிட்டியது. பொதுவாக கூட்டமான நேரத்தில் முண்டியடித்துச்  சென்று வணங்கியே  பழக்கம். அன்று ஏனோ நாலைந்து பேர் நிற்க நாமும் முன்னே சென்று நன்கு தரிசிக்கும் வாய்ப்புக்கு கிட்டியதில் மிக மகழ்ச்சியாக இருந்தது. எல்லா அபிஷேகமும் முடிந்து  வெள்ளிக்கவசத்தில் ஜொலித்தார் அழகியகுட்டிசனீஸ்வரர்.
சனி, ராகு, கேது ஆகியோரின் பெயர்ச்சி எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி என்றாலே எல்லாரும் கிடுகிடுத்துப் போவார்கள். என்னென்ன சோதனை எல்லாம் வைச்சிருக்கோ சனி பகவான் என்று.

முப்பதாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றமும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சியும் இவரால்  ஒவ்வொரு ஜாதகத்திலும் இடம்பெறும். ஒவ்வொருவரின் வாழ்விலும் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாம் சுற்று பொங்கு சனி என்றும் மூன்றாம் சுற்று மரணச்சனி என்றும் வழங்கப்படுகிறது.
விநாயகர், நளன், தயரதச் சக்கரவர்த்தி ஆகியோரும் சனீஸ்வரரின் பார்வைக்குத் தப்பியவர்கள் அல்லர்.

திருநள்ளாறு தர்பாரண்யேஈஸ்வரர் கோயிலில் இவருக்கென்று தனிச்சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கஸ்தலம், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் ( தர்ப்பையில் தோன்றிய சுயம்புமூர்த்தி ) , இறைவி பிராணம்பிகை. தலவிருட்ஷம் தர்ப்பை. தீர்த்தம் நளதீர்த்தம். பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியன. நளன் நீராடி சாபவிமோசனம் பெற்றதால் இக்குளம் நளதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. அப்பர், சம்பந்தர்,சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம். சம்பந்தர் சமணர்களை வாதில் தோற்கடித்த தலமும் கூட இது. கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்று திருநள்ளாறு செல்லவேண்டும். 60 கிமீ தூரம்


சொர்ணகணபதி சந்நிதி என்ற ஸ்தலவிநாயகர் சந்நிதி மிக அழகு
சனிபகவான் ஆயுள்காரகன், முழங்காலில் ஏற்படும் நோய்களுக்கு காரணகர்த்தா.  ஊனபாதர், மந்தன், சூர்யதேவர் சாயாதேவிக்குப் பிறந்தவர் என்பதால் சாயாபுத்திரன், கிருதவர்மா என அழைக்கப்படுகிறார். இவரது வாகனம் காகம். நவக்ரஹங்களில் ஈசுவரப்  பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே. இவர் பார்வை பட்டால் அனைத்துக் கிரகங்களும் வலிமை குன்றிவிடும். இவரது மனைவியர் நீளாதேவி, மந்தாதேவி. இவரது நிறம் கருமை, கருப்பு வஸ்த்திரம், நீலச்சங்குப்பூ,  நீலோத்பவ மலர், உலோகம் இரும்பு , எள்சாதம். எள்முடிச்சிட்ட நல்லெண்ணெய் விளக்கேற்றி சனிப்ரீதி செய்கிறார்கள் பக்தர்கள்.
சனியை வணங்கினால் துயரம் தீரும் என்பதோடு அனுமனையும் விநாயகரையும் வணங்கினாலும் சனியால் ஏற்படும் கொடுமைகள் தீரும்.
சூரியனின் உஷ்ணம் தாங்காத உஷாதேவி தன்னைப் போல பிரதி உரு  ஒன்றைப் படைத்துவிட்டுத் தாய் வீடு சென்றுவிடுகிறார். அந்தப் பிரதிமைதான் சாயாதேவி. சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப்  பிறக்கிறார் சனிபகவான். சாயா நிழல் உரு ஆனதால் இவர் தந்தை சூரியன் போல தேஜஸ் இல்லாமல் கருமையாகப் பிறந்துவிடுகிறார். அதனால் தந்தை இவரை ஒதுக்க தந்தையின் அன்புக்கு மிகவும் ஏங்குகிறார் சனிபகவான் . பிறகு காசி சென்று லிங்கம் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டு கிரஹங்களிலேயே ஈசன் பதவியும் பெறுகிறார். விடாமுயற்சிக்கு உதாரணம் சனிபகவான். 

நவக்ரஹ ஹோமம் செய்வது , எள்தானம் , எள்ளன்னம் நிவேதிப்பது, கறுப்புப் பசு தானம், கருப்பு வஸ்திரம் தானம், நல்லெண்ணெயில் முகம் பார்த்துவிட்டுத் தானமளிப்பது, உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது,  சனியின் கொடுமையிலிருந்து தப்ப உதவும்.

இவரை நயந்து அல்லனவற்றிலிருந்து விலகி நல்லன செய்தால்
 
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 
    மிகநல்ல வீணை தடவி 
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் 
    உளமே புகுந்த அதனால் 
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 
    சனிபாம்பி ரண்டு முடனே 
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
    அடியா ரவர்க்கு மிகவே. 

சனி தோஷம் நீக்கும் பாடல்

நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சனி பகவான் காயத்திரி மந்திரங்கள்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்


சனீஸ்வரரின் இந்த 16 நாமாவளிகளைத் தினமும் பாராயணம் செய்யலாம்.

கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
ஷோடசைதானி நாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே.

சனீஸ்வரன் துதிப்பாடல்கள்

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

முனிவர் தேவரேழு மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வு மகிமையல்லாதுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும் 
சனிபக வானேபோற்றி! தமியனேற்கருள் செய்வாயே !

சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை. சனியைப் போலக்  கெடுப்பவனும் இல்லை என்பது முதுமொழி. சாயாபுத்திரன் சனிபகவானை வணங்கி சங்கடங்களில் இருந்து விடுபடுவோம்.


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்  
 

4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் (மூலவர் சன்னதியின் இடப்புறத்தில்)உள்ள சனீஸ்வரரைப் பல முறை பார்த்துள்ளோம். இன்று உங்கள் பதிவு மூலமாகக் கண்டோம். நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நேரில் சென்று பார்ப்பது போல இருக்கிறது..

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago

nandri Jambu sir

Nandri RRR. !

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...