எனது புது நாவல்.

சனி, 2 ஜூலை, 2016

காதல் வனம் - பாகம் - 5. - முத்தக் குவளைகாதல் வனம்  பாகம் - 4. முத்தக் குவளை

மென் ஆர் ஃப்ரம் மார்ஸ். விமன் ஆர் ஃப்ரம் வீனஸ்.

இது எதுக்கு இப்போ சொல்றே – எனக்கேட்டார் ஸாம். இல்ல நமக்குள்ள அப்பப்ப ஏற்படுற சுருதி பேதத்தை சொன்னேன் என்றாள் முத்தழகி.  

ரொம்ப அவசரப்படுறீங்க. கடந்து போயிடலாம்னு பார்த்துக்கிட்டே இருக்கேன் முடியலையே என்றாள் முத்தழகி.

ஏன் கடந்து போகணும். மெதுவா அனுபவிச்சுப் போகலாம்தானே. எல்லாம் நம்ம கையில்தானே இருக்கு. 

அப்படி அவர் என்னதான் கேட்டுவிட்டார், ஒரு காதலன் காதலியிடம் பெரிதாக என்ன கேட்டுவிடப் போகிறான். ஓரிரு முத்தங்களாகத்தானே இருக்கும்.

பெரிய பிகு உனக்கு, வெச்சிக்கோ போ என்றார். கண்களில் ஏமாற்றமும் தாபமும் பொங்கி வழிந்தது. அந்த பிங்க் நிற சூடிதாரில் பூவாய் மலர்ந்திருந்த முத்தழகியைப் பார்த்ததும் தேன் உண்ணும் வண்டாகி அவளை முதன் முதலில் ரோஜாப் புடவையில் தேவதையாய்ப் பார்த்த ஞாபகம் மலர்ந்து கண்கள் ஜொலித்தது. காதல் இளவரசி. பூவினும் மெல்லிய பூமகள்.  

இந்த ஞாபகங்கள் பொல்லாதவை. அசந்திருக்கும் நேரம் தன்னையே உண்ணக் கேட்பவை. கண்ணோடு கண் கவ்வ அவரது ஏக்கம் அவளது முகத்துக்குத் தாவியது. காந்தம் போல் இழுத்த பார்வையிலிருந்து விடுபட முடியாமல் விடுபட்டு நாணிக் குனியும் பூவைப் போலத் தடுமாறியவள் அங்குமிங்கும் புத்தகங்களைத் தேடுபவள் போல நகர்ந்தாள். எப்படி மறுப்பது. கீழே சாமின் அப்பா ஷண்முகம் இருக்கிறார். அவரது அம்மா சமையலில் மும்முரமாய் இருக்கிறார். 


சீக்கிரம் தேடிவந்த புத்தகம் கிட்டவேண்டும். லைப்ரரிபோல புத்தகக் கடலாய் இருந்தது சாமின் வீடு. அங்கு அவரது தாத்தாவிலிருந்து வாசிப்பவர்கள் அதிகம். எனவே வாங்கிப்படித்த அனைத்தையும் சேர்த்து வைத்திருந்தார்கள். கம்ப்யூட்டர் புத்தகங்கள் குறைவுதான் என்றபோதும் குறிப்பிட்ட அந்தப் புத்தகம் எங்கேயும் கிடைக்காததால் இங்கே பார்த்து விட்டு வா என்று அவள் அப்பா செந்தில்நாதன் அனுப்பி இருந்தார். 

சிறிது மிடுக்கைக் காட்ட எண்ணி முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கண்ட கண்ட இங்க்லீஷ் படமும் பார்த்து கெட்டுப் போயிருக்கீங்க என்று சாடினாள் முத்தழகி. 

ஆமா என்றார் முரட்டுத்தனத்தை முகத்தில் காட்டியபடி. மிகப் பிடித்தவர் என்றாலும் ஒரு ஆண் பார்வை அவளை சில்லிட வைத்தது. கிட்டே வந்தார் ஆமா ஒரு இங்கிலீஷ் கிஸ் , ப்ரெஞ்ச் கிஸ் வேணும். சின்ன லிப் லாக். ஒத்துன மாதிரி.. ஒரு தரம் போதையில் மூழ்கினவர் போல ஹஸ்கியாக அவர் பேசிக்கொண்டே கிட்டே வர ஒரு மாதிரி ஜிலீரென்று இருந்தது முத்தழகிக்கு. தொட்டுவிடுவாரோ எனத் துடித்த இதயத்தை அடக்கியபடி பக்கவாட்டில் இருந்த புத்தக அலமாரியைப் பிடித்தாள் அவள்.
 
அலமாரி லேசாக ஆட அதைப் பார்த்துப் பயந்த அவள் திரும்பிக் கொண்டாள்.வேணும்தான் ஆனா இப்ப வேணாம். என்ன செய்வது. நினைத்தை எல்லாம் நினைத்தபோது செய்திட முடியுமா.

அப்ப எப்பத்தான் கிடைக்கும். எனக்கு வயசான பின்னாடியா. அவர் அணிந்திருந்த செண்டின் மணம் அவளைச் சூழ்ந்தது.  முடிகள் அடர்ந்திருந்த முரட்டுத்தனமான கைகளால் வலிமையாக அவள் கைகளைப் பற்றினார். ஜுரம் வந்தது போல் கொதித்தது இருவர் உடம்பும். 

என்ன சுடுது என்றார். பேசமுடியாமல் நாக்கு ஒட்டிக் கொண்டது. சிரமப்பட்டு இதழ் பிரித்து உங்களுக்குத்தான் சுடுது என்றாள் அவள். கைபிரித்தாள். வலித்தது போல மெல்ல மெல்ல முரட்டுப் பிடியாய் இருந்த அவரது கையைப் பிரித்தன அவள் கைகள். அவளது முகத்துக்கு நேரே விரிந்திருந்தன அவரது ஆஜானுபாகுவான தோள்கள்.

கேட்டது கிடைக்காட்டி என்ன பெரிய மனுஷ வாழ்க்கை என்ற ரீதியில் முகத்தைத் திருப்பியவாறு படிகளில் இறங்கினார். நேரமாகிவிட்டால் அப்பா மேலேறி வந்துவிடுவார். அவர் தோழர் செந்திலின் மகள் முத்தழகி.

போகட்டும் போ என்பது போல கடைசியாகப் பிரித்த கையை லேசாகப் பற்றினாள்.எப்படி நிகழ்ந்தது என்பது அறியாமல் இயல்பால் ஒரு பூ விரிவது போல அமைந்திருந்தது அந்த முத்தம். ஒரு தேன்சிட்டு தேன் உண்ணுவது போலப் புகுந்தது அந்த முத்தம். குவளை போன்ற அவள் இதழ்கள் மெல்ல மெல்ல உண்ணத் தொடங்கி இருந்தன அந்த போதை முத்தங்களை. உதடும் உதடும் பேசிக்கொண்ட பாஷையில் சத்தமில்லாத சத்தங்கள். அவர்களை உழுது சென்றன முத்தங்கள். 

போதை உண்ட மயக்கத்தில் இன்பமாய் அதிர்ந்து கொண்டிருந்தன அவர்களின் உடல்கள். தள்ளாடிக் கொண்டிருந்தாள் அவள். மயக்கம்போல ஒன்று அவளைச் சூழ்ந்தது. தலையைச் சுற்றி குட்டி தேவதைகள் பறந்துகொண்டிருந்தார்கள்.  

சேர்த்து வை திரும்பக் கேட்பேன் அப்போ திருப்பிக் கொடுக்கணும் என்பார். இது கடன். பத்து வரவுக்காகக் காத்திருக்கேன் என அடிக்கடி அவளைச் சீண்டுவார். பேரேடாக இருக்கும் போலிருக்கே என வியப்பாய் முகம் காட்டி நழுவுவாள் அவள். கை பற்றி இழுக்கும்போது நழுவவியலாமல் மெல்ல வளையும் பூங்கொடியாய் பூ முகம் திருப்பி அவர் கொடுத்த புதுமுத்தம் உண்பாள். முத்த இராட்சசா என்பாள்.

இதுபோல் எத்தனை முத்தங்கள். எத்தனை வகை முத்தங்கள். கேட்ட போதெல்லாம் கேட்ட இடங்களில் பழுதில்லாத முழுமுத்தங்கள். எத்தனை இடங்களில் எத்தனை நேரங்களில் எண்ணிய நேரங்களிலெல்லாம் முத்தங்களாலேயே முத்தங்களால் மட்டுமே வாழ்ந்திருந்தார்கள் அவர்கள். உண்ண முத்தம் பருக முத்தம் முகத்தில் பூசும் வண்ணமாய் முத்தம். 

முத்தக் கலவை முகத்தைக் களையாக்கிப் ப்ரகாசமாக்கி இருந்தது. காதலில் ஜொலித்துக் கொண்டிருந்தது இருவர் முகமும் செந்நிறமாய். சிரசில் ஏறியும் கண்டத்தில் தங்கியும் போதையுண்டாக்கின பேதை முத்தங்கள்.. நிஜ ரோஜாவாய் அவள் இருக்க கருத்த முத்துக்களாய் அவள் உதடுகள் மாறின அவ்வப்போது.

அரசல் புரசலாய் இந்த முத்தச் சேட்டைகள் கண்ணில் பட இருவருக்கும் திருமணம் செய்யவேண்டுமென்று இருவீட்டாரும் முடிவு செய்திருந்தார்கள்.  

ஆனால் 

ஆனால்

அந்த அசம்பாவிதம் நடந்தபின்..என்ன செய்வது என்று அவர் பரிதவித்து நின்ற நேரங்கள்., இருவர் வீட்டாரும் இனி என்ன செய்ய என இறுகிக் கிடந்த நேரங்கள் கொடுமையானவை. 

வரது முத்தங்கள் உறைந்த உதடுகள் இறுகிக்கிடந்தன. மென் உதடுகள் இறுகி லேசாய்க் கறுத்திருக்க பிடிவாதமாய்ப் பிரிக்கப் பிடிக்காதவள் போல் நீள் துயிலில் ஆழ்ந்திருந்தாள் முத்தழகி. கொடுத்த முத்தங்கள் எல்லாம் அவள் இதழோடு இதழாக சருகாகிக் கிடந்தன. கண்கள் கசிந்தது அவருக்கு. எப்போது மீள்வாள். 

மழை நேரத்துல ஸ்கூட்டில காலேஜ் போனா ஒரு டர்னிங்குல அவசரமா திருப்பும்போது ஸ்கிட்டாயிடுச்சு. கவிழ்ந்து கிடந்திருக்கிறாள் அவரது முத்தக் குவளை. 

துளிக்கூடக் கசங்காத பூவைப்போலத்தான் கிடந்தாள். கடந்து போக முடிந்திருந்தும் அவரால் கடந்துபோக முடியவில்லை. ஞாபகங்கள் தேங்கிக் கிடந்தன அவள் விழுந்துகிடந்த மழை நீர்ப் பள்ளம் போல. ஸாம் என்று இதழசைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தில் அவரது கன்னங்களை நனைத்து உப்பு மழையாய் இதழைக் கரிக்கச் செய்துகொண்டிந்தது கண்ணீர்.

7 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் சகோதரியாரே

Dr B Jambulingam சொன்னது…

தொடருக்கு தாமதமாக வந்தேன். நடையை அதிகம் ரசித்தேன். நன்றி.

பரிவை சே.குமார் சொன்னது…

அனைத்தையும் வாசிக்கிறேன் அக்கா...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அருமையான பகிர்வு

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி குமார் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இடையில் விடுபட்ட பகுதிகளை எல்லாம் வாசிக்கிறோம் சகோ/தேனு..

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...