வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அமெரிக்க விசா வேணுமா. சில்கூர் வாங்க.

ஆந்திராவுல நிறையப்பேரு ஏன் அமெரிக்காவுல இருக்காங்க தெரியுமா. அவங்களுக்கு ஈசியா விசா வாங்கித்தந்ததே தற்போதைய தெலுங்கானாவில் இருக்கும் ( ஹைதராபாதிலிருந்து 33 கிமீ தூரத்துல  கண்டிபேட்/காந்திபேட் அப்பிடீங்கிற இடத்துல உஸ்மான் சாகர் என்ற ஏரிகிட்ட இருக்கும் ) விசா பாலாஜி என்கிற வெங்கடேச பாலாஜிதான் காரணம். சாட்சாத் கலியுக தெய்வம் நம்ம வெங்கடேசப் பெருமாள்தான். ! ஸ்ரீதேவி பூதேவியோட அஃபிஷியலா கோயில் கொண்டிருக்கார்.

பையன் ஹைதைல வேலை செய்தபோது ட்ரெயினில் போம்போதும் வரும்போதும் கூட வர்ற மக்கள் தெலுகுல மாட்லாடுவாங்க. அரையும் குறையுமாப் புரிஞ்சாலும் ஒவ்வொருத்தர் பேச்சிலயும் இந்த விசா பாலாஜி கட்டாயம் இடம் பெறுவார். இவர் சுயம்புவா உருவானவர். ஒரு பக்தர் திருப்பதி போய் தரிசிக்க முடியாததால ஏங்க அவரோட ஏக்கத்தைத் தீர்க்க இங்கே பகவான் ஒரு புத்துக்குள்ள உருவாகி வெளியாகி இருக்கார். சிலர் 14 ஆம் நூற்றாண்டுன்னும் சிலர் 17 ஆம் நூற்றாண்டுன்னும் சொல்றாங்க. தெளிவா தெரில. நமக்கெல்லாம் பரிச்சயமான பக்த ராமதாஸின் மாமாக்கள் அக்கன்னா மாதன்னா கட்டின கோயில்னு சொல்றாங்க.

நாழிக் குளம்.

எனவே போன சுதந்திர தினத்தன்னிக்கு ஒரு விசிட் செய்தோம் விசா பாலாஜியைத் தரிசிக்க. ஏசி கார்னாலும் அக்னிதேவன் அவர் பங்குக்கு வெய்யில் யாகத்துல அக்னியை அவிர்பாகமா அள்ளிக்கொட்டிண்டு இருந்தார்.அந்த வெய்யில்லயும் எங்கெங்கு நோக்கினும் ஜில் ஜில்லுன்னு ராதா கிருஷ்ணர்கள்தான். அட வந்திருந்த ஜோடிகளையும் சேர்த்துச் சொன்னேன் :) 
ராதா கிருஷ்ணா.
இந்தக்கோயில்ல ஒரு விசேஷம் என்னன்னா இங்கே உண்டியலே கிடையாது. எந்த விதமாவும் எண்ட்ரன்ஸ் டிக்கெட் லொட்டு லொசுக்குன்னு பணம் கொடுக்க வேண்டாம். ஹாயா போய் ஜாலியா தரிசனம் பண்ணிட்டு வரலாம்.
இங்கே பூக்களைக் கோர்த்து விக்கிறாங்க. ஒரு மாதிரி குட்டியா பாசிகளைக் கோர்க்குறமாதிரி. இதுதான் பூஜைக்கு.
எப்பேர்ப்பட்ட விஐபி வந்தாலும் க்யூ க்யூவுதான். கோயிலைச் சுத்தி க்யூ அனுமார் வால் மாதிரி நீண்டுக்கிட்டே போகுது. வரிசைலதான் வரணும். இது எனக்கு நெம்பப் பிடிச்சிருந்தது. லவ் யூ பாலாஜி. :) உள்ளேதான் கட்டையைப் போட்டுக் கொன்னுட்டாங்க. கட்டையைச் சுத்திச் சுத்தி தலையே சுத்திருச்சின்னா பார்த்துக்கோங்களேன். :)
என்னன்னெ விதமான பழங்கள் , பானங்கள் உண்டோ அத்தனையும் கிடைக்குது இங்கே. தண்ணீர் பாட்டில் கொண்டு போகணும் அவசியம். ஆளுக்கு ஒரு பாட்டிலாவது. அவ்ளோ தாகமெடுக்குது.
இங்கே பதினோரு பிரகாரம் சுத்துறது விசேஷம். 11 ஏன்னா 1 உடல் , 1 ஆன்மா தத்துவத்தை நிலைநாட்டுதாம். . அதுனால் பதினோரு பிரகாரம். ஏதும் வேண்டிக்கிட்டா 108 சுத்து சுத்துறாங்க.
கூட்டமான கூட்டம். எல்லாம் விசாவோட விண்ணப்பத்தை சமர்ப்பிச்சு வேண்டிக்கத்தான். விசா விண்ணப்பத்தக் காப்பி எடுத்துட்டு வந்து இங்கே வந்து வேண்டிக்கிட்டுக் கும்பிடுறாங்க. வேண்டுதல் நிறைவேறினா வந்து 108 பிரதக்ஷணம் செய்றாங்க.
உள்கோபுரம்.
அவசரமாய் எடுத்த உள் கோபுரம். இத எடுக்க முடில. கைக்குள்ள வைச்சு எடுத்தேன். உள்ளே சேஃப்டி லாக்கர் இருக்கு அதுல செல்ஃபோன்,காமிரா, இன்னபிற சமாச்சாரங்களை வைச்சிறணும். அங்கங்கே சர்வலன்ஸ் காமிரா வைச்சுக் கண்காணிக்கிறாங்க.
ஒரு வழியா உள்ளே போய் பாலாஜியைத் தரிசிச்சாச்சு. அங்கே அப்போ அப்போ வர்ற பக்தர் குழாம்லேயே வாலண்டியர்ஸ் பிடிச்சு கூட்டத்தை ஒழுங்குபடுத்துறாங்க. மைக்கில் பாடல்கள் ஒலிக்குது. தீபாராதனை ஒளியில் பக்திப் பரவசம்தான் காதுக்குள்ள. மட்ட மத்தியானத்துல விண்ணையும் மண்ணையும் என்னையும் அளந்த பெருமானை உள்ளம் குளிரச் சேவிச்சிட்டு ( குருவாயூரப்பன் மாதிரி குட்டிக் கிருஷ்ணராத்தான் இருக்கார் ) முகம் மலர வெளியே வந்து இன்னொரு க்யூவில் சிவனைத் தரிசித்து துளசியும் தீர்த்தமும் வாங்கிட்டு வெளியே வந்தோம்.
இந்த மரத்தடி வரை கூட்டம் நின்னுது. கொஞ்சம் குறைஞ்சிருக்கு. பலர் கட்டுசாதம் கொண்டுவந்து சாப்பிட்டாங்க.
இங்கே வெளியில ஒரு சிவன் கோயிலும் இருக்கு. இது சிவ விஷ்ணு  ஸ்தலம். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடையாளம். இது போல சில கோயில்களே அமைஞ்சிருக்காம்.
அடுத்து நாம் போன இடம் பிருந்தாவனம். கண்ணன் என்றால் பிருந்தாவனம் இல்லாமலா. அவரோட உள்ளம் கவர் கள்ளி ராதையும் அவரும் இருக்கும் மாய உலகம். நம்மை மயக்கும் உலகம். பக்கத்துல கோசாலை ஏதும் இருக்கு போலிருக்கு. கோயிலுக்கு நாம் ஏதும் டொனேஷன் கொடுக்குறதுன்னா கொடுக்கலாம்.
பாரிஜாத மரமா இது..தெரில. அதுல இருக்கது குயிலா மயிலான்னும் தெரில.
இந்தக் கோயில் மண்டப டைப்புல இருக்கு. அங்கங்கே குழலூதும் கிருஷ்ணன் , கோபிகைகள், பிருந்தாவனம், மதுரா, கோகுலம் என்று கலந்து கட்டி இருக்கு.
அழகான புடைப்பு ஓவியங்கள் அலங்கரிக்குது எல்லாச் சுவரையும்.
வடநாட்டுக் கோயில்களுக்கே உரித்தான கோபுரம்.
மிக மிக அழகான வரவேற்பு வளைவு. பை பை சொல்லிப் பிரிந்தோம். ஹைதையை விட்டும் சில்கூரை விட்டும். பெங்களூரில் இருந்து கிளம்பும்போது இஸ்கான் கிருஷ்ணரிடம் சொல்லிக் கொண்ட மாதிரி இங்கே ஹைதையிலிருந்து கிளம்பும்போது சில்கூர் பாலாஜியிடம் சொல்லிக்கொண்டோம்.

அது சரி எப்ப அமெரிக்கா போறீங்கன்னா கேக்குறீங்க. அடப் போங்க நாமதான் விண்ணப்பத்தையே கொண்டு போகலையே. தேசி ஆத்மி ஆயிட்டம்ல. என்ன அவசரம். அவரா கைல கொண்டு கொடுத்தா போவோம்க.

5 கருத்துகள் :

Vijiskitchencreations சொன்னது…

Super Thenu. Kalakeetinga. Chemmaiyil school exam start aakarauthuku munnadi hayagriveer koil Kurt
Poorangakalam . Makkalukku brain 21 st century ileum ipo aid than iruunganga. Marravee Maatanaaga.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அருமையான பகிர்வு

உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் இந்த விசா பாலாஜி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அமெரிக்காவில் நிறைய ஆந்திரா மக்கள்தான்...மதுரைத் தமிழன் சகோ கூட இந்த விசா பாலாஜி பற்றிச் சொல்லியிருந்தார். சென்னையிலும் கூட இருக்கிறதாமே அமெரிக்க விசா ஸ்டாம்ப் அடிக்கும் ஆஃபீசர் கோயில்..ஹஹஹ்ஹ்

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமாம் விஜி :)

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி துளசி சகோ . சென்னையில் எங்கே இருக்கு. ஓ மௌண்ட்ரோட் மேம்பாலத்துக்குக் கீழயா :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...