புதன், 13 ஜனவரி, 2016

கோபுர வாசலிலே – ஆன்மீகம் காஞ்சி அருள்மிகு கச்சபேசுவரர் கோயில். கார்த்திகை மாவிளக்கும் கல்யாண நாககன்னிகளும். .கோபுர வாசலிலே – ஆன்மீகம்
காஞ்சி அருள்மிகு கச்சபேசுவரர் கோயில்.
கார்த்திகை மாவிளக்கும் கல்யாண நாககன்னிகளும். . 

புராதன புராண இதிகாசப் பெருமை வாய்ந்த திருத்தலங்கள் நிரம்பியது காஞ்சிமாநகரம். இங்கே இஷ்ட சித்தீஸ்வரம் எனப்படும் கச்சபேசுவரர் கோயில் சிறப்பான பரிகார ஸ்தலமாகும். பிரதோஷ காலத்தில் மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும்போது மத்தை கூர்மாவதாரம் எடுத்துத் (ஆமை வடிவெடுத்துத் கச்சப வடிவு எடுத்து ) தாங்கிய மஹாவிஷ்ணு சிவனை வழிபட்ட தலம் இது. எனவே கச்சப ஈஸ்வர இணைந்து கச்சபேசுவரத் திருக்கோயில் ஆனது. மயூர சதகம் உருவான திருத்தலம் இது. 

இங்கே கார்த்திகை மாதத்தில் ஒரு மழை ஞாயிற்றுக் கிழமையில் சென்றபோது அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் மாவிளக்கு ஏந்தியபடி விநாயகர் கச்சபேசுவரர் சந்நிதியில் க்யூ கட்டி நின்றனர். முருகனுக்கும் அம்மனுக்கும் மட்டுமே மாவிளக்குப் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே விநாயருக்கும் கச்சபேசுவரருக்கும் மாவிளக்குப் படைக்கிறார்கள் மக்கள். 

புது மண் சட்டியில் ஒரு சிலர் ஒரு மாவிளக்கும் ஒரு சிலர் ஒரே தட்டில் மூன்று முதல் ஐந்து மாவிளக்குகளும் ஏந்தி நின்றார்கள். ஆண்டவனைத் தரிசிக்குமுன் மிக அழகான வாசனையான தீபதரிசனம். குடும்ப நன்மைக்காகவும் ஆரோக்கியத்துக்கான வேண்டுதலாகவும் மாவிளக்குப் படையலும் அம்மன் சந்நிதியில் நெய்விளக்குப் போடுதலும் இடம்பெறுகின்றது.  


கச்சபேசுவரர் மருந்தீசுவரர் என்ற இரு சிவன் கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இஷ்ட சித்தி தீர்த்தமும் அதன் ஒரு முனையில் சக்தியும் சிவனுமாய் அரசும் வேம்பும் கலந்த மரமும் அதனைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாககன்னிகளும் காட்சி அளிப்பது கண்கொள்ளா தெய்வீகக் காட்சி..


திருமணத் தடை உள்ள மணமகனோ மணமகளோ இக்கோயிலுக்கு வந்து இந்நாககன்னிகைகளுக்குத் தாலி அணிவித்தால் சீக்கிரம் திருமணம் கைகூடிவிடுவது கண்கூடு. கோயிலின் பக்கவாட்டுக் கடைகளில் மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, முழு விறலி மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், வஸ்த்திரம் பால் , சூடம் ஊதுபத்தி வாங்கி கொண்டு உள்ளே வந்து இடது புறம் திரும்பினால் இஷ்ட சித்தி தீர்த்தம் அதில் தீர்த்தமாடி சிறிது நீர் எடுத்து வந்து ஏதோ ஒரு நாககன்னிகைக்கு நீராலும் பாலாலும் அபிஷேகம் செய்து மஞ்சள் தடவி குங்குமமிட்டு பூ வைத்துப் பொட்டு வைத்து வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் படைத்து மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் பிணைத்துத் தாலி கட்டி ( திருப்பூட்டி ) சூடம் ஊதுபத்தி காண்பித்து வணங்கிச் சென்றால் சீக்கிரம் திருமணம் கைகூடி வருவதாகச் சொன்னார்கள் எனவே அடாத மழையிலும் இந்த வேண்டுதலை நிறைவேற்ற நாக கன்னிகைகளைச் சுற்றி நிறையக் கன்னியர்களும் காளையர்களும் தங்கள் பெற்றோருடன் காத்துக்கிடந்தார்கள். சிலர் நிறைவேற்றித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிக எளிய பரிகாரம்தான். மற்ற திருத்தலங்களை போல அதிக செலவில்லாததும் கூட.  

கண்ணொளி தரும் அஞ்சனாட்சி, ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை, தியாகராஜனாக ஈசனின் அஜபா நடனம், அருணகிரிநாதரால் ( முருகன் ) பாடல்பெற்ற திருத்தலம், தண்டியலங்கார நூலில் பாடல் பெற்ற ஏழாம் நூற்றாண்டுத் திருத்தலம். நூற்றுக்கணக்காக நாகங்கள் கொலுவீற்றிருந்து திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலம், ஸ்தலவிருட்சமாகக் கல்லால மரம், இரட்டைக் கோபுரம் கொண்ட இரண்டு சிவாலயங்கள், இஷ்ட சித்தியை வழங்கும் தீர்த்தம், ஆகியன சிறப்பு. சென்னையிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் காஞ்சி சென்றால் இராஜவீதியில் கோயில்கொண்டிருக்கும் கச்சபேசுவரரையும் நாக கன்னிகளையும் தரிசிக்கலாம். இஷ்டசித்தி கைகூடப் பெறலாம். 


3 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இந்தக்கோயிலுக்கு பலமுறை சென்று தரிஸிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்துள்ளது. இருப்பினும் தங்களின் இந்தப்பதிவின் மூலமும் படங்களின் மூலமும் மேலும் பல செய்திகளை என்னால் நன்கு அறிய முடிகிறது. அழகான இந்த பகிர்வுக்கு என் நன்றிகள், மேடம்.

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா மிக்க நன்றி கோபால் சார்..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...