எனது நூல்கள்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

குவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GWALIOR VIVASWAN MANDIR.

குவாலியரில் மொரார் என்ற இடத்தில் இருக்கும் விவஸ்வான் மந்திர் -- சூரியனார் கோவில் ஒரிஸ்ஸா கோனார்க்கில் இருக்கும் சூரியனார் கோவிலை ஒத்திருக்கிறது.

பிர்லா மந்திர் என்று பெருமாளுக்கான கோயில்களையே டெல்லி போன்ற பெருநகரங்களிலும் ஹைதையிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் இது ஜி டி பிர்லாவால்  சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்ட கோயில்.

1988 இல்  ரெட்சாண்ட் ஸ்டோன் எனப்படும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட  இக்கோயில் இன்னும் புதிது போலவே பராமரிக்கப்பட்டாலும் மழையின் காரணமாக கோபுரங்களில் அங்கங்கே கருமை படிந்து காணப்படுகிறது.அழகான கடவுட் சிற்பங்களுடன் ( பெருமாளும் இருந்தார் . ) அமைக்கப்பட்ட இக்கோயில் சக்கரங்களும் குதிரைகளும்  பூட்டிய பிரம்மாண்டத் தேர்  போலவே காட்சியளிக்கிறது.

அதன் நேர் உச்சியில் எகிப்து ப்ரமிடுகளில் இருக்கும் ஒரு உருவம்போன்ற ஒன்றுதான் என்ன என்று காட்சிக்கு சரியாகப் புலப்படவில்லை. யாளி போலவும் இருந்தது, சிம்மம் போலவும் இருந்தது. . அதன் கீழ் இரு வீரர்கள் படைக்கலன்களுடன் நிற்கிறார்கள்.

முழுமையும் மார்பிள் படிகளும் தரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அணில்களும் பறவைகளும் எழுப்பும் ஒலி தவிர பெருநகரின் சப்தம் எதுவுமேயில்லை.

மிக அழகான தோட்டத்துடனும் மலர்களுடன் இருக்கும் இதில் வாழை மரமும் தென்னையும் கூட உண்டு. மயில்களும் தோகை விரித்தாடுகின்றன.தீவனம் கொத்தியபடி புறாக்கள் அவ்வப்போது கூட்டமாகப் பறந்து வட்டமிட்டு வந்து அமர்கின்றன.

கருவறையின் உள்ளே ஒரு பண்டிட் ஜீ அமர்ந்து தியானம் செய்து ஸ்லோக ஸ்மரண் செய்து கொண்டிருந்தார். ஒரு புறம் சூரியாஷ்டகமும் இன்னொரு புறம் ஆதித்ய ஹ்ருதயமும் வெள்ளை மார்பிள் கற்சுவரில் சிவப்புக் கலரில் பொறிக்கப்பட்டிருந்தது.

” ததோ யுத்த பரிஸ்ராந்தம் சமரே சிந்தயாதிதம். “ என்று ஆரம்பிக்கும் 31 ஸ்லோகங்கள் அடங்கியது ஆதித்ய ஹிருதயம். இது போர்க்களத்தில் ராமபிரானுக்கு அகத்தியர் அருளியது. சூரியனின் துணையால் பகையை வெல்லலாம். வெளிச்சத்தின் முன்னே எந்த இருட்டும் ஓடிப்போய்விடும்தானே.( 31 ஸ்லோகங்களையும் சொல்வேன். சமஸ்கிருதமும் படிக்கத் தெரியும். ஆனால் இதை ( தெலுகு மொழி பெயர்ப்போடு கம்பீரமான ஆண் குரல் ஒலிக்க ) டேப்ரெக்கார்டரில் கேட்டு ப்ரிண்ட் அவுட் எடுத்து சொன்னதால் உச்சரிப்பில் பிழை இருக்குமோ  என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கு :)

கோயிலின் பின்புறம் பலர் அமர்ந்து யோகா மற்றும் தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பலர் அதன் மைதானத்தில் நடைப்பயிற்சியும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியும் செய்து கொண்டிருந்தார்கள்.

காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரைதான் கோயில் திறந்திருக்கும் நேரம். அதாவது சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரை என்று போட்டிருந்தது. மதியம் 12 - 1 மூடியிருக்கும். சனி, ஞாயிறு அன்று மாலை 7.30 வரை தர்ஷன் உண்டு.

அழகான புலர் காலைப் பொழுதில் ஓம் ஓம் என்ற ஒலி எங்கும் நிறைந்திருந்தது.உஷத்கால பூஜை செய்து காசி மிட்டாயும் தீர்த்தமும் கொடுத்தார் பண்டிட்ஜி. சூரியனை வணங்கிப் புத்துணர்ச்சியும் ப்ரகாசமுமாக மலர்கள் நிறைந்த தோப்பு வழியே வெளியே வந்தோம். உலகே புத்துயிர் பெற்று ஒளிவெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தது.

ஓம் அஸ்வத் த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சூர்ய தேவாய நமஹ.

8 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா அற்புதமான காட்சிகள்
காட்சிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன
நன்றி சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கரந்தை ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மோகன்ஜி சொன்னது…

அழகான புகைப் படங்கள்.. பார்க்கவேண்டிய கோவில்களின் லிஸ்டில் சேர்த்துக் கொண்டேன் தாயே!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

படங்கள் அழகு! தகவல்கள் சிறப்பு! நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கோவில். நானும் இக்கோவிலுக்குச் சென்றதுண்டு.....

என்னுடைய பக்கத்திலும் எழுதி இருக்கிறேன்!

http://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post.html - சூரியனார் கோவில்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான புகைப்படங்கள்! சகோ! தகவலும் நன்று.

வெங்கட்ஜி யின் பதிவிலும் வாசித்திருக்கின்றோம்.

மிக்க நன்றி சகோ..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மோகன் ஜி

நன்றி சுரேஷ் சகோ

நன்றி வெங்கட் சகோ படித்தேன் அருமை :)

நன்றி துளசி சகோ & கீத்ஸ். :) படித்தேன். :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...