எனது நூல்கள்.

திங்கள், 26 அக்டோபர், 2015

மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.

மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ்.

மலேஷியாவில் ஜோஹூர் பாருவில் கோட்டா டிங்கி வாட்டர்ஃபால்ஸ், கெந்திங் ஹைலாண்ட்ஸ் இரண்டும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். கேபிள் கார் பயணம், சூதாட்ட விடுதிகள், குதிரைகள் ஓடிக்கொண்டிருக்கும் மைதானங்கள். அழகழகான ஹோட்டல்கள், , வெண்ணெய் நிறத்தில் பெண்கள், கலர்ஃபுல்லான பொழுதுபோக்கு இடங்கள் போக விதம் விதமான சிலைகளும் அமைக்கப்பட்டு விதம் விதமான உணவு வகைகளும் நல்ல வெரைட்டியாக மணம் வீசிக் கொண்டிருந்தன
இது செம்பருத்தி அல்ல :) !

கோலாலம்பூரிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கெந்திங் ஹைலாண்ட்ஸைப் பார்க்கப் பேருந்தில் சென்றோம். இது ஒருமலை வாசஸ்தலம் மற்றும் சுற்றுலா மையம்.பகாங்க் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்துள்ளது. கோடாங் ஜெயாவிலிருந்து நடக்கத் தொடங்கலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தோம் மிக நீளமான அமைதியான சாலை. குதிரைகள் உலவிக் கொண்டிருக்கும் மைதானம், இள வெய்யில். பாதையோரம் மலேஷியாவின் தேசிய மலரான செம்பருத்தி விதம் விதமான வண்ணங்களில் பூத்துச் சிரித்துக் கொண்டிருந்தது. ஒரு விதமான தங்க நிறத்தில் இருந்த செம்பருத்தி மிகவும் ஈர்த்தது. இன்னும் வயலட் போன்ற நிறங்களில் எல்லாம் பூக்கள்.

மைதானத்தில் உலவி கனைத்தபடி பிடரி சிலிர்க்க ஓடிக் கொண்டிருந்தன குதிரைகள். நாங்கள் அங்கங்கே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். வழியில் ஒரு காளியம்மன் கோயில் இருந்தது. அதன் முன் பிரம்மாண்டமாய் ஒரு சூலம் வேறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெளியே இருந்து வணங்கியபடி அந்த ரோட்டின் முடிவில் இருந்த கெந்திங் ஸ்கைவேயை அடைந்தோம். அங்கேதான் கேபிள் கார்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

முக்கால்வாசி நம்ம தமிழ் ஆட்கள்தான் சுற்றிப்பார்க்க வந்திருந்தார்கள். பொதுவாக இது போன்ற ஊர்களுக்கு போகும்போது முதலில் மலேஷியாவும் அடுத்து சிங்கப்பூரும் போவது போல டிக்கெட் எடுத்தால் நமக்கு சிறிது பணம் மிச்சமாகும். ஏனெனில் மலேஷியா ரிங்கெட்டுகள் சிங்கப்பூர் டாலரை விட குறைவாக இருப்பதால் ஃப்ளைட் டிக்கெட்டுகள் கட்டணம் குறைவாக இருக்கும். மேலும் சிலர் குழுக்களாகக் கிளம்பி வருவதால் டிக்கட் எடுக்கும் போது கன்ஸஷன் கிடைக்கும். சீனியர் சிட்டிசன்களுக்கும் பயணக்கட்டணத்தில் சலுகை கிடைக்கும். மூன்று மாதத்துக்கு முன்பே டிக்கெட் புக் செய்திருந்தாலும் விமான நிறுவனங்கள் அறிவித்திருக்கும் சலுகை ஆஃபரில் வாங்கமுடியும்.

நம்மைப் போல தனித்தனியாக வந்திருந்தவர்களுடன் ஒரு புன்முறுவல் மட்டுமே பூத்துவிட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு கேபிள் காரில் ஏறி அமர்ந்தோம். இது பழனி மலை போலில்லாது ஹரித்வார் ரிஷிகேஷில் இருக்கும் மம்சா தேவி கோயிலுக்குச் செல்லும் கேபிள் கார் போல அடர்ந்த காட்டின் மீது சென்றது. 

சுற்றிலும் இயற்கை அன்னை கோலோச்சி இருக்க பசுமையும் மேகமும் போர்த்தின மலைகள் கொலு வீற்றிருந்தன. கேபிள் காரில் அமர்ந்தபடிதான் பயணம் செய்யணும். அறிவிப்பு கொடுத்திருக்கின்றார்கள் எட்டிக் கிட்டிப் பார்க்க வேண்டாம் என்று.

மேலும் நம் முன்னே பல கேபிள் கார்களும் நம் பின்னே பல கேபிள் கார்களும் ஏறி இறங்குவதைப் பார்க்கும்போதும் கீழே தரையே தெரியாது மரங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கும்போதும்  லேசாக வயிறு சில்லிடுகிறது. நாம் போகிறோம் மேலே மேலே என்று ஜில் என்று மேகமூட்டமும் குளிர் காற்றும் நம்மைச் சூழ்கிறது.

அக்கம் பக்கம் புகைப்படம் எடுத்தபடி நாமும் கெந்திங் ஹைலாண்டை அடைந்தோம். அங்கே ஐந்தாறு ஹோட்டல்கள் பிரசித்தம். இது முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட் மட்டுமல்ல. உலக சுற்றுலாப் பயணிகளைக் கவர சூதாட்ட விடுதிகளும் நிரம்பியது. மலேஷியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இங்கே விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

டான் ஸ்ரீ லிம் கோ தோங் என்பவர் கெந்திங் ஹைலாண்ட்ஸ் பெர்ஹாட் என்னும் நிறுவனத்துக்காக இங்கே விடுதிகளை டான் ஸ்ரீ ஹாஜி முகமட் நோவா என்பவரின் உதவியுடன் உருவாக்கினாராம். 4 ஆண்டுகள் இந்த மலைப்பாதையில் ரோடு போட்டிருக்கின்றார்கள். அதன் பின் ஆறு விடுதிகள் இந்நிறுவனத்துக்காக கட்டப்பட்டிருக்கின்றன.

ஹோட்டல் ஹைலாண்ட்ஸ், ஃபர்ஸ்ட் வேர்ல்டு ஹோட்டல், ரிஸார்ட் வேர்ல்டு கெந்திங், ஆகியன கண்ணில் பட்டன. மிகப் பிரம்மாண்டமாக மிரட்டும் வகையில் அமைந்திருந்தன. வெளியே பன்னாட்டுக் கொடிகள் பறக்க பல்வண்ணத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் இருக்கும் இக்கட்டிடங்களில் சிலைகளுக்குப் பஞ்சமில்லை.. பார்க்குமிடம்தோறும் சிலைகள் வைத்திருக்கிறார்கள்.

கார் பார்க்கிங் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கார்கள் வேண்டுமானாலும் பார்க்கிங் செய்யலாம். மேலே நடக்க நடக்க இந்த ஃபர்ஸ்ட் வேர்ல்டு கெந்திங்  பல்நோக்குப் பூங்கா மிக அழகாகவும் சுவாரசியமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பல தீம்களில் அமையப்பெற்ற ஒரு பூங்காவைப் போலிருக்கிறது. சினிமா தியேட்டர் ஷாப்பிங்க் மால்ஸ் என்று நிறைந்து மிரட்டுகிறது.

கிட்டத்தட்ட 39 வகையான விளையாட்டுகள் உள்ளன. ஸ்நோ வேர்ல்டு, ஸ்நோ பவுலிங்க், தாய் சொங்கரன் ( புத்தாண்டு ) ஃபெஸ்டிவல் கொண்டாட்டம், ட்ராகன் மினி ட்ரெயின், வாட்டர் கொண்டோலா ( வெனீஸ் ) ரைட், 4 D சினிமா, மோனோ ரயில், ஃப்ளையிங் கோஸ்டர், போட்டிங், சுதந்திர தேவி சிலை, ஈஃபில் டவர் இன்னும் பள பளவென்று  தங்க நிறச் சிலைகள், போட்டிபோட்டுக் கொண்டு இருக்கும் மலேஷிய வெள்ளிப் பெண்கள் என்று அந்த இடமே சொர்க்கலோகமாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தீமில் அமைக்கப்பட்டு அதையும் டாப்ளோ போல ஆட்கள் நிரப்பி இருந்தார்கள். அது ஒரு மழை நாளாக இருந்ததால் வண்ண வண்ணமாய் விளக்குகளும் ஜெகஜ்ஜோதியாக ஒளி வீசிக் கொண்டிருந்தன பட்டப் பகலிலேயே.

கே எஃப் சி, மெக் டொனால்ட்ஸ், பிஸா ஹட் போன்ற பிரபல கடைகளும் இருந்தன. ரெஸ்டாரெண்டுகளில் விதம் விதமான உணவுகள். மீனில் கூட ஸ்வீட் செய்வார்கள் மலேய மக்கள். மீன் ஸ்வீட் என்ற அந்தப் பதார்த்தம் இனிப்பு போட்டு மீனைச் சமைப்பது. நமக்கு மீன் கேக், ஆயிஸ்டர் சாஸ் போன்றவை ஒத்துக் கொள்ளாததாலும் மேலும் காலையில் ஒரு உணவகத்தில் தோசை கேட்ட போது அங்கே முர்தாபாக் ( முளைவிட்ட பயறு, முட்டை, இறைச்சி, மீன் கேக் போன்றவற்றை ஸ்டஃப் செய்து சுடும் ரொட்டி போன்றது ) போன்றவை செய்த அதே கல்லில் தோசை என்று ஏதோ சுட்டுக் கொடுத்து நாம் டீ என்று கேட்டா நல்ல நுரையோடு மில்க் மெயிட் போட்டு ஆத்தி ஆறிப்போன டீ ஒன்றும் கொடுத்தார்கள். ( சூடு அதிகம் இல்லாத இந்த மில்க் மெய்ட் டீ அங்கே ரொம்ப ஃபேமஸாம் !!!. அதையும் சாப்பாடு வாங்கும்போதே வாங்கி ஒவ்வொரு சிப்பாக அருந்தி வைத்துவிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு கொதிக்க கொதிக்க டீ உள்ளே இறங்கணும். :)  ) டீ என்னவோ மக்கில் இருந்தது ஆனால் நமக்கு சூடு இல்லாமல் உள்ளே செல்லவில்லை. யோசித்து ஒவ்வொரு ரெஸ்டாரெண்டாகப் பார்த்துவிட்டு ஹனிஃபாவுக்குப் போவதால் அங்கேயே உணவருந்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.


மேலே போகப் போக ஒவ்வொரு ரைடும் இருந்தது மேலும் மாடிகளில் காஸினோக்கள். டோக்கன்கள் குலுங்கும் சத்தமும் மிஷின்களின் சத்தமுமாக இருந்தது காஸினோ. காசைத் தொலைக்குமிடத்துக்கு காஷ் இனி நோ என்று பெயரிட்டது சரிதான் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் விருப்பப்பட்டு காசைத் தொலைக்க அங்கே பெரும் கும்பலே நின்றிருந்தது.


ஒவ்வொன்றாகப் பார்வையிட்டுவிட்டு கீழே வந்தால் அங்கே வாட்டர் தீம் பூங்காவும் இன்னும் பல்நோக்கும் பூங்காவும் இருந்தது. ரோட்டோரம் பூரா செடி கொடி வகைகள்தான். இங்கே கெந்திங்கிலும் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. அங்கே வேலை செய்யச் சென்ற நம்மூர் ஆட்கள் நாம் வணங்குவதற்காகக் கட்டிய கோயில்கள் அவை. மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன அந்நிய மண்ணிலும்.
சந்தோஷமும் குதூகலமும் பொங்கிக் கொண்டிருந்தது எங்கும்.

கீழே இறங்க கேபிள் காரை நாடாமல் இந்த முறை பேருந்தைத் தேர்ந்தெடுத்தோம். மிக அழகான கெந்திங் மலையை விட்டு வரவே மனமில்லாமல் வந்து பேருந்தில் அமர்ந்தோம். அங்கே பெண்கள் டிக்கெட் கொடுக்கின்றார்கள். நல்ல கூட்டம்.  ஆனால் அங்கே ஸ்டாண்டிங்க் எல்லாம் கிடையாது மேலும் பேருந்திலும் ட்ரெயினிலும் கண்ணாடியால் மூடி ஏசி போட்ட பேருந்துகளும் ட்ரெயினும்தான். இந்தப் பேருந்து மலைப்பாதையில் மிக நீண்ட தூரத்துக்குக் கட்டப்பட்டிருந்த ஒரு பெரும் பாலத்தின் வழியாக கோலாலம்பூர் பஸ் டெர்மினஸ் வந்து சேர்ந்தது. வழியில் ஒரு கோட்டை போன்ற அமைப்பையும் ரோட்டில் பார்த்தேன். தூரத்தில் சின் சுவீ குகைக்கோயில் தெரிந்தது.

காசை இழக்காத சந்தோஷத்தோடு நாமும் செண்டுலில் நாம் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினோம். 

ஊருக்குச் செல்லும்போது இன்னும் பலருக்குப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் என்ற எண்ணத்தோடு. !


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.
 

6 கருத்துகள் :

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

ஐலேண்டின் அழகு ஈர்த்தது! அழகான புகைப்படங்களுடன் தெளிவான தகவல்களும் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான படங்கள். வாழ்கையை விதம் விதமாக அனுபவிக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்ன அழகான படங்கள்! //காசைத் தொலைக்குமிடத்துக்கு காஷ் இனி நோ என்று பெயரிட்டது சரிதான்// ரசித்தோம். இந்த வரியை...

அருமையான விவரணம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

நன்றி வெங்கட் சகோ. ஆம் :)

நன்றி துளசி சகோ & கீத்ஸ். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திருப்பதி மஹேஷ் சொன்னது…

மனம் கவரும் மலேஷியா தொடரும் சூப்பர் மேடம்.

ட்வின் டவர்ஸும், கெந்திங் ஹைலாண்ட்ஸ்உம் கேபுல் கார் அணுபவம்-ரசித்தேன்.

தேவையான பல தகவல்கள் தெலிவாக கொடுத்தமைக்கு நன்றி மேடம்!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...