எனது நூல்கள்.

புதன், 14 அக்டோபர், 2015

மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

பட்டுகேவ்ஸ் முருகன் கோயில் :-பொதுவாக மலேஷியா சிங்கப்பூரில் எல்லாம் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் எனப்படும் பொது வாகனங்களில் ( பேருந்து ட்ரெயின் ) சென்றால் மிக நிதானமாகவும் குறைந்த செலவிலும் சுற்றிப் பார்க்கலாம்.

கோலாலம்பூரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு பட்டூ கேவ்ஸ். லேசாக வெய்யில் போடும் நேரம் பட்டு கேவ்ஸ் எனப்படும் பத்துமலை முருகன் கோயிலுக்கு எதிர்த்த வரிசையில் வந்து இறக்கி விட்டுச் சென்றது பேருந்து. இறங்கி அந்தப் பல அடுக்குச் சாலையைக் கடந்து கோயிலின் முன்புறம் வந்தோம். அப்பா அப்பப்பா பிரமித்தோம். மிக அதிகமான படிகளுடன் கூடிய தொங்கும் சுண்ணாம்புப்பாறை அமைப்பை உடைய பத்துமலையும் அதன் முன்னே தங்கக் கலரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே உயரமான ஸ்ரீ சுப்ரமண்யரையும் தரிசித்தோம்.

மிகப் பிரம்மாண்டமான முன் வாசலோடு கூடிய கோயில் அது. நிறைய மாடப்புறாக்கள் பறந்து திரிந்து கொண்டிருந்தன. இந்த சுண்ணாம்புப் பாறை மலை கிட்டத்தட்ட 40 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். இந்தியாவிற்கு அடுத்தபடியா முருகன் கொண்டாடப்படும் இடமும் தைப்பூசம் சிறப்பா நடக்கும் இடமும் இதுதான். கிட்டத்தட்ட 120 வருடங்களுக்கு மேலாக தைப்பூசம் கொண்டாப்பட்டு வருது இங்கே. சில பல படங்களில் பார்த்திருப்பீங்க இதன் முன் ஆடும் நடனத்தை.

படிகளின் முடிவில் இருந்து தொடங்கும் குகையில் உள்ளே நுழைந்ததும் நுழைவாயிலில் சிவன் குடும்பமே நம்மை வரவேற்கும் ஒரு ஆர்ச் இருக்கு. இந்த மலையில் ஏறி கீழே பத்துப் படி இறங்கி பத்துமலையின் உள்பக்கம் பிரவேசித்தால் ஒரு பிரம்மாண்டக் கூடம் போன்ற அமைப்பு. அங்கே இடும்பருக்கும் விநாயகருக்கும் அம்மனுக்கும் சன்னதியும் புற்றும் கூட இருந்தன. 

இதன் பக்கத்து ஊருக்கு படூ கிராமம் என்ற பேர் இருப்பதாலும் சங்காய் படூ என்ற நதி பாய்வதாலும் இந்த மலையும் குகையும் படூ கேவ்ஸ் என்று அழைக்கப்படுது. முதல்ல இது வெறும் ஒற்றையடிப் பாதையா இருந்ததாம். இப்போ கிட்டத்தட்ட 270 படி இருக்கும். தம்புசாமிப்பிள்ளை என்பவர்தான் இதை 1891 இல் கட்டினாராம்.

கோயிலின் முன்பக்கத்தில் நுழைந்ததும் இடதுகைப்பக்கத்தில் ஒரு புஷ்கரணி இருக்கு. அதில் ஒரு அழகான நடைபாதையும் கட்டப்பட்டிருக்கு. வேல் உருவம் தாங்கிய வட்டக்கூண்டுகளங்கங்கே பார்க்க வெகு அழகு. ஒரு அருவியிலிருந்து இந்த புஷ்கரணியில் நீர் விழுந்துக்கிட்டு இருக்கு. 


அதன் பக்கம் உள்ள மலையில் சிவன் பார்வதி வீற்றிருக்கிறார்கள். சின்ன மண்டபமும் உள்ளே  ஒரு மண்டபமுமிருக்கு. அந்தமண்டபத்தில் இரட்டை யானைகளின் சிரமும், ஒரு மரத்தாலான மயிலும் செதுக்கப்பட்டிருக்கு.

இந்த பத்து மலையின் நுழைவாயிலே வேல் வடிவத்தில் இருப்பதா சொல்றாங்க. அங்கே மலையில் கையில் பாம்பைப் பிடித்தும் கழுத்தில் அணிந்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நமக்குப் பார்க்கவே திகிலா இருந்தது. மயிலவன் காப்பான் என்ற நம்பிக்கை போலும்.

ஸ்டேடியங்களில் வைக்கப்பட்டிருப்பது போன்ற பிரம்மாண்டமான உயர ஸ்பாட் லைட்டுகளும் பாதைக்காக அமைக்கப்பட்ட கம்பிகளும் கைவினைப் பொருட்கள், பூக்கடையுமாக இருக்கிறது  அந்தக் கூடம். அதன் அடுத்த முனையில் இன்னும் சில படிகள் ஏறினால் ஓபன் டெரேஸ் மேலே வட்டமாகத் திறந்த ஒரு உயரமான மலை அமைப்பு. அதன் ஒரு பக்கம் பதிந்தாற்போலக் கோயில். அந்தக் கோயிலில் மிக எளிமையாக அழகாக சன்னதியில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீ சுப்ரமண்யக் கடவுள். தீப தூப ஆராதனை காட்டப் பட்டு எனக்கு ஒரு ஆர்க்கிட் பூவும் கிடைத்தது பிரசாதமாய். மலையேறிய பரவசத்திலும் மலேஷிய முருகனைக் கண்டுவிட்ட பிரமிப்பிலும் உடல் மயிர்கூச்செறிந்தது. ஒரே பரவசம்.இங்கே இன்னும் இரண்டு குகைகள் இருக்காம். அவை ராமாயணக் குகை மற்றும் அருங்காட்சிக் குகை. இருட்குகைக்கு கல்விச் சுற்றுலாவாக  ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் மலேசிய இயற்கை கழகத்திடம் பர்மிஷன் வாங்கி பார்க்க போகலாம். உள்ளே குகைத் திரை, பூக்கற்கள், பாறைப் படிமங்கள் முத்துப் போன்ற படிமங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாமாம். இந்த மலை தாவரயியலாளர்களுக்கும் இயற்கை ஆராய்ச்சியாளர்களுக்கும் சொர்க்கம் போன்றது. ஊசிப்பாறைகளும் சுண்ணாம்புக் கல் புற்றுகளாலும் அமைந்துள்ளது இம்மலை. சைனோமால்கோ குரங்குகள் அதிகம் திரியுது. இன்னும் வௌவால்களும் சிலந்திகளும் பல நூற்றாண்டுகளா இதனுள் வசிப்பதா சொல்றாங்க. இந்த மலைக்கு ட்ரெக்கிங் வருபவர்கள் அதிகமாம். மலையேறி வர பல்வேறு ரூட் இருப்பதா சொல்றாங்க.
இங்கே வெளியில் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கும் முருகன் சிலை 2006 ஆம் ஆண்டில் திறப்புவிழா செய்யப்பட்டதாம். இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இச்சிலை 140 அடி உயரம் இருக்கு. திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் தலைமையில் உருவான இச்சிலைக்கு 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

தைப்பூசத்தன்று பூக்களாலும் மயில் தோகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை எடுத்துவரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுமாம். அநேக மக்கள் இங்கே பால்காவடி எடுப்பதா சொல்றாங்க. சீன மக்கள் கூட. இது இந்துக்களுக்கு மட்டுமல்ல. மலேசிய மக்களுக்கும் பக்கத்திலிருக்கும் தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்த்ரேலியா மக்களுக்கும் புனித தலமா இருப்பதா சொல்றாங்க. அங்கிருந்தும் தைப்பூசத்துக்கு லட்சக்கணக்கில் முருகபக்தர்கள் வர்றதா சொல்றாங்க.கோலாலம்பூர் நகரை தன் பார்வையாலே வளப்படுத்தி வரும் சுப்ரமணியரைத் தரிசித்து நாமும் பாக்கியம் அடைந்தோம். 


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

10 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தகவல்கள்.... படங்கள் அனைத்தும் அழகு.

உங்கள் பதிவு மூலம் நானும் முருகரை தரிசித்தேன்.... நன்றி.

தனிமரம் சொன்னது…

மலேசியாவில் சில மாதங்கள் இருந்த போதும் போகமுடியாத இடம் பத்துகேஸ் முருகன் ஆனால் என்றாவது ஒரு நாள் போகும் ஆசையில்! பகிர்வுக்கு நன்றிகள்§

sury siva சொன்னது…

Picturesque description of Lord Muruga at Pattu Caves.
subbu thatha

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

//திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் தலைமையில் உருவான இச்சிலைக்கு 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.// தகவலுக்கு நன்றி, அவர் என் சொந்த ஊரான திருவாரூர் அதனால் சந்தோஷம்..

துளசி கோபால் சொன்னது…

அருமை! உங்க பதிவின் மூலம் இன்னொருக்கா போனேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை சகோ!! படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன முருகனைப் போல்!! தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டோம். புஷ்கரணியும், அந்த சிறு அருவியும் இல்லையே. புகைப்படம் எடுக்கவில்லையா....

Thenammai Lakshmanan சொன்னது…

புஷ்கரணிக்கான படம் இணைத்துள்ளேன் கீத்ஸ் & துளசி சகோ :)

துளசி கோபால் சொன்னது…

@துளசிதரன்,

நம்ம மலேசியா முருகனையும் கொஞ்சம் பார்க்கலாமுல்லே....

http://thulasidhalam.blogspot.com/2013/08/9.html

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

அடுத்தமுறை கட்டாயம் முருகனே அழைப்பார் தனிமரம் நேசன் சகோ

மிக்க நன்றி சுப்பு சார்

அஹா என்னே ஊர்ப்பாசம்.. ஆரூர் பாஸ்கர் சகோ. பின்னூட்டத்துக்கு நன்றி :)

நன்றி துள்சி. நானும் உங்க பதிவின் மூலம் திரும்ப போனேன். ஆனா அங்கே இன்னும் நிறைய இடங்கள் இருந்தது. !!

புஷ்கரணி படம் இணைத்துள்ளேன் துளசி சகோ & கீத்ஸ்

போயிட்டு வந்துட்டமே துள்சி.. :) அருமைப்பா.Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...